சீரோடும் சிறப்போடும் நடந்த தமிழ்ப் புத்தாண்டு 2042 பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்ப் புத்தாண்டு 2042 தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவை கனடா முருகன் கோயில் அரங்கில் சீரோடும் சிறப்போடும் தாயக மண்வாசனையோடும் கொண்டாடியது. விழா அரங்கு குழந்தைகள் உட்பட மக்கள் வெள்ளத்தினால் நிறைந்து காணப்பட்டது. விழா நாள் பணி நாள் என்றாலும் மக்களின் எழுச்சிக்கும் ஆர்வத்துக்கும் அது தடையாக இருக்கவில்லை. ஏன் கனடாவின் தை மாதக் கடுங்குளிர் கூடத் தடையாக இருக்கவில்லை!

தமிழனுக்குத் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் இவைபற்றிப் போதிய உணர்வு இல்லாமல் இருப்பதுதான் அவன் தாழ்வுக்கு முக்கிய காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும் பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டுப் புரட்சியின் அறுவடைதான் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா ஆகும்.

தமிழர்களுக்கு என ஒரு தனித்துவமான தொடர் ஆண்டு இல்லாதது பெரிய குறையாக இருந்தது. வரலாற்று நிகழ்வுகளை ஆங்கில தொடர் ஆண்டுபோல் பதிய முடியாததால் அரசர்கள், புலவர்களர் பற்றிய காலக் கணிப்பை எம் முன்னோர்களால் சரிவரக் கணிக்க முடியவில்லை.

பொங்கல் முற்றிலும் களனி திருத்தி, உழுது, விதைத்து, களை எடுத்து உழைப்பின் பயனை அறுவடை செய்த உழவர்கள் அந்த அறுவடைக்கு அச்சாணியாக இருந்த ஞாயிறுக்கும் கால்நடைக்கும் நன்றி சொல்லும் இயற்கை வழிபாடாகும்.

உண்மையில் இன்று உலகளாவிய தமிழர்களுக்கு உரிய தேசிய விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா ஒன்றுதான்.

தாயகத்தில் பொங்கல் பொங்குவதுபோல புதுப் பானையில் பால், புத்தரிசி, கற்கண்டு, சர்க்கரை, முந்திரி, மரமுந்திரி, ஏலம் இட்டு பொங்கல் பொங்கப்பட்டது. பொங்கல் முற்றத்தை சுற்றி வண்ணக் கோலம் போட்டிருந்தது சிறார்களின் கவனத்தை ஈர்த்தது எனலாம். எமது இளைய தலைமுறையினர் தமிழ்ப் பண்பாட்டின் குறியீடான பொங்கல் பற்றிய உணர்வையும் பொருளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இப் புத்தாண்டு பொங்கல் விழா இருந்தது.

புலம்பெயர்ந்து வேறுபட்ட, மாறுபட்ட பண்பாட்டுச் சூழலில் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைப் பெரு விழாவாகக் கொண்டாடுவதன் மூலம் எங்களது மொழி, கலை, பண்பாடு மற்றும் விழுமியங்களை நாம் போற்றியும் காப்பாற்றியும் அடுத்த சந்ததிக்கு கையளிக்க முடியும்.

தை முதல் நாளே பொங்கல் விழாவாகவும் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகவும் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் தமிழ்நாடு முழுதும் கொண்டாடப் பட்டது. தை முதல்நாளும் அடுத்த நாளும் தமிழ்நாட்டில் விடுமுறை நாள்களாகும்.

பொங்கல் புத்தாண்டு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. மங்கள விளக்கை திரு சித்தா சிற்றம்பலம் (முன்னாள் தமிழீழச் சங்கத் தவைர்) திரு வின் மகாலிங்கம் (தலைவர், கனடா தமிழர் இணையம்) திரு. சார்ல்ஸ் தேவசகாயம் (ஆசிரியர் தமிழ் மிறர்) திரு விஜேந்திரா, தொழில் அதிபர் ஏற்றி வைத்தனர்.

அடுத்து தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை செல்வி ஓவியா பாடினார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இளைய இனிய உயிர்களை ஈந்த மாவீரர்கள் நினைவாகவும் இந்திய - ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்குப் பலியான பொது மக்கள் நினைவாகவும் மொழிப் போராட்டத்தில் பலியாகிய உணர்வாளர்கள் நினைவாகவும் அமைதி வணக்கம் அனுட்டிக்கப்பட்டது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக நடன ஆசிரியை நிரோதினி பரராசசிங்கம் அவர்களது மாணவர்கள் வரவேற்பு நடனம் ஆடினார்கள். வரவேற்புரைய தமிழ்ப் படைப்பாளிகள் கழகச் செயலாளர் திரு முருகேசர் தியாகலிங்கம் நிகழ்த்தினார்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
எனப் பாவேந்தர் பாரதிதாசனை மேற்கோள் காட்டிப் பேசினார்.

திரு கோபாலகிருட்டினன் குடும்பம் பொங்கல் பொங்கிப் படைத்தார்கள். பால் பொங்கி வழிந்தபோது கூடிநின்றவர்கள் 'பொங்கலோ பொங்கல்' என்ற வாழ்த்தொலி எழுப்பினார்கள். விழாவிற்கு தலைமை வகித்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் தனது தலைமை உரையில் "'இன்று இந்த முப்பெரும் விழாவை எடுப்பதன் மூலம் தமிழர்களின் புத்தாண்டு 2042 விழா, உழவர்களின் பொங்கல் விழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா என முப்பொரும் விழாவினைக் கொண்டாடுகிறோம்.

உங்கள் குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் வையுங்கள். வைத்து அவர்கள் தமிழர்கள் என அடையாளம் காட்டுங்கள். உங்கள் வீட்டுத் திருமணங்களை எங்கள் தாய்மொழியான தமிழில் நடத்துங்கள். திருக்கோயில் வழிபாட்டை நாயன்மார் காலத்தில் செய்ததுபோல் சலம், பூ, தமிழிசை பாடி வழிபடுங்கள். 'அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக" எனச் சுந்தரரை சிவனார் கேட்டுக் கொண்டதாக சேக்கிழார் தாம் பாடிய பெரிய புராணத்தில் சொல்கிறார்.

சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை பிறக்க வைத்ததன் நோக்கமே 'தமிழில் பாடுவதற்கு’ என்கிறார் சேக்கிழார். அதென்ன சொற்றமிழ்? இறைவனைப் பாடுவதற்குரிய மொழி தமிழில்தான் உண்டு. வேறு மொழிகளில் இல்லை. "உலகம் முழுவதும் இறைவனை அவன் அவள் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அவன் என்றால் ஆணாகிவிடுவாய் அவள் என்றால் பெண்ணாகி விடுவாய் அவர் என்ற பொதுச்சொல் தமிழில் இருக்கிறது நான் தப்பித்தேன்" என்று சிவப்பிரகாசர் சொல்கிறார். குடவோலை மூலம் தூய தமிழ்ப் பெயருக்குரிய முதல் பரிசு 1000 வெள்ளி தமிழவன் என்ற குழந்தைக்கு வழங்கப்பட்டது. மேலும் அய்ந்து தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளுக்குத் தலைக்கு நூறு வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் நந்தினி இலிங்கன் மற்றும் பத்மினி ஆனந்த் மாணவர்களது நடனங்கள் இடம்பெற்றன. விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் பொங்கல், கடலை, வாழப்பழம், வடை, கோப்பி வழங்கப்பட்டது.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக வருணம் தீட்டும் போட்டியில் பங்குபற்றிய 86 சிறார்களுக்கு அறிவியல் நூல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிக்கான ஆதரவை வீட்டு முகவர் திரு பகவத்சிங்கம் நல்கியிருந்தார். மாகாண அரசின் நல்வாழ்வு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மார்க்கிரட் பெஸ்ட் (ஸ்காபரோ - கில்வுட்) ஸ்காபரோ மேற்குத் தொகுதி பழமைவாதக் கட்சி வேட்பாளர் பரஞ்சோதி இராகவன் நாடு கடந்த தமிழீழ அரசின் அவைத்தலைவர் பொன்.பாலராசன் ஆகியோரும் உரையாற்றினர்.

தென்தமிழீழ வெள்ள நிதிக்கு சேர்க்கப்பட்ட 2000 வெள்ளிகள் திருகோணமலை நலம்புரிச் சங்கத்திடம் கொடுக்கப்பட்டது. இந்த விழாவினை சிறப்பாக விளம்பரம் செய்த இனிய நம்நாடு, தமிழ் கனேடிய வானொலி, அனைத்துலக தமிழ் வானொலி, கனடிய பல்கலாச்சார பண்பலை தமிழ் வானோலி, தமிழ் ஒன்று தொலைக்காட்சி, தமிழ் கண்ணொளி தொலைக்காட்சி, தமிழ் கனேடியன் இணையதளம் ஆகியவற்றுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சியை திரு. ஞானம் அன்ரனி சுவையான தமிழில் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

Please Click here to login / register to post your comments.