புலிகள் பற்றிய தவறான மதிப்பீட்டால் படையினர் எதிர்கொண்ட அனர்த்தம்

ஆக்கம்: விதுரன்
இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரசுக்கு, இராணுவ ரீதியில் பாரிய வெற்றியொன்று தேவைப்படுகிறது. வடபோர்முனையில் படையினர் சந்தித்த பாரிய இழப்பானது முழு உலகுக்கும் களநிலைமையையும் படைவலுச் சமநிலையையும் நிரூபித்துள்ளதால், சமாதானப் பேச்சில் அரசின் பேரம் பேசும் ஆற்றல் அடிபட்டுப் போய்விட்டது.

சமாதானப் பேச்சுகளுக்கான நாள் குறித்த நிலையில், தங்களது இராணுவ பலம் குறித்தும் புலிகளின் பலவீனம் குறித்தும் தாங்கள் மேற்கொண்டிருந்த கணிப்பு மிகவும் தவறானதென்பதை அரசும் படைத்தரப்பும் இன்று உணர வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கில் அண்மைக்காலமாக தாங்கள் பல வெற்றிகளைப் பெற்றுவிட்டதாக அரசு கருதியது. புலிகளின் தந்திரோபாய பின் நகர்வுகளை அவர்களது பலவீனமென அரசும் படைத்தரப்பும் கருதின. கிழக்கில் நில ஆக்கிரமிப்பை படைகள் தீவிரப்படுத்திய போது புலிகள் அங்கிருந்து தந்திரமாகப் பின் நகர்ந்தனர்.

வெற்று நிலங்களை கைப்பற்றி அப்பகுதிகளிலெல்லாம் ஆயிரக் கணக்கில் படையினரைக் குவித்து அரசு அகலக்கால் வைத்தபோது புலிகள் நிலைமைகளை அவதானித்தனர். படையினர் பரந்து பட்டு பரவிய போது தேவையற்ற பகுதிகளிலெல்லாம் ஆயிரக் கணக்கில் படையினர் குவிக்கப்பட்டனர்.

மாவிலாறு மற்றும் சம்பூர் உட்பட்ட மூதூர் கிழக்குப் பகுதிக்கு படையினர் நகர்ந்த போது, அங்கிருந்து தங்கள் வளங்களை எதுவித சேதமுமின்றிப் பாதுகாப்பான இடங்களுக்குப் பின்னகர்த்தியவாறு பாரிய சேதங்களெதனையும் சந்திக்காது புலிகள் மாற்றிடங்களைத் தேடினர்.

இந்தப் பகுதிகளில் கிடைத்த இராணுவ ரீதியிலான வெற்றிகளை விட அவற்றை அரசியல் ரீதியான வெற்றியாக அரசு பெரும் பிரசாரங்களைச் செய்தது. கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிடும் நாள் வெகு தூரத்திலில்லையென தென்னிலங்கையில் பெரும் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. இராணுவ ஆய்வாளர்கள் கூட புலிகளின் கடந்த கால வரலாறுகளையும் தந்திரங்களையும் அறியாது கருத்துக் கூறினர்.

இதன் விளைவுதான் இன்று அரசுக்கும் படைத்தரப்புக்கும் மட்டுமன்றி யுத்த முனைப்பிலிருந்த இனவாதிகளுக்கும் பேரிடியாகிவிட்டது. போர் வெறி தூண்டப்பட்டது மட்டுமல்லாது வடக்கு- கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளும் கடத்தல்களும் எண்ணுக்கணக்கற்றது. காணாமல் போனோரின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

சமாதானப் பேச்சுக்கான அழைப்புகள் கூட, தோற்றுப் போய் ஓடிக் கொண்டிருக்கும் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப வழங்கப்படும் அவகாசமென்பதால் புலிகளுக்கெதிராக மேலும் மேலும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தளவுக்கு அவர்களை அழிக்க முடியுமோ அந்தளவுக்கு அழித்து பலவீனமாக்கிவிட்டால் பேச்சுக்களில் அவர்கள் பேரம் பேசுவதைத் தடுத்து விடலாமென்றெல்லாம் தீவிர ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கிழக்கில் மூதூரை சில மணிநேரத்தில் கைப்பற்றி பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்த புலிகள் 48 மணிநேரம் அதனை முழுமையாக தக்கவைத்திருந்ததை அனைவரும் மறந்தனர். மூதூரைக் கைப்பற்ற முன்னர் அதனைச் சுற்றியிருந்த சில படை முகாம்கள் அழிக்கப்பட்டதையும் இவர்கள் உணரவில்லை.

மூதூரைப் புலிகள் கைப்பற்றியதை ஒப்புக் கொள்வது மிகப் பெரும் தோல்வியென்பதால் புலிகள் அதனைக் கைப்பற்றவில்லையென தொடர்ந்தும் அரசு பொய் கூறி வந்த போதும், அங்கு 17 அரச சார்பற்ற ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து போர்நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்த தீர்ப்பால் ஆடிப்போன அரசு, பின்னர் மூதுரை புலிகள் கைப்பற்றிய உண்மையை ஒப்புக் கொண்டது.

மூதூரைக் கைவிட்ட பின்னர் மாவிலாறு மற்றும் சம்பூர் உட்பட்ட மூதூர் கிழக்கில் சில பகுதிகளிலிருந்து புலிகள் பின் நகர்ந்தபோது அதனைப், புலிகளுக்கேற்பட்ட பெருந்தோல்வியாக அரசும் படைத்தரப்பும் பிராசாரம் செய்தன. புலிகளில் ஒரு சிலர் உயிரிழந்த போதெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிரசாரம் செய்தனர்.

இதன் மூலம் படையினரை தொடர்ந்தும் போரிட உற்சாகப்படுத்தி வந்ததுடன் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு மாயையை ஏற்படுத்தினர். புலிகள் தோற்கடிக்கப்பட முடியாததொரு அமைப்பல்ல. தற்போதைய நிலையில் மிக விரைவில் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு விடுவரென்றெல்லாம் பெரும் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டன.

இந்த நிலையில் புலிகளும் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்ததும் சில படை நடவடிக்கைகளின் போது பின் வாங்கியதும் அரசுக்கும் படைத்தரப்புக்கும் இனவாதிகளுக்கும் மேலும் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் சிலர் கூட புலிகளின் பலம் குறித்து சந்தேகம் வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், புலிகள் சமாதானப் பேச்சுக்கு தயாரெனவும் எதுவித நிபந்தனையுமின்றி பேச எப்போதும் தயாரெனவும் கூறியமை, புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டதையே காண்பிப்பதாகக் கூறிய அரசும் படைத்தரப்பும் பேச்சுக்களுக்கு பல புதிய நிபந்தனைகளை விதித்தன.

சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்கள் கூட நிராகரிக்கப்பட்டன. எனினும், சில அழுத்தங்களால் பேச்சுக்குச் செல்ல இணக்கம் தெரிவித்த அரசு, பேச்சுக்கு முன்னர் மேலும் சில முக்கிய இராணுவ வெற்றிகளைப் பெறுவதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலையே இல்லாது செய்துவிடலாமெனவும் எண்ணியது.

தொடர்ந்தும் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மிகவும் பலவீனமடைந்திருக்கும் புலிகள் பேச்சுவார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தி தங்களை மீளக் கட்டியெழுப்பலாமெனக் கருதிய புலிகள் எப்படியும் பேச்சுக்கு வருவார்களெனக் கருதிய அரசு, பேச்சுக்கு முன்னர் வடக்கிலும், கிழக்கிலும் மிக முக்கிய இராணுவ வெற்றிகளுக்கு திட்டம் போட்டது.

சம்பூரிலிருந்து விலகிய பின்னர் தற்போது புலிகளின் திருகோணமலை தளபதிகளும் அரசியல் பிரிவினரும் வாகரையை மையமாக வைத்தே செயற்படுவதாலும் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையே வாகரை இன்று மிக முக்கிய பகுதியாக விளங்குவதாலும் வாகரையை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கில் புலிகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியை கொடுக்க அரசும் படைத்தரப்பும் திட்டமிட்டன.

அத்துடன், சம்பூரிலிருந்த கடற்புலிகளின் தளங்களும் விலக்கப்பட்ட பின்னர் கடற்புலிகளின் முகாம்கள் ஈச்சிலம்பற்று மற்றும் வாகரைக் கரையோரங்களில் அமைக்கப்பட்டிருப்பதால் வாகரையை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கில் கடற்புலிகளின் செயற்பாட்டை முழுமையாகத் தடுத்து விடமுடியுமெனவும் படைத்தரப்பு திட்டமிட்டிருந்தது.

இதற்கேற்ப கடந்த 7 ஆம் திகதி, திருமலை- மட்டக்களப்பு வீதியிலுள்ள மாங்கேணி மற்றும் கஜுவத்தை படைமுகாம்களிலிருந்து பனிச்சங்கேணியை நோக்கி பாரிய படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. பனிச்சங்கேணியை கைப்பற்றி அங்கிருந்து நகர்ந்து வாகரையை கைப்பற்றுவதே படையினரின் திட்டமாகும்.

தங்கள் பகுதிக்குள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் படையினரை புலிகள் முன்னேற அனுமதித்தபோது, புலிகள் பெரிதும் பலவீனமடைந்திருப்பதாகக் கருதி மேலும் மேலும் முன்னேறினர். குறிப்பிட்டதொரு இடம் வந்ததும் புலிகள் மிக மோசமாக உக்கிர தாக்குதலை நடத்தினர்.

இதனை சற்றும் எதிர்பாராத படையினர் பதில் தாக்குதலை தொடுத்தபோது, படையணியொன்று புலிகளின் பொறிக்குள் சிக்குண்டது. மிகக் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள முடியாது படையணிகள் சிதறிய போது புலிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தவே படையினருக்கு பலத்த இழப்பேற்பட்டது.

கொல்லப்பட்ட பல படையினரது சடலங்களையும் தாங்கள் வந்த பல வாகனங்களையும் போர்த் தளபாடங்களையும் கைவிட்டு படையினர் பின்வாங்கினர். புலிகளின் உக்கிரதாக்குதலில் கடற்படைப் பீரங்கிப் படகுகளும் சேதமடைந்தன. கடல் வழியால் தரையிறங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட்டது.

படையினருடன் இணைந்து சென்ற கருணா குழுவும் பலத்த இழப்பைச் சந்தித்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 15 இற்கும் மேற்பட்டோரது சடலங்களை புலிகள் கைப்பற்றினர். கருணா குழுவிலும் 15 பேர் வரை கொல்லப்பட்டனர்.

கருணா குழு தொடர்பாக அரசு தரப்பிலும் இனவாதிகள் மத்தியிலும் ஒருவித மாயை இருந்தது. கருணாவின் பிரிவால்தான் இன்று புலிகள் பலமிழந்து மிகவும் பலவீனமடைந்திருப்பதால் கிழக்கில் கருணா குழுவைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் தாக்குதல்கள் வெற்றியளிக்குமெனக் கருதி இந்தத் தாக்குதலில் கருணா குழுவும் இறக்கப்பட்டிருந்தது.

எனினும், புலிகளின் கடுமையான பதிலடி படையினரை நிலைகுலைய வைத்தது. படையினர் முன்னேறிச் சென்றபோது தந்திரமாகப் பின் நகர்ந்து அவர்களைப் பொறிக்குள் சிக்க வைத்து கடும் சேதங்களை புலிகள் ஏற்படுத்தவே, வாகரையைக் கைப்பற்றும் முயற்சியை மட்டுமல்லாது அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டு படையினர் பின்வாங்கிச் சென்றுவிட்டனர்.

கிழக்கில் ஏற்பட்ட இந்தத் தோல்வியை மூடி மறைத்த அரசும் படைத்தரப்பும் வடக்கில் பெரு வெற்றியொன்றுக்கு திட்டமிட்டன. அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதியை நோர்வே அனுசரணையாளர் மூலம் இரு தரப்பும் நிர்ணயித்த நிலையிலும் பாரிய படை நகர்வொன்றின் மூலம் பெரு வெற்றியொன்றுக்கு அரசும் படைத்தரப்பும் திட்டமிட்டன.

அண்மைக் காலமாக முகமாலை மற்றும் பளைப் பகுதிகளில் புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாக, மிகக் கடுமையான விமானத் தாக்குதல்களும் ஆட்லறி ஷெல் மற்றும் பல் குழல் ரொக்கட் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வந்ததால் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் யாவும் தகர்க்கப்பட்டு அவர்களால் பாரிய படை நகர்வொன்றை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்குமென படைத்தரப்பு கருதியது.

முகமாலையிலிருந்து படைத்தரப்பு பாரிய நகர்வொன்றை மேற்கொள்ளப் போகிறது. இது நிலைமையை மிகவும் மோசமாக்கிவிடும். உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று நிலைமையை அவதானியுங்களென புலிகள் நோர்வே தரப்புக்கும் கண்காணிப்புக் குழுவுக்கும் அவசர கடிதங்களை அனுப்பினர்.

புலிகள் பெரிதும் பயந்து விட்டதாலேயே ஆனையிறவை படையினர் கைப்பற்றுவதைத் தடுக்க சர்வதேச சமூகத்தினதும் கண்காணிப்புக் குழுவினதும் உதவியை அவர்கள் அவசரமாக நாடுவதாக தெற்கில் பெரும் பிரசாரம் செய்யப்பட்டதுடன் இவ்வாறான படை நடவடிக்கைக்கு தாங்கள் தயாராகவில்லை எனவும் அரசும் படைத்தரப்பும் அறிவித்தன.

எனினும் கடந்த புதன்கிழமை காலை முகமாலை - கிளாலி மற்றும் நாகர்கோவில் பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் படையினர் பாரிய நகர்வொன்றை மேற்கொண்டனர். டாங்கிகள் பல முன்னகர, ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும், பல்குழல் ரொக்கட்டுகளும் புலிகளின் பகுதிகளினுள் பொழிய கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து படை நகர்வு ஆரம்பமானது.

காலை 6 மணிக்கு ஆரம்பமான இந்த பாரிய படை நகர்வு சுமார் இரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. எவருமே எதிர்பாராத விதத்தில் புலிகளின் பொறிக்குள் சிக்கிய படையணிகள் சின்னாபின்னமாகின. என்ன நடக்கிறது என்பதை களமுனைத் தளபதிகள் அறிவதற்கிடையில் எல்லாமே முடிவடைந்துவிட்டது.

கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து முன்னகர்ந்த மூன்று படையணிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நகர்வு ஆரம்பமாகி சில மணிநேரத்தில் பேரிடியைச் சந்தித்தனர்.

வழமைபோல் புலிகள் ஷெல்களையும் மோட்டார்களையும் ஏவிக் கொண்டு துப்பாக்கிச் சூட்டை நடத்த, புலிகளின் எதிர்ப்பு இவ்வாறே இருக்கப் போகின்றதெனக் கருதிய படையணி தங்கள் முன்னரங்க நிலைகளிலிருந்து சுமார் அரைக் கிலோ மீற்றர் தூரம் சென்ற நிலையில் புலிகள் கர்ணகடூரமாக அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

செக்கன் நேர இடைவெளிகூட விடாது படையினர் மீதும் யுத்த டாங்கிகள் மீதும் ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் மழைபோல் பொழிந்தன. என்ன ஏது என்று அறிய முன்பே பெருமளவு படையினர் சிதறி வீழ்ந்தனர். டாங்கிகள், கவச வாகனங்களும் தகர்ந்தன.

முன்னேறிச் சென்ற மூன்று படையணிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர். ஆறு டாங்கிகள் அழிக்கப்பட்டன. இவற்றில் நான்கு செக்கோஸ்லாவாக்கியாத் தயாரிப்பிலான ரி-55 ரக டாங்கிகள் இரண்டு ரஷ்யத் தயாரிப்பு பிஎம்பி.ரக டாங்கிகள்.

இதைவிட மேலும் சில டாங்கிகளும் கவச வாகனங்களும் இனி செயற்பட முடியாதளவுக்கு செயலிழந்து போயின. புலிகளின் பகுதிக்குள் சென்றவற்றில் இரு டாங்கிகள் நல்ல நிலையிலிருந்தும் அவற்றைத் திரும்பக் கொண்டு வரமுடியாத நிலையில் படையினரே அவற்றை அழித்தனர்.

போர் விமானங்கள் வந்து, முன்னேறும் படையினருக்கு ஆதரவு வழங்குவதற்கிடையில் யுத்தமே முடிவடைந்து விட்டது. 200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 500 இற்கும் மேற்பட்டோர் மிக மோசமாகப் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பெருமளவானோர் மீண்டும் களமுனைக்கு திரும்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடாநாட்டில் மிகவும் சிறப்பாக போரிடும் ஆற்றல் கொண்ட 53 ஆவது படையணியின் மூன்று படைப் பிரிவே முகமாலையிலும் கிளாலியிலும் சிக்கிச் சிதறின. இதனால் குடாநாட்டில் முன்னரங்க நிலைகளிலிருந்து படைநகர்வில் ஈடுபடும் மிக முக்கிய படையணியொன்று இல்லாது போய்விட்டது. இவர்களுக்குப் பதிலாக சிறப்பாக போரிடும் ஆற்றல் கொண்ட படையணியொன்றை அமர்த்த மிக நீண்டகாலம் செல்லுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு படையினருக்கேற்பட்ட பெரும் இழப்பைவிட, எட்டுக்கும் மேற்பட்ட டாங்கிகள் அழிக்கப்பட்டமை கவசப் படையணிக்கு மிகப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக படையணிகளை குடாநாட்டுக்கு அனுப்பி வைத்தாலும் கவசப் படையணிக்கு ஏற்பட்ட பாரிய இழப்பை உடனடியாக ஈடு செய்யமுடியாதென படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஏன் இவ்வாறு மிகப் பெரும் தோல்வியேற்பட்டதென்ற கேள்வியையே எல்லோரும் எழுப்புகின்றனர். படையினரின் போரிடும் ஆற்றல் குறித்து ஏற்பட்டிருந்த ,மிகப் பெரும் மாயையே இந்தத் தோல்விக்குக் காரணமெனக் கூறப்படுகிறது. புலிகளின் பலம் குறித்து மிக மோசமாக அனைவரும் கணித்துவிட்டதன் பலனே இதுவென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

படையினரின் எண்பது சடலங்களை அவர்கள் ஐ.சி.ஆர்.சி. ஊடாக கையளித்துள்ளனர். மிக மோசமாகச் சிதைந்து உருக்குலைந்த மேலும் 40 சடலங்களை அவர்கள் அங்கேயே எரித்துள்ளனர். இந்தச் சமரில் 130 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை படையினரும் ஒப்பு கொண்டுள்ளனர். புலிகளின் பகுதிக்குள் மட்டும், நான்கிற்கும் மேற்பட்ட டாங்கிகள் அழிந்துள்ளன.

படையினரின் திட்டமிடலில் தவறு ஏற்பட்டதா என்று கேள்வியெழுப்பும் அரசு, புலிகளின் திட்டமிடல் பற்றி இனியாவது அறிந்து கொள்ள வேண்டும். புலிகள் பலவீனமடைந்து போரிடும் ஆற்றலை இழந்து வருவதாக எல்லோரும் கூறியபோது அதுபோன்று நடித்த புலிகள் முகமாலையிலும் கிளாலியிலும் படிப்பித்த பாடத்தை இவர்கள் இப்போதைக்கு மறக்கக்கூடாது.

தங்கள் ஆயுத பலத்தை மட்டுமே புலிகள் இதில் திட்டமிட்டுப் பயன்படுத்தியுள்ளனர். ஏனைய போர் முனைகளைப் போன்று பரந்துபட்ட வெளியாக இல்லாது கழுத்துப் போன்ற மிகவும் குறுகலான பிரதேசத்தில் தங்கள் திட்டமிடலையும் தாக்குதல் நுட்பத்தையும் புலிகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கிழக்கில் மட்டக்களப்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வாகரையையும், வடக்கில் யாழ்.குடாநாட்டின் நுழைவாயிலில் ஆனையிறவையும் கைப்பற்றுவதன் மூலம் வடக்கு - கிழக்கில் புலிகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கலாமென அரசும் படைத்தரப்பும் திட்டமிட்டிருந்தன. எனினும், இவ்விருமுயற்சியும் படுதோல்வியடைந்துள்ளன.

முகமாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பாரிய படை நடவடிக்கை வெறுமனே இராணுவ ரீதியிலான வெற்றியை மையமாகக் கொண்டதல்ல. இதற்கு அரசியல் ரீதியான முக்கியத்துவமும் அதிகமிருந்தது.

மிக நீண்ட நாட்களின் பின் இருதரப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இராணுவ ரீதியான இந்த வெற்றிகள் பேச்சுவார்த்தை மேசையிலும் தங்கள் தரப்பின் வெற்றியைத் தீர்மானிக்குமெனக் கருதிய அரசுக்கு இந்தத் தோல்விகள் பேரிடியாகிவிட்டன.

இதனால் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பேச்சுக்களில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றல் மிகவும் அதிகரித்துள்ளது. அரசு தனது ஆற்றலை அதிகரிக்க வேண்டுமாயின் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிக்க முன்னர் பாரிய வெற்றியொன்றையும் பெற வேண்டும் அல்லது அந்த வெற்றியை பெறும் வரை பேச்சுக்களை ஒத்திப் போட வேண்டும்.

கடந்த அரசும் இதுபோன்ற பல தவறுகளைச் செய்ததால் பெரும் தோல்விகளைச் சந்தித்தது. எனினும், அந்த அரசுக்கும் இந்த அரசுக்கும் ஒரு வித்தியாசமுள்ளது. `ஏ-9' பாதையை திறப்பதற்காக சந்திரிகா அரசு யுத்தம் செய்தது. ஆனால், மகிந்தவின் அரசோ `ஏ-9' பாதையை மூடுவதற்காகவே யுத்தம் செய்கிறது.

இவற்றையெல்லாம் இனியாவது அரசும், படைத்தரப்பும் இனவாதிகளும் உணரவேண்டும். இதனால் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க அரசுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இனியும் அவர்கள் தவறவிடக்கூடாது.

நன்றி: தினக்குரல், Oct 15, 2006

Please Click here to login / register to post your comments.