ஜெனிவாவில் மையம் கொண்டுள்ள புயல்

ஆக்கம்: கே.சஞ்சயன்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வருடாந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடக்கப் போகிறது.

இந்தக் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகியது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்தக் கூட்டத்தொடர் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு 'கண்டமாகவே' அமையலாம் என்ற எதிர்பார்ப்பு சில மாதங்களுக்கு முன்னரே உருவாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை உருவாக்கியதும் அரசாங்கம் தான்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால்- இலங்கை மீது மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளும்இ போர்க்குற்றச்சாட்டுகளும் திட்டமிட்டு சுமத்தப்படுவதாக அரசாங்கமே கூறியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, அமைச்சர்கள் எல்லோருமே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தை முன்வைத்து இலங்கைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறி வந்தனர்.

அரச எதிர்ப்பாளர்கள், புலிகள் ஆதரவு சக்திகள், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சில மேற்குலக நாடுகள் இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் புலம்பி வந்தது. இதன்காரணமாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் குறித்த பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.

ஆனால் இந்தக் கூட்டத்தொடரின் இப்போதைய போக்கு இலங்கைக்கு அவ்வளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் போலத் தெரியவில்லை. இதனால் இந்த விவகாரம் இப்போது பெரும்பாலும் சப்பென்று ஆகிவிட்டது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை பல நெருக்கடிகளை சந்திக்கும் நிலையிலேயே இருந்தது. ஆனால் அந்த நெருக்கடிகள் இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது போலத் தெரிகிறது.

அரசாங்கத் தரப்போ இலங்கை மீதான அழுத்தங்கள் தீர்ந்து விட்டது- இனிமேல் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் ஜெனிவா கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

இது எப்படிச் சாத்தியமானது என்பது முக்கியமாக விடை தேடப்பட வேண்டியதொரு கேள்வியாகும்.

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆபத்து முற்றாக நீங்கி விட்டதாகக் கருத முடியாது.  ஆனாலும் பெரும்பாலும் அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் நெருடிக்கடி ஏற்படாது என்றே கருதப்படுகிறது.

ஜெனிவா கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வருவது பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. நிகழ்ச்சி நிரல் ஒழுங்கின் படியே ஐ.நாவின் கூட்டத்தொடர்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால் இலங்கை அரசாங்கம் அதிஉச்ச நம்பிக்கையோடு இருக்கிறது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கையில் இருந்து சென்ற குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கூட இலங்கைக்கு ஆபத்தில்லை என்றே கூறியுள்ளார்.

ஏற்கனவே 2009ம் ஆண்டு மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஒன்றை சுவீடன் கொண்டு வந்தது.

ஆனால் அதை இலங்கை அரசாங்கம் முறியடித்து விட்டது. அதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அப்போது தோள் கொடுத்தன.

இப்போதும் இலங்கை அரசு ஆபத்து வரப் போகிறது என்று உணர்ந்ததும் முன்னர் மனிதஉரிமை அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்கவை அழைத்து அதை முறியடிப்பதற்கான பொறுப்பை ஒப்படைத்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அமைச்சர் சமரசிங்க, ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே அங்கு போய் இறங்கினார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்தார்.   50 இற்கும் அதிகமான நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து இலங்கை நிலைமைகள் தொடர்பாகவும், மனிதஉரிமைகள் தொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்தார். இவரது இந்த நகர்வு ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது என்றே கருதப்படுகிறது.

இதுவரை எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதையும் கொண்டு வரும் முயற்சியில் இறங்கவில்லை. எனவே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்று விட்டதாகவே அரசாங்கம் கருதுகிறது. ஆனாலும் இன்னமும் இரண்டு வாரங்களுக்கு அரசாங்கம் பல்லைக் கடித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.

இதைவிட ஜெனிவாவில் அரசாங்கம் நெருக்கடிகளில் அதிகம் சிக்கி கொள்ளாததற்கு வேறொரு காரணமும் உள்ளது. ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்படுவது தாமதமாகியுள்ளதே அது.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் பணிக்காலம் கடந்த மாதம் 28ம் திகதியுடன் முடிந்து போனது. அதற்குள் அந்தக் குழுவின் அறிக்கை ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

பின்னர் கடந்த 4ம் திகதி இந்த அறிக்கை ஐ.நா பொதுச்செயலரிடமும், அதன் பிரதி ஒன்று ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளரிடமும் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நாளிலும் அறிக்கை  கையளிக்கப்படவில்லை. அதற்கான காரணம் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த 23ம் திகதி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சட்டமா அதிபர், வெளிவிவகாரச் செயலர் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை அரசின் உயர்மட்டக்குழு சந்தித்தது.

இதன் பின்னர் இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஐ.நா நிபுணர்கள் குழுவையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் மிகவும் இரகசியமாகவே பேணப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் அமைத்த நிபுணர்கள் குழுவை ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது. நிபுணர்கள் குழுவுடன் எந்தத் தொடர்பையும் அரசாங்கம் வைத்துக் கொள்ளாது என்றும்இ அவர்கள் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க அனுமதி வழங்கப்படாது என்றும் கூறியது. பின்னர் இராஜதந்திர கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

அதனை அடுத்து இலங்கைக்கு வந்து நிபுணர்கள் குழு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளிக்கலாம்- வேறெவரையும் சந்திக்கவோ விசாரிக்கவோ அனுமதி கிடையாது என்று கூறியது அரசாங்கம்.

ஆனால் நிபுணர்கள் குழு இலங்கை வரவில்லை. எத்தனையோ கலந்துரையாடல்களை ஐ.நா பொதுச்செயலர் நடத்திய போதும் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

நிபுணர்கள் குழுவை இலங்கை அரசின் எந்தவொரு பிரதிநிதியும் சந்திக்கமாட்டார்கள் என்று கூறப்பட்ட போதும்இ நியுயோர்க் சென்று அதைச் சந்தித்து விட்டு வந்துள்ளது அரசாங்கப் பிரதிநிதிகள் குழு.

இவர்கள் என்ன பேசினார்கள் என்பது இரகசியமாகவே உள்ளது.

ஆனால் இந்தப் பேச்சுக்களின் விளைவாகவே, நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாவது தாமதமடைந்துள்ளதா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

அதேவேளைஇ இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் மற்றும் நிபுணர்கள் குழுவை கடந்த 23ம் திகதி சந்தித்த போதுஇ இன்னொரு முக்கியமான பிரமுகரும் நியுயோர்க்கில் இருந்துள்ளார்.

ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி பாலிஹகாரவே அவர். அவர் முன்னர் வகித்த பாத்திரத்தை விட இப்போதைய பாத்திரமே முக்கியமானது. நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என்பதே அது.

இவர் எதற்காக நியுயோர்க் சென்றார்- அங்கு யார் யாரைச் சந்தித்தார்- நிபுணர்கள் குழுவுடன் பேசினாரா என்பதெல்லாம் இப்போது கேள்விகளாக உள்ளன.

அதேவேளைஇ ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டால் அது சர்ச்சையாக மாறுவது நிச்சயம். அது இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம்.

இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை தாமதப்படுத்தும் ஏதாவது நகர்வை மேற்கொண்டதா என்று தெரியவில்லை.

இந்த அறிக்கை தாமதமாவதற்கு யார் காரணமாக இருந்தாலும் அது இலங்கை அரசுக்கு இப்போதைக்குச் சாதகமானதொரு நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.

அதேவேளை இந்த அறிக்கை வெளியானாலும் கூட இதுபற்றிய விவாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் நடத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரினால் இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்படவில்லை என்பதால்இ இதுபற்றி விவாதிக்கும் வாய்ப்புகள் இல்லை என்றும் கருதப்படுகிறது.

ஆனால் இந்த அறிக்கையில் சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தால் அவை ஜெனிவா கூட்டத்தொடரில் நிச்சயம் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

எனவே ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாவது தாமதமாகியுள்ளதால்இ இப்போதைக்கு அரசாங்கம் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். ஆனாலும் இலங்கைக்கு எதிரான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அடங்கிய முறைப்பாடுகளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சில மனிதஉரிமை அமைப்புகள் கையளித்துள்ளன.

இதுபற்றி மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் விவாதம் நடத்தப்படுமா என்று தெரியவில்லை.

அதேவேளைஇ இந்த முறைப்பாடுகளை இந்தக் கூட்டத்தொடர் எடுத்த எடுப்பிலேயே புறக்கணித்து விடவும் முடியாது. அப்படியான நிலையில் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாலும் ஜெனிவா கூட்டத்தொடர் விவாதங்களை நடத்தக் கூடும்.

எனவே ஜெனிவாவில் மையம் கொண்டுள்ள இலங்கை அரசுக்கு எதிரான புயல் இன்னமும் கரையைக் கடக்கவில்லை என்றே கருத வேண்டும். அது லா-நினா போன்று நீடித்து நின்று இலங்கை அரசுக்குப் பாதிப்புகளைக் கொடுக்குமா- அல்லது விரைவிலேயே இந்தப் புயல் கரை கடந்து போய் விடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Please Click here to login / register to post your comments.