நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விடுத்த இரங்கல் செய்தி !

ஆக்கம்: ஊடக அறிக்கை

தேசியத் தலைவர் அவர்களின் அன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் மறைவு ஓர் வரலாற்றுத் துயர்….. !

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அன்னையின் மறைவுச் செய்தி கேள்வியுற்று நாம் சொல்லொணாத் துயர் கொள்கிறோம். அன்னையை இழந்து ஆற்றமுடியாத கடும் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் பிள்ளைகளினதும், உறவினர்களினதும் துயரினையும் வேதனையையும் இத் தருணத்தில் நாம் அவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். அன்னையின் மறைவினாலும், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதிலும் உயிர் அச்சங்களை எதிர் கொண்டுள்ள நிலையிலும், செய்வதறியாது கலங்கிப் போயுள்ள எமது தமிழீழ மக்களின் சொல்ல முடியாத வேதனையில், நாமும் புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களும் உணர்வு பூர்வமாக பங்கு கொள்கிறோம். அன்னையின் மறைவையொட்டி, எமது தேசியத்தையும், தமிழீழ விடுதலையையும் நேசிக்கும் தமிழக மக்களினதும், உலகம் முழுவதும் வாழும் ஏனைய தமிழ் மக்களினதும் துயரினில் நாமும் இணைகிறோம்.

தமிழீழத்தில் தொடரும் இத்தகைய துயர் நிறைந்த இழப்புக்கள் மனங்களில் தாங்கமுடியாத அதிக வலியைத் தரினும், எமது தமிழீழ விடுதலை வென்றெடுக்கப் படவேண்டியதன் அவசியத்தை இறுக வேண்டிநிற்பதுடன், சுதந்திரம் நோக்கிய செயற்பாடுகளுக்கு வேகத்தையும்,உறுதியையும் ஏற்படுத்தி நிற்கின்றன. வன்னிப் போரின் இறுதி நாட்களில்,பக்கவாத நோயுடன் தமிழீழ மக்களுடன் தங்கியிருந்து, வயதான நிலையிலும் சிங்கள இனவாதிகளினால்சிறை வைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்ட நிலையில், தாங்க முடியாத வலிகளை அனுபவித்த தமிழீழ மக்களின் தாய் அவர்.. ! தேசியத் தலைவர் அவர்களின் அன்னை; மறைந்த வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களை, தமிழீழ தேசிய விடுதலையின் பேரன்னையாகவும், தமிழீழ மக்களின் அன்னையாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் மதிப்பளித்துப் போற்றிக் கௌரவிக்கின்றோம். தமிழீழ அன் னையின் மறைவு நாள், தமிழீழத் தேசிய விடு தலையில் ஓர் வரலாற்றுத் துயர் கொண்ட நாளாகப் பதிவு செய்யப்படும்.

தமிழீழத் தேசியத்தின் அன்னை அமரர் வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து, அவரின் பாதங்களில் எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்.

பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Please Click here to login / register to post your comments.