பாகம் 2: தமிழக சட்டமன்றத் தேர்தல் விளையாட்டு ஆரம்பம் அனலை நிதிஸ் ச. குமாரன்

தேர்தல் காலப்பகுதிகளில் தமிழக மக்களின் ஆதரவைப் பெறுமுகமாக அக்கால சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதில்லை. பசி பட்டினி போன்ற பிரச்சினைகளினால் பல லட்சம் தமிழக மக்கள் திண்டாடுகிறார்கள். ஊழல்கள் தலைதூக்கி ஆடுகிறது. அரசியல்வாதிகள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள படாதபாடுபடுகிறார்கள். தள்ளாடும் வயதிலும் ஆறாவது முறையாக முதலமைச்சராக வந்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் செயற்படுகிறார் கலைஞர்.

முதல்வராக இருக்கும் காலத்தில் இறந்துபோனால் தனது தனயன் ஸ்டாலினை அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதன் மூலமாக பின்வரும் காலங்களிலும் ஸ்டாலின் முதலமைச்சராக தெரிவாகும் சாத்தியம் அதிகம் என்பதை உணர்ந்து செயல்படுகிறார் கலைஞர். தமிழர்களை பணயக்கைதிகளாக வைத்து அரசியல் ஆதாயம் பெற முனைகிறார் கலைஞர். தமிழக மக்களும் வாக்குகளைப் போட்டு இவர்களைப் போன்ற சர்வாதிகார அரசியல் பண்பாட்டுடைய தலைவர்களுக்கு ஆதரவளிப்பது வெட்கப்பட வேண்டிய விடயமே.

ஜனநாயக நாடுகள் என்று அலட்டிக்கொள்ளும் நாடுகளானாலும் சரி அல்லது அந்நாடுகளில் இருக்கும் மாநிலங்களிலானாலும் சரி, ஜனநாயக பதத்தை வைத்துக்கொண்டு சர்வாதிகார ஆட்சிகளையே நடாத்துகிறார்கள். ஒருவர் ஒரு தடவை அல்லது இரு தடைவைகள் தலைமைப் பதவிகளுக்கு வரலாம். பிறரும் அரச தலைவர்களாக வருவதற்கு வழிவிட்டுச் செல்வதே உண்மையான ஜனநாயகத்தைப் பின்பற்றும் கட்சித் தலைமகளுக்கு இருக்க வேண்டிய கடமை.

எந்தவொரு கட்சித் தலைமையும் தோல்வியைச் சந்தித்தால், அத்தலைமை அடுத்த நிலையிலிருக்கும் உறுப்பினர்கள் அத்தலைமைப் பதவியை ஏற்பதுவே சிறந்த ஜனநாயக செயற்பாடாக இருக்க முடியும். இப்படிச் செய்வதனால், பழைய தலைமைகள் செய்யும் பிழைகளைக் கண்டுபிடிப்பதனால் கட்சிகளை வளர்ப்பதுடன், நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை காட்ட முடியும். அதைவிடுத்து ஒருவரே ஐம்பது ஆண்டுகளாக குறித்த பதவியில் இருப்பதனால், கட்சிக்குள்ளேயோ அல்லது அரசாங்கத்திற்குள்ளேயோ இடம்பெறும் ஊழல்களை வெளிக்கொண்டுவர முடியாது.

இவ்வாறாக ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செயற்படும் கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைமைகளினால் தமிழகம் எந்தவித பொருளாதார மாறுதல்களையும் காணப்போவதில்லை. தமிழக மக்களுக்கு சுறுசுறுப்பான தகுதியுள்ள இளம் தலைமையே தேவை. உத்வேகத்துடன் போராடும் வல்லமையுடைய இளைஞர்களினாலும், இளம் இரத்தத்தைக் கொண்ட சந்ததியினால் மட்டுமே சிறந்த ஆட்சியை நடாத்தி வறுமையையும் மிதமிஞ்சிப்போயிருக்கும் ஊழல்களுக்கும் ஒரு முடிவைக் கொண்டுவர முடியும்.

கண்துடைப்பு அரசியல் செல்லுபடியாகாது

கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களினால் காலம் காலமாக நடாத்தப்படும் கண்துடைப்பு நாடகங்களை புரிந்து தமிழக மக்கள் விவேகத்துடன் செயற்படுவது அவர்களின் எதிர்கால சந்ததியினரின் இருப்பை உறுதியாக்கும். சிங்கள அரசு தமிழின அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்த காலத்தில், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலும், பதவியிலும் இருந்த கலைஞர் ஈழத்தமிழர்களின் அழிவை வெறும் பார்வையாளனாக இருந்து வேடிக்கை பார்த்ததை தமிழகத்தின் தமிழின உணர்வாளர்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதவர்களாகவே உள்ளார்கள். தமிழகத்தில் எழுந்த உணர்வலைகளும், ஈகைச் சுடரொளி முத்துக்குமாரன் அவர்கள் தொடக்கி வைத்த எழுச்சிகளும் கலைஞர் அவர்களது மௌனத்தைக் கேள்விக் குறியாக்கிய நிலையில், அரை நாள் உண்ணாவிரத நாடகத்தின் மூலம் கேள்விகளற்ற முறையில் சிங்களம் தமிழின அழிப்பை நடாத்தி முடிக்கவும், தப்பிப் பிழைத்த தமிழர்களை முள்வேலி முகாமினுள் வைத்துச் சித்திரவதை செய்யவும் முடிந்தது.

அன்றைய கருணாநிதியின் இந்தக் கொடூரமான நடவடிக்கைகள் குறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்து நிதர்சனமானது. அவர் தெருவித்ததாவது: “முதல்வர் கருணாநிதி அவர்களும், அவரது அமைச்சர்களும் மிகப் பெரும் ஊழல்களைப் புரிந்துள்ளனர். அது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். இந்த நிலையில் காங்கிரஸ் அரசின் தீர்மானத்தின்படி சிங்கள அரசால் நடாத்தப்படும் இந்த யுத்தத்தை நிறுத்தும்படி ஒரு எல்லைக்கு மேல் இவரால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. தி.மு.க. அரசு தமிழீழ மக்களுக்காக காங்கிரசை எதிர்க்க முற்பட்டால், இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர்கள் கையில் எடுப்பார்கள்."

தற்போது வெளியாகி, இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஸ்பெக்ரம் ஊழலும் இறுதி யுத்தத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டது என்பதனால், திரு. சி. மகேந்திரன் அவர்களது அன்றைய கருத்தை நிராகரிக்க முடியாது. எனவே, கலைஞர் அரசியலில் பெரும் ஊழல்களைத் தொடர்வதற்கும், அதனால் பெற்ற பெரும் செல்வத்தைக் காப்பாற்றுவதற்குமாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள – இந்திய அரசுகள் நடாத்திய பேரவல, இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்ற உண்மையும் அம்பலப்படுத்தப்படும் ஸ்பெக்ரம் ஊழலுடன் சேர்ந்து வெளிவந்து கொண்டுள்ளது.

முக்காடு போட்டும் மூட முடியாத பெரும் ஊழல் புயலில் கலைஞர் கருணாநிதி தனது குடும்பத்துடன் அம்மணமாக நிற்பதால், எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தல் அவரது குடும்ப ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றே தமிழகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கமும், ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகம் ஒரு பக்கமும், கருணாநிதி குடும்ப ஆதிக்கத்தால் பெரும் சீற்றத்திற்குள்ளாகியுள்ள தமிழக சினிமாத் துறை ஒரு பக்கமாகவும் தி.மு.க. வை எதிர்த்துப் பல்முனைத் தாக்குதல்கள் நடைபெறும் நிலையில் கருணாநிதியின் கப்பல் கரை சேர்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்றே தமிழக அரசியல் வட்டாரங்களினால் அடித்துச் சொல்லப்படுகிறது.

தான் போதும் தனது குடும்பம் போதும் என்கிற பாணியில் ஆட்சி செய்யும் கலைஞர் அவர்கள் மனிதாபிமானத்திற்கு முறனாக செயற்படுகிறார். விடுதலைப்புலிகளின் முன்னால் அரசியல் தலைவர் தமிழ்செல்வனின் படுகொலையையடுத்து அவருக்கு கவிதை உருவில் இரங்கலைத் தெரிவித்த கலைஞர், ஒன்றுமறியா விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்கள் மலேசியாவில் இருந்து சிகிச்சை பெற தமிழகம் வந்தபோது திருப்பி அனுப்பிவிட்டார்.

பார்வதி அம்மாளின் மரணத்தில் கலைஞருக்கு பங்குண்டு

தன்னிலும் விட ஆறு ஆண்டுகள் வயதில் குறைந்த பார்வதி அம்மாள் அவர்கள் 20-ஆம் தேதி இயற்கை அடைந்துவிட்டார் என்கிற செய்தியைக் கேட்டும்கூட வாய்மூடி மௌனியாக இருந்தார் கலைஞர். வாயைத் திறந்தாலோ அல்லது அறிக்கைவாயிலாக இரங்கலை வெளியிட்டாலோ தனது அரசியல் எதிரணியினர் இதை ஒரு பெரிய விடயமாக எடுத்துப் பிரச்சாரம் செய்துவிடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ கலைஞர் தொடர்ந்தும் மௌனம் காக்கிறார். தனது இனத்திற்காகவேதான் அரசியல் களம் கண்டதாக பறைசாற்றும் கலைஞர், உலகத்தமிழர்களின் ஆத்மான தலைவரான பிரபாகரனின் தாயாரின் இறப்பின் பின்னராவது இரங்கல் தெரிவிக்காமல் இருந்தது கலைஞரின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

கடைசிக் காலத்தில் பார்வதி அம்மாள் பட்டபாடு கொஞ்சநஞ்சம் அல்ல. மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி, மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார். பிறகு, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முறையாக விசா பெற்று, சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவரை விமானத்தைவிட்டு இறங்கவிடாமல், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு, பல மணி நேரம் விமானத்திலேயே வைத்திருந்தார்கள். மறுநாள் விடியும் வேளை, அவரை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர்.

மலேசியாவில் தொடர்ந்து தங்க முடியாமல், வேறு வழியின்றி இலங்கைக்கே திரும்பி அழைத்துச் செல்லப்பட்டார். மறைந்த மூத்த வழக்கறிஞர் கருப்பன் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக, இறங்கி வந்தன மத்திய, மாநில அரசுகள். ஆனாலும், பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சைக்கு வரலாம். மகள் வீட்டில் தங்கலாம். உறவினர்களைத் தவிர எந்த அரசியல் அமைப்பினரும் அவரைச் சந்திக்கக் கூடாது! என நிபந்தனை போட்டது. ஒரு கைதியைப்போல அம்மாவுக்கு மருத்துவச் சிகிச்சையா?’ என மறுத்துவிட்டனர் பிரபாகரனின் உடன்பிறந்தவர்கள்.

ஒன்றரை ஆண்டுகளாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில், மருத்துவர் மயிலேறும் பெருமாள் பார்வதி அம்மாளை கவனித்தார். படுக்கையிலேயே காலம் தள்ளும் துன்பத்தில், படுக்கைப் புண்ணும் வந்து சேர, தலையில் கட்டுப் போடப்பட்டது. புண் ஆறியும், சில வாரங்களாக அவருக்கு குழாய் மூலமே திரவ உணவு செலுத்தப்பட்டது. கடந்த வாரத்தின் கடைசியில் அவரது உடல், இறுதி ஓய்வுக்கு முந்தைய அமைதிக்கு வந்தது. கடந்த 18, 19 தேதிகளில் உறக்க நிலையிலேயே இருந்தார். 20-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு வழக்கமான பரிசோதனைக்குச் சென்றபோது, அவர் இறந்திருந்ததை மருத்துவர் மயிலேறும் பெருமாள் அறிந்தார்.

பார்வதி அம்மாளின் சொல்லொனாத் துயரில் கலைஞருக்கு அதிகமான பங்குண்டு. பல்லாண்டுகளாக திருச்சியில் வாழ்ந்துவந்த பார்வதி அம்மாள் மற்றும் அவரது கணவர் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எந்தவகையிலும் காரணமாக இருந்ததில்லை. அப்படியிருக்க சிகிச்சை பெற சென்ற மூதாட்டியை தரை இறங்கவிடாமல் திருப்பி அனுப்பிவிட்ட இந்திய அரசிற்கும் மற்றும் கலைஞர் தலைமையிலான தமிழக அரசிற்கும் முழுப்பொறுப்புண்டு. சிங்கள அரசு செய்யும் கொடுமைகள் நேரடியாக இருக்கிறது ஆனால் இந்தியா மற்றும் தமிழக அரசுகளினால் செய்யப்படும் துரோகங்கள் மறைமுகமாக இருப்பதனால் உலகத்தமிழர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.

--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்--

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Please Click here to login / register to post your comments.