'சுய மரியாதை உள்ளவர்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டும்!' - இயக்குநர், நடிகர் மணிவண்ணன்

ஆக்கம்: ரீ.சிவக்குமார், படம்: கே.ராஜசேகரன்

'அமைதிப்படை’ முதலான அரசியல் நையாண்டிப் படங்களும் மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு என வெளிப்படையான அரசியல் பேசுகிற துணிச்சலும் இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் அடையாளம். விபத்தில் அடிபட்டு கால் உந்தி நடக்கும் நிலையிலும், முத்துக்குமாரின் இரண்டாவது நினைவு தினத்தில் பங்கேற்றுத் திரும்பிய மணிவண்ணனைச் சந்தித்தோம்.

''நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டே, தொடர்ச்சியாக அரசியல் பேசி வருபவர். ஆனால், ஏன் தீவிர அரசியலில் இறங்கவில்லை? சீமானைப் போல ஓர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும், மக்களை அணி திரட்ட வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?''

''அது சீமானுக்கே இப்போதுதானே தோன்றியது. என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் இயக்கம் ஆரம்பிக்கவில்லையே. எப்போதுமே வரலாறுதான் இயக்கத்தையும், அதற்கான தலைவர்களையும் உருவாக்குகிறது. இப்போதுள்ள வரலாற்றுத் தேவைதான் சீமானை உருவாக்கியது. ஆனால், சினிமா துறையில் நீண்ட காலமாகவே நான் ஈழ ஆதரவு அரசியல் பேசி வருபவன். அதற்காக மனப்பூர்வமான வேலைகளைச் செய்து வருபவன். ஆனால், நான் எப்போதும் என்னை முன்னிலைப்படுத்தியது இல்லை. புதிதாக இளைஞர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பு பவன். இப்போது இருக்கக்கூடிய இயக்கங்கள், கட்சிகள், தமிழினத் துக்குத் துரோகம் இழைத்து விட்டன என்று கருதுபவர்கள், அமைப்புகளின் மீது நம்பிக்கை இழந்தவர்கள்தான் சீமான் பின்னால் திரள்கிறார்கள். அந்த நம்பிக்கையை சீமான் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்!''

''ம.தி.மு.க தொடங்கப்பட்டபோது வைகோ வுக்கு ஆதரவாக இருந்தவர் நீங்கள். ஆனால், இன்று ம.தி.மு.க-வில் இருந்து ஆர்.சுந்தர்ராஜன், கலைப்புலி தாணு தொடங்கி பலர் வரிசையாக வெளியேறுகிறார்களே, இது வைகோவுக்கு வீழ்ச்சியா?''

''என்னங்க இது, சுந்தர்ராஜன் வெளியேறிட்டா... வைகோவுக்கு வீழ்ச்சியா? நான் எப்போதும் ம.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்தது இல்லை. இன்றைக்கு சீமானை எப்படி நம்பிக்கைக்குரிய தலைவராகப் பார்க்கிறேனோ, அதேபோல... அன்று வைகோவை நம்பிக்கைக்கு உரியவராகப்பார்த் தேன். அவர் தி.மு.க-வைவிட்டு வெளியேற்றப் பட்டபோது அவரை ஆதரித்தேன். ஆனால், ஆர்.சுந்தர்ராஜன், தாணு போன்றவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி, விடுகிற அறிக்கை கள் நல்ல நகைச்சுவை. கட்சியைவிட்டு வெளியேறுவதுன்னு முடிவெடுத்தவுடனே 10 வருஷமா நடந்ததைத் தொகுத்து குற்றப் பத்திரிகை வாசிக்கிறாங்க. அப்ப 10 வருஷமா இவங்க என்ன செஞ்சாங்க, அந்த முறைகேடுகளுக்கு எல்லாம் துணைபோனாங்கன்னுதானே அர்த்தம்? ஒருவேளை, கட்சித் தலைமை தவறு செய்யுதுன்னா, 10 வருஷமா அந்தத் தவறுகளுக்குத் துணை போனவங்களுக்கு என்ன தண்டனை? அவர்களுக்குச் சுயவிமர்சனம் இல்லையே! எனக்கு இன்னமும் வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது!''

''ஈழப் பிரச்னையை முன்வைத்து கலைஞரை எதிர்ப்பது சரிதானா?''

''சரியானதுதான். இந்திய அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களை அழித்தது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்களே சொல்கிறார்கள். மணிவண்ணனுக்குத் தெரிந்த இந்த உண்மை, கலைஞருக்குத் தெரியாதா, என்ன? அவரைப் பொறுத்தவரை, கூட்டணி முக்கியம், தேர்தல் முக்கியம், அதனால் காங்கிரஸ் முக்கியம். அதனால்தான் இந்த மூன்றிலும் கலைஞரைத் தோற்கடிக்க வேண்டும். அட, ஈழத் தமிழர்களை விடுங்கள். மீனவர் படுகொலை மாதாமாதம் நடக்கிறதே, அதற்கு என்ன செய்தார்கள்? நிருபமா ராவ் எப்போதும் ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்குப் போய், திங்கட் கிழமை இந்தியா திரும்பிவிடுகிறார். ஹாலிடே டூர் மாதிரி ஆயிடுச்சு. கட்சி, அரசியல், தமிழன், தெலுங்கன் இதையெல்லாம் விடுங்கள். மனித உயிர்களுக்கு மதிப்பு வேண்டாமா? ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால், செத்துப்போன மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் கொடுக்கிறார்கள். இல்லையென்றால், அதுவும் இருக்காது. செம்மொழி மாநாடு நடத்தினார்கள். இறந்துபோன ஈழத் தமிழர்களுக்காக ஒரு இரங்கல் தீர்மானம் உண்டா? நான், பிரபாகரனுக்கோ, நடேசனுக்கோ தீர்மானம் நிறைவேற்றச் சொல்லவில்லை. ஆனால், தமிழ் மொழியைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஒரு தமிழ்ப் பெண்ணின் வயிற்றில் பிறந்ததால், சிங்களப் பேரினவாத அரசால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காகவாவது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே? ஆனால், கலைஞர் ஈழத்தில் இருந்து சிவத்தம்பி என்ற அறிஞரை அழைத்து வந்து, 'ஈழம் என்பது தமிழ்ச் சொல் அல்ல’ என்று பேசவைத்தார். சிலர் என்னிடம் வந்து 'இது பிரைன் வாஷ்’ என்றார்கள். 'இல்லைஇல்லை, பிரைன் டியூமர்’ என்றேன் நான். சுய மரியாதை உள்ளவர்கள் காங் கிரஸையும் காங்கிரஸுக்குத் துணை போகும் தி.மு.க-வையும் எதிர்ப்பது நியாயம்தான். ஆனால், எனக்கு நாடாளுமன்ற அரசியலில் நம்பிக்கை இல்லாததால், தேர்தல் பிரசாரத்துக்குப் போக மாட்டேன். ஓட்டும் போட மாட்டேன்!''

''நீங்கள் சினிமாவிலும் வெளியிலும் என்னதான் பகுத்தறிவு பேசினாலும், சாமியார்களைத் தேடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே செய்கிறது?''

''அட, நம்ம ரஞ்சிதாவே ஒரு சாமியார் கிட்ட போய் மாட்டிக்கிட்டாங்களே. கார்ப்பரேட் செக்டார் அதிகரிக்க... அதிகரிக்க, கார்ப்பரேட் சாமியார்களும் அதிகரிக்கிறார்கள். ஆன்மிகம், தியானம் என்று பேசக்கூடிய எல்லா சாமியார்களுமே ஓஷோவிடம் இருந்து சிந்தனைகளைத் திருடியவர்கள்தான். நித்யானந்தாவிடம் இருந்த ராகசுதா, பல சினிமா நட்சத்திரங்களை அவரின் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். என்னிடம்கூட ஒருமுறை, 'சாமியும் நீங்க சொல்ற மாதிரி கடவுள் இல்லைன்னுதான் சொல்றார். அவரோடு டிஸ்கஸ் பண்ண வாங்க’னு கூப்பிட்டாங்க. 'ரொம்பச் சந்தோஷங்க. அவருக்கும் எனக்கும் ஒரே கருத்தா? அப்புறம் அவர்கிட்ட பேசி என்ன செய்யப்போறேன்?’னு மறுத்துட்டேன். உலகமயமாக்கல், அதனால் ஏற்படும் மன அழுத்தம் இதுதான் நடுத்தர வர்க்கத்து மக்களைக் கார்ப்பரேட் சாமியார்களை நோக்கித் தள்ளுது. இது புரியணும்னா... நமக்கு மார்க்சியமும் பெரியாரும் தெரியணும்!''

Please Click here to login / register to post your comments.