தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் வெறுமனே ஆயுதமேந்திய போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை

ஜனாதிபதி இந்த வரவுசெலவுத்திட்ட உரையிலே நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலே 225 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களைப் பெற்றதாகக் கூறியிருந்தார். அவருடைய கூற்று உண்மையிலே முற்றிலும் சரியானதாகும். அதேபோன்றே வடக்கு,கிழக்கிலுள்ள 18 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் 14 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். தென்பகுதியிலுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்கள் எந்த அளவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்களோ அதேயளவுக்கு வடக்கு,கிழக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்கள் என்ற விடயத்தையும் நான் இவ்விடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எவ்வாறு பெரும்பான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடியதாக ஜனாதிபதி திகழ்ந்தாரோ, அதேபோன்றுதான் வடக்கு,கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடியவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளங்குன்றனர்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்நாட்டிலே கௌரவமான சமாதானம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் ஸ்திரமான அரசியல் தன்மை ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறினார். அவர் எதனை வைத்துக் "கௌரவமான சமாதானம் ஏற்பட்டிருக்கிறது' என்று கூறுகின்றாரோ எனக்குத் தெரியவில்லை. உண்மையிலே கௌரவமான அரசியல் தீர்வு எப்பொழுது கிடைக்குமோ, அன்றுதான் கௌரவமான சமாதானம் ஏற்படும் என்பதை அமைச்சர் பீரிஸ் முதலிலே புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 19 ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், தமிழ் மக்களுக்கான அரசியல் போராட்டம் என்பது வெறுமனே ஆயுதப் போராட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை.

உண்மையிலே ஆயுதப் போராட்டம் என்பது 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னர் 1915 ஆம் ஆண்டு தொடக்கம் 1974 ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் அஹிம்சை வழியில் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். உதாரணமாக சேர்.பொன்.இராமநாதன் காலம் தொடக்கம் சேர்.பொன்.அருணாசலம், ஜி.ஜி.பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோர் பலவகையான போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். அவற்றில் 1957 இல் "ஸ்ரீ' எதிர்ப்புப் போராட்டம், 1961 இல் சத்தியாக்கிரகப் போராட்டம், 1961 இன் இறுதிப்பகுதியிலே தமிழரசு தபால் சேவைப் போராட்டம், 1963 இல் தமிழர்கள் அனைவரும் தமிழ் இயக்கங்கள் என்ற போராட்டம், 1964 ஆம் ஆண்டில் பாதயாத்திரை, கண்டனப் பேரணி போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

1969 ஆம் ஆண்டில் மாவட்ட சபை பிரேரணையும் 1972 ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசின் குடியரசு யாப்பும் கொண்டுவரப்பட்டன. 1972 ஆம் ஆண்டில் குடியரசு யாப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1972 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கம் பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பிற்பாடு 1973 ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது. இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்தபோது பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 1957 ஆம் ஆண்டில் பண்டாசெல்வா ஒப்பந்தம், 1965 ஆம் ஆண்டில் டட்லி செல்வா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தங்கள் தோற்றுப்போனமையால் தான் ஆயுதப் போராட்டத்தை இளைஞர்கள் மேற்கொண்டார்கள். அப்போதைய தமிழ்த் தலைவர்களால் அஹிம்சைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோது சிங்கள தலைமை அரசியல் தீர்வைக் கொடுத்திருந்தால் நிச்சயமாக 1974 ஆம் ஆண்டு ஓர் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காது. அந்த ஆயுதப் போராட்டத்தின் பலனாக இந்த நாட்டிலே ஏறக்குறைய 2 இலட்சம் மக்கள் இறந்திருக்கிறார்கள். ஏறக்குறைய 50,000 பேர் அங்கவீனர்களாகியிருக்கின்றார்கள். 80,000 பேர் விதவைகளாகியிருக்கின்றார்கள். 1,777 பாடசாலைச் சிறுவர்கள் தாய்,தந்தையர்களற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த விளைவுகளெல்லாம் இந்தப் போராட்டத்தின் நிமித்தமாகத்தான் அமைந்திருக்கின்றன. ஆனால், அஹிம்சைப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றாலும் இன்றுவரை அந்த மக்களுக்கான அரசியல் தீர்வு இல்லாத ஒரு நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது.

எனக்கு முன்பு பேசிய பாராளுமன்ற உறுப்பினராக மங்கள சமரவீர தனது உரையிலே அதனை மிகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். அவர் பேசிய அதே கூற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் பேசியிருந்தால் அவர் மீது நிச்சயமாக "புலி' முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இலங்கையிலே பிறந்த ஒரு சிங்கள மகன் உண்மையைக் கூறியிருக்கிறார். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரைப் பாராட்டுகின்றது. ஏன் நான் இந்த விடயத்தைக் கூறுகின்றேனென்றால், அவர் கூறிய அத்தனை விடயமும் யதார்த்தமாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு தலைவராக ஜனாதிபதி இருந்தாலும் அவருக்குப் பக்கபலமாக இருக்கின்ற அமைச்சர்கள் மேலும் மேலும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டு காலத்தையும் இழுத்தடித்துக் கொண்டிருப்பதால் அவரால் கூட அரசியல் தீர்வைப் பெற்றுத்தர முடியாத ஒரு நிலையில்தான் இந்த நாடு இருக்கின்றது.

அவ்வாறான நிலைமை இருக்கின்றபொழுது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கௌரவமான சமாதானம் இந்த நாட்டில் இருப்பதாகக் கூறுகிறார். "விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம்; இப்பொழுது இங்கு சமாதானம் நிலவுகின்றது' என்ற விடயத்தை மட்டுந்தான் எல்லோரும் அடித்துக் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டில் ஒரு யுத்தம் இடம்பெற்றிருக்கின்றதென்ற உண்மையை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த யுத்தத்தை யாருடன் புரிந்தார்களென்ற இன்னொரு விடயமும் இருக்கின்றது. யுத்தம் நடந்தவேளையில் வெறுமனே விடுதலைப் புலிகளும் படையினரும் மட்டும் இறக்கவில்லை. அங்கிருந்த அப்பாவிப் பொதுமக்கள் இறந்திருக்கின்றார்கள், காணாமற் போயிருக்கின்றார்கள், அங்கவீனர்களாகியிருக்கின்றார்கள், பலர் தாய், தந்தையரை இழந்திருக்கின்றார்கள். "ஒரே நாடு; ஒரே தேசம்' என்று கூறுகின்றோம். அப்படியாக இந்தால் இந்த நாட்டின் பிரஜைகள் தான் இறந்திருக்கின்றார்கள். நாட்டிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இன்றுவரை அவர்கள் வாழ்வாதாரமற்று இருக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கான எந்தவிதமான நிதியும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து 5 தினங்களாக இங்கு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஆணித்தரமாக அதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அவர்கள் அவ்வாறு பேசுவதை இனவாதம் பேசுகின்றார்களென்ற கருத்தில் இங்கே சிலர் விடயங்களைக் குறிப்பிட்டனர்.

இந்த வரவுசெலவுத்திட்டத்திலே 54 ஆவது பந்தியிலே ஜனாதிபதி,

"எமது முதல் முன்னுரிமையாக இருப்பது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் 2012 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் சிறந்த வீட்டு வசதிகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்' எனக் கூறியிருக்கின்றார். 50,000 வீடுகளைக் கட்டுவதற்கு இந்தியப் பிரதமரினால் வழங்கப்பட்ட உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

"மேலும் அரசாங்கம் 80,000 வீடுகளைப் புனரமைப்பதற்குக் கொடை வழங்கும் முகவராண்மைகள், நட்பு நாடுகள் மற்றும் தனது சொந்த வரவுசெலவுத்திட்ட வளங்களினைக் கொண்டு நிதியினைத் திரட்டிக்கொள்ளும்' என்று மட்டுந்தான் இந்த வரவுசெலவுத்திட்ட உரையிலே கூறப்பட்டிருக்கின்றதே தவிர, இந்த 80,000 வீடுகளுக்காக இந்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக வன்னியிலே இடம்பெற்ற யுத்தத்தின் போது ஏறக்குறைய 2,65,000 வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. புனரமைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகின்ற இந்த 80,000 வீடுகளையும் இந்திய அரசாங்கம் வழங்குகின்ற 50,000 வீடுகளையும் ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் கூட 1,30,000 வீடுகளுக்கு மட்டுந்தான் உதவிகள் இருக்கின்றன. எஞ்சிய ஓர் இலட்சத்து முப்பத்தையாயிரம் வீடுகளைக் கட்டுவது யார்? என்கின்ற கேள்வி இருக்கின்றது. ஆனால் உண்மையிலே இதிலே பல விடயங்கள் கூறப்பட்டாலும் கூட நான் வெறுமனே வீட்டைப் பற்றி மட்டும்தான் கூறுகின்றேன்.

அந்த யுத்தத்திலே போர் புரிந்த படையினரைக் கௌரவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதிலே எந்தவொரு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேநேரத்தில் அங்கு இறந்தவர்களுக்காக, அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்காக,விதவைகளாக்கப்பட்டவர்களுக்காக எந்தவொரு கொடுப்பனவுமே வழங்கப்படவில்லை என்கின்ற வேதனையான சம்பவத்தையும் நான் இந்த இடத்திலே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இந்த இலங்கை நாட்டை மாற்றுவதாக எல்லோருமே கூறுகின்றார்கள். இந்த நாட்டிலே பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சிறுவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி பல தடவைகள் கூறியிருக்கின்றார். கடந்த 22 ஆம் திகதி அவரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட உரையின் இறுதியில் கூட அவர் அது சம்பந்தமாகத் தெரிவித்திருக்கின்றார். அதாவது"எமது எதிர்காலச் சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்குவோம்' என்ற ஒரு வசனத்தையும் அவர் அதிலே சேர்த்திருக்கின்றார். உண்மையிலே ஒரு நாட்டில் இருக்கின்ற பெண்கள், சிறுவர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கொடுக்கப்படவேண்டும் என்ற கடப்பாடு அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கின்றது.

பெண்களின் உரிமைகளின் மீதும் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தின் மீதும் தான் விசேட அக்கறை செலுத்துவதாக ஜனாதிபதி அடிக்கடி கூறிவருகின்றார். நான் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது இலங்கையில் இருக்கின்ற 17 சிறைச்சாலைகளில் சுமார் 765 தமிழ் அரசியல் கைதிகள் பத்துவருடங்களாக, இருபது வருடங்களாக, மூன்று வருடங்களாக, நான்கு வருடங்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் 50 பெண்களும் ஐந்து குழந்தைகளும் அடங்குகின்றார்கள். முழுவதையும் வாசிக்க நேரம் போதாமையால் அவர்களில் ஐந்து பெண்களினதும் குழந்தைகளினதும் பெயர்களை மட்டும் நான் இவ்விடயத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையிலே வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் லதாயினியும் அவரது மூன்று வயதான கேதினி என்ற குழந்தையும் சுன்னாகம் ஊரெழுவைச் சேர்ந்த இரவிச்சந்திரன் விஜிதாவும் அவரது மூன்று வயதான ஆரணி என்ற குழந்தையும் கெக்கிராவையைச் சேர்ந்த மயில்வாகனம் அன்னலட்சுமியும் அவரது 5 வயதான குணாளன் என்ற சிறுவனும் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தங்கம்மாவும் அவரது 2 வயதான துவாரகன் என்ற குழந்தையும் வவுனியாவைச் சேர்ந்த பூபாலப்பிள்ளை ஜெயந்தியும் அவரது ஒன்றரை வயதான விதுசன் என்ற குழந்தையும் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைக்குச் செல்ல வேண்டிய இந்த ஐந்து வயதுக் குழந்தை மற்றும் ஆரம்பப் பாடசாலைக்கே செல்ல முடியாத மூன்று வயதுக் குழந்தைகள் எல்லாம் என்ன செய்தன? என்று நான் கேட்கவிரும்புகின்றேன். இவர்கள் எங்கு ஆயுதம் தூக்கிப் போராடினார்கள்? ஒன்றரை வயதுச் சிறுவன் எந்தத் துப்பாக்கியை எடுத்து எந்தப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டான்? ஐந்து வயது கேதினி யாருடன் மோதினார்? மூன்று வயது நிரம்பிய குணாளன் யாரைக் கொல்லவதற்குக் குண்டைக் கட்டிக்கொண்டு தற்கொலையில் ஈடுபட்டான்? இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? இன்று நீங்கள் பெண்களைப் பற்றிப் பேசுகின்றீர்கள்! பெண்கள் உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றீர்கள்! இந்தத் தாய்மாரைப் பற்றி யாராவது சிந்தித்தீர்களா? இந்த 50 பெண்களைப் பற்றியும் பட்டியலிடுவதற்கு நேரமில்லாத காரணத்தினால்தான் நான் அந்த ஐந்து தாய்மாரையும் ஐந்து குழந்தைகளையும் பற்றிக் குறிப்பிட்டேன். சிறுவர்கள் மற்றும் பெண்கள் உரிமைகளைப் பற்றி நீங்கள் அடித்துக் கூறுகின்றீர்கள். நீங்கள் நினைத்தால் இவர்களை விடுதலை செய்யமுடியும். இந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முன்பதாக இந்த ஐந்து பேரையும் உங்களால் விடுதலை செய்யமுடியுமா? என்று நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். நீதி அமைச்சராகப் பதவியேற்றிருக்கின்ற ரவூப் ஹக்கீமினால் இதற்குப் பதில் சொல்லமுடியுமா? ஏன், உங்களுக்கு இந்த இனவாதச் சிந்தனை? தமிழர்கள் என்கின்ற காரணத்தினால் தான் ஒன்றரை வயதுக் குழந்தை முதல் 80 வயது முதியோர் வரை இன்று இந்தச் சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் இன்னுமொரு யுத்தம் தோன்றக்கூடாது என்பதில் நாங்கள் அனைவரும் திடசங்கற்பமாக இருக்கின்றோம். இவ்வாறான நிலை தோன்றாமல் இருப்பதற்குப் பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கின்ற அரசியல் தீர்வை நீங்கள் முன்வைக்க வேண்டும். அதனைச் செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டு போனால் இந்த நாட்டு மக்கள் மத்தியிலே இன்னொரு பிளவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகும் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. அதாவது அப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடி சுவாமி மலை என்ற இடத்தில் ஓர் ஆலயம் இருக்கின்றது. இவ்வாலயம் மிகவும் பழைமை வாய்ந்த ஓர் ஆலயமாகும். தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கிருக்கின்ற கிராமசேவகரிடமோ அல்லது பிரதேச செயலாளரிடமோ அல்லது அரசாங்க அதிபரிடமோ எந்தவிதமான அனுமதியினையும் பெறாமல் அவ் ஆலயத்தைச் சட்ட விரோதமாக சுற்றிவளைத்து, அங்கே ஒரு காப்பரணை அமைத்து “இந்த இடத்தை நாங்கள் ஆய்வுசெய்யவேண்டும், யாரும் இப்பிரதேசத்தினுள் செல்லமுடியாது’ என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பலகையொன்றை நிறுத்திவைத்தார்கள். நான் இது பற்றி அறிந்தவுடன் அங்கிருக்கின்ற பிரதேச செயலாளருடனும் அரசாங்க அதிபரான சுந்தரம் அருமைநாயகம் அவர்களுடனும் தொடர்புகொண்டு வினவிய போது, அவர்கள் இருவரும் தங்களுக்கு இது பற்றித் தகவல்கள் தெரியாது என்றார்கள். அதற்குப் பின்னர் அவ்விடத்திற்குச் சென்ற மக்கள் அங்கு போடப்பட்டிருந்த அறிவுறுத்தல் பலகையை அகற்றிவிட்டு அந்த அதிகாரிகளிடம் “தற்பொழுது இங்கே ஒரு சிவில் நிருவாகம் நடைபெறுகின்றது. இப்பிரதேசத்திற்குப் பொறுப்பாக பிரதேச செயலாளர் இருக்கிறார். அரசாங்க அதிபர் இருக்கிறார். அங்கு எந்த விடயங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் அவர்களிடம் அனுமதியைப் பெற்ற பிறகுதான் அவற்றினை மேற்கொள்ளவேண்டும். இது ஒரு இனவாதச் செயல். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்ற வடக்கு,கிழக்குப் பகுதியில் என்ன ஆட்சிமுறை நடைபெறுகின்றது என நான் உங்களிடத்தில் கேட்கவிரும்புகின்றேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் தாக்கப்பட்டார்கள். ஏன் இவ்வாறு தாக்கப்பட்டார்கள் என்றால் அங்கிருக்கின்ற தமிழ் இளைஞர்கள்தான் இவர்களைத் தாக்கினார்கள் எனக் காண்பிப்பதற்காகவே. உண்மையில் அங்குள்ள தமிழ் இளைஞர்கள் அவர்களைத் தாக்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகளைச் செய்வதற்காகவே அங்கு ஒரு குழு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வடக்குக் கிழக்கில் சிவில் நிருவாகம் இடம்பெறுகின்றது என்றும் கௌரவமான சமாதானம் நிலவுகின்றது என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், அங்கே நடைமுறையில் இருப்பது காட்டுச் சட்டமே! இதனை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பக்கம் கௌரவமான சமாதானம் எனக்கூறிக் கொண்டு மறுபக்கத்தில் இவ்வாறான அழிவுகளை செய்துகொண்டிருக்கின்றீர்கள். எனவே இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகின்றோம். இப்பொழுது நான் கூறியவற்றை வைத்து நீங்கள் சில நேரம் ஒரு புலி பேசியதாகக் கூடச் சித்திரிக்கலாம். அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. உண்மையை உண்மையாகக் கூறவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது.

இவ்வாறே திருகோணமலையிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்றானது ஓர் ஆலயத்தில் அமைந்திருக்கின்றது. அதனை மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் தான் காலம் காலமாக நிர்வகித்து வந்தார்கள். அவர்களுக்குப் பிறகு, “பட்டினமும் சூழலும்’ என்ற பிரதேச சபை பொறுப்பேற்று அதனை ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் சுகாதாரமாகவும் நடத்திவந்தது. அங்குள்ள அரசாங்க அதிபர் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி திடீரென்று அங்கு சென்றிருக்கிறார். அவரும் அவருடன் சென்ற குண்டர்களும் அங்கிருந்த பத்திரங்களைப் பறித்தெடுத்து பற்றுச்சீட்டு கொடுப்பதை உடனடியாக நிறுத்தி அதனை அங்குள்ள ஒரு விகாரையின் நிர்வாகத்தின் கீழ் கையளிக்குமாறு கூறியிருக்கின்றார். இதில் என்ன நியாயம் இருக்கிறது? ஓர் அரசாங்க அதிபர் அத்துமீறிப் பிரவேசித்து அங்கு மாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருந்த அந்த விடயத்தைப் பறித்து இன்னொரு விகாரைக்குக் கொடுப்பதாக இருந்தால் அது என்ன நிர்வாகம்? சிவில் நிர்வாகமா அல்லது காட்டு நிர்வாகமா? இதற்கு உங்களால் பதில் கூற முடியுமா? அரசாங்க அதிபர்கள் என்றால் சிவில் நிர்வாகம் செய்யக்கூடியவர்கள். இவர் ஓர் இராணுவக் கட்டளைத் தளபதியாக இருந்ததை அங்கு நினைவு கூர்ந்திருக்கிறார். .

Please Click here to login / register to post your comments.