தமிழர் தாயகத்தை துண்டாடும் நியாயம்

ஆக்கம்: ஆசிரியர் தலையங்கம்
வடக்கு கிழக்கு இணைப்பு அதாவது தமிழர் தாயகத் தின் ஒன்றிணைப்பு சட்ட ரீதியாகச் செல்லுபடியற்றது என ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றம் அறிவித்துவிட்டது.

பதினெட்டு வருடங்களாக நீடிக்கப்பட்ட ஒரு நிலைமை தவறானது என்று இப்போது இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரை இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்துக்கான பொதுக் கட்டமைப்பு ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் செய லிழந்த சமயமே, இந்த நீதிமன்றத்தில் இதே பெறுபேறுகளையே எதிர்காலத்தில் தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், அதற்கு அப்பால் நீதியை நியாயத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்றே தமிழர் தரப்புக் கருதி வந்தது. அந்தக் கருத்து சரியானது என்பது இப்போது ருசுப்படுத்தப்பட்டிருக் கின்றது. அவ்வளவே.

பிரிட்டனிடமிருந்து இலங்கைத் தீவு சுதந்திரம்(?) பெற்ற காலம் முதலே ஸ்ரீலங்கா நாடாளுமன்றம், பெரும்பான்மை இனம் இழைக்கும் கொடுமையின் கருவியாகவே விளங்கி வருகிறது. அங்கு இனவாதமே அரசோச்சுகின்றது. சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களே அங்கு யாக்கப்பட்டன. அதுவே வரலாறு.

சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் உரிமை களைப் பறிக்கும் இனத் தனித்துவத்தைப் பேணும் விழுமி யங்களைச் சிதைக்கும் அரசமைப்புச் சட்டங்களும், அவற் றின் வழிவந்த சட்டவிதிகளும் சிங்கள மேலாதிக்கத்தினால் இதே நாடாளுமன்றத்தில்தான் ஒரு தலைப்பட்சமாக நிறை வேற்றப்பட்டு தமிழர்கள் மீது திணிக்கப்பட்டு வந்தன; திணிக் கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் பௌத்த சிங்கள மேலாண்மையைத் திணிக்கும் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பாகட்டும், அதன் பின்னர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டு வந்த 1978 ஆம் ஆண்டின் யாப்பாகட்டும், அவை இரண்டுமே இந்த நாடாளுமன்றத்திலேயே யாக்கப்பட்டன. அவற்றைத் தயாரிப்பதிலோ அல்லது பிரகடனப்படுத்துவதி லோ தமிழர் தரப்பு பங்குபற்றவேயில்லை.

தமிழரின் சம்பந்தமோ, சம்மதமோ இன்றி தயாரிக்கப்பட்டு, பலவந்தமாக அவர்கள் மீது திணிக்கப்பட்ட அரசமைப்பின் கீழ், அந்த அரசமைப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட சட்டங்களின் கீழ், அந்த நீதிமுறையின்படி, சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமேயில்லை. ஸ்ரீலங்காவின் சட்டமுறைமையும், அதை நெறிப்படுத்தும் அரசமைப்பும் இறுக்கமானவை, நெகிழ்வற்றவை. அரக்கவோ, நகர்த்தவோ, நெகிழ்த்தவோ முடியாத சட்ட அடைப்புக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறது ஸ்ரீலங்காவின் நீதி முறைமை.

இந்த அரசமைப்புச் சட்ட வரம்புச் சுவருக்குள் சிக்கிக் கிடக்கும் ஸ்ரீலங்காவின் நீதி பரிபாலன முறைமை, அதை விட்டு வெளியே வந்து, சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைக்கான வேணவாவைத் தீர்க்கதரிசனத்தோடு நோக்கி, நியாயம் வழங் கும் என ஏங்கிக் காத்திருப்பது பயனற்றது. அது இப்போது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

தாயக நிலத்தைத் துண்டாடும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கும் தெரியும்.

தமிழர்களின் தாயகத்தில் தன்னாட்சி அரசு ஒன்றை நிறு வும் அவர்களின் போராட்டத்துக்கு எதிராக சிங்கள அரசு தொடுத்திருக்கும் அரசியல், இராணுவ யுத்தத்தில், அரசுத் தரப் புக்குத் தோள் கொடுக்கும் தமிழர் தரப்பு சக்திகளுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஒன்று.

ஆனால், தமிழர் தாயகத்தைத் துண்டாடும் துரோகத்துக்கு அக்கட்சி கூடத் துணை போகமாட்டாது என்பது நிச்சயம்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான முயற்சிகள், சர்வதேச அழுத்தம் காரண மாக முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் தோன்றியுள்ள நிலையில் இவ்வாறு தமிழர் தாயகம் துண்டாடப்படுவதற்கு வழி செய்யும் தீர்ப்பு, இலங்கையின் மிக உச்ச நீதிமன்றமான உயர்நீதிமன்ற ஆயத்திடமிருந்து வந்திருப்பது அமைதி முயற்சி களுக்கு விழுந்த மிகத் தடித்த ஆப்பும்கூட.

வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம், இலங்கையின் உயர்நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டிருந்த சமயம், இலங்கை விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட இலங்கைக்கு உத வும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைப்பு விடயத்தை நேரடியாகச் சுட்டாமல் கருத்து வெளியிட்டிருந் தன.

""வடக்கு கிழக்குக்கான விசேட ஏற்பாடுகளில் எந்த மாற்ற மும் செய்யப்படக் கூடாது. அப்படிச் செய்வது சமாதானத்தை அடைவதை ஆபத்துக்கு உட்படுத்தும்.'' என்று இணைத் தலைமைகள் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் அந்த அறிக் கையில் எச்சரித்திருந்தன.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ், தமிழர் தாயகத்தை இணைப்பதற்குச் செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டை நிரந்தர மாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று கிழக்கில் நடத் தப்பட வேண்டும். ஆனால், அதற்கான களச் சூழ்நிலை அங்கு இல்லை. அத்தகைய நிலைமையில், இந்த இணைப்பு சட்ட வலு வற்றது என்ற உயர் நீதிமன்ற முடிவு, சர்வஜன வாக்கெடுப்பு வரை இணைப்பு நீடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த இந்தியத் தரப்புக்கும் விழுந்த அடிதான்.

அதேபோல, இந்த ஏற்பாட்டில் மாற்றம் செய்யப்படக் கூடாது, அப்படி மாற்றம் செய்வது சமாதானத்தை அடைவதை ஆபத்துக்கு உட்படுத்தும் என்ற இணைத் தலைமைகளின் கருத்தும் உதாசீனப்படுத்தப்படும் வகையில் தீர்ப்பு வந்து விட்டது.

இனி என்ன? நீதிமன்றம் கூறிவிட்டது, நீதிக்குக் கட்டுப்படுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று ஜனாதி பதி மஹிந்த ரும், அவரது அரசுத் தரப்பினரும் நீதியைத் தலை மீது தூக்கி வைத்து நிலை நிறுத்தப் புறப்பட்டு விடுவார்கள்.

நீதியின் பெயரால் தமிழர் தாயகம் துண்டாடப்படும். இந் நிகழ்வுக்கு இந்தியாவும், அமைதி வழித் தீர்வுக்கு ஒற்றைக் காலில் நின்று வலியுறுத்தும் இணைத் தலைமைகளும் கூறப் போகும் பதில் என்ன? அறிந்து கொள்ள உரிமையுடனும், ஆவ லுடனும் காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.

நன்றி: ஆசிரியர் தலையங்கம் - உதயன், Oct 17, 2006

Please Click here to login / register to post your comments.