இனப்படுகொலை விசாரணைக்குட்படுத்தப் போதுமான அளவில் மகிந்தரின் கரங்கள் குருதி தோய்ந்துள்ளன!

ஆக்கம்: ஊடக அறிக்கை

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சிறீலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச மீது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பன தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க அரசினைக் கோரியுள்ளது.

மகிந்த ராஜபக்சமீதான விசாரணையைக் கோருவதற்கென அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இராஜங்கத் திணைக்களம் மற்றும் பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதுவராலயங்கள் முன்னால் நடைபெறும் போராட்டங்களில்; பங்கு கொண்டு இக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்குமாறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ் மக்களைக் வேண்டிக் கொள்கிறது.

இனப்படுகொலைக் குற்றம் புரிந்தவராக மகிந்த ராஜபக்சவினை வகைப்படுத்தி நீதியின் முன்னால் நிறுத்துவதற்குப் போதுமான அளவுக்கு இவரது கரங்கள் குருதி தோய்ந்துள்ளன. 60,000 வரையிலான தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுற்ற இறுதிக் கட்டப்போரில் கொடிய முறையில் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் உணவும் போராயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பட்டினியால் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமுற்றவர்;களுக்கு அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் சிகிச்சை வழங்குவது தடுக்கப் பட்டதனால், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியே ஏராளமான பொதுமக்கள் உயிரிழக்கும் அவலம் நிகழ்ந்தது. யுத்தப் பகுதியினை விட்டு இறுதி நேரத்தில் வெளியேறியவர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். பலர் இம் முகாம்களில் இருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். பல பெண்கள் பாலியல்ரீதியான வல்லுறவுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். சிறீலங்காவின் அரசதலைவர் என்ற நிலையிலும் முப்படைகளதும் தளபதி என்ற பொறுப்பு நிலையிலும் ராஜபக்ச இருந்து வருவதனால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர், மற்றும் மானிடத்துக்கு எதிரான அனைத்துக் குற்றங்களுக்கும் முதன்மைப் பொறுப்பாளி மகிந்த ராஜபக்சதான.; இவரும் இக் குற்றங்களில் ஈடுபட்ட ஏனையோரும் மானுட நீதியின் பெயரால் விசாரணைகளுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டாக வேண்டும்.

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த அமெரிக்கப் பயணம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழு சிறிலங்காவின் போரக் குற்றங்கள் தொடர்பாக தனது செயற்பாட்டை மேற்கொண்டிருக்கும் தருணத்தில் இடம்பெற்றுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிபுணர்குழுவிடம் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்டப்போர் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், வன்முறைகள், அத்துமீறல்கள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் உள்ளடங்கலான குற்றங்களையும் ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு ஆராய்வதற்கேற்ற வகையில் குழுவின் உரித்தெல்லை விரிவாக்கப்படவேண்டும் எனவும் அண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

கடந்த டிசெம்பர் மாதம் விக்கிலீக்;ஸ் வெளிக் கொணர்ந்த இரகசிய ஆவணம் ஒன்றின்படி கொழும்பிலிருந்த அமெரிக்கத் தூதுவர் Pயவசiஉயை டீரவநnளை அவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்திருந்த குறிப்பில் சிறீலங்காவில் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் குற்றங்களுக்கு அரசதலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரவது சகோதரர்கள் உள்ளிட்ட நாட்டின் உயர் அரசியல் மற்றும் இராணுவத் தலைமை பொறுப்பானவர்களென்ற நிலை இருப்பதனால், இக் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன எனக் குறிப்பிட்டதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இக்குற்றம் புரிந்தவர்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் அமெரிக்க அரசுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதனையும் இது வெளிப்படுத்துகிறது.

உலகின் அனைத்துப்பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தத்தமது நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயங்களுடன் தொடர்பு கொண்டு மகிந்த ராஜபக்சவை உடனடியாக விசாரணைக்குள்ளாக்கக் கோரவேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், அமெரிக்காவின் நீதியமைச்சின் போர்க்குற்ற விசாரணைப்பிரிவுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு மகிந்த ராஜபக்சவை விசாரணைக்குள்ளாக்கும் கோரிக்கையை அவர்கள்முன் வைக்குமாறும் கோருகிறோம். இவ் அமைச்சுடன் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கம்: +1(202)514-2000. மின்னஞ்சல் முகவரி: askdoj@usdoj.gov

பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Please Click here to login / register to post your comments.