இன நெருக்கடி தொடர்பில் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள்

தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான பகைமை உணர்வு அதிகரித்தது. 1948 ஆம் ஆண்டில் முதன் முதலாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயாவில் சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய சகல மாவட்டங்களிலும் படிப்படியாகச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கொடி கட்டிப் பறந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியாலோ அல்லது தமிழரசுக் கட்சியாலோ இத்தகைய குடியேற்றங்களை எவ்விதத்திலும் தடுக்க முடியாமற் போனது. கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் இன்று அந்தந்தப் பிரதேசங்களில் ஐம்பது அறுபது வருட ஆட்சி உரிமையினைப் பெற்ற மக்களாகக் காணப்படுகின்றனர். உயர் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் இன்றும் கூடத் தமிழ் மக்கள் தமது பாரம் பரிய வாழ்விடங்களை இழந்து அகதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள், மலையக மக்கள், வட கிழக்கு மக்கள் அனைவருக்கும் இந்த நிலப் பிரச்சினையும் இனப் பிரச்சினையும் பொதுவாக இருப்பதால் இவர்கள் அனைவரதும் நன்மை கருதியே இலங்கைத் தமிழரசுக்கட்சி அஹிம்சை ரீதியான போராட்டங்களை ஆரம்பித்து நடத்தி வந்தது. ஆயினும் காலப்போக்கில் முஸ்லிம் தலைமைகளும் மலையகத் தலைமைகளும் மாறி மாறி அதிகாரத்துக்கு வரும் அரசாங்கங்களுடன் அவ்வப்போது இணைந்து ஏதோ தத்தம் மக்களுக்குச் செய்யக் கூடிய உதவிகளைச் செய்வோம் என்ற நிலைப்பாட்டை எடுத்த பின்னர் வட, கிழக்கு தமிழ் மக்கள் தனித்து விடப்பட்டார்கள். கடந்த மூன்று தசாப்த காலமாகப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டதால் தமிழரசுக் கட்சி அஹிம்சை ரீதியான போராட்டங்களைக் கைவிட்டு ஏதோ நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக 1987 ஆம் ஆண்டிற் செய்துகொள்ளப்பட்ட இலங்கைஇந்திய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களைக் கையளித்த (புலிகள் தவிர்ந்த) தமிழ்ப் போராளி இயக்கங்கள் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியல் கட்சிகளாக இயங்கி வருகின்றன. இவை யாவும் இணைந்து இன்று தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்று ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. இத்தகைய கூட்டணிக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பொதுவான தீர்வுத் திட்டமொன்றை அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் உண்மையிலேயே ஒற்றுமைப்பட்டு அரசுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தாலும் கூட அரசு இவர்களுடன் பேசப்போவது சமஷ்டி பற்றி அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் அவரவர்களின் பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியமர அனுமதிக்கப்படுதல், அவர்களுக்கான வீடுகளை இந்திய உதவியுடன் அமைத்துக் கொடுத்தல், உடைந்துபோன பாடசாலைகளை மீள அமைத்தல், போதிய தளபாட வசதிகளையும் விஞ்ஞான கூட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல், வேலையற்ற பட்டதாரிகளை, ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்தல், யுத்தம் காரணமாக வேலை இழந்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மக்கள் கொள்ளையர் பயமின்றியும் காடையர் தொல்லை இன்றியும் ஆயுததாரிகளின் அட்டகாசங்கள் இன்றியும் வாழ வழி சமைத்துக்கொடுத்தல். இவைகளைப் பற்றித்தான் தமிழ்த் தலைமைகள் அரசுடன் முதலிற் பேச வேண்டியிருக்கும். பேச்சுரிமை எழுத்துரிமை, சுதந்திரமாகத் தேர்தலில் பங்கு கொள்ளும் உரிமை மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் அதிகாரங்கள், பாதுகாப்பு விவகாரங்கள் போன்ற அம்சங்களும் கலந்துரையாடப்படவேண்டும்.

இவையெல்லாம் ஜனநாயக நடைமுறைகளின் கீழ் அமுல்ப்படுத்தப்படும் சாதாரண விடயங்களே ஆகும். ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கும் விதத்திலே தான் காரியங்கள் நடைபெறுகின்றன.

பந்தை அங்குமிங்கும் எறிந்து விளையாடும் விளையாட்டை அல்லது கள்ளனும் பொலிஸும் என்ற விளையாட்டை விளையாடிக் காலம் கடத்தவே அரசியல் மேதாவிகள் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம் என்ற நிலையே இன்று காணப்படுகின்றது.

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண குடாநாடு அரசின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிழக்கு மாகாணப் போராளிக் குழுக்கள் பிரிந்து போன பின்பு கிழக்கு மாகாணமும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பின்பு வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடைபெற்ற இறுதி யுத்தம் காரணமாக அப்பிரதேசம் முழுவதும் அழிந்து தரமட்டமாகிப் போனது. யூத இனம் அழிவில் இருந்து மீண்டெழுந்து அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை ஆகிய சக்திகளின் உதவியுடன் தனிநாடு அமைத்தது பற்றி ஒரு சில தமிழர்கள் நிறையவே பேசி வருகின்றனர். ஆனால், பாலஸ்தீன மக்களிடம் பறித்தெடுத்த நிலத்திற்கான யூத மக்களின் தனியரசு நிறுவப்பட்டது என்ற உண்மையையும் இன்று பாலஸ்தீன மக்களின் மண்ணை மென்மேலும் இஸ்ரேல் கபளீகரம் செய்து வருகின்றது என்ற உண்மையையும் உணர இவர்கள் தவறி விடுகின்றார்கள். உண்மையில் தமிழர்களை ஒப்பிடுவதாக இருந்தால் பாலஸ்தீன மக்களுடன் தான் ஒப்பிட வேண்டுமே தவிர ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலுடன் அல்ல.

சிங்களக் குடியேற்றங்கள் பற்றியும் இனப் பிரச்சினைத் தீர்வு பற்றியும் அரசாங்கத்திலுள்ள கடும் போக்காளர்களின் அணுகுமுறை நாடறிந்த சங்கதி ஆகும். சமஷ்டி முறையினையும் மாகாண சபை முறையினையும் கடுமையாக எதிர்த்து வரும் மக்களின் விடுதலை முன்னணி ஒற்றையாட்சி முறையின் கீழ் இனப்பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்று பிரசாரம் செய்து வருகின்றது. இவர்கள் ஆட்சிக்கு வருவது எப்போது? ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பது எவ்வாறு? என்பதெல்லாம் எவருக்கும் விளங்காத விலை தெரியாத கேள்விகள் ஆகும்.

வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்றுவரை இந்த நாட்டில் அமுலில் இருப்பது ஒற்றையாட்சி முறைமையே ஆகும். இந்த ஒற்றையாட்சி முறையின் கீழ் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட முடியாமற்போனது மட்டுமல்லாமல் இருக்கும் உரிமைகள் கூடப் படிப்படியாகப் பறிபோகும் நிலைமையே நீடித்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து விட்டதால் இன்று இனப்பிரச்சினையென்றொன்று இந்த நாட்டில் இல்லை என்று இந்நாட்டின் பழம்பெரும் கட்சியின் சார்பில் பேசவல்லவர் ஒருவர் அண்மையில் அறிக்கையொன்றினை விட்டிருந்தார். போதாக் குறைக்குத் தொடர் தோல்விகளாலும் உட்கட்சிப் பூசல்களாலும் அக் கட்சி அல்லாடிப் போயுள்ளது. ஆகவே இன்று பலமான எதிர்க்கட்சியொன்று இல்லாத நிலைமையும் ஒரு பெருங்குறைபாடாக உள்ளது.

மீள்குடியேற்றம் ஆமை வேகத்தில் நடக்கின்றது. அங்கு அபிவிருத்தி நடந்தாலும் அல்லது நடக்காவிட்டாலும் அதைத் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலைமையே இன்று காணப்படுகின்றது. மக்கள் பிரதிநிதிகள் வெறுமனே கண்டன அறிக்கைகளை மட்டும் விடுத்து விட்டு ஆறுதலாக இருப்பதை விடுத்து "நான் எனது மக்களுக்கு என்னென்ன உதவிகளைச் செய்தேன்; இன்ன இன்ன தீமைகளைத் தடுத்து நிறுத்தினேன்' என்று அறிக்கைவிடும் நிலைமை ஏற்பட வேண்டும். முஸ்லிம் மற்றும் மலையகத் தலைமைகளுடனும் கொழும்பு மற்றும் மேற்குக் கரைத் தமிழர்களுடனும் சிங்கள இடதுசாரிகளுடனும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இனப்பிரச்சினை என்பது இலங்கையில் மட்டும் இருக்கும் ஒரு புதுவிதமான பிரச்சினை அல்ல. பல்லின மக்கள் வாழும் வேறு நாடுகளில் இப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து தமிழிலும் சிங்களத்திலும் மக்களுக்கு அதனை விளங்கப்படுத்திப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மூன்று இனங்களும் இணைந்து இனப்பிரச்சினையைத் வெற்றிகரமாகத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் இந்நாட்டில் சுபீட்சத்தையும் அமைதியையும் அபிவிருத்தியையும் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. .

Please Click here to login / register to post your comments.