தமிழ்மொழி உரிமை பற்றி தமிழ்ப் பிரதிநிதிகள் சிந்திப்பார்களா?

அரசியல் ரீதியிலோ, தொழிற்சங்க ரீதியிலோ வேறு எந்த வழியிலோ ஒரு சமூகத்தின் சக்தி அதாவது ஒற்றுமை சிதறடிக்கப்படும் போது அச் சமூகத்தின் உரிமைகள், தேவைகளில் பின்னடைவு, இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இது உலக வரலாறு தெளிவாகக் கற்றுத் தந்துள்ள பாடமாகும். அதிலும் ஒரு நாட்டின் சிறுபான்மை சமூகமாக வாழ்வோர் மத்தியிலோ ஒற்றுமையீனமோ போட்டியோ நிலவுமானால் அரசியல் ரீதியாகவும் மற்றும் பல்வேறு வழிகளிலும் சமூகப் பின்னடைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தடுக்கவும் முடியாததாகும்.

இந்த நிலையிலே நமது இலங்கைத் தீவில் சிறுபான்மையினராகக் கணிக்கப்படும் தமிழர்களின் நிலைபற்றி நாம் கவனஞ் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகவேயுள்ளது. உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழி தேடவேண்டிய நிலைமையிலுள்ள நம்மவர்கள் பிளவு பட்டு செயற்படுவதால் சமூகம் பயனேதும் பெறுமா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது ஒரு முதுமொழி. தமிழில் உள்ள சிந்தனைக்குரிய கூற்று. இது தொடர்பில் சிந்திக்கும் ஆற்றல் அற்ற பரிதாப நிலையில் நாமுள்ளோம். இதுவே உண்மை நிலை. யதார்த்த நிலை.

பிறரைக் குறை கூறுவதை விடுத்து நம் மத்தியிலே நிலவும் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து விடுபட வேண்டியது அவசர தேவை மட்டுமல்ல அவசியமானதும் கூட. நமது பிரச்சினைகள் என்ன? அவற்றைத் தீர்க்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதைத் தெளிவாக, ஒற்றுமையாக முன்வைக்க முன்வர வேண்டும். தமிழர்களுக்கு பிரச்சினைகள் உண்டு. அவற்றைத் தீர்க்க வேண்டிய கட்டாயமும் உண்டு என்பது இன்று பல்வேறு மட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தெளிவாகப் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு சமூகத்தின் உயிர்நாடியாக விளங்குவது மொழி. மொழிப் பிரச்சினை அதாவது தமிழ் மொழி உரிமை மறுக்கப்பட்டது தமிழர் மீதான உரிமை மறுப்பாக, பறிப்பாகக் கொள்ளப்படுகின்றது. கூறப்பட்டும் வருகின்றது. தமிழ் மொழி உரிமை சிங்களச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டு இன்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும் இடைப்பட்ட காலத்தில் சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் அரசியல் சட்டத்தின் மூலம் இணையுரிமை வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழியின் பயன்பாடு பற்றிப் பல சுற்று நிருபங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்களோ உரியபடி கவனம் செலுத்தவில்லை. தமிழ் மொழியை நடைமுறையில் செயற்படுத்துமாறு உரிய படி கோரிக்கை விடவில்லை. குரலெழுப்பவில்லை, கடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார மட்டுமே தமிழ் மொழி உரிமை தொடர்பாக புறக்கணிப்புத் தொடர்பாக குரலெழுப்பினார் என்பது பதிவாகவுள்ளது.

அதிகாரப் பகிர்வு பற்றியும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் சந்திப்புகள் நடத்தும் நமது அரசியல் தலைவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில் தமிழ் மொழியின் நிர்வாக உரிமை தொடர்பாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மொழியுரிமை தொடர்பான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுவதாக எங்குமே குறிப்புகளில்லை.

உள்ளதைப் பெற்றுக் கொடுக்க வழிமுறை தேடாது ஏதேதோ கதைப்பதால் பயன் ஏதும் ஏற்படாது. சமுக நோக்குடன் அரசியல் நடத்துபவர்களுக்கு மட்டுமே இது புரியும். இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு வித்திட்டது மொழியுரிமைப் பறிப்பு அல்லது மறுப்பு என்பது வெளிப்படையானது.

பல்வேறு தாக்கங்களால் தமிழ்மொழியின் உரிமை மீண்டும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழ் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களில் தமிழர்கள் கணிசமாக வாழும் இருபத்தொன்பது பிரதேச சபைப் பிரிவுகளில் தமிழுக்கும் நிர்வாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள மொத்தம் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தமிழ் மொழிக்கு சிங்களத்துடன் இணைந்த நிர்வாகமொழி அந்தஸ்து வழங்கப்பட்டு பத்து ஆண்டுகளும் கடந்து விட்டன. அதேபோல் பதுளை, காலி, களுத்துறை, கண்டி, புத்தளம், கொழும்பு ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள இருபத்து நான்கு பிரதேச சபைகளில் தமிழ் மொழியும் நிர்வாக அந்தஸ்துடன் உள்ளது.

இது தொடர்பாக விளக்கம், தெளிவு அரசியல் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் நமது தமிழ் உறுப்பினர்ளுக்கு இல்லையோ என்ற ஐயம் ஏற்படுகின்றது. ஒரு குடிமகன் அரச அலுவலகங்களில் தனது தாய் மொழியில் தொடர்பு கொள்ளும் போது அதே மொழியில் பதில் வழங்க வேண்டுமென்று பொது நிர்வாகச் சுற்று நிருபங்கள் கூறுகின்றன. அதேபோல் ஏதாவது ஆவணத்தின் பிரதியையோ அதன் பகுதியையோ ஒரு தமிழ்க்குடிமகன் தமிழ் மொழியில் கேட்டுப் பெறலாமென்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டத்தால் விதிமுறைகளால் கூறப்பட்டுள்ள தமிழ் மொழியின் நிர்வாக நடைமுறையின் தற்போதைய நிலை தொடர்பில் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டிய நமது அரசியல் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவதில்லை. பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகின்றனர் என்றே கூற வேண்டும். நம்மைப் பிரதிநிதித்துவம் செய்யவென்று புறப்பட்டவர்கள் நமது அடிப்படை உரிமையான மொழியுரிமை தொடர்பில் அக்கறை செலுத்தாமலிருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது நமது சமுதாயப் பொறுப்பு, கடமை. கடமையை, பொறுப்பை நாம் அலட்சியப்படுத்தும் போது நாமே பாதிக்கப்படுகின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மொழியுரிமையைப் பயன்படுத்த முடியாவிட்டால் நாம் இயல்பாகவே இரண்டாந் தரப் பிரஜைகளாக நாட்டின் உரிமையற்றவர்களாகி விடுவோம்.

இதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு வழிகாட்டிகளாக பிரதிநிதிகளாகப் புறப்பட்டவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தில் உரிமையுண்டு. அதை வழிப்படுத்த விதிகளுமுண்டு. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே செயலுறுப் பெற்றதாயில்லை என்பதை உரிய இடத்தில் தெளிவுபடுத்த வேண்டியது அரசியல்பிரதிநிதிகளின் பொறுப்பு. இதைச் சுட்டிக்காட்டுவது நமது பொறுப்பு. சுட்டிக்காட்டி நிவாரணம் தேடாது ஒதுங்கியிருப்பது சமுதாயத் தேவையை, உரிமையை அலட்சியப்படுத்துவதாகவே அமையும்.

மொழியுரிமை மட்டுமல்ல, கல்வி, தொழில்வாய்ப்பு, அடிப்படை வாழ்வாதார உரிமைகள் என்று பல கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாயுள்ளன.

ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு சில தகரங்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வாத்தியக் கருவிகளையும் பெற்றுக் கொடுத்து புகைப்படத்துடன் விளம்பரம் செய்வதால் சமுதாய மேம்பாட்டைக் காண முடியாது. இவை மட்டுமே சமுதாயத் தேவைகளல்ல. அடிப்படைத் தேவைகள் அனுபவிக்க முடியாதுள்ள உரிமைகள் எவை என்பதை ஆய்வு செய்து கவனிக்க வேண்டும்.

நாட்டின் அரசியல் சட்டத்தில் பொதுவாகவுள்ள உரிமைகள் தொடர்பாக மட்டுமன்றி சிறுபான்மையின குறிப்பாக தமிழர்களுக்குரிய உரிமைகள் தொடர்பாக தெளிவான கருத்தை அறிவை நமது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பெற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகவுள்ளது.

அரசியல், தொழிற்சங்க மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளுக்கப்பாலிருந்துசிந்தித்துச் செயற்பட வேண்டியது தமிழ் அரசியல் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் நம்மவர்களின் பொறுப்பு.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தமிழர்களை வாக்களித்து தெரிவு செய்வது தமது உரிமைகளை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையிலேயே. தமிழ் பொதுமக்களின் நம்பிக்கை இன்று எந்தளவில் காப்பாற்றப்படுகின்றது என்பதை அரசியல் பிரதிநிதிகள் சிந்திக்க வேண்டும்.

வாக்களித்து தெரிவு செய்வது மட்டுமே மக்களின் பொறுப்பு. தெரிவானவர்கள் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று விதியாகிவிடக்கூடாது. சமுதாய உணர்வுடன் சமூக நலனை முன்னிலைப்படுத்தி மேன்மைப்படுத்த பொறுப்புடன் தமிழ்ப்பிரதிநிதிகள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. புரிந்து கொள்வார்களா புரிய வேண்டியவர்கள்?.

Please Click here to login / register to post your comments.