'வடக்கில் பிரகடனப்படுத்தப்படாத போர் ஒன்றே நடந்துகொண்டிருக்கிறது'

இந்த நாட்டில் போர் முடிந்து விட்டது.இனி ஒரு துப்பாக்கிக் குண்டுகூட வெடிக்காது என்று ஜனாதிபதி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அறிவித்தார். வழக்கம் போலவே அந்த அறிவிப்பு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கானதாகவும் தென்பகுதிக்கு ஆனதாகவும் மட்டுமே இருக்கிறது.போர் முடிவுக்கு வந்ததன் பயனைத் தெற்கு மக்கள் அனுபவித்து வருகின்ற அதேவேளை,ஏனோ இந்த நாட்டின் தமிழர் பகுதிகளில் மட்டும் அறிவிக்கப்படாத ஒரு சண்டை நடந்து கொண்டிருக்கிறது.அங்கு இன்றும் துப்பாக்கிகள் வெடிக்கின்றன.மக்கள் கொல்லப்படுகிறார்கள். கொள்ளைகளும் களவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

போர் முடிவுக்கு வந்து விட்டதான உணர்வு இன்னும் வடக்கில் உள்ள மக்களுக்கு ஏற்படவேயில்லை.இந்த நிலைமைகள் தொடர்வதைப் பார்க்கும்போது இந்த நாட்டின் வடக்கு,கிழக்குப் பகுதிகள் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இல்லாமல் வேறொரு ஆட்சியின் கீழ் இருக்கின்றதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.உண்மை அப்படியாக இருந்தால் பல ஆயிரம் சிங்கள இளைஞர்களையும் தமிழ் இளைஞர்களையும் பலி கொடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பயனேதும் இல்லை.

சக உறுப்பினர்களே நீங்கள் தெற்கில் பொருளாதாரப் போர் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற அதேசமயத்தில் வடக்கில் அறிவிக்கப்படாத ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.கடந்த ஒரு மாத காலத்திற்குள் அங்கே நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.மேலும் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.மூவர் கடத்தப்பட்டுள்ளார்கள்.பத்திற்கும் மேற்பட்ட பெரும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.களவுகள் நாளாந்தத் தொடர் கதை ஆகியுள்ளன.

11.12.2010 அன்று சங்கானை இலுப்பைத் தாழ்வு முருகமூர்த்தி ஆலயப் பிரதம குருவின் வீட்டினுள் ஆயுதத்துடன் நுழைந்த குறைந்தது நால்வர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்துடன் இந்த அறிவிக்கப்படாத போர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டது.குறித்த ஆயுததாரிகளில் இருவர் இராணுவச் சிப்பாய்கள் என்பதை வடக்கின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவே ஏற்றுக்கொண்டுள்ளார். சிப்பாய்களிடம் இருந்து வேறு இருவர் ஆயுதங்களை வாங்கிச் சென்றார்கள் என்று இராணுவத் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.ஆனால், கொள்ளையில் தமது வீட்டுக்குக் குறைந்தது நால்வர் ஆயுதங்களுடன் வந்தார்கள் என்று கூறியுள்ள குருக்கள் வீட்டினர் அவர்கள் நால்வரையும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து அடையாளமும் காட்டி உள்ளனர். அன்றைய சம்பவத்தில் காயமடைந்த ஆலய பிரதம குரு நித்தியானந்தக் குருக்கள் 15.12.2010 அன்று சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.இந்தச் சம்பவத்தில் அவரது மகன்மார் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள்.

26.12.2010 அன்று வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் மா.சிவலிங்கம் உரும்பிராயில் உள்ள அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். தனியே வந்த ஆயுததாரி ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். பிரதிக் கல்விப்பணிப்பாளரின் கொலைக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்று மக்கள் சந்தேகிப்பதற்கு ஏதுவான காரணங்களாக இருக்கின்றன.

தேசிய கீதத்தை சிங்களத்தில் பாட பாடசாலை மாணவர்களை அவர் அனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் தேசிய பாதுகாப்புத் தின நிகழ்வில் யாழ். பாடசாலை மாணவர்களை சிங்கள தேசிய கீதம் பாடச் சொல்லி வற்புறுத்தியதை அவர் வன்மையாகக் கண்டித்தார் என்ற காரணத்திற்காகவுமே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கிறது.மக்களின் இந்தச் சந்தேகம் தவறானதாகக்கூட இருக்கலாம்.அதனைத் தெளிவுபடுத்த வேண்டியதும் உண்மையை மக்கள் முன் கொண்டுவர வேண்டியதும் அரசினுடைய மிக முக்கிய கடமை.அதைச் செய்யும்போது மட்டுமே இது தங்களுடையதுமான அரசு என்று வடக்கில் உள்ள மக்கள் எண்ணத் தலைப்படுவர். அதைவிடுத்து சம்பவங்களுக்குச் சப்பைக்கட்டுக் கட்டி பூசி மெழுகுவதால் எந்தப்பயனும் இல்லை.

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த வாரம் தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சித்த சுவாதீனமற்றவர் என்றும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.சித்த சுவாதீனமற்றவர் அதற்கான மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்படவேண்டுமே தவிர இந்த உலகை விட்டே அனுப்பப்படவேண்டியவர் அல்லர் என்பதை இந்தச் சபையில் உள்ள பெருமைக்குரிய உறுப்பினர்களாகிய நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

அதிகபட்சமாக மூன்று சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன.தீவுப்பகுதியான காரைநகரில் எஸ்.சிவனேஸ்வரராஜா என்பவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இவரது மரணமும் இயற்கையானது அல்ல என்று மருத்துவப் பரிசோதனை அறிக்கை கூறுகின்றது.அதேதினம் மாலை 5.30 மணியளவில் வடமராட்சி அல்வாயில் ஆறு பிள்ளைகளின் தாயாரான திருமதி புஸ்பாதேவி யோகநாதன் கடத்தப்பட்டார்.இன்னும் அவர் வீடு திரும்பவில்லை.இந்தச் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தவராசா கேதீஸ்வரன்(வயது 28) என்ற இந்த இளைஞரின் வீட்டுக்கு ஹெல்மட் சகிதம்

சென்ற இருவர் அவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். கொலையாளிகளை அடையாளம் கண்டுவிட்டுத் தப்பி ஓட முயற்சித்த போதே தலையில் சுடப்பட்டார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.தனது பகுதியின் முன்னேற்றத்திலும் இயற்கைச் சூழலிலும் அக்கறை கொண்ட ஒரு இளைஞர் அவர்.குடத்தனைப் பகுதியில் மண் அகழப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை அவர் வெளிச்சம் போட்டுக்காட்டி வந்தார்.

இந்தப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடும் சட்டபூர்வமற்ற முறையில் இயங்கும் மகேஸ்வரி நிதியம் மக்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுள்ளார்கள்.மக்கள் இப்போது அதற்கெதிராகக் கொதித்தெழுந்துள்ளார்கள். மகேஸ்வரி நிதியத்தை மணல் அள்ளவிடாமல் எதிர்க்கிறார்கள்.ஏனெனில் மணல் அகழ்வதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை இந்த நிதியம் மக்களிடம் இருந்து சுருட்டிக்கொண்டுள்ளது.இந்தச் சட்டபூர்வமற்ற நிதியத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து நிதியத்தை சட்டபூர்வமாக்குவதற்காக அதனைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அந்த உயர் சபை அதனை அனுமதிக்கக்கூடாது அங்கீகரிக்கக்கூடாது எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.குடத்தனையில் கொல்லப்பட்ட இளைஞரான கேதீஸ்வரனை ஈ.பி.டி.பி. கட்சியினர் நன்கு அறிந்திருந்தனர். அவரது மரணச் சடங்கிலும் ஈ.பி.டி.பி.யினர் பலர் கலந்துகொண்டனர்.

புதிய வருடத்தின் முதல் நாளில் உரும்பிராயைச் சேர்ந்த ஆட்டோச் சாரதியான எஸ்.கோபிநாத் (வயது 27) கடத்தப்பட்டார். ஆணும் பெண்ணுமாக இருவர் இவரது ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளனர்.அதன் பின்னர் ஆட்டோவும் மீட்கப்படவில்லை. அவரும் திரும்பி வரவில்லை. திங்கட்கிழமை கூட ஒருவர் காணாமல் போயுள்ளார். உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் அமுதராசா(வயது 35) என்கிற இளம் குடும்பஸ்தரே காணாமல் போனவர் என அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் பார்க்கும்போது அவற்றில் ஒரு தொடர்ச்சியையும் திட்டமிடப்பட்ட செயற்பாட்டையும் அனைவராலும் அவதானிக்கமுடியும்.ஆனால், இந்தச் சம்பவங்களுக்கு அரசின் நலன்புரி நிலையங்களில் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியவர்களைக் காரணம் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இராணுவத் தரப்பினரும் இப்போது நடப்பவை தனிப்பட்ட காரணங்களுக்கானவை என்றும் கொழும்பு போன்றே யாழ்ப்பாணத்திலும் ஒரு பாதாள உலகக் கோஷ்டி இயங்குவதாகவும் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.ஆனால், இங்கே அவசரமாக உரையாற்றிய அமைச்சர் மக்கள் முன் தான் வழமையாகத் தெரிவிக்கும் காரணங்களை விட்டுவிட்டு அச்சந்தரும் சூழலை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை எழுப்பியது முதலைக்கண்ணீர் வடிப்பது போலிருந்தது.

இந்தச் சபையின் முன்னால் நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்வது இந்தக் கொலைகள் அனைத்திற்கும் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளன என்பதைத்தான். உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறப்போகின்றன என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது என்பதை நோக்கும் போது யாழ்ப்பாண மக்களைத் தொடர்ந்தும் அச்சத்தின் பிடியில் வைத்திருக்க விரும்பும் சக்திகளே இதனைச் செய்கின்றன என்பது வெளிப்படையானது.மக்கள் வெளியே வந்து சுயமாக வாக்களித்தால் தாங்கள் வெற்றிபெற முடியாது என்று நம்பும் சக்திகளே இதனைச் செய்கின்றன.ஜனநாயகம் என்ற போர்வையில் ஆயுத அரசியலை நடத்தி வந்த இந்தச் சக்திகளால் அது இன்றி மக்களைச் சந்திக்க முடியாதுள்ளது.இதனாலேயே தேர்தல் நெருங்கும் போது அவை மீண்டும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் எடுத்துள்ளன.கடந்த முப்பது வருடங்களாக மக்கள் பல்வேறு தரப்பினரின் கைகளில் ஆயுதங்களைப் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டார்கள். அவர்களிடம் அரசியல் தெளிவு இருக்கின்றது.எனவே இந்த ஆயுத அரசியல் குழுக்கள் தமது கற்பனை உலகில் இருந்து வெளியே வரவேண்டும்.கொலைக் கலாசாரத்திலிருந்து வெளிவரவேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் இறுக்கமான இராணுவக் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்து வருகிறது.ஆனால்,இங்கு நடைபெற்ற கொலைகள்,கடத்தல்கள்,காணாமல் போனவைகள் குறித்து இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை.அதற்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

மற்றொரு விடயத்தையும் இங்கு உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர நான் விரும்புகின்றேன்.யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்த தகவல்களைப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பெறுவதற்கான உரிமை எமக்கு மறுக்கப்படுகிறது.அது பற்றிப் பொலிஸாரிடம் கேட்டால் அவர்கள் தகவல்களைத் தர மறுப்புத் தெரிவிக்கிறார்கள்.எங்கு குற்றச் செயல்கள் நடந்தன.யார் அதில் பாதிக்கப்பட்டனர் என்ற விபரங்கள் தெரிந்தால் அந்த மக்களைச் சென்று பார்த்து அவர்களிடம் பேசுவதன் மூலம் கிடைக்கும் தகவல்களை பொலிஸாரிடம் நாம் பகிர்ந்து கொள்ளமுடியும்.அது அவர்களின் விசாரணைகளுக்கும் உதவியாக அமையும்.இதனை ஏனோ புரிந்துகொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். எல்லாவற்றையும் அரசியல் நோக்கத்துடனும் இனரீதியான கண்ணோட்டத்துடனும் நோக்கும் பாதுகாப்பு அதிகாரிகளால் இன நல்லிணக்கத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியாது.

யாழ்ப்பாணத்தில் போதியளவில் தமிழ்ப்பொலிஸார் கடமையில் இல்லாமை நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.குற்றச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க பொலிஸ் நிலையத்தொடர்பு இலக்கங்களுக்கு மக்கள் அழைத்தால் மொழிப் பிரச்சினை காரணமாகத் தகவல் பரிமாற்றம் சரிவர நடைபெறுவதில்லை.சம்பவம் நடைபெற்ற உடனேயே பொலிஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைக்க தங்களால் ஒரு போதும் முடிந்ததில்லை என்று மக்கள் குறைப்படுகிறார்கள். இவற்றையும் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் தெற்கில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அனைத்து சுதந்திரத்தையும் அமைதியையும் பாதுகாப்பையும் வடக்கில் உள்ள மக்களும் அனுபவிப்பதை இந்தச் சபையும் ஜனாதிபதியும் உறுதிப்படுத்தவேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன். இன்றும் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருக்கின்ற நிலையில் தமிழ் இளைஞர்கள் தமக்கான சுயபாதுகாப்பைத் தேடவேண்டிய நிலைக்கு மீண்டும் அவர்களைத் தள்ளிவிடாதீர்கள் என்றும் இந்த நாடு இன்று சென்று கொண்டிருக்கும் அபிவிருத்தி நோக்கிய பாதையில் தொடர்ந்தும் இடையூறின்றிப் பயணிப்பதை உறுதிப்படுத்துங்கள்.

Please Click here to login / register to post your comments.