கடலில் குதிக்கச் சொல்லிட்டு சுட்டான்!- வெறி அடங்கா சிங்கள ராணுவம்!

ஆக்கம்: வீ.மாணிக்கவாசகம்

'எத்தனை தமிழனைக் கொன்று குவித்தாலும், சிங்கள ராணுவத்தின் ரத்த தாகம், தணியவே தணியாதா?’ என்று கேவிக் கதறுகிறார்கள், தமிழக மீனவர்கள். மீண்டும் ஒரு மீன​வனின் உயிர் குடித்துள்ளது, சிங்கள ராணுவம்!

புதுக்கோட்டை மாவட்டத்​தின் கடைக்கோடி மீனவக் கிராமம், ஜெகதாப்பட்டினம். நாகை மாவட்டம் சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியனும் அவரது தங்கை ரேவதியும் ஜெகதா​பட்டினத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வந்தனர். உறவினர் படகைக் கடன் வாங்கி மீன் பிடித்து வயிற்றைக் கழுவக் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டியன்... சிங்கள ராணுவத்தின் கோரத் தாண்டவத்தால் பிண​மாய்த்தான் கரை ஒதுங்கினார்.

பாண்டியனோடு படகில் சென்று நூலிழை​யில் உயிர் தப்பிய பாஸ்கர், மணிவேல், மணிகண்டன் ஆகிய மூவரையும் ஜெகதாப்​பட்டினத்தில் சந்தித்தோம். முதலில் பாஸ்கர் பேசினார். ''கடந்த 12-ம் தேதி காலைல அஞ்சரை மணிக்கு நாலு பேரும் கடலுக்குப் போனோம். ஒரு பதினஞ்சி, பதினாறு கல் தொலைவுல வலையைப் போட்டுட்டு உக்காந்​திருந்தோம். ஒண்ணும் மீம்பாடு இல்லை. நாலு மணி இருக்கும். 'பசிக்கிதே, சாப்புடுவோம்’னு பாண்டியன் சொன்​னான். 'நீ முதல்ல சாப்புடு. அப்பறம் சாப்டறோம்’னு சொன்னோம். அவனும் நாலு வாய் அள்ளி வெச்சிருப்பான். சிலோன் நேவிக்​காரன் போட் வர்றது தெரிஞ்சது. எங்க படகு நிக்கிற எடத்த குறி வெச்சி வேகமா அவங்க படகு வந்தத பார்த்ததும், அவசர அவசரமா வலையை சுருட்டி எடுத்துக்கிட்டு படகைக் கிளப்பினோம். எங்களோட நின்ன படகுகளையும் வேகவேகமா எடுத்துட்டாங்க. எங்க படகு இன்ஜின் வேகமா போகாது. அதனால மெதுவா நகர்த்துனோம். அதுக்குள்ள வேணும்னே அவங்க படகால எங்க படகு மேல வேகமா மோதி நின்னு... கடல்ல குதிக்கச் சொல்லி சைகை காட்டுனாங்க. மணிகண்டனும், மணிவேலும் கடல்ல குதிச்சிட்டாங்க. 'எனக்கு வயசாயிருச்சி. அதோட, ஆபரேஷன் செஞ்சிருக்கு. குதிச்சா செத்துருவேன்’னு கையால சைகை செஞ்சேன்... பக்கத்துல இருந்த பாண்டியன் குதிக்கத் தயாரானப்பதான் பாவிங்க, சடசடன்னு குருவிய சுடுற மாதிரி சுட்டுட்டுக் கௌம்பிட்டாங்க. பாண்டியன் உயிர் உடனே போயிருச்சி... சாயந்திரம் அஞ்சி மணிக்குப் படகை எடுத்துக்கிட்டுக் கரை திரும்பிட்டோம்...'' என்றார், கண்கலங்கியவராய்.

அடுத்துப் பேசினார் மணிகண்டன். ''அவங்க படகுல இருபது பேர் வரை இருந்தாங்க. எல்லார் கையிலயும் துப்பாக்கி. ஒருத்தன் எங்க படகு கண்ணா​டியைக் கல்லால அடிச்சி ஒடைச்சான். இன்​னொருத்தன், தோப்புக்கரணம் போடச் சொல்லி சைகை செய்ய... அப்படியே செஞ்சோம். அப்புறம் ரெண்டு கையையும் விலங்கு மாட்டுற மாதிரி சேர்த்துக் காட்டி, கைது செய்றதா சொன்னான். நாங்க கும்பிட்டோம். அதுக்கு அப்புறம்தான் கடல்ல குதிக்கச் சொல்லி சைகை காட்டினாங்க. நாங்க கடல்ல குதிச்சப்பவே பாண்டியன சுடுற சத்தம் கேட்டுச்சி. கடல்ல இருந்து படகுக்கு வந்து பாண்டியைப் பார்த்தோம். எல்லாமே முடிஞ்சிருச்சி...'' என்றார் கேவலாக.

பாண்டியனின் தங்கை ரேவதி, அழக்கூட திராணி​யற்றுச் சுருண்டு கிடந்தவர், நம்மைப் பார்த்ததும், ''கட​லுக்குப் போயிட்டு வர்றேன். பத்திரமா இரு’ன்னு சொல்லிட்டுப் போச்சே எங்கண்ணன்! இப்ப அது இல்லாமப் போயிருச்சே! இப்படி அநியாமா கொன்னுட்​டானுங்களே... இந்தப் பாவிங்களைக் கேக்க யாருமே இல்லியா? அப்பாவும் அம்மாவும் செத்தப்ப, இனி நான் இருக்கேன் அழுவாதேன்னு சொன்ன அண்ணன், அப்பாவுக்கு அப்பாவா, அம்மாவுக்கு அம்மாவா இருந்த எங்கண்ணன் போயிருச்சே... இனிமே எனக்கு யாரு துணை இருக்கா? என்னையும் அழைச்​சிட்டுப் போயிருண்ணே...'' என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார். என்னச் சொல்லித் தேற்ற?

இதற்குள் இந்தப் படுகொலை முதல்வர் கவனத்துக்குப் போக... வழக்கம்போல் 5 லட்சம் நிவாரணம் என்றும் அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு வேலை வாய்ப்பு எனவும் அறிவித்துவிட்டு, மத்திய அரசுக்குத் தந்தி அடிப்பதாகக் கூறியிருக்கிறார். கடலோரக் காவல் படையின் டி.எஸ்.பி-யான அம்சவள்ளியிடம் பேசியபோது, ''படகில் இருந்து ரெண்டு முழுத் தோட்டாக்களையும் ஒரு சிதைந்த தோட்டாவையும் கைப்பற்றியுள்ளோம். விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது...'' என்று மட்டும் சொன்னார்.

எல்லாப் பொருளுக்குமே தினம்தினம் விலைவாசி கூடிக்கொண்டே போகிறது. இதில் எப்பவும் விலையே உயராத ஒன்று உண்டெனில், அது தமிழக மீனவனின் உயிர்தான்!

Please Click here to login / register to post your comments.