ராணுவ மயமாகும் இலங்கை

ஆக்கம்: சோலை
தெற்காசிய நாடுகளிலேயே தொடர்ந்து ராணுவ மயமாகி வரும் நாடு இலங்கை. ‘இந்தியாவும் பாகிஸ்தானும்கூட, அந்த அளவிற்கு ராணுவ மயமாகவில்லை’ என்று மும்பையில் இயங்கும் ‘யுக்திகளுக்கான அமைப்பு’ தெரிவித்திருக்கிறது. இதனைப் பிரபல ஆங்கில நாளேடு ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்டிருக்கிறது.

உண்மை. இப்போது இலங்கையின் வருவாயில் கணிசமான பகுதியை ராணுவம் என்ற வெள்ளை யானை விழுங்கிக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் ஆயுதம் வாங்கிக் குவிக்க முடியுமோ, அங்கெல்லாம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, விவாதத்திற்குரிய நாடாக உருமாறியிருக்கும், இஸ்ரேலிலிருந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர், ஈழத்தின் முல்லைத் தீவில் சிங்கள ராணுவம் குண்டுகளை வீசியது. அந்தப் பரப்பு ஈழப் போராளிகளின் இருப்பிடம் அல்ல. பசுமையான வயல்கள். அந்த பூமி பொசுங்கிப் போயிருக்கும்.

வியட்நாமில் யுத்தம் நடத்திய அமெரிக்கா, ஒரு கட்டத்தில் வெறுத்துப்போனது. வியட்நாம் காங்கிரஸ் விடுதலை வீரர்களை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, வியட்நாமின் நெற்களஞ்சியங்களான வயல்களை, வனங்களை குண்டு போட்டு அழித்தது. அதேபோல், ஈழப் போராளிகளை எதிர்கொள்ள முடியாத சிங்கள ராணுவம், சினம்கொண்டு கழனிகளை கல்லறைக் காடுகளாக்குகிறதா?

உற்பத்தி செய்த நவீனரக ஆயுதங்களை அமெரிக்கா சோதிக்க நினைத்தது. வியட்நாமில் வீசித்தான் அந்தச் சோதனைகளை நடத்தியது. அதேபோல், இஸ்ரேலிலும் இன்ன பிற நாடுகளிலும் வாங்கிய ஆயுதங்களின் வலிமை என்னவென்று, சிங்கள ராணுவம் முல்லைத் தீவில் சோதித்துப் பார்க்கிறதா?

கடந்த மூன்று மாதங்களாக ஈழப் போராளிகளுடன் சிங்கள ராணுவம் வம்புச் சண்டைக்குப் போனது. ‘மாவிலாது அணையை மூடிவிட்டார்கள். எனவே, அதனை மீட்கப் போகிறோம்’ என்றது. அந்த அணை திறக்கப்பட்ட பின்னரும் சிங்கள ராணுவம் ஈழப்போராளிகளின் நிலைகளைத் தாக்கியது.

‘சம்பூர் கிராமத்தில் மையம் கொண்டுதான், திரிகோணமலையில் ஈழப் போராளிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆகவே, அந்த ஊரைக் கைப்பற்றுவோம், என்றது. பெரும் சேதத்தைத் தவிர்க்க ஈழப் போராளிகள் பின்வாங்கினர்.

இப்படித் தொடர்ந்து சிங்கள ராணுவம், போர் நிறுத்த உடன்பாட்டை மீறி வருகிறது. அதற்கு உலகம் ஏற்காத ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொள்கிறது.

ஈழ விடுதலைப்போரின் கேந்திரமான தளம், யானை இறவு. அந்தக் கேந்திரம் நீண்ட காலமாக ஈழப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, ஜெனீவாவில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், அந்த யானை இறவைக் கைப்பற்ற வேண்டும் என்று சிங்கள ராணுவம் திட்டமிட்டது.

எனவே, அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதாக இருந்தால் முகாமலை, கிளாலி ஆகிய இடங்களைக் கைப்பற்ற வேண்டும். அதற்காக, முப்படைகளையும் குவித்தது. அதனை அறிந்த போராளிகள், எச்சரித்தனர். மூன்று நாட்களுக்கு முன்னரே, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குத் தெரிவித்தனர். நார்வே தூதருக்குத் தெரிவித்தனர். பலன் இல்லை.

வெறி கொண்ட சிங்கள ராணுவம், போராளிகளின் நிலைகள்மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல் தொடுத்தது. அத்தகைய தாக்குதலைப் போராளிகள் எதிர்பார்த்தார்கள். சிங்கள ராணுவத்தின் முட்டாள்தனத்திலிருந்து எப்போதுமே ஈழப்போராளிகள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.

சிங்களச் சிப்பாய்கள் ரொம்ப நல்லவர்கள். எங்கோ இருக்கிற சிங்களத் தளபதி அவர்களுக்குக் கட்டளை போடுவார். ‘முன்னேறுக. போராளிகளோடு மோதுக!’ என்று உத்தரவு போடுவார். அவர்களும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குத் தேவையான ஆயுதங்களைப் போராளிகளுக்காகப் போட்டுவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள்.

முகாமலைத் தாக்குதலிலும் அந்தப் பணியை சிங்களச் சிப்பாய்கள் சிறப்பாகச் செய்தனர். செத்தவர்கள் போக பிழைத்தவர்கள் அனைவரும், ஆயுதக் குவியலை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்து விட்டனர். ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு சிங்கள ராணுவப் பிரிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை என்கிறார்கள்.

சிங்கள ராணுவம் பகைவர்களைக் கொல்வதில்லை. உண்மையை, நிதர்சன நிலையை வெற்றிகரமாகக் கொலை செய்கிறது. முகாமலைப் போரில் 400 போராளிகள் மரித்ததாகவும், தங்கள் தரப்பில் 22 பேர்தான் மரணமடைந்ததாகவும் பொய் சொன்னது. பின்னர், 129 பேர் செத்ததாக ஒப்புக்கொண்டது. அப்போதும் பாதிப் பொய் சொன்னது. செத்த சிங்கள ராணுவத்தினர் 200 பேர். படுகாயமடைந்தவர்கள் 400 பேர். ஓடிப் போனவர்கள் 500_க்கும் அதிகம். கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய இழப்பை சிங்கள ராணுவம் சந்தித்ததில்லை. ஈழத்திற்கு ரத்தாபிஷேகம் செய்துவிட்டது.

இந்தத் தோல்வியை, துடைக்கமுடியாத அவமானம் என்று சிங்கள இனவாத ஏடுகளே சிங்கள ராணுவத் தலைமையைக் கிழித்தெறிந்துவிட்டன.

இலங்கை சின்னஞ்சிறிய நாடு. இந்த அளவிற்கு ராணுவ மயமாக வேண்டுமா? தேவைதானா? அதன் ஆட்பெரும்படையோடு ஒப்பிடும்போது, எண்ணிக்கையில் ஈழப் போராளிகள் ரொம்பக் குறைவானவர்கள். அவர்களுக்கு உள்ள உறுதியும் உரமேறிய கரங்களையும் தவிர, வேறு என்ன இருக்கிறது? சிங்கள மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சிங்கள ராணுவத்திற்கு ஈடாக, அவர்கள் கப்பல் கப்பல்களாக ஆயுதங்களை வாங்கிக் குவிக்க முடியுமா?

ஈழப் போராளிகள் என்ன கேட்கிறார்கள்? ‘இதே மண்ணில் பிறந்தவர்கள்தான் நாங்கள். இதுதான் எங்கள் தாயகம். சிங்களர்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ, அதே உரிமைகள் எங்களுக்கும் வேண்டும்’ என்கிறார்கள். இதில் என்ன தவறு?

இந்தியாவில் ஒரு இஸ்லாமியப் பெருமகன் குடியரசுத் தலைவராக வர முடிகிறது. அப்படி, இலங்கையில் ஒரு தமிழன் அரியாசனம் ஏற முடியுமா?

இந்தியாவில் ஒரு சீக்கிய சகோதரன் நாட்டின் பிரதமராக வர முடிகிறது. அப்படி, ஒரு தமிழன் இலங்கையின் சிம்மாசனத்தில் பிரதமராக அமர முடியுமா?

அந்த அளவிற்குக்கூட ஈழ மக்கள் உரிமை கேட்கவில்லை. எங்கள் இனம், மொழி, கலாசாரத்தை அங்கீகரியுங்கள் என்றுதானே கேட்கிறார்கள்? அதனை பேசித் தீர்க்க முடியாதா?

ஈழப் போராளிகள் யார்? சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளைகளா? உழைக்கும் மக்களின் உதிரத்தில் பிறந்தவர்கள்.

சிங்களச் சிப்பாய்கள் யார்? செல்வந்தர் வீட்டுச் செல்லக்குட்டிகளா? உழைத்தால்தான் அடுப்பு எரியும் என்ற நிலையில் இருக்கும் சிங்களக் குடும்பங்களின் வறுமைப் புதல்வர்கள்.

செல்வச் செருக்கான சிங்கள இனவாதிகள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்க, உழைக்கும் மக்களின் பிள்ளைகள் ரத்தம் சிந்துகிறார்கள்.

சிங்கள ராணுவத் தளபதிகள் யார்? அதே மேட்டுக் குடியின் புத்திரர்கள்தான்.

எனவே, தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள சிங்கள அரசு மக்களை நம்பவில்லை. ராணுவத்தைத்தான் நம்புகிறது. அந்த ராணுவம் பெருந் தீனி கேட்கிறது. எனவே, இலங்கை ராணுவ மயமாகிறது.

ஈழப் போராளிகளிடம் என்ன இருக்கிறது? பிறந்த மண்ணில் மானம் காக்க ஒரே ஒரு உயிர் இருக்கிறது. ஆனால், அந்த உயிர் சர்வ சக்தி படைத்த ஆயுதங்களை விட வலிமையானது. நவீன ஆயுதங்களோடு வரும் சிங்கள ராணுவத்தையே, அந்த உயிர்த்துடிப்பு குலைநடுங்க வைக்கிறது.

யுத்தங்களில் தலைவிதியை நிர்ணயிப்பது ஆயுதங்கள் அல்ல. போர்த் தந்திரம்.

போர்க்களத்தில் மோதுவதைவிட, இரு தரப்பினரும் அமர்ந்து பேசுங்கள் என்று இந்தியா வழிகாட்டியிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு எந்த அளவிற்கு உரிமை தரமுடியும் என்று இலங்கை ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருக்கிறது. இந்திய அரசின் யோசனை ஏற்கப்பட்டால், இலங்கை ராணுவ மயமாகத் தேவையில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Oct 26, 2006

Please Click here to login / register to post your comments.