இந்திய கடலோர காவற்படை எதற்காக?

தமிழ்நாட்டின் மீனவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரும், தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்துவரும் எவரும் எழுப்பும் வினா இது.

1983ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்திலிருந்து கோடிக் கரை வரையிலுள்ள மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது - அவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறிலங்க கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன், இரால்களை பறித்துச் செல்வதும், அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதும் 27 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வினா எழுவது இயல்பே.

மேற்கே குஜராத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையும், அங்கிருந்து மேற்கு வங்க மாநிலம் வரை நீண்டுள்ள கிழக்கு கடற்கரையும் சேர்த்து மொத்தம் 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பகுதியை திறமையாக கண்காணிக்க 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவற் படை (Indian Coast Guard - ICG).

இந்தியாவின் கடல் எல்லை என்பது 14 கடல் மைல்களோடு (Territorial Waters) முடிந்துவிடவில்லை. இன்று அது இந்திய கடற்கரையிலிருந்து 300 கி.மீ. தூரம் வரையிலான தனித்த பொருளாதார மண்டலாக (Exclusive Economic Zone) விரிவடைந்துள்ளது. இவ்வளவு விரிவான கடல் பகுதியை காக்கும் வல்லமையுடைய படையாகத்தான் இந்திய கடலோர காவற்படை உள்ளது.

உதாரணத்திற்குக் கூற வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பைக் காக்க 3 கடலோர காவற்படை கப்பல்களும், இந்திய கடற்படையில் ஒரு பெரும் கப்பலும் ஈடுபட்டுள்ளதாக 2005ஆம் ஆண்டு சென்னையை ஒட்டிய கடற்பரப்பில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் கடலோர காவற்படை பயிற்சி செய்து காட்டியபோது அதன் இயக்குனராக இருந்த வைஸ் அட்மிரல் அருண் குமார் சிங் கூறினார். அது மட்டுமல்ல, 4 டார்னியர் விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் பால்க் நீரிணைப் பகுதியை கண்காணிக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது என்றார். இவ்வளவு பலம் வாய்ந்த படை தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பை காப்பதற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது என்றால், இதனைத் தாண்டி எப்படி சிறிலங்க கடற்படையினர் தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று நாங்கள் வினா எழுப்பியபோது அவர் மழுப்பலாகவே பதில் கூறினார்.

பிறகு தனிமையில் என்னோடு பேசியபோது - ஆஃப் த ரெக்கார்ட் என்று கூறிவிட்டு - தமிழக மீனவர்களை தாக்குவது விடுதலைப் புலிகள்தான் என்று கூறினார். அப்படியானால் அதனை ஏன் வெளிப்படையாக கூறவில்லை என்று கேட்டேன். “இல்லை... இல்லை... அது குறித்து விசாரிக்கிறோம்” என்று கூறி மழுப்பினார்.

ஆனால், தாக்குதலிற்குள்ளான தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருவர் கூட தங்களைத் தாக்கியது புலிகள் என்று கூறவில்லையே, அவர்கள் பொய் கூறுகின்றனரா? என்றும் கேட்டேன். அதற்கு அவரால் பதில் கூற முடியவில்லை (இந்த உரையாடல் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வெப்உலகம்.காம் கட்டுரையில் எழுதினோம்).

இந்தியாவின் கடலோர காவற்படையின் நோக்கங்கள் (Objectives) என்று அதன் உருவாக்கத்திற்கான சட்டத்தில் (Duties and Functions of Coast Guard), பிரிவு 14 (2) (b)இல் “மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும், அவர்கள் துயரத்தில் சிக்கும்போது உதவுவதும்” என்று தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், என்றைக்காவது சிறிலங்க கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கும்போது அங்கு நமது நாட்டின் கடலோர காவற்படை வந்துள்ளதா என்று தமிழக மீனவர்களைக் கேட்டுப்பார்த்தால், இல்லை என்றே பதில் வருகிறது. ஆனால் இயற்கை ஆபத்தில் சிக்கிய காலங்களில் காப்பாற்றி வந்துள்ளனர், பிறகு அதற்கான கட்டணத்தை செலுத்து என்றும் கட்டளையிட்டுள்ளனர்! அதனை மறுக்கவில்லை.

கடலோர காவற்படை துவக்கப்பட்டது 1978இல். தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் (அவர்களுக்கு ஒரு கடரோல காவற்படை கப்பல் கூட கிடையாது, இந்தியாதான் இரண்டு கப்பல்களை கொடுத்து உதவியது!) தாக்குதல் நடத்தத் தொடங்கியது 1983இல். அது கடந்த சனிக்கிழமை வரை தொடர்ந்துள்ளது. 500க்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்திய அரசைப் போல கிச்சித்தும் கவலைப்பட்டது கிடையாது கடலோர காவற்படை.

இப்படையின் கிழக்குப் படை தலைமை ஆய்வாளராக இருந்த இராஜேந்திரன் மட்டுமே ‘தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்க படையினரால் தாக்கப்படுவது கவலையளிக்கிறது’ என்று கூறிவிட்டுச் சென்றார். இப்போது பொறுப்பேற்றுள்ள சர்மா, சனிக்கிழமை காலை தமிழக முதல்வரை சந்தித்துவிட்டு வெளியில் இருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களை பாதுகாப்போம் என்று கூறினார். ஆனால் அன்று இரவே, வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமாரை கழுத்தில் கயிற்றால் சுறுக்குப் போட்டு சித்ரவதை செய்து கொன்றது சிறிலங்க கடற்படை!

ஒரு வலிமையான கடலோர காவற்படையைக் கொண்ட ஒரு நாட்டின் மீனவரை சுண்டைக்காய் நாடான இலங்கை கொல்ல முடிகிறது என்றால், இவர்களின் மெளன ஒப்புதலோடுதான் நடக்கிறது என்றுதானே பொருள்? ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, 27 ஆண்டுகளாக தாக்குதல் நடைபெறுகிறது, 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவேதான் தமிழ்நாட்டில் இந்தக் கேள்வி எழுந்துள்ளது.

எதற்காக தமிழக கடற்பகுதியில் இந்திய கடலோர காவற்படை?

Please Click here to login / register to post your comments.