'கிளிநொச்சியின் விவசாயத்தையும் அழித்து குடாநாட்டு அப்பாவி மக்களையும் ஏமாற்றும் திட்டம்'

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ். குடாநாட்டிற்கு குடிநீர் வழங்க ஓர் புதிய திட்டத்தை அரசு பலகோடி ரூபா செலவில் உருவாக்குவதற்கு நான் ஆட்சேபனை செய்து வருவதை சிலர் தவறான கருத்து மூலம் விமர்சிப்பதால் இத்திட்டம் பற்றி நியாயப்படுத்தக் கூடிய எனது நிலைப்பாட்டை யாழ்.குடாநாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்குண்டு.

கிளிநொச்சி மாவட்டம் தான் யாழ்.மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவதால் இத்திட்டம் எவ்வாறு யாழ்.குடாநாட்டு மக்களையும், விவசாயத்தை வருமானமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்ட கிளிநொச்சி மக்களையும் விமோசனப்படுத்தும் ? எனவே இரு சாராரும் இதனைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்குவதா ? வேண்டாமா ? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

முதலாவதாக இத்தகைய பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க எண்ணியவர்கள் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி கிளிநொச்சி வாழ் விவசாயிகளின் கருத்துகளை தெரிந்து கொள்ளாதது பெரும் தவறாகும்.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் குடியேற்றத்திட்டங்கள் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட்டக்கச்சி, இராமநாதபுரம், குமாரபுரம், முரசுமோட்டை எட்டாம் வாய்க்கால், உருத்திரபுரம், சிவநகர் போன்ற பல பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.இக்குடியேற்றவாசிகள் குடியேறுவதற்கு முன் இரணைமடுக்குளம் பெரும் கமக்காரர்களின் ஏகபோக உரிமைக்குள் கட்டுப்பட்டிருந்தது.

குடியேற்றவாசிகளுக்கு நீர் விநியோகம் அரை ஏக்கர், முக்கால் ஏக்கர், ஒரு ஏக்கர் என வருடாவருடம் நடைபெறும் "தண்ணீர்' கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.பெரும் கமக்காரர் தம்மிடமுள்ள காணியின் விளை நிலத்தைப் பொறுத்து குடியேற்றவாசிகளிலும் பார்க்க கூடுதலான பங்கு தண்ணீரைப் பெற்று விவசாயம் செய்து வந்தனர்.குளக்கட்டு உயர்த்தப்பட்டு குளத்தின் கொள்ளளவைக் கூட்ட அவர்களே பெரும் முயற்சியும் செய்து அதற்காகத் தமது சொந்தப் பணத்தையும் முதலீடு செய்து அவ்வுரிமையைப் பெற்றனர்.பின்னர் ஏழைக் குடியேற்றவாசிகளின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டு அவர்களுக்கு முன்னர் இருந்த நிலையிலும் பார்க்க கூடியளவு நிலத்தில் சாகுபடி செய்யக்கூடிய உரிமையை அவர்கள் சார்பில் நடத்திய போராட்டங்கள் பெற்றுக்கொடுத்தது.

இப்போராட்டம் பெருங்கமக்காரர்களின் மனதை பெருமளவு பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை, இருப்பினும் குடியேற்றவாசிகளின் கோரிக்கை நியாயபூர்வமானதாக இருந்ததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இத்தகைய தண்ணீர் பங்கீடு காலபோகத்திற்கல்ல சிறுபோகத்திற்கு மட்டுமேயாகும்.காலபோகம் என்று சொல்லப்படுகின்ற பெரும் போக நெற்செய்கைக்கு அதிகளவு தண்ணீர் இரணைமடுக் குளத்திலிருந்து பெறப்படுவதில்லை. காரணம் அக்காலத்தில் தேவையான அளவு மழைபெய்தால் பெரும் கமக்காரர்களும் குடியேற்றவாசிகளும் தமக்குச் சொந்தமான வயல் நிலங்களை சாகுபடி செய்வார்கள்.மாரி காலம் முடிய தேவையேற்படின் இரண்டொரு தடவை தண்ணீர் குளத்திலிருந்து திறந்து விடப்படும் குளத்தின் நீர்மட்டம் கொஞ்சம் குறைந்து நிற்கும்.காலநிலைமையைப் பொறுத்து குளம் நிறைந்து நிற்பதும் உண்டு.திருவையாறு படித்த வாலிபர் திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம் ஆகியவற்றில் ஏறக்குறைய ஐநூறு குடும்பத்தினர் இந்தக் குளத்து நிரையே நம்பி மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை செய்து வருகின்றனர்.

சிறுபோகம் ஆரம்பிக்கின்றபோது குளத்தினது நீரின் அளவு எத்தனை ஏக்கர் சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும் என்பதனை கணக்கிலெடுத்து குடியேற்ற வாசிகளுக்கு எத்தனை ஏக்கர் சொந்தமாக இருந்தாலும் ஒன்றுமுதல் இரண்டு ஏக்கர் வரையும் பெரும் கமக்காரர்களுக்கு அவர்களுக்குச் சொந்தமான நிலத்தின் கால்பங்கும் சிலசமயம் அதிலும் குறைய விஸ்தீரணம் கொண்ட காணியில் மட்டும் தான் நெற்சாகுபடி செய்ய அனுமதி கிடைக்கும்.இதில் வேடிக்கை என்னவெனில் பல மைல் தூரம் நிலத்தில் நீர் செல்வதால் தண்ணீரை நிலம் உறிஞ்சி விடும் என்பதால் தமது தண்ணீர்ப் பங்கை குளத்திற்கு அருகில் உள்ள வேறு நிலத்திற்கு மாற்றி சாகுபடி செய்வதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.அதுபோல வேறு காணி உரிமையாளரின் சம்மதப்படி குளத்திற்கு அருகாமையிலேயே நெற்சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவர்.எனவே சிறுபோகத்தில் குளத்தை அண்டிய பகுதிகளிலேயே நெற்சாகுபடி செய்யப்படும். இந்த நிலைமை சில அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தெரியாமல் போனது ஏனோ ?

இரணைமடுக் குளம் வற்றாக்குளமும் அல்ல அது ஒரு அமுதசுரபியும் அல்ல.குளம் பல தடவை வற்றி நிலம் தெரிவதைப் பார்த்துள்ளோம்.பாடசாலை மாணவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் சுற்றுலா வந்தபோது வெறும் தரையாக இருந்த குளப்பகுதியில் ஓடிச்சென்று வழுக்கி வாய்க்காலில் விழுந்து இறந்த அந்த துன்பம் நிறைந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது.

மக்களுக்கு குடிநீர் கொடுப்பது எமக்கு மோட்ச நிலையினை தரும். ஆனால் சிறுபோக வேளாண்மைக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போது யாழ். குடாநாட்டில் இருக்கும் அனைவருக்கும் இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீர் கொடுப்பதென்பது கிளிநொச்சியின் விவசாயத்தையும் அழித்து குடிநீருக்காக காத்திருக்கின்ற யாழ்.குடாநாட்டு அப்பாவி மக்களையும் ஏமாற்றும் செயற்றிட்டம் என்பதில் சந்தேகமில்லை. இந்த உண்மை தெரியவரும்போது எனது நிலைமை எப்படியிருக்கும் என்பதை நானறியேன்.ஆனால் நிச்சயமாக எனது கருத்தைக் கேட்காமல் விட்டு விட்டோமே என்று பலர் வருத்தப்படுவார்கள்.

இத்திட்டத்திற்கான சிறந்த மாற்று வழி ஒன்று உண்டு "யாழ்ப்பாண வாவித்திட்டம்'(ஒச்ஞூஞூணச் ஃச்ஞ்ணிணிண குஞிடஞுட்ஞு) என 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அரைகுறையாக நிறுத்தப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் கவனஞ்செலுத்துவதே ஆகும்.இத்திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி அன்றைய அரசுக்கு சரியான முறைப்படி தெரிவிக்காமையால் இடையில் கைவிடப்பட்டது.ஆனால் இத்திட்டத்தின் சில முக்கிய வேலைகள் பூர்த்தியாகி விட்டன.தொண்டமான் ஆற்றைச் சுற்றி ஒரு தடுப்புக் கதவும் அதேபோல் நாவற்குழியில் ஒரு தடுப்புக்கதவும் ஓரளவு பூர்த்தியாகியுள்ளன.சுண்டிக்குளத்தில் பலமிக்க ஓர் அணைக்கட்டு கதவுகளுடன் அமைக்கவேண்டும்.

அத்துடன் ஆனையிறவு, வடமராட்சிக் கடல் ஏரியை இணைக்கும் 5 மைல் நீளமான வாய்க்கால் வெட்டி குறையில் உள்ளது.இவ்வாய்க்காலோடு சுண்டிக்குளம் அணைக்கட்டும் பூர்த்தியாகிவிட்டால் படிப்படியாக வருடாவருடம் ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீர் உப்புத் தன்மை குறைந்து யாழ்.குடாநாடு முழுவதும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகவும் உப்புத்தன்மை கொண்ட கிணறுகள் நன்னீராகவும் மாறும் வாய்ப்புகள் உண்டு.

இத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய தற்போது இரணைமடுத் திட்டத்திற்கு செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள பணத்தில் ஒரு சிறு தொகையே போதுமானதாகும்.இச் சிறு தொகையைத் தந்துதவ ஜனாதிபதி ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ள போதிலும் யாழ்.கடலேரி திட்டத்தை தடுக்க சதி செய்பவர்கள் யார் ?

முன்னாள் நீர்ப்பாசன உதவிப் பணிப்பாளர் காலஞ் சென்ற அமரர் ஆறுமுகம் "யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆறு' என்ற நூலை எழுதியுள்ளார். அவரின் வழிகாட்டுதலோடு அன்னாரின் இத்திட்டத்திற்கு மிகவும் அக்கறை கொண்டு உழைத்த மாவட்ட காணி அதிகாரி மெண்டிஸ் என்னும் பெரியார் அதே கனவுகளோடு இன்றும் வேதனையுடன் உள்ளார்.

இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறேன் என்று சொல்பவர்கள் "யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆறு' என்னும் அந்தத்திட்டத்தினை ஆய்வு செய்து அதற்கான விபரங்களை சேகரிப்பதற்குத் தயங்குவது ஏன் ? கிளிநொச்சி விவசாயிகளின் ஆலோசனையைக் கூடப்பெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

எப்போதுமே நான் சொல்கின்ற உண்மை கசப்பானது தான். மாவிலாறு தொடங்கி நந்திக்கடல் முடியும் வரை நடந்து முடிந்த அனர்த்தங்களை நாடே அறியும்.அதைத்தடுப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான கசப்பான உண்மைகளை நான் கடிதம் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தினேன்.எவரும் எனது கருத்துகளை அப்போது காதில் போட்டுக்கொள்ளவில்லை.

விளைவு எல்லாவற்றையும் இழந்து எமது மக்கள் அநாதரவாக நிற்கிறார்கள்.அதேபோல்தான் இதுவும் ஒரு கசப்பான உண்மை.சம்பந்தப்பட்டவர்களது காதில் ஏறினால் நல்லது.

இல்லையேல் நான் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய சந்தர்ப்பத்தில் சொல்லிவிட்டேன் என்ற ஆத்ம திருப்தியில் இருப்பேன்.ஏற்கனவே நான் ஊதிய சங்கு எவர் காதிற்கும் கேட்கவில்லை.இதாவது கேட்குமா ?

Please Click here to login / register to post your comments.