நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான தாக்குதலுக்கு வன்மையான கண்டனம்! சம்பவத்தை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்துக!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் அவரது உதவியாளர்களும் பயணம் செய்த வாகனம் மீது அனுராதபுரம,; நொச்சியாகம பகுதியில் வைத்து கைக்குண்டுகள் வீசியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் 07.03.2011 திங்கட்கிழமையன்று நடாத்தப்பட்ட தாக்குதலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

இத் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அவரது உதவியாளர்களும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அறிய வருகிறது. தாக்குதல் நடாத்தப்பட்ட இடம், விதம் போன்றவை இவர்களைக் கொலை செய்யும் நோக்குடனேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படுத்துகிறது. தாக்குதல் நடாத்தியவர்களின் இலக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனாகவே இருந்திருக்கிறது.

சிறிலங்காவின் இராணுவ அடக்குமுறைக்குள் சகல அரசியல் வெளியும் முற்றாக மறுக்கப்பட்ட மக்களாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் பேரவலத்தை இச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது. சிறிலங்கா அரசினால் இயக்கப்படும் இராணுவப் புலனாய்வுக்குழுவினரே இத் தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும். சிறிலங்கா அரசின் உயர்பீடத்தின் திட்டத்தின் அடிப்படையிலேயே தாக்குதல் நடாத்தியோர் இயங்கியிருக்க வேண்டும். இத்தகைய சந்தேகங்கள் எழுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.

சிறிலங்கா அரசு கடந்த காலங்களில் இராணுவப்புலனாய்வு அமைப்பினை நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பான முறையில் எவ்வாறு இயக்கி வந்துள்ளது என்பதனை அறிவோர் எவரும் இச் சம்பவத்துக்கு சிறிலங்கா அரசினைத் தவிர வேறு எவரும் காரணமாக இருக்க முடியாது என்பதனை இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். அண்மையில் விக்கிலீக்ஸ் கசிவின் ஊடாக வெளிப்பட்ட அமெரிக்க இராஜாங்க அமைச்சின் ஆவணங்களும் சிறிலங்கா அரசின் உயர்மட்ட அனுசரணையுடன் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இராணுவப் புலனாய்வாளர்கள் இயங்கி வந்தமையினை அம்பலப்படுத்தியிருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.

இத்தகைய சம்பவங்கள் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கி விடலாம் என்று சிறிலங்கா அரசு தொடர்ந்தும் எண்ணுகிறது என்பதனைத்தான் நாம் இச் சம்பவத்தின் ஊடாக உணர முடிகிறது. அண்மையில் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அன்னையின் அஸ்தி சிதைக்கப்பட்ட சம்பவத்தினத் தொடர்ந்து இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருப்பது சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களம் தொடுத்த வந்த போரும், வன்னிப் பெருநிலப் போரின் முள்ளி வாய்க்கால் பேரவலமும் ஈழத் தமிழர் தேசத்திடம் மூட்டியுள்ள கோபக்கனலை இத்தகைய சம்பவங்கள் மேலும் கொழுந்து விட்டு எரிய வைக்கக் கூடியவை.

சிறிலங்கா அரசு மீதான யுத்தக் குற்றம் மற்றும் தமிழர் மீதான இனப்படுகொலை போன்றவை குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற குரல்கள் மேலெழுந்துவரும் ஒரு சூழலில்தான் மக்கள் பிரதிநிதி ஒருவர் மீதான கொலைமுயற்சியும் நடைபெற்றிருக்கிறது.

சிறிலங்கா அரசே இக் குற்றச் செயலுக்குப் பின்னணியில் இருந்திருப்பதாக நாம் கருதுவதால் இச் சம்பவமும் அனைத்துலக விசாரணைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகத்தினைக் கோருகிறோம். இவண்

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Please Click here to login / register to post your comments.