கடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை

ஆக்கம்: விதுரன்
காலி துறைமுகத்துக்கு வரவிருந்த ஆயுதக் கப்பல்

வடக்கு - கிழக்கில் தரைவழி மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடல்வழி மோதல்களும் கடற்படையினர் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் மேலும் மேலும் விரிவடையும் நிலை தோன்றி வருகிறது.

கடற்படையினருக்கு இணையாக கடற்புலிகளும் பலமுற்றுள்ளனர். கடற்படை பீரங்கிப் படகுகள், அதிவேக டோரா தாக்குதல் படகுகள், `வாட்டஜெற்' போன்ற கடற்படையினரின் தாக்குதல் படகுகளுக்கு இணையாக கடற்புலிகளின் கடற்கலங்களும் விரைந்த கடற்சமருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது.

வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. 1990 களுக்குப் பின்னரே கடற்புலிகளின் பலம் இந்தக் கடற்பரப்பில் அதிகரித்தது. போர் நிறுத்த உடன்பாட்டுக்கு முன்னரான 3 ஆவது ஈழப்போர் காலத்தில் வடக்கு - கிழக்கின் கடலாதிக்கம் கடற்புலிகள் வசமேயிருந்தது. அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது.

நான்காவது ஈழப்போர் வெடிக்குமானால் அதில் கடற்புலிகளின் பங்கு மிக அதிகளவிலிருக்குமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். அதற்கேற்ப கடற்புலிகளும் தங்களைப் பெருமளவில் கட்டியெழுப்பி வருவதுடன் கடற்படையினருக்கு இப்பகுதியில் பேரச்சுறுத்தலாகவுமிருந்து வருகின்றனர்.

வடக்கு - கிழக்கில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள நிலப்பரப்புடன் அண்டிய கடற்பரப்பை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் கடற்புலிகள், தற்போது தங்கள் தாக்குதல் நடவடிக்கையை தென்பகுதிக் கடற் பரப்புக்கும் விஸ்தரித்துள்ளனர்.

கடற்பயிற்சிகள், வழிமறிப்பு சமர், தாக்குதல், முறியடிப்பு சமர், தற்பாதுகாப்பு நடவடிக்கை, ஆயுதக் கப்பல்களின் வருகையென கடற்புலிகளின் செயற்பாடுகள் காலத்துக்கு காலம் முனைப்பு பெற்றே வருகிறது. கடற்புலிகளுடனான கடற்சமரின் போது தாக்குதல்களை நடத்த விமானப்படையினர் அஞ்சுமளவுக்கு கடற்புலிகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

வடக்கு - கிழக்கில் புலிகள் பிரதேசங்கள் மீதான இராணுவ நடவடிக்கைகளை முறியடிப்பதில் கடற்புலிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். கடற்புலிகள் வளர்ச்சியடைய முன்னர் புலிகள் மீதான தாக்குதல்களில் கடற்படையினரின் பங்கு கணிசமான அளவு இருந்தது.

பாரிய படைநடவடிக்கைகளின்போது கடற்படையினரின் உதவியுடன் தரையிறங்கும் படை அணிகள் புலிகளின் பகுதிகளினுள் இலகுவாக ஊடுருவி புலிகளுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்து வந்தன. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடற்புலிகளின் வளர்ச்சி, இலங்கை கடற்படையினரை மட்டுமல்லாது தரைப் படையினரையும் பெரிதும் அச்சுறுத்துவதாயுள்ளது.

ஆனையிறவு படைத்தளம் மீதான புலிகளின் முற்றுகையை 1991 இல் படையினர் முறியடித்திருந்தனர். கட்டைக்காடு - வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக தரையிறங்கிய பல நூற்றுக்கணக்கான படையினரே, ஆனையிறவு வரை நகர்ந்து அந்தத் தளம் மீதான முற்றுகையை முறியடித்தது வரலாறு. அன்று கடற்புலிகள் இந்தளவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

அதேநேரம், சுமார் பத்து வருடங்களின் பின்னர் ஆனையிறவு படைத்தளத்தை புலிகள் கைப்பற்றுவதற்கு கடற்புலிகளின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. வடமராட்சி கிழக்கில் குடாரப்பு தரையிறக்கமே ஆனையிறவு படைத்தளத்தைப் புலிகள் வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தது.

அந்தளவுக்கு கடற்புலிகளும் மரபு வழிப் படையணியாக மாற்றம் பெற்றதன் மூலம் கடற்படையினருக்கு மட்டுமல்லாது இராணுவத்தினருக்கும் கடற்புலிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். அண்மைய நாட்களில் கடற்புலிகளின் நடவடிக்கை கடற்படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவேயுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், சுமார் 800 படையினருடன் திருகோணமலையிலிருந்து யாழ். குடாவுக்குச் சென்ற கடற்படைக் கப்பலொன்று வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் திடீர் முற்றுகைக்கிலக்கானது. இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பாக நான்கிற்கும் மேற்பட்ட அதிவேக டோரா தாக்குதல் படகுகள் சென்ற போதும் அதில் இரண்டு கடற்புலிகளால் அழிக்கப்பட்டன.

800 க்கும் மேற்பட்ட படையினருடன் சென்ற பாரிய கப்பலால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் அது விரைந்து சர்வதேசக் கடற்பரப்பினூடாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததுடன் இந்தியக் கடற்படையின் உதவியையும் கேட்டது.

கடற்படையினரின் டோரா படகுகளை அழித்த கடற்புலிகளால், 800 படையினருடன் சென்ற கப்பலையும் அங்கே தாக்கி அழித்திருக்க முடியும். ஆனாலும், கடற்புலிகளின் நோக்கம் அப்போது அதுவாயிருக்கவில்லை. அதனால், அந்தக் கப்பல் இந்தியக் கடல் எல்லைக்குள் தப்பிச் சென்று பின்னர் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் காலி கடற்படைத் தளத்தை சென்றடைந்ததும் அனைவரும் அறிந்ததே.

இதுபோன்றே ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத்தளம் மீது சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் கடும் ஆட்லறித் தாக்குதலைத் தொடுத்தபோது, யாழ்.குடாவிலிருந்து சுமார் 800 கடற்படையினருடன் திருமலைத் துறைமுகத்தினுள் நுழைந்த `ஜெற்லைனர்' கப்பல் அங்கிருந்து தப்பிச் சென்று இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்தது.

பின்னர் மறுநாளே அந்தக் கப்பல், வடக்கிற்கோ அல்லது திருமலைத் துறைமுகத்திற்கோ செல்ல முடியாது காலிதுறைமுகத்தை சென்றடைந்தது. கடற்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்தக் கப்பல் உடனடியாக திருமலைத் துறைமுகத்திலிருந்து இந்தியக் கடற்பரப்பினுள் நுழைந்தது.

இதைவிட கடந்த மாதம் முற்பகுதியில் கூட வடமராட்சி வடக்கில் பருத்தித்துறைமுனை முதல் காங்கேசன்துறை துறைமுகம் வரையான கடற்பரப்பில் இரவு 7 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை பத்துக்கும் மேற்பட்ட அதிவேக டோரா தாக்குதல் படகுகளுடன் கடற்புலிகள் பலமணி நேரம் சமரிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடற்புலிகள் வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகையில், திருகோணமலை மாவட்டம் சம்பூரிலிருந்து விலகியதன் மூலம் கடற்புலிகளின் தளம் இல்லாது போய்விட்டது. எனினும், தற்போது அவர்கள் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறிய கடற்தளமொன்றை அமைத்துள்ளதன் மூலம் கிழக்கிலும் தங்கள் கடல்வழி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கெதிராக தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்திய படையினர் முகமாலையிலிருந்து ஆனையிறவை நோக்கி நகர மேற்கொண்ட முயற்சி ஒரு சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலிகளின் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது.

ஹபரண மற்றும் காலியில் இடம்பெற்ற தாக்குதல்களானது அரசுக்கும் படைத்தரப்புக்கும் பல்வேறு விடயங்களைப் புரிய வைத்திருக்கும்.

வடக்கு - கிழக்கில் யுத்த முனைக்கு அப்பால் விமானப் படை விமானங்கள் மூலம் பொதுமக்கள் தாக்கப்படுகின்றனர். புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளுக்கப்பால் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியாக கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் தினமும் நடைபெறுகிறது.

இதையடுத்தே யுத்தமுனைக்கப்பால் படையினரையும் படை நிலைகளையும் இலக்கு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக விடுதலைப் புலிகளும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இவ்வாறான தாக்குதல்கள் தொடரப் போவதையும் அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், யுத்தமுனைக்கப்பால் படையினர் அப்பாவிப் பொதுமக்களையே இலக்கு வைக்கின்றனர். ஆனால், புலிகளோ யுத்தமுனைக்கப்பாலும் படையினரையும் படைநிலைகளையுமே இலக்கு வைக்கின்றனர். ஹபரணவில் கடற்படையினரின் இடைத் தங்கல் முகாம் மீதான தாக்குதலும் காலி கடற்படைத் தளம் மீதான தாக்குதலும் இதனை தெளிவாக்குகின்றன.

கடற்படையினரை கடலில் இலக்கு வைக்கும் அதேநேரம், அவர்களை தரையிலும் புலிகள் இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளதையே ஹபரண தாக்குதல் காட்டுகிறது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படைத் தளத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சிறப்புப் பயிற்சி பெற்ற கடற்படையின் சில அணிகள் இல்லாது போயுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கூட மீண்டும் களமுனைக்கு திரும்பும் வாய்ப்பு குறைவென்பதால் கடற்படையினருக்கு இது மிகப் பெரும் இழப்பாகவேயுள்ளது.

மிகத் துல்லியமாக உளவு பார்த்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடற்படையினரின் வாகனத் தொடரணி ஒன்றை கிளேமோர் தாக்குதல்கள் மூலம் இலக்குவைப்பதன் மூலம் குறிப்பிட்டளவு இழப்புக்களையே ஏற்படுத்த முடியுமென்பதாலும் பலத்த பாதுகாப்பும் வீதிச் சோதனையும் நடைபெறும் இப்பகுதியில் சிங்கள மக்களே வசிப்பதால் கிளேமோர் தாக்குதலை நடத்தும் வாய்ப்பும் மிகக் குறைவு.

இதனாலேயே இவ்வாறானதொரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு வாகனக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும்.

அதேநேரம், மிக அதிகளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் தாக்குதலுக்கான திட்டமும் வகுக்கப்பட்டு விரைந்து செயற்படுத்தப்பட்டமையானது படையினர் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை கடற்படைத்தளத்திலிருந்து விடுமுறையில் தென்பகுதிக்குச் செல்லும் கடற்படையினரின் வாகனத் தொடரணியும், விடுமுறை முடிந்து கடமைக்குத் திரும்பும் (கொழும்பிலிருந்து) கடற்படையினருடன் வரும் வாகனத் தொடரணியும் இந்த இடைத் தங்கல் முகாமில் தரித்து நின்று விட்டே பயணத்தைத் தொடரும். இதனால், ஓடிக்கொண்டிருக்கும் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்துவதை விட ஓரிடத்தில் நிற்கும் வாகனத் தொடரணியைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், திருமலையிலிருந்து தெற்கேயும், தெற்கிலிருந்து திருமலைக்கும் செல்லும் தொடரணிகள், ஒரே நேரத்தில் இந்த இடத்தில் எப்போது வருமென்பதும் நீண்ட உளவறிதல் மூலம் அவதானிக்கப்பட்டே பெருமளவு கடற்படையினர் ஓரிடத்தில் குழுமியிருக்கையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனாலேயே பெரும் உயிர்ச் சேதமேற்பட்டது.

சிங்களவர்களே முழுக்க முழுக்க வசிக்கும் இந்தப் பகுதியில் மிகத் துல்லியமாக இந்தளவுக்கு உளவு பார்த்து எப்படி இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டதென்பது அரசுக்கும் படைத்தரப்புக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. அத்துடன், குறிப்பிட்டளவு நேரமே இந்த இடைத்தங்கல் முகாமில் படையினர் தரித்துச் செல்வார்களென்பதால், அந்த நேரத்தில் அவ்விடத்திலிருந்து எவராவது தகவல் வழங்கியே இந்த வாகனத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் கருதப்படுகிறது.

வெடி மருந்து நிரப்பப்பட்ட இந்த வாகனம் எங்கிருந்து அங்கு வந்ததென்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தம்புள்ளைப் பகுதியிலிருந்தே அங்கு வந்ததாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும், தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து தம்புள்ளை ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கும் அதிகமென்பதாலும் இந்த வீதியில் 24 மணிநேரமும் படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாலும் அவ்வேளையில் கடற்படையினரின் வாகனத் தொடரணி அந்த வீதியில் போக்குவரத்துச் செய்வதை படையினர் அறிந்துமிருந்ததால் அவர்களது பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த வாகனம் எவ்வாறு அவ்விடத்திற்கு வந்ததென்ற மர்மம் இன்னமும் புலனாகவில்லை.

அதேநேரம் இந்த வாகனத்தின் சாரதி கரும்புலி உறுப்பினராகவே இருப்பதால் வீதிச்சோதனை நிலையத்தில் மொழிப் பிரச்சினையையும் தாண்டி அவர் எவ்வாறு வந்தாரென்ற கேள்வியும் எழுகிறது. அத்துடன், அவர் மட்டும் வெறும் கன்ரரை செலுத்தி வந்தது, ஏன் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதைவிட, கடற்படையினரின் வாகனங்கள் குழுமி நின்ற இடத்திற்குள் இந்த `கன்ரர்' எவ்வாறு திடீரெனப் புகுந்ததென்ற கேள்வியும் எழுகிறது. வீதியோரத்திலிருந்து சுமார் இருபது மீற்றர் தூரத்திலேயே இந்த பஸ்கள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. இவர்களுக்குப் பாதுகாப்பாக வந்த ஆயுதம் தாங்கிய கடற்படையினர் பலரும் அங்கு நின்றிருந்த போதும் எப்படி அவர்களையும் தாண்டி இந்த வாகனம் பஸ்கள் நின்ற இடத்துக்குள் புகுந்தது.

`கன்ரர்' சாரதி திடீரென, பிரேக் அறுந்துவிட்டது, பிரேக் அறுந்து விட்டதென, சிங்களத்தில் கத்திக்கொண்டு வந்தே பஸ்கள் மீது கன்ரரை மோதியதாக நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர். படையினர் அனைவரதும் கவனத்தை சடுதியாக திசை திருப்ப அவர் இவ்வாறு கத்தியிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

எனினும் இந்தத் தாக்குதலும் இதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதமும் படைத்தரப்பை உலுக்கியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களை இனிமேல் எவ்வாறு தடுக்கலாமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதுடன் இனிமேல் யுத்தமுனைக்கு வெளியே இவ்வாறான தாக்குதல் நடக்கப் போகின்றதென்ற அச்சத்தையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சியிலிருந்து படையினர் விடுபடுவதற்கிடையில் காலித் துறைமுகத்தினுள் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதல் அரசையும் படைத் தரப்பையும் மேலும் உலுக்கியுள்ளது. வடக்கு - கிழக்கிற்கு வெளியே தென்பகுதியில் பலத்த பாதுகாப்பு நிறைந்த கடற்படைத் தளம் மீதான தாக்குதல் உடனடியாக விடைகாண முடியாத பல கேள்விகளையும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கில் கடற்புலிகளின் முக்கிய கடற்தளமாக இருந்த சம்பூரை படையினர் கைப்பற்றிய பின்னர் கிழக்கில் கடற்புலிகளின் செயற்பாடுகள் பெருமளவில் ஒடுக்கப்பட்டு விட்டதாக படைத்தரப்பு நம்பியிருந்த வேளை, வடக்கு - கிழக்கு யுத்தமுனைக்கு வெளியே பலமைல் தொலைவில் ஐந்து கடற்புலிப்படகுகள் கடற்படைத் தளத்தினுள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து அரசு இன்னமும் விடுபடவில்லை.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை வெளிவராத உண்மையொன்றுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போர்த் தளபாடங்களுடன் இந்தத் துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வரவிருந்ததாக அயல்நாட்டு உளவுத்துறை கூறுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் கொழும்புத் துறை முகத்துக்கு பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போர்த் தளபாடங்களுடன் ஆயுதக் கப்பலொன்று வந்தது. மிகவும் இரகசியமான இந்த தகவலை ஓரிரு தினங்களுக்கு முன்னர் பெற்றுவிட்ட புலிகள் கொழும்பு துறைமுகத்தினுள் வைத்து இந்தக் கப்பலைத் தகர்க்க திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக கடற்புலிகளின் அணியொன்று, நீர்மூழ்கிக் கருவிகள் மற்றும் காந்தக் குண்டுகள் சகிதம் நீர்கொழும்பிலிருந்து கடல் வழியாக படகொன்றில் கொழும்புக்கு வந்தபோது, மிக மோசமான காலநிலையாலும் கடற்கொந்தளிப்பாலும், வத்தளைக்கு அப்பால் பமுனுகம என்ற இடத்தில் தரையிறங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட, பின்னர் அவர்கள் பொலிஸாரிடம் சிக்கும் நிலைமை ஏற்பட்டது. ஒருவர் சயனைட் அருந்தி உயிரிழக்க இருவர் பிடிபட்டனர்.

அன்றைய தினம் காலநிலை சீராக இருந்திருந்ததால் அந்த ஆயுதக் கப்பல் கொழும்புத் துறைமுகப் பகுதியில் அழிக்கப்பட்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். எனினும். இயற்கை கைகொடுத்ததால் பாரிய அழிவிலிருந்து படைத்தரப்பு தப்பியது. இதையடுத்து ஆயுதக் கப்பல்களின் வருகை மாற்றியமைக்கப்பட்டது.

அதன்பின், கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் ஆயுதக் கப்பல்களை காலித் துறைமுகத்துக்கு திசை திருப்புவதென அரசும் படைத்தரப்பும் முடிவு செய்தன. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் தமிழர்கள் மிகப் பெருமளவிலிருப்பதால் கொழும்பு துறைமுகப் பகுதிக்குள் புலிகளால் ஊடுருவுவது சுலபமானதென படைத்தரப்பு கருதியது.

இதையடுத்து கொழும்புக்கு எந்தவொரு ஆயுதக் கப்பலும் வரவில்லை. இந்த நிலையிலேயே பாகிஸ்தானிலிருந்து ஆயுதக் கப்பலொன்று காலித் துறைமுகத்துக்கு வரவிருந்த நிலையில் காலி கடற்படைத் தளத்தினுள் புகுந்து கடற்புலிகள் நடத்திய தாக்குதல் அரசையும் படைத் தரப்பையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கான ஆயுதக் கப்பல்களின் வருகை பற்றி பெரும்பாலும் இந்திய உளவுப் பிரிவே இலங்கை அரசுக்கு தகவல்களை வழங்கும். அண்மையில் கூட மட்டக்களப்பு, கல்முனை கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக் கப்பலொன்று அழிக்கப்பட்டதாக அரசும் படைத் தரப்பும் கூறின.

புலிகளின் ஆயுதக் கப்பல்கள் என்றுமே கிழக்கு கடற்பரப்புக்கு, அதுவும் இலங்கை கடற்பரப்பினுள் காலை வேளையில் வந்ததாக சரித்திரமில்லை. நள்ளிரவு வேளையில் அல்லது அதிகாலையிலேயே முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்புக்கே அவர்களது ஆயுதக் கப்பல்கள் வந்து செல்லும்.

சிலவேளை ஆயுதங்களை இறக்கிய பின், அந்தக் கப்பல் அடையாளம் காணப்பட்டு அது எங்கு செல்கிறது என்பது கண்டுபிடிக்கப்படுவதை புலிகள் விரும்பமாட்டார்கள். அதனால் தந்திரமாக அதனை அழித்துவிட முற்படுவார்கள். இந்தக் கப்பலும் அவ்வாறு அழிக்கப்பட்டிருக்கலாமென்று சில தகவல்கள் கூறின.

இதேநேரம் இலங்கைக்கு ஆயுதக் கப்பல்கள் வருவது புலிகளுக்கு எவ்வாறு தெரிகிறதென்ற கேள்வி அரசைக் குடைந்து கொண்டிருக்கிறது. இரு நாட்டு அரசுகளுக்கிடையே மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களை கூட அறிந்து கொள்ளுமளவிற்கு புலிகள் வளர்ந்துவிட்டது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

காலி கடற்படைத் தளம் மீதான தாக்குதலை கடற்படையினர் முறியடித்துவிட்டதாக அரசும் கடற்படையும் கூறலாம். ஆனால், ஆயுதக் கப்பலின் வருகைக்கு முன்பான தாக்குதலே இதுவெனக் கூறப்படுவதால், இங்கு தாக்குதல் முறியடிக்கப்பட்டதா அல்லது கடற்படைக் கப்பல்கள் அழிக்கப்பட்டனவா என்பது முக்கியமல்ல. கடற்படைத் தளத்திற்குள் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்களென்பதுதான் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம்.

துறைமுகத்தினுள்ளிருக்கும் கடற்படைத் தளத்தின் வாசலுக்குள் வந்து தற்கொலைக் தாக்குதலையும் படகுகளிலிருந்து ஆர்.பி.ஜி.தாக்குதலையும் புலிகள் நடத்தியுள்ளனர். மூன்று கடற்கரும்புலிப் படகுகள் வெடித்துச் சிதறி பலத்த சேதங்களை ஏற்படுத்திய அதேநேரம் ஏனைய இரு படகுகளில் வந்தவர்கள் ஆர்.பி.ஜீ. தாக்குதலை நடத்திவிட்டு அவற்றிலிருந்து குதித்து அந்தப் படகுகளை அழித்த பின்னர் காலி நகருக்குள் தப்பிச்

சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களைத் தேடியே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு தேடுதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு கடற்புலிகள் எங்கிருந்து வந்தார்களெனத் தெரியாது. படையினர் தடுமாறுகின்றனர். கிழக்கிலிருந்தே வந்ததாக பொதுவாகக் கூறப்பட்டாலும் கிழக்கில் அம்பாறையின் பொத்துவில் மற்றும் பாணம பகுதியிலிருந்தும் தெற்கில் காலிக்கு கீழேயுள்ள ஜால, திஸமகாராம மற்றும் தங்காலையிலிருந்து வந்த கடற்புலிப் படகுகளே தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறாயின், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட தங்களுக்கு தொடர்பேயில்லாத, பகுதிகளிலுமிருந்து புலிகள் எப்படி வந்தார்கள், அவர்களுக்கு படகுகளை வழங்கியது யார், மூன்று படகுகளில் எவ்வாறு வெடிமருந்துகள் நிரப்பப்பட்டன, தெற்கிலும் புலிகள் ஊடுருவிவிட்டார்களா என்ற கேள்விகளும் கேட்கப்படுகிறது.

இந்த நிலைமை இதனுடன் நின்றுவிடப் போவதில்லை. கடற்படையினரை கடலில் மட்டுமல்லாது தரையிலும் புலிகள் சந்திப்பதால், விமானப் படையினரும் இதுபோன்ற ஆபத்துக்களை எதிர்நோக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரு தரப்புகளுக்குமிடையே கடும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

அடுத்த சுற்று பேச்சுக்களுக்கு புலிகள் மிகவும் பலமான நிலையிலேயே செல்வதால் அடுத்து என்ன என்பதை ஜெனீவாப் பேச்சுத்தான் தீர்மானிக்கப் போகிறது.

நன்றி: தினக்குரல், Oct 22, 2006

Please Click here to login / register to post your comments.