பாகம் 3:தமிழக சட்டமன்றத் தேர்தல் - மரணித்தவர்களையும் பழிவாங்கும் சிங்கள அரசு

ஆக்கம்: அனலை நிதிஸ் ச. குமாரன்

உணர்ச்சிகளுக்கும், கோபங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மக்களாக தமிழகத்தின் மக்கள் இருப்பதனாலேயோ என்னவோ அரசியல்வாதிகளும் இவற்றை காரணமாக வைத்தே அரசியல் நடாத்துகிறார்கள். இராஜீவ் மரணச்செய்தி கேட்டவுடன் துடிதுடித்துப்போன தமிழக மக்கள், ஜெயலலிதாவின் தலைமயிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிகப்படியாக வாக்களித்ததன் காரணமாக அக்கட்சி தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியமைத்தது.

அ.தி.மு.க.வின் ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்விதமான விமோசனமும் கிடைக்கவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அ.தி.மு.க.வினர் கோடீஸ்வரரானார்கள். பெரும்பாலான தமிழக மக்கள் இருண்ட வாழ்க்கையையே அனுபவித்தார்கள். ஜெயலலிதாவும் கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்தார். தனது பூர்வீக மாநிலத்தில் திராட்சைத் தோட்டம், ஊட்டியில் வசந்த மாளிகை, பெரும் செலவில் போயஸ் கார்டன் வீடு புனரமைக்கப்பட்டது. இதைவிட பல கோடி சொத்துக்கள் சேர்க்கப்பட்டது. மக்களும் இவற்றை பொருட்படுத்தாமல் தமக்கு நாளுக்கு ஒரு சான் சோறு இருந்தால் போதும் என்கிற நிலையிலையே காலத்தை கழித்தார்கள்.

ஜெயலலிதாவும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். ஜெயலலிதாவின் ஊழலைச் சாட்டாக வைத்து பிரச்சாரம் செய்து முதல்வரானார் கருணாநிதி. ஜெயலலிதாவின் ஊழலிலும் விட அதிகமான சொத்துக்களை சேர்த்துவிட்டார் கலைஞர். சிங்கள அரசின் பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் எழுப்ப வக்கில்லாமல் இருக்கும் தமிழக மூத்த தலைவர்களில் முக்கியமானவர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞர்.

வெறும் கண்துடைப்பிற்கு உண்ணாவிரதம் இருப்பதும், பின்னர் அறிக்கை விடுவதன் மூலமாக நாட்களை கடத்தினார் கலைஞர். இவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு இறுதியான ஒரு அரசியல் தீர்வை இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவந்திருக்க முடியும். ஈழத்தமிழர்களின் பிணத்தை வைத்து தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டுமென்கிற முனைப்புடனே இருந்தார் கலைஞர். சிங்கள அரக்கர்கள் செய்த அட்டூழியங்களை மூடிமறைக்கவே கலைஞர் பல தந்திரங்களைச் செய்தார்.

சிங்களவரை தட்டிக்கேட்க நாதியற்ற தமிழகம்

தமிழர்களின் பண்பாட்டுக்கெதிராக சிங்கள அரச படையினர் செய்த அட்டூழியங்களை அறிந்தும், நாதியற்று வாய்மூடி மௌனியாக இருக்கிறது தாய்த் தமிழகம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மரண நிகழ்வுகள் மற்றும் அவரின் இறுதிக்கிரிகைகளின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தமிழர்களின் கலாச்சார மரபுகளுக்கு விழுந்த பேரடி.

பார்வதி அம்மாளின் சாம்பலை காட்டு மிராண்டித்தனமாக கிளறி அவற்றை அள்ளிக் கொண்டு கடலில் எறிந்துள்ளனர். அத்துடன் நின்றுவிடாமல் அந்தப் பகுதியில் நின்ற மூன்று நாய்களை சுட்டுக்கொன்று அதனை பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்தன. இதனை நடத்தியது சிங்கள அரச படையினர் என்பது பின்னர் ஊர்யிதப்படுத்தப்பட்டது. இப்படியான தரக்குறைவான வேலையை சிங்கள அரச படையினரைத் தவிர இந்த நாகரிக உலகில் வேறு எங்கும் காண முடியுமா? இப்படியான நிகழ்வானது இந்து-தமிழ் மக்களின் கலாச்சாரத்தின் மீது ஏவப்பட்ட போரென்றே கூறவேண்டும்.

தமிழர்களுக்கென்று ஒரு தனியரசு இருந்திருந்தால், பார்வதி அம்மாளுக்கு நிகழ்ந்த நிகழ்வு இடம்பெற்று இருக்குமா? ஐக்கிய நாடுகள் சபையில் கூட இது சம்பந்தமாக குரல் கொடுக்கப்பட்டிருக்குமே. இந்தியாவின் இறையாண்மையை மதித்து, இழிவு வாழ்க்கை நடாத்தும் தமிழக அரசுக்குக்கூட இப்படியான சம்பவம் பெரிதாக தென்பட்டிருக்காது. இவ்வரசின் கொள்கை என்பது வெறும் சுய பதவியும், மற்றும் குடும்ப அரசியல் மட்டுமே.

பார்வதி அம்மாளின் மரணச் செய்தி தெரிந்ததும் சிறிலங்கா காவல்த்துறையினரும், இராணுவத்தினரும் உடல் வைக்கப்பட்டிருந்தவிடத்தில் ஏராளமாக குவிந்தனர். அவர்களின் வருகை, அஞ்சலி செலுத்த வந்த மக்களை அச்சுறுத்தியது. தீருவில் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பார்வதி அம்மாளின் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் சிங்களப் படையின் அட்டகாசம் தொடர்ந்தது. மருத்துவமனையின் முன்பு சீருடையில் இருந்தவர்கள், தீருவில் மைதானத்தில் சாதாரண உடையில் சுற்றித் திரிந்தார்கள். அடக்க முடியாத மனவெழுச்சியில் சிக்கிய மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதபடி அதிக கெடுபிடிகள்.

பிரபாகரனைப் பெற்றெடுத்த காரணத்தால், சொந்த மக்களின் அஞ்சலியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதபடி இனவெறிக் கொடுமைக்கு ஆளானது பார்வதி அம்மாளின் சடலமும்! இவர் சிறிலங்காவின் அரசியலில் ஒரு போதும் ஈடுபட்டதில்லை. மகனை ஈன்றெடுத்து ஈழ விடுதலைக்காகவே தத்துக்கொடுத்த அந்தத் தாய்க்கு சிங்கள தேசம் கொடுத்த பரிசு வெட்கக்கேடானது.

கவிஞர் வாலியின் கவிதை சற்று ஆறுதலே!

அரசியல்வாதிகள் தான் தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கும் சிங்கள அரக்கர்களை எதிர்த்து குரல்கொடுக்க வக்கில்லாமல் இருப்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கே சாபக்கேடே. பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை ஓரளவேனும் ஆறுதலைத் தருகிறது. கவிஞர் வாலியின் பேச்சும் அதன் பின்னர் வாசித்த கவிதையும் பின்வருமாறு:

சொல்லைக் கல்லாக்கி...கவிதையைக் கவண் ஆக்கி...வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி...கடந்த வாரம் கவிஞர் வாலி வாசித்த கவிதை...இல்லை...வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று...அது இது...

“ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?


மாமனிதனின் மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது உன் -
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று...
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது
அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது
காடையர்க்கு கிலியானது!
'தம்பி! தம்பி!” என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த நம்பி;
யாழ் வாழ் - இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி;
அம்மா! அத்தகு - நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன் கும்பி! சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை... ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி; அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை - செப்பாக்கி; அவர்கள் வாழ்வை வெட்டவெளியினில் நிறுத்தி வெப்பாக்கி;
மான உணர்வுகளை மப்பாக்கி; தரும நெறிகளைத் தப்பாக்கி -
வைத்த காடையரை வீழ்த்த... தாயே உன் தனயன் தானே -
தந்தான் துப்பாக்கி! 'இருக்கிறானா? இல்லையா?” எனும் அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!
அம்மா! இந்த அவல நிலையில் - நீ... சேயைப் பிரிந்த தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி -
வந்தாய் சென்னை; அது - வரவேற்கவில்லை உன்னை!
வந்த வழிபார்த்தே - விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது!
இனி அழுது என்ன? தொழுது என்ன? கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன? பார்வதித்தாயே! - இன்றுனைப் புசித்துவிட்டது தீயே!
நீ - நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம்தராத - எங்கள் தமிழ்மண் - நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!”

-- இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் தொடரும் --

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Please Click here to login / register to post your comments.