தியாகி முத்துக்குமார் - இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

ஆக்கம்: மா. க. ஈழவேந்தன்
முத்துக்குமார் தன் வாழ்வை முடித்து இரண்டு ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. எனினும் முடிவிலாப் புகழுடன் காலத்தை வென்று எம் நெஞ்சங்களில் நிலைத்து விட்டார்.

தமிழினத்தின் முத்தாக விளங்கும் முத்துகுமரே ! இரண்டாண்டு உருண்டோடிய நிலையிலும் நீ எம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். ஒரு வரலாறாக ஒரு போராட்டமாக ஒரு நம்பிக்கையாக நீ எம்மிடையே வாழ்ந்து கொண்டு இருகிறாய். முத்துக்குமார் நீ வைத்த ஊழித் தீயில் வெளிச்சம் பெறுவது ஈழம் மட்டுமல்ல தமிழகமும் என்று கவிஞன் குண. ஜெயசீலன் கூற்றுக்கு நாம் வழிமொழி கூறுகின்றோம்.

"மாவீரன் முத்துகுமார் விட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவி இருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத் தொடங்கியுள்ளது. எனவே எமது தமிழினத்தின் விடிவுக்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

அப்பொழுது தான் மத்திய அரசின், உலகத்தின் மற்றும் ஐ. நா காதுகளில் விழும், மனம் தளர விடாதீர்கள் , தொடர்ச்சியாக போராடுங்கள். தமிழ் மக்களுக்கு விடிவு வரும். அன்புக்குரிய மக்களே எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவுக்காக தீகுளிப்புகளிலும் , பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களுக்குத் தெரிந்ததே. " என்று வான் கரும்புலி ரூபன் தருகின்ற செய்தி எமது சோர்வினை அகற்றி நம்பிக்கையோடு துடிப்போடு செயலாற்றத் தூண்டும் பொருள் பொதிந்த சொற்களாகும்.

மாவீரன் முத்துகுமாரின் மரணம் வெறும் மரணமல்ல. மாறாக அது மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. முத்துகுமார் சாதாரண மனிதப் பிறவி அல்ல . தன்னையே எரித்துக் கொண்ட இலட்சிய நெருப்பு. நம் மண்ணின் மைந்தன் . நம் காலத்தின் நாயகன் என்று "முத்துகுமார் நெருப்பாய் வாழ்ந்தவன்" என்ற தலைப்பில் நூல் வடிவம் தந்த கலைச்செல்வன் கூற்று முத்துகுமாரின் வாழ்வையும் சாவையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது.

தியாகு தீட்டும் கருத்து

"போரும் போராட்டமும் பகையை வெல்வதற்காகவே தவிர நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு அல்ல என்னும் போது, தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தீக்குளிப்பை எப்படிச் சரியான போராட்ட வடிவமாக ஏற்க இயலும்? என்ற கேள்வி எனக்கு எப்போதுமே உண்டு. பொது நோக்கத்திற்காக தீக்குளிப்பவரின் நெஞ்சுருதியையும் தன்னளிப்பையும் திஞ்சித்தும் குறைவு படுத்தாமலே இந்த கேள்வியை கேட்க இயலும். " என்ற கேள்வியை கேட்கும் தியாகு அவர்கள் "வியட்நாமில் பொதுமையர்களும் தேசிய விடுதலைப் போராளிகளும் அமெரிக்க வல்லாதிக்கத்தையும் பல கைப்பாவைகளையும் எதிர்த்து வீரச் சமர் புரிந்தார்கள். சில பௌத்த பிக்குகளோ இதே நோக்கத்திற்காக தீக் குளித்தார்கள். இந்தத் தீக்குளிப்புகள் உலகின் உளச் சான்றைத் தொட்டு விடுதலைப் போருக்கு துணை செய்தன." என்று விடையளிக்கும் தியாகுவிற்கு நாம் ஆம் ஓதுகின்ற நிலையில் தான் இருக்கிறோம்.

இந்தித் திணிப்பும் தமிழ் நாட்டு தீயைப் பற்ற வைத்தது

இந்தித் திணிப்பை எதிர்த்து சின்னச்சாமியின் தீக்குளிப்பு 1964இல் நடைபெற்றது. 1965 இல் மொழிப் போராட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாயகம், சாரங்கபாணி போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை நாம் மறப்பதற்கில்லை. இந்தச் சூழலில் தான்
"எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி?
எத்தனை பட்டாளம் கூட்டி வரும்?
அற்பம் என்போம், அந்த இந்தி தனை - அதன் ஆதிக்கத் தன்மையை புதைதெளுவோம்" என்று புரட்சிக் கவிஞன் முழங்கிய முழக்கத்தையும் இன்று நாம் நினைவு கொள்வோமாக. இவற்றை நினைவு கொண்டு தான் எம் முத்துகுமாரினுடைய மறைவையும் நாம் எண்ணிப் பார்க்கின்றோம்.

கவிஞன் காசியானந்தன் காணும் காட்சி

எனவே தான் முத்துகுமாரின் மறைவை ஒட்டி கவிஞன் காசியானந்தன் " அலை கடலை மிதித்துத் தமிழ் நாட்டையும் தமிழீழத்தையும் இணைத்த முத்துக்குமாரின் தமிழர் தலை நிமிர்த்தும் ஈக வாழ்வு எமக்கொரு பாடமாக அமைய வேண்டும்." என்று கூறும் காசியானந்தன் " பட்டம் பெறாவிட்டாலும் -பட்டம் பெற்றவர் படித்திராத நூல்கள் அனைத்தும் படித்து பழுத்தவன் முத்துகுமார்" என்று கவிஞர் கூறும் போது எம் கண்கள் கலங்குகின்றன. எம் முத்துக்குமாரு போராளி மட்டுமல்ல அறிவாளி என்பதையும் நாம் மறக்கக்கூடாது. எதனையும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் தான் செயற்பட்டவன் முத்துக்குமாரன்.

புதுவை இரத்தினம் புகழ்வதற்கமைய

முத்துகுமாரின் மறைவை ஒட்டி காசியானந்தன் மட்டும் கண்ணீர் விடவில்லை, எம் கவிஞர் புதுவை இரத்தினதுரை கூட தன்னை மீறிய நிலையில்
"முத்துக்குமாரா !
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக ,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே !
உந்தனது
ஈகம் அறிந்து எம்மித் தீப்பற்றுதே
நீட்டிக் கிடக்கின்றாயா நீ
உனக்கு அஞ்சலி எழுதும் என்னைச் சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்,
உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய்
சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன் , விரிந்தவன்
சின்ன அக்கினிக் குஞ்சே !
உன் நெஞ்சில் இருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச் சோதிப் பெரு வெளிச்சம் எமக்கு சக்தி தரும்"
என்று கவிஞர் புதுவை மொழிவதற்கமைய தியாகி முத்துக்குமாரு சோதிப் பெரும் வெளிச்சமாய் எமக்கு வழி காட்டுவது உறுதி.

எனவே தான் மறைந்த முத்துக்குமாருக்காக அழுவதை நிறுத்தி அவர் கூற்றை பின்வரும் முறையில் நிலையில் நினைவு கொண்டு
" யாரெங்கே ?
என் கல்லறை மீது
நின்று கொண்டு
எனக்காகக் கண்ணீர் வடிக்கும்
மெழுகுவர்த்தியை
அனைத்து விடுங்கள்!
அழுகை
எனக்குப் பிடிக்காத ஒன்று"
என்று முடிவிலாப் புகழ் ஈட்டிய முத்துக்குமார் மொழிந்ததற்கமைய அவர் கூற்றை எம் நெஞ்சில் ஏற்றி எம் அழுகையை அகற்றி அவர் காண விரும்பிய தமிழீழத்தைக் காண உறுதி பூணுவோமாக.

மீண்டும் நினைவு படுத்துகின்றோம் முத்துக்குமாரு மறைந்தவர் அல்ல எம் நெஞ்சில் நிறைந்தவர்."தமிழீழ போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்காலும் ஒரு முடிவல்ல. முத்துக்குமாரும் ஒரு முடிவல்ல என்பதை தமிழினப் பகைவர்கள் உணரும் காலம் தொலைவில் இல்லை.

" முத்துக்குமார் தமிழ் நாட்டு மக்கள் நெஞ்சில் மூட்டிய தமிழ்த் தேசிய இன விடுதலை நெருப்பு முழு வீச்சோடு பற்றி எரியும்." கூண்டுகள் உடையும் சிறகுகள் விரியும் என்று முன் கூட்டிய உணர்வோடு கவிஞன் காசியானந்தன் 22 . 01 . 2010 இல் கூறியது கவிஞரின் வெறும் கனவல்ல அது நனவாவது உறுதி என்று நாம் உறுதி பூணுவோமாக.

நம்புங்கள் நம்புங்கள் நாளை தமிழீழம் மலர்வது உறுதி.

Please Click here to login / register to post your comments.