முப்படைகளுக்கும் மரபு வழி போர்த்தகைமை உண்டா?

ஆக்கம்: டி.சிவராம் (தராக்கி)
கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறிலங்காவின் முப்படைகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கெதிராக நடவடிக்கைகளிலீடுபட்டு வந்துள்ளபோதும், அவை பற்றிய விரிவான வரலாற்று ஆய்வுகள் அரிதாகவேயுள்ளன. தனது ஐம்பதாண்டு நிறைவையொட்டி (1949-1999) சிறிலங்கா படைத்துறை ஆறாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட சிறப்பு நூல்தான் நானறிந்தவரை ஓரளவு விரிவான தகவல் களஞ்சியமாகவுள்ளது. எனினும், சிறிலங்கா முப்படைகளின் வரலாறு போரியல் கண்ணோட்டத்தில் இதுவரை எழுதப்படாமலிருப்பது ஒரு பெரும் குறைபாடாகும்.

சிறிலங்காவின் முப்படைகளை உரு வாக்குவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் நீண்ட காலம் உறுதுணை செய்த பிரித்தானியப் படைத்துறைகூட இவ்வாறானதொரு ஆய்வைச் செய்யவில்லை என்பதுதான் வியப்பிற்குரியவிடயம். பிரித்தானியாவின் அதியுயர் படைத்துறைக் கல்லூரியான ளுயனொரசளவ சுழலயட ஆடைவையசல யுஉயனநஅல இன் நூலகத்தில் கூட சிறிலங்கா முப்படைகளைப்பற்றி துண்டும் துணியுமாகத்தான் போரியல் ஆய்வு நோக்கிலான தகவல்கள் காணப்படுகின்றன. இது பற்றி நான் கேட்டபோது, தமது படைத்துறைக் கண்ணோட்டத்தில் இலங்கை நீண்ட காலமாக முக்கியத்துவமற்றிருந்தமையே இதன் காரணமாக இருக்கலாமென அங்கெனக்குத் துணைவந்த அதிகாரி கூறினார்.

அமெரிக்கப் படைத்துறைப் புலனாய்வு அதிகாரியாகவும் அமெரிக்கப் படைத்துறைப் பல்கலைக்கழகத் துணைப்பேராசிரியராகவும் பணியாற்றிவரும் பிறையன் புளொஜட் (டீசயைn டீடழனபநவவ) சிறிலங்கா முப்படைகளின் செயல் நோக்கம் பற்றி அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள கைந்நூல் (ளுசi டுயமெய�ள ஆடைவையசல: வுhந ளுநயசஉh குழச யு ஆளைளழைnஇ 1949-2004) இந்த வகையில் முக்கியமானது.

சிறிலங்காவின் முப்படைகளைப்பற்றிப் பலகாலமாக இந்திய, அமெரிக்க மற்றும் பிரித்தானியப் போரியல் ஆய்வாளர்கள் அங்குமிங்குமாக கூறிவந்த ஒரு விடயத்தை புளொஜட் வகுத்துத் தொகுத்து எழுதியுள்ளார்.

வெளிப்படையெடுப்புகளிலிருந்து தமது நாட்டைப் பாதுகாப்பதும் தமது நாட்டின் இருப்பிற்கு இன்றியமையாத மூலவளங்கள், மற்றும் அவற்றைக் கொண்டு வருவதற்கான பாதைகள் என்பவற்றிற்கு அச்சுறுத்தலேற்படும் போது அதை முறியடிப்பதும், தமது நாட்டின் தேசிய நலன்களுக்கு ஆயுதரீதியான ஆபத்து உண்டாகும் போது அதை எதிர்கொள்வதுமே ஒரு நாட்டினது படைகளுக்குரிய அடிப்படைச் செயல் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் சிறிலங்காவின் முப்படைகள் இச்செயல் நோக்கத்திலிருந்து நீண்ட காலமாக வழுவி நடந்து வருவதால், அவை உண்மையான மரபு வழிப் போரியல் தன்மையற்றவையாக உள்ளன என்பதே மேற் படியார் சுட்டிக்காட்டி வந்த விடயமாகும்.

இதனாலேயே உள்ளுர்க் குழப்பங்கள், கெரில்லாப் போர்கள் போன்றவற்றைத் தொடர்ச்சியாகக் கையாள்வதற்குத் தமது படைகளை அனுமதிக்கப் பெரிய நாடுகள் தயங்குகின்றன. அதாவது காவல்துறையே ஒரு நாட்டின் சட்டம், ஒழுங்கைப் பேணுவதற்கென உருவாக்கப்படுகின்ற அமைப்பாகும். வன்முறைசார் உள்நாட்டுச் சிக்கல்களைக் கையாள்வதற்கோ அல்லது எதிர்கொள்வதற்கோ போரியல் ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகள் தமது காவல்துறைகளையும் இவற்றால் இயலாத விடத்து விசேட துணையமைப்புகளையும் பயன்படுத்துகின்றன.

உள்ளுர்க் கலகங்கள், குழப்பங்கள் என்பவற்றை எதிர்கொள்ள மரபு வழிப் படைகளைப் பயன்படுத்தும் போது எழக் கூடிய அரசியல் மற்றும் போரியல் சிக்கல்களைக் கருத்திற் கொண்டே பெரிய நாடுகள் இதில் கவனமாக நடந்து கொள்கின்றன. முதலாவதாக, ஓர் உள்நாட்டுச் சிக்கலென்பது அந்நாட்டின் படைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கக் கூடிய அரசியல் பரிமாணம் கொண்டிருப்பது நிச்சயம். எனவே ஓர் உள்நாட்டுக் கலகத்தையோ அல்லது ஆயுதக் கிளர்ச்சியையோ எதிர்கொள்வதற்கு ஒரு நாட்டின் தேசியப்படைகள் ஈடுபடுத்தப்படும்போது, அவற்றுள் அந்தச் சிக்கலுக்குக் காரணமான அரசியல் அல்லது சமூக முரண்பாடு ஏதோ ஒருவகையில் உட்புகுவது தவிர்க்க முடியாது. அப்படியாகும் போது, அந்த மரபு வழிப் படையின் கட்டளை ஒருமைப்பாடு சிதைய இடமுண்டு. சீக்கியரின் பொற்கோவிலுக்குள் இந்தியப்படைகளை, பிரதமர் இந்திராகாந்தி அனுப்பியபோது இந்திய இராணுவத்தின் சீக்கியப் படையணிகளில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன.

ஒரு மரபுவழிப் படையின் அடிப்படைச் செயல்நோக்கம் இன்னொரு மரபுவழிப் படையை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றியதாகவே இருக்க வேண்டும். இத்தகைமையில்லாத ஒரு நாட்டின் படை அந்த நாட்டின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் வெளி அச்சுறுத்தலிலிருந்து ஒருபோதும் பாதுகாக்க முடியாது. உள்நாட்டுக் கிளர்ச்சிகளையோ கலகங்களையோ அடக்குவதற்கு ஒரு நாட்டின் மரபுவழிப்படை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுமேயானால், அது தனது மரபு வழிப் போரியல் தகைமையை இழந்துவிடும். இதனாலேயே காஷ்மீர், நாகலாந்து போன்ற பிரிவினைக் கிளர்ச்சிகள் தொடருமிடங்களில் கூட இந்தியா தனது மரபுவழிப்படைகளை வரையறுக்கப்பட்ட முறையிலேயே ஈடுபடுத்தி வருகிறது.

உள்நாட்டுக் கிளர்ச்சிகளிலோ கலகங்களிலோ எதிரி நாட்டுப்படையைச் சிக்கவைத்து அதன் மூலம் அப்படையின் அடிப்படைச் செயல் நோக்கத்தைக் குழப்பிவிடுவதனூடாக அதன் மரபுவழிப் போரிடும் திறனை மழுங்கடிப்பதென்பது நீண்ட காலமாகப் பல பெரிய நாடுகள் கையாண்டுவரும் போரியல் தந்திரோபாயமாகும்.

இந்தியப்படைகளின் மரபுவழிப் போரிலீடுபடும் கவனக் குவிப்பைச் சிதைப்பதற்கும் அவற்றின் மரபுவழித் தயார் நிலையைக் குழப்புவதற்குமாகவே பாகிஸ்தான் உள்நாட்டுக் கிளர்ச்சிகளை இந்தியாவின் பல முனைகளிலும் கிளறிவருகிறது என டெல்லியிலுள்ள போரியலாய்வாளர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறுவர்.

வியட்னாமின் உள்நாட்டுப்போரில் சிக்குண்டு மூக்குடைபட்டதாலேயே அமெரிக்கப் படை நீண்ட காலம் தனது மரபு வழிச்செயல் நோக்கத்தில் குழம்பிப் போயிருந்ததெனவும் அது மாற்றப்பட வேண்டுமெனவும் அமெரிக்கப் படைத்துறை ஆய்வாளர்கள் கூறிவந்தனர். அடையவேண்டிய அரசியல் நோக்கம் தெளிவாக வரையறை செய்யப்பட்ட மரபுவழிப் போரிலேயே மரபுவழிப் படையொன்று இறக்கப்பட வேண்டும் என்பதே இவர்களது கருத்து. இதற்கு இவர்கள் மேலைத்தேயப் போரியல் விஞ்ஞானத்தின் பிதாமகரெனக் கருதப்படும் கார்ள் வொன் குளோசவிட்ஸ் (ஊயசட ஏழn ஊடயரளநறவைண) சொன்ன கோட்பாடுகளைத் தூக்கிப்பிடித்தனர். இக்கோட்பாட்டு மாற்றத்தின் விளைவை நாம் சதாமுக்கெதிரான முதலாம் வளைகுடாப் போரில் கண்டோம். இதனடிப்படையிலேயே ஈராக் மீது இரண்டாம் முறையாகப் படையெடுத்தபோது அடிப்பது, முடிப்பது என்ற தெளிவான வரையறையோடு அமெரிக்கப்படையனுப்பப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக மாட்டிவிட்டார்கள்.

இதனாலேயே ஈராக்கில் மிகத் துரிதமாக உள்ளூர்ப் படையொன்றையும் காவல்துறையையும் உருவாக்கிடவும் கிளர்ச்சியெதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து தம்மை விரைவாகக் கழற்றிக் கொள்ளவும் அமெரிக்கப்படைகள் கடும் முயற்சி செய்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் புளொஜட் செய்துள்ள ஆய்வின் முக்கியத்துவத்தை நாம் நோக்க வேண்டும். அமெரிக்கப் படைத்துறை உலகின் பல்வேறு நாடுகளுக்குள் செல்வது இன்று அதிகரித்து வருவதாகவும் ஆகவே அந்நாடுகளின் படைகளையும் அவற்றின் செயல் நோக்கங்களையும் கற்றிருப்பது அவசியமென்றும் அதற்கு உறுதுணை செய்யும் வகையிலேயே தான் நூலை எழுதியதாகவும் அவர் கூறுகிறார்.

புளொஜட்டின் நோக்கம் இதுவாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரது நூலின் மையக்கருத்தை நாம் சிறிலங்காப் படைகளைப் பற்றிய வேறு வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் நோக்கும்போது சில உண்மைகள் வெளிப்படுகின்றன எனக் கருதுகிறேன்.

சிறிலங்காப் படைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே மரபுவழியடிப்படையிலான தெளிவான செயல் நோக்கமிருக்கவில்லை. காலத்துக்குக் காலம் அது குழப்பமானதாகவே இருந்து வந்துள்ளது என்பதே புளொஜட்டின் மையக் கருத்தாகும். இது எப்படியென்பதைப் பார்ப்போம்.

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி சுதந்திர சிறிலங்காவின் இராணுவம் உருவாக்கப்பட்டது. இதை ஆரம்பத்தில் கட்டியெழுப்ப முன்னின்றவர் சிறிலங்கா படைத்துறையமைச்சின் முதலாவது நிரந்தரச் செயலரான சேர். கந்தையா வைத்தியநாதனாவார். சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது படைத்தளத்துக்கான இடத்தை பனாகொடையில் தெரிவுசெய்து அங்கு அதை நிறுவிட அடிகோலியவரும் இவரே.

இந்தியாவினாலேயே சுதந்திர சிறிலங்காவிற்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படுமென முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கா அப்போது திடமாக நம்பினார். இப்படிப் பயப்படத் தேவையில்லை என இந்தியப் பிரதமர் நேரு கூறியதைக்கூட அவர் நம்பத் தயாராக இருக்கவில்லை. இந்தியா இலங்கைமீது படையெடுத்து அதைத் தன்னுடைய இன்னொரு மாகாணமாக இணைத்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. இதன் காரணமாகவே அவர் பிரித்தானியாவுடன் கூட்டுப்பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டார். இதன்படி வெளிநாட்டுப் படையச்சுறுத்தல் சிறிலங்காவிற்கு ஏற்படும் பட்சத்தில் பிரித்தானியப் படைகள் அதன் உதவிக்கு வருமென உடன்பாடானது.

எனவே வெளிநாட்டுப் படையெடுப்பொன்றை எதிர்கொள்வது என்பதே புதிதாக உருவாக்கப்பட்ட சிறிலங்காப் படைகளின் செயல் நோக்கமாக வரையறுக்கப்பட்டது. அதாவது பிரித்தானியப் படையுதவி வந்து சேரும் வரை இந்தியப்படையெடுப்பொன்றை வரையறுக்கப்பட்ட வழிகளிலேனும் எதிர்கொள்வதெப்படி என்பதனடிப்படையில் சிறிலங்கா படையின் திட்டமிடல் அப்போது அமைந்திருந்தது.

இதைத் தவிர வெளிநாட்டுப் படையெடுப்பொன்றை எதிர்கொள்வதுபற்றி சிறிலங்கா அரசு எண்ணிய சந்தர்ப்பம் ஒன்றுதான். 1963இல் இலங்கைத் தீவில் வலுமிக்க வெளிநாட்டுப் படையொன்று உட்புகுந்தால், அதற்கெதிராகக் காடுகளிலிருந்து ஒரு கெரில்லாப் போரை நடத்துவது எங்ஙனம் என்ற பயிற்சியில் சிறிலங்காப் படைகள் ஈடுபட்டன. இதற்கு முந்திய ஆண்டு சிறிலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் ஓர் இராணுவச் சதிப்புரட்சி முறியடிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்களும் அரசை ஆட்டங்காண வைத்துக்கொண்டிருந்தன. இவற்றின் பின்னணியிலேயே வெளிநாட்டுப் படையெடுப்பொன்று நிகழலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவம் தனது செயல்நோக்கத்தை கெரில்லாப் போரென மாற்றிக்கொண்டது.

இதற்கான விசேட பயிற்சி பெற சிறிலங்கா படையதிகாரிகள் சிங்கப்பூர், மலேசியா, யூகோஸ்லாவியா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது கையில் கிடைக்கும் ஆவணங்களைக் கொண்டு பார்க்கும் போது எந்த நாட்டின் அச்சுறுத்தலை மனதில் கொண்டு இந்த ஒழுங்குகள் செய்யப்பட்டன என்பதைக் கூறுவது கடினமாகவுள்ளது. (எனினும் இது சோவியத் யூனியனாக இருக்கலாமென ஊகிக்க இடமுண்டு).

மேற்கூறிய இரு சந்தர்ப்பங்களைத் தவிர சிறிலங்காப் படைகளினுடைய செயல் நோக்கம் தமது நாட்டிற்கு ஏற்படக்கூடிய வெளியச்சுறுத்தல் பற்றியதாகவோ இன்னொரு நாட்டின் மரபுவழிப் படையை எதிர்கொள்வது சம்பந்தப்பட்டதாகவோ இன்று வரை அமையவில்லை என்பதே வரலாறு தரும் உண்மை. இந்த மரபுவழிப்படைச் செயல் நோக்கம் பற்றிய குழப்பமே சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிடலையும் நடைமுறையையும் ஆரம்பத்திலிருந்து பீடித்து வந்துள்ளது.

இதன் விளைவுகளைப்பற்றி நாம் நோக்கும் முன்னர், இச்செயல் நோக்கக் குழப்பத்தின் வரலாற்றைச் சற்று நோக்குவோம். 1949இல் இலங்கைக்கென ஒரு படையை உருவாக்குவதற்கென கொண்டுவரப்பட்ட சட்டத்தைத் தயாரிக்கும் போதே உள்நாட்டு சிவில் விடயங்களிலும் அதை ஈடுபடுத்துவதற்கான அடித்தளத்தை டி.எஸ்.சேனநாயக்காவும் சேர்.கந்தையா வைத்தியநாதனும் போட்டுவிட்டனர். மேற்படி சட்டத் தின் 23ஆவது பிரிவின்படி இலங்கைக் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், எரிபொருள் என்பவற்றின் விநியோகத்தில் இடைஞ்சல் உண்டானாலோ போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் என்பன தடைப்பட்டாலோ அதைச் சரிசெய்ய சிறிலங்கா இராணுவம் கடமையிலீடுபடுத்தப்படலாம். இந்தப் பிரிவு சிறிலங்காப் படைகளின் போரியல் கோட்பாட்டு வளர்ச்சியையும் சிந்தனையையும் தன்னடையாளத்தையும் மிகவும் பாதித்தது. 'எதிர்காலத்தில் உள்நாட்டை நோக்கிய கவனக்குவிப்பேயன்றி வெளிப்பார்வையற்ற ஒரு படை உருவாகுவதற்கு இது மேடையமைத்தது" என புளொஜட் குறிப்பிடுகின்றார்.

காவல்துறைக்கு உதவியாகச் செயல்படுவதே தமது முக்கிய கடமையெனப் பல ஆரம்பகால சிறிலங்காப் படைத்தளபதிகள் எண்ணத் தலைப்பட்டனர். அதாவது ஆயுதங்களும் பயிற்சிகளும் கூடுதலாகக் கொண்ட ஒரு சிறப்புக் காவல்துறையாக சிறிலங்கா இராணுவம் தன்னை ஆரம்பத்திலிருந்தே கருதத் தலைப்பட்டுவிட்டது. இதற்கேற்ப ஐம்பதுகளில் சிங்கள ஆளும் வர்க்கம் தனக்குப் பெரும் சவால்களென எண்ணிய மூன்று விடயங்கள் அமைந்துவிட்டன. முதலாவது தொழிலாளர் கிளர்ச்சிகள்; இரண்டாவது தமிழ் பேசும் மக்களின் போராட்டங்கள்; மூன்றாவது மன்னார், யாழ்ப்பாணக் கரையோரங்களுடாகத் தமிழகத்திலிருந்து குடியேற வந்த மக்களின் பிரச்சினை.

மரபுவழிப்போரொன்றை நடத்துவதற்கான தகைமையையும் நாட்டைக் காப்பதற்கான திட்டமிடல் திறனையும் வளர்த்தெடுப்பதை விடுத்து சிறிலங்கா இராணுவம் மேற்படி உள்ளுர் விடயங்களில் தன் கவனத்தைச் செலவிடலாயிற்று. 1950 இருந்து 1960 வரையான பத்தாண்டுகளில் ஏழு நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபட்டது.

முதலாவது மொண்டி நடவடிக்கை (ழுpநசயவழைn ஆழவெல) 1952 ஆம் ஆண்டு இந்த நடவடிக்கை தமிழகத்திலிருந்து குடியேறவந்தவர்களுக்கெதிராக மன்னார்ப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலம் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாவது 53இல் நடைபெற்ற பெரும் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கை. மூன்றாவது 56 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பின் தென்மேற்கு எல்லைப்பகுதிகளில் அரச ஆதரவுடன் நடைபெற்ற சிங்களக் காடையர் குடியேற்றத்திற்கு எதிராகக் கிளர்ச்சியிலிறங்கிய துறைநீலாவணை விவசாயிகளை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை. நான்காவது தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறைக்குத் துணையாக செய்யப்பட்ட நடவடிக்கை. ஐந்தாவது 1957 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது நிவாரண வேலை. ஆறாவது 58 ஆம் ஆண்டு தமிழருக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்போது காவல்துறையோடு இணைந்த சட்டம், ஒழுங்கு நடவடிக்கை. ஏழாவது சட்டவிரோத கஞ்சாத் தோட்டங்களைத் தேடியழிக்கும் நடவடிக்கை.

சிறிலங்கா இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட பத்தாண்டுகளில் அதன் நடவடிக்கைகள் எவையுமே அதையொரு மரபுவழிப் படையாக புடம்போடுவதற்கு வாய்ப்பளிக்கவேயில்லை." சுதந்திரமடைந்த சிறிலங்காவின் படைத்தளபதியாகிய முதலாவது இலங்கையர் பிரிகேடியர் அன்ரன் முத்துக்குமாரு (இவர் தமிழர்) தயாரித்த கட்டளைப்பிரிவுத் திட்டமும் இதற்கேற்றாற்போல அமைந்திருந்தது. அதாவது சிறிலங்கா படைகள் எதிர்கொள்ளவேண்டிய அச்சுறுத்தல் உள்நாட்டிலிருந்தே ஏற்படும் என்பது அவருடைய பார்வை.

சிறிலங்கா இராணுவம் மூன்று கட்டளைப் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமெனவும், இதில் முதலாவது வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கியதாகுமெனவும் இங்கு பிரதான பாதுகாப்புச் சிக்கல் தமிழர் தரப்பேயெனவும் முத்துக்குமாரு கூறுகிறார். அடுத்த கட்டளைப் பிராந்தியம் மத்திய மாகாணம், ஊவா, சப்பரகமுவ ஆகியவற்றிற்கானது.

'இப்பிராந்தியத்தில் உள்நாட்டுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கின்ற இந்தியத் தமிழர்களிடமிருந்து வரக்கூடும். இதன் மையத்திலமைந்துள்ள தியத்தலாவையில் ஒரு காலாட்படை அணியை நிறுத்திவைக்கலாம் என நான் திட்டம் வகுத்தேன்" எனச் சொல்கிறார் தளபதி முத்துக்குமாரு. மூன்றாவது பிராந்தியம் வடமேல் மாகாணம், மேல்மாகாணம், தென்மாகாணம் ஆகியவற்றிற்கானது. இங்கு சிறிலங்காப் படைகளுக்குப் பிரதான அச்சுறுத்தல் தொழிற்சங்கங்களால் ஏற்படுமென அவர் தனது நினைவுகளில் எழுதிச்சென்றுள்ளார்.

இவ்வாறாக இன்று வரை சிறிலங்காவின் முப்படைகள் உள்நாட்டுச் சிக்கல்களைச் சுற்றியே வளர்ச்சியடைந்துள்ளன. (நான் முன்னர் குறிப்பிட்ட இரு சந்தர்ப்பங்களைத் தவிர) இதனால் ஆரம்பத்திலிருந்தே அவற்றின் செயல் நோக்கம், கொள்கை வகுப்பு, திட்டமிடல், ஆயுதக் கொள்வனவு என அனைத்தமே ஒரு முறையான மரபு வழிப் படைக்குரிய பண்பைக் கொண்டிருக்கவில்லை. சிறிலங்கா முப்படைகளின் மரபுவழிப் போர்த் தகைமைகளை 1949 இலிருந்து இன்று வரைக்குமான ஒவ்வொரு பத்தாண்டு அடிப்படையில் புளொஜட் மதிப்பீடு செய்துள்ளார். இந்த மதிப்பீடு ஒவ்வொன்றிலுமே சிறிலங்காவின் படைகள் வெளியச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய தகைமையற்றவையாகவே உள்ளன என அவர் வலியுறுத்தியுள்ளாளார். (புலிகளுடன் அமைதிப் பேச்சு நீடித்து, நிரந்தத் தீர்வொன்று ஏற்படும் பட்சத்தில் இந்த நிலை மாற வாய்ப்புண்டு எனக் கூறுகிறார்)

1987இல் இந்திய வான்படை சிறிலங்காவின் வான்பரப்பினுள் புகுந்த போதும் அதையொட்டி இந்தியப்படையெடுப்பெனும் அச்சுறுத்தல் தோன்றிய போதும் சிறிலங்கா முப்படைகள் செயலிழந்திருந்தமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

மரபுவழிப் படையாக புலிகள் வளர்ச்சிபெற்ற போது, அதை எதிர்கொள்வதில் சிறிலங்காவின் முப்படைகளுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் இந்த அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும். ஓர் ஒழுங்கான மரபுவழிப் படையாகச் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் அவற்றின் வளர்ச்சி முறையே பெருந்தடைக் கல்லாயுள்ளது.

பீரங்கிகள், போர்ப்படகுகள், வானூர்திகள் ஆகியவற்றைக்கொண்ட உள்ளுர்க் காவற்படையாக சிறிலங்கா இராணுவத்தை வளர்த்துவிட்டதற்கு சிங்கள ஆளும் வர்க்கங்களின் குறுகிய நலன்களே காரணமெனில் மிகையாகாது. நன்றி: வீரகேசரி வார வெளியீடு (Mar 27, 2005)

Please Click here to login / register to post your comments.