பொங்கல் புத்தாண்டு விழா தமிழர்களின் பண்பாட்டுக் கோலம்!

ஆக்கம்: நக்கீரன்
பொங்கல் விழா இன்று முன்னையை காலங்களை விடப் பரவலாகத் தமிழ் மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் மீதுள்ள பற்றும் தமிழின உணர்வும் தமிழ்மக்களிடம் மேலோங்கிக் காணப்படுவதே.

பொங்கல் விழாவோடு தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் - திருவள்ளுவர் பிறந்த நாள் - எனச் சேர்த்துக் கொண்டாடப்படுவது மறைமலை அடிகளார் காலத்தில் இருந்து வரும் வழக்கமாகும்.

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் மூன்று முக்கிய முடிவுகளை அப்போது எடுத்தார்கள்.

    1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது. 2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
    3. திருவள்ளுவர் காலம் கிமு 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 அய்க் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு)

1971 இல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்ப்படுத்தப்பட்டு வருகின்றது. 1969 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என நடைமுறைப்படுத்திடும் சட்டத்தை தமிழக அரசு கடந்த 1.2.2008 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

இன்று தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், பொங்கல் திருநாள், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகத் தமிழ் மக்களால் சிறப்பாகவும், இனிப்பாகவும் சர்க்கரைப் பொங்கலுடன் உலகளாவிய அளவில் கொண்டாடப் பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனித் தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சர்க்கரைப் பொங்கல் அடம் செய்வதற்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய பொருட்களை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் எல்லாக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுத்து வருகிறது. இதனால் சமூகத்தின் கடைநிலைக் குடும்பங்களும் பொங்கல் பொங்கி பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு வழிசெய்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

‘பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள் இனி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி வண்ண வண்ணக் கோலங்கள் இட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட மழலையர், மாணவர், மங்கையர், மகிழ்ச்சியில் தோய்ந்து, புத்தாடை புனைந்து, தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும் சமத்துவ உணர்வு பரப்பியும் தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் எனும் அவ்வகை நிகழ்ச்சிகள் நினைவை விட்டு அகலா வண்ணம் நீக்கமற நிறைந்திடட்டும்!

தமிழ்ப் புத்தாண்டு நாளைத் தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் இடங்களில் எல்லாம் விழாவெடுத்துக் கொண்டாட வேண்டும் எனத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையப் பறைசாற்றும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை மாநிலமெங்கும் உள்ள மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள், பட்டிதொட்டிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடி மகிழ வேண்டும்’ என முதல்வர் கருணாநிதி தமது விழைவினைத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும். தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் விழாவே சமயம் சாராத பகுத்தறிவுக்கு ஒத்த பெரு விழாவாக, கழனி திருத்தி, எருவிட்டு, வரம்பு கட்டி, உழுது, விதைவிதைத்து நெல் மணிக் கதிர்களை அறுவடைசெய்ய உதவியாக இருந்த ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக உழவர் பெருமக்களின் திருநாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அந்த விழாவும் உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் கொண்டாடப்படும். மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற பொருளும் உண்டு.

நாங்கள் புலம்பெயர்ந்து வேறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும் எமது பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் பொங்கல் போன்ற இனிய விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் எங்களது மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நாம் பேணிக் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை நாம் கொண்டாட மறந்தால், அவற்றை நாம் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் ஆபத்து இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். ;

இந்தப் பொங்கல் விழாவின் இன்னொரு சிறப்பும் முக்கியத்துவமும் யாதென்றால் இந்த நாளை தமிழின விடியலுக்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்த விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) வின் நினைவு நாளாகவும் உலகம் முழுதும் நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தளபதி கிட்டுவும் அவரது தோழர்களான மேஜர் வேலன், கேணல் குட்டிஸ்ரீ, கடற்புலி கப்டன் றோசான், கடற்புலி கப்டன் அமுதன், கடற்புலி லெப். நல்லவன், கடற்புலி கப்டன் குணசீலன், கடற்புலி கப்டன் நாயகன் ஆகியோர் மறைந்த 18 ஆவது நினைவு ஆண்டாகும்.

இந்த ஆண்டுப் பொங்கல் எமது தாயக உறவுகளுக்கு எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில் சிக்கி உண்ணப் போதிய உணவின்றி உடுக்கத் துணியின்றி இருக்க இடமின்றி நோய்க்கு மருந்தின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் அல்லல்படுகிறார்கள். இரண்டரை இலக்கம் மக்களை மீள் குடியேற்றம் செய்து விட்டோம் என்று சிங்கள அரசு சொன்னாலும் அவர்களில் பெரும்பாலோர் உற்றார் உறவினர் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

மூதூர் கிழக்கில் 2006 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்த 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் வேடர்கள் போல் எந்த அடிப்படை வசதிகளுமின்றி தெருவோரங்களில் வாழ்கிறார்கள். சம்பூரில் வாழ்ந்த மக்களின் வீடுவாசல்கள் இடிக்கப்பட்டு அந்த மக்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் நிலம் சிங்கள அரசினால் கையகப்படுத்தப்பட்டு உயர்பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 500 MW ஆற்றல் வாய்ந்த அனல்மின் உலை கட்ட இந்திய அரச நிறுவனமான தேசிய வெப்ப ஆற்றல் குழுமமும் (National Thermal Power Corporation (NTPC) ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார அவையும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இதற்கான முதலீட்டை இரண்டு நாடுகளும் அய்ம்பதுக்கு அய்ம்பது விழுக்காட்டில் செய்ய இருக்கின்றன. அமெரிக்க டொலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இருக்கிறது.

இரக்கமற்ற சிங்களத்தின் கொடுங்கோல் ஆட்சியில் வடக்கும் கிழக்கும் சிங்களக் குடியேற்றங்களினால் படு வேகமாக சிங்கள மயப்படுத்தப் பட்டு வருகிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற திருகோணமலை கன்னியா சுடுதண்ணீர் கிணறுகளை சிங்கள அரசின் தொல்பொருள் திணைக்களத்தின் பெயரில் திருகோணமலை அரச அதிபர் கையகப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊர் பேர் தெரியாத சிங்களவர்கள் அரச செலவில் முடிக்குரிய காணிகளில் குடியேற்றப்படுகிறார்கள்.

சிங்கள தேசிய கீதம் ஆயுதமுனையில் தமிழர்களது தொண்டைக்குள் திணிக்கப்படுகிறது. வடக்கில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் என மக்கள் வதைக்கப்படுகிறார்கள். வேலியே பயிரை மேய்வது போல யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளின் புலனாய்வுத் துறையே இத்தகைய கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவை யாவும் இலங்கை பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்ற பேரினவாதக் கோட்பாட்டை எதிரொலிக்கிறது.

பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டில் எமது தாயக உறவுகளின் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்கள் தொலைந்து அவர்களது வாழ்வில் இன்பம் பொங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களைப் பிடித்த பீடுகள் அனைத்தும் மறைந்தொழியும் என நம்புகிறோம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடந்த பல ஆண்டுகளாக (2009, 2010 நீங்கலாக) தமிழர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் காப்பைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் இயங்கி வருகிறது.

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் பேசியது.

உலகின் தொன்மையான மொழியான தமிழின் சிறப்பினை, உலகமே போற்றுகின்றது; பெருமை செய்கின்றது. ஆனால் தமிழர்களுக்கு தமிழ்மொழியின் அருமை பெருமை சீர் சிறப்பு தெரியாது இருக்கிறது.

அடுத்து உங்கள் உறவு முறைகளை தமிழில் கூறுங்கள். டடி, மமி எங்களுக்கு வேண்டாம். அப்பா அம்மா என்று அழகு தமிழில் அழையுங்கள். அங்கிள் ஆன்ரி வேண்டாம். மாமா மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பது மனங்கொள்ளத்தக்கது.

உங்கள் பிள்ளைகளுக்குச் சொற்சுவையும் பொருட்சுவையும் ஓசைநயமும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை வையுங்கள். இப்படிச் செய்வது நீங்கள் அன்னைத் தமிழுக்குச் செய்யக்கூடிய குறைந்தளவு தொண்டாகும். தமிழ்க் குழந்தைகளின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், சாதகம், நாள், நட்சத்திரம், எண் கணியம் போன்ற மூடநம்பிக்கைகள் காரணமாகும்.

எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை எம்மவர் உணர்ந்திலர். ஆசா, கோசா, யூரேனியா, நிரோஜன், நிரோஜினி, நிஷாந்தன், அபிஷா, டில்ஷன், டில்ஷி, அஸ்வின், அஸ்வினி எனப் பொருள் இல்லாத அல்லது முறைகேடான பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். நிரோஜன் என்றால் ரோசமற்றவன் எனப் பொருள். நிரோஜினி என்றால் ரோசமற்றவள் என்று பொருள். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள். மேலும் அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதாகும்.

பெற்றோர்களுக்குத் தமிழ் எது வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ,ஸ,ஷ,ஹ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும். மேலும் தமிழில் சொற்களுக்கு முன்வராத ட, ர, ல, ங, ண, ழ, ள, ற, ன எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது.

தமிழில் அழகான, இனிமையான, பொருள் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, தமிழரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், பூமகள், வள்ளி, கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

உங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைத் தமிழில் செய்யுங்கள். கடவுளர்க்கு மொழிச் சிக்கல் இல்லை. அவர்களுக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். “அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலாம் எமைச் சொற்தமிழில் பாடுக” எனச் சிவபெருமானே சுந்தரரைக் கேட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியுள்ளார்.

திருமணங்களைத் தமிழில் செய்து கொள்ளுங்கள். தமிழர்களது திருமணங்களில் விளங்காத வடமொழிக் கூச்சல் வேண்டாம். அம்மி வேண்டாம். வடநாட்டு அருந்ததி வேண்டாம். தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தை அணுகினால் நாங்கள் எந்தத் தட்சணையும் வாங்காமல் திருக்குறள் மந்திரம் ஓதித் தமிழ்முறைத் திருமணங்களை எளிய முறையில் நடத்தி வைப்போம்.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.

இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் தமிழீழம் தனியொரு நாடாக மலரும் அங்கு வாழும் எம் உறவுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்தப் புத்தாண்டில் எங்கள் தாயக மக்கள் உட்பட உலகளாவிய தமிழ்மக்களது வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பொங்கட்டும். இடர் நீங்கி இனிமை பெருகட்டும் என வாழ்த்துகிறோம்.

Please Click here to login / register to post your comments.