கயல்விழிக்கே இந்த நிலையென்றால் ஈழத்தமிழருக்கு அதோ கதிதான்

ஆக்கம்: அனலை நிதிஸ் ச. குமாரன்

தமிழகத்தின் தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி, தனது உதவியாளரும் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த திருமலையுடன் கடந்த மாதம் 12-ஆம் திகதி நள்ளிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டார்கள். முறையான இந்தியக் கடவுச்சீட்டுக்கள், சிறிலங்கா வழங்கிய தனது நாட்டுக்குள் நுளைவதற்கான அனுமதிகள் ஆகியவை இருந்தும் சிறிலங்காவின் அரச படையினர் காட்டுமிராண்டித்தனமான செயல்களை செய்துள்ளமையே போதும் ஈழத்தமிழருக்கு எதிராக நடக்கும் அடாவடித்தனங்கள் என்னவென்று உலகத்திற்கு எடுத்துக்கூறுவதற்கு.

குறித்த இரு நபர்களின் தகவல்களின்படி, தமது தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பார்த்து அவர்களின் துயரங்களில் பங்குகொள்வதே தமது சிறிலங்காவிற்கான பயணம் என்று அடித்துக்கூறுகிறார்கள். அத்துடன் நான்காம் ஈழப்போராட்டத்தின் பின்னர் ஈழத்தில் வதியும் மக்களின் மனநிலையை அறிந்து தமிழகம் திரும்புவதுமே தமது நோக்கம் என கூறுகிறார்கள் இவ்விருவரும்.

சிறிலங்கா அரசின் பாதுகாப்புத்துறையில் முழுமையான அனுமதி பெற்று, 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வவுனியா, மட்டக்களப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார்கள்.

தாம் வல்வெட்டித்துறை சென்றபோது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரையும் சந்தித்து நலம் விசாரித்ததாக கூறியுள்ளார்கள் இருவரும். வடக்கிலிருந்து ஜனவரி 18-ஆம் திகதி ஓமந்தையூடாக வந்தபோது, சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் விசாரித்தனர். பின்னர், உளவுப்பிரிவு காவல்துறையினர் தம்மை கைது செய்ததாக இருவரும் கூறியுள்ளார்கள்.

கைது செய்ததையடுத்து அவர்கள் இருவரும், பயங்கரவாத விசாரணைத்துறையினரினால் அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பின்னர், நீதிபதியிடம் தமது நிலையை விளக்கியபின் விடுவிக்கப்பட்டோம் என்று கூறுகின்றனர் இருவரும்.

விடுவிக்கப்பட்டதன் காரணம் என்ன?

முறையான இந்திய கடவுச்சீட்டுடன், சிறிலங்கா அரசினால் அனுமதி வழங்கப்பட்டே இருவரும் சட்டப்படி சிறிலங்கா சென்றார்கள். அவர்களை கைது செய்தது எப்படி அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று போர்க்குரல் எழுப்பினார்கள் தமிழக வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள். வைகோ, நெடுமாறன் மற்றும் திருமாவளவன் போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் நேரடியாக தலையிட்டு இந்தியாவின் உதவியை நாடினார்கள். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தந்திகளையும் அனுப்பி பலர் அழுத்தங்களைக் கொடுத்தார்கள். வழக்கறிஞர்களும் பலதரப்பட்ட போராட்டங்களை அறிவித்து போராடினார்கள்.

தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையில்:“ஓமந்தை செக்போஸ்டில் வக்கீல் அங்கையற்கண்ணியையும், அவரது உதவியாளர் திருமலையையும் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். முறையான பாஸ்போர்ட் மற்றும் விசாவை வைத்திருந்தாலும், அவர்களிடம் கைதுக்கான எந்தக் காரணமும் கூறப்படவில்லை. இலங்கையில் தமிழினப் படுகொலையை கடுமையாக எதிர்த்ததால் தமிழ்நாடு வக்கீல்களுக்கு எதிராக, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை எங்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு அங்கையற்கண்ணியையும், திருமலையையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு திரும்பிவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்னா, செயலாளர் நளினியும் இருவரின் கைதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். மேலும் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் வக்கீல்கள் பலர், சிறிலங்கா அரசை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழக உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவர்களின் கைதை கண்டித்து மதுரை தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பகத்சிங், மனோகரன் தலைமையில் மாவட்ட தலைமை நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் கொடுஞ்செயலை கண்டித்து நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டம். மேலும், வழக்கறிஞர் கயல்விழியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழக்கமிட்டனர். அத்துடன் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் விரிவடையும் வகையில் பல சம்பவங்கள் தமிழகத்தில் இடம்பெற்றன.

ஒட்டுமொத்த தமிழகத்தில் இயங்கும் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டங்களைச் செய்ய வழக்கறிஞர்கள் தாயாராகிக் கொண்டிருந்தார்கள். இத்தருணத்திலேயேதான் ஒரு செய்தி வந்தது. அதாவது, குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக. தமிழக வழக்கறிஞர்களின் பலத்தை காண்பித்துவிட்டார்கள் அவர்கள். ஆனால், பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிப்பதுடன் பலவிதமான வன்முறைகளையும் நாளும் பொழுதும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் நிலை படுமோசமானதாகவே இருக்கிறது.

சிங்கள அரசு ஏதோ புலிகளை அழித்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கிறது. அப்பாவித் தமிழர்களை புலி என்ற குற்றச்சாட்டில் எவ்வித விசாரணையுமின்றி அடைக்கப்பட்டுள்ளது எவ்விதத்தில் நியாயம் என்று கதறுகின்றனர் ஈழத்தமிழர்கள். ஈழத்தில் உள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? எனக் கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார் கயல்விழி.

ஈழத்தில் நடக்கும் கொடுமையை விளக்குகிறார் கயல்விழி

சிறிலங்கா அரச படையினரால் விடுவிக்கப்பட்டு சென்னை திரும்பிய கயல்விழி, செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில்:“கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். இலங்கையில் போர் தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்து வரும் எண்ணத்தில்தான் சென்றோம். அங்கு, இலங்கை அரசின் பாதுகாப்பு துறையில் முழுமையான அனுமதி பெற்று, 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வவுனியா, மட்டக்களப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டுத்துறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசினோம்.”

“அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதி எதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்க்; குழந்தைகளுக்கு அங்கு பள்ளிகளே இல்லை. அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என கேட்கிறார்கள்.”

“கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும், குழந்தைகளும் கை, கால்கள் இல்லாத நிலையில், கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.”

“மொத்தத்தில் அங்கு தமிழ் இனத்தை அழித்திருக்கிறார்கள். அழித்துக்கொண்டும் இருக்கிறார்கள். முல்லைத்தீவு பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும் சிங்கள ராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள்.”

“தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. ராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீடு இடிந்து கிடந்ததை பார்த்தோம். அவரது தாயார் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வருவதாக கூறியதும், அவரது கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது. அவரால் பேச முடியவில்லை."

சென்னை தியாகராய நகரில் உள்ள தெய்வநாயகம் பாடசாலையில், ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. அதில் கயல்விழி ஈழத்தில் தமிழ் மக்கள் படும் அவலங்களை பற்றி விளக்கிக் கூறுகையில்:“கிளிநொச்சி, வவுனியா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்கு இடிந்த வீடுகளையும், பிச்சைக்காரர்களை விட மோசமான நிலையில் பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே காண முடிந்தது. ஒரு வேளை உணவுக்கு கூட அவர்கள் சிங்கள இராணுவத்தையே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஊர் முழுக்க சுற்றியும் ஆண்கள் ஒருவரைக் கூட காண முடியவில்லை. அன்று இரவு பேருந்துக்காக நாங்கள் காத்திருந்தோம். அப்பொழுது இரவு 10 மணி இருக்கும். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சிங்களப் படை வீரர்கள் சென்ற வண்ணம் இருந்தனர். இது தான் அங்குள்ள பெண்களின் இன்றைய நிலை.”

“பெண்களின் நிலையே இப்படி என்றால் அங்கு இருக்கும் சிறு வயது பெண் குழந்தைகளின் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அங்குள்ள ராணுவத்திடம் அந்த பெண் குழந்தைகள் படும் பாலியல் கொடுமையை தடுக்கப் போவது யார்? நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் நம் முன்னே உள்ள வினா? இது அங்கிருக்கும், கிராமங்களில் மட்டுமல்ல. மீள் குடியேற்றம் என்று கூறப்படும் ஒவ்வொரு முகாமிலும் இதே நிலைதான். சிங்கள இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அங்கெல்லாம் இந்த பாலியல் வன்முறை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்ற இராணுவத்தினர் நான் இருக்கும் அறையின் பக்கத்து அறையிலேயே நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனது பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பெண் காவலர் மட்டுமே என்னுடன் இருந்தார். இந்தியாவிலிருந்து சென்ற எனக்கே இந்த நிலை என்றால் அங்குள்ள பெண்களின் நிலை என்ன என்பதை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்."

ஏதோ விடுதலைப்புலிகள் சுய நலன்களுக்காகவும், தமிழர்களை பகடைக்காயாக வைத்து போர் புரிவதுவுமே கொள்கையென கொண்டவர்களென கருத்துடையவர்களின் பிரச்சாரங்களுக்கு சாவு மணி அடித்தாற்போல் உள்ளது வழக்கறிஞர் கயல்விழியின் கருத்துக்கள். வெறும் எலும்புத்துண்டுக்கு சிங்கள அரச வர்க்கத்தினரின் வாலைப் பிடித்திருக்கும் கயவர்களுக்காவது வருமா ஜானோதயம் என்பதே உலகத்தமிழர்களின் கேள்வி.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Please Click here to login / register to post your comments.