தமிழரின் கனவை குழிதோண்டிப் புதைக்க முயலும் அரசு...!

ததமிழ் மக்கள் இலங்கை அரசிடம் என்ன எதிர் பார்க்கின்றார்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளாத இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கேட்டதை கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.இலங்கை மக்கள் சுதந்திரமான விடுதலையை அனுபவிக்கவேண்டும் அப்பொழுதுதான் அந்த நாட்டுக்கு ஜனநாயகம் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியும்.

முள்ளி வாய்க்கால் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?
இலங்கையில் தமிழர் தரப்பு உரிமைகளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அரசு மண்ணின் மீது தாவரத்தை நடுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை இதுவரையில் மறக்க முடி யாமல் எத்தனை குடும்பங்கள் அவதிப்படுகிறார்கள். தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு எத்தனை தமிழ் இளைஞர்,யுவதிகள் தமது எதிர்கால வாழ்வினையே கேள்விக்குறியாக கழிக்கின்றனர். இந்த அரசு நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டு இருந்தால் தமிழ் இனத்துக்கு மட்டும் துன்பத்தின் மேல் துன்பத்தினை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்து இருக்காது. அரசு பெரும்பான்மை இனத்தின் மீதே அக்கறை கொண்டு இருக்கிறதே ஒழிய சிறுபான்மை இனத்தினைப்பற்றி எந்தவிதமான அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகள் தனிநாடு கேட்டு போராடிய காலப் பகுதியில் அதாவது அரசு விடுதலைப்புலிகளுட னான சமாதான காலப்பகுதியில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் என்பன தெட்டத் தெளி வாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று எதனையுமே இந்த அரசுடன் பேச முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எல்லாமே தெரியும் சொல்ஹெய்முக்கு
சமாதானத்தின் தூதுவனாக நின்று வழி நடத்திச் சென்ற நோர்வேயின் பிரதிநிதி எரிக்சொல் ஹெய்முக்கு நன்கு தெரியும் என்ன பேசப்பட்டது; எதனை அரசு வழங்க முற்பட்டது என்பது எல்லாம் நன்கு தெரியும். அதனால் தான் இன்றும் தமிழ் மக்களின் பலமாக இருக்கும் புலம்பெயர்ந்த மக்களுடன் இலங்கை அரசு பேச்சு ஒன்றினை மேற்கொள்ள, தான் தூதுவனாக போகமுடியும் என்று தெரிவித்துள்ளார். தமிழர்களுடைய பிரச்சினைகள் பற்றிய தெளிவான விளக்கம் நோர்வே அரசுக்கு நன்கு தெரியும்.

அதனால்தான் விடுதலைப்புலிகள் தோல்வி கண்ட நிலையில் இன்றும் தனது சேவையை வழங்கவுள்ளது.எதனை நாங்கள் கொடுத்தாலும் தமிழர்கள் வாய் மூடி வாங்கவேண்டுமேயொழிய மேல் பேச்சு பேசக் கூடாது என்று சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பகாலம் தொடக்கம் இன்றைய காலம் வரை கூறிக்கொண்டு தான் இருக்கின்றார்களே தவிர தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை.

தனிநாடான சூடானின் விருப்பம் என்ன?
தென் சூடான் பலதசாப்தகாலம் போராடி விடுதலையைப் பெற்றுள்ளது. அந்த நாட்டு அரசு அங்கே நடத்திய வாக்கெடுப்பில் 90 வீதத்தினை எட்டியதில் தனிநாடாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதேபோல் ஈழத்திலும் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துமாறு சூடான் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு அவசியம் இல்லை என இலங்கை அரசு மறுப்பது ஏன்? அவ்வாறு வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தினால் இலங்கை இரண்டாக உடையும் என்பது உண்மை. ஈழத் தமிழர்களின் போராட்டத்தினை நசுக்கிய இலங்கை அரசு, ஈழத்தமிழர்களின் அரசியலை நசுக்க பல வழிகளில் திட்டங்களை நாசுக்காக மேற்கொண்டு வருகிறது. அத்துடன் சர்வதேசத்தில் பல காய்நகர்த்தல்களை இரகசியமாக மேற்கொண்டு வருகிறது.

"இலங்கை வளங்கள் பிற நாடுகளுக்கு இலங்கையில் உள்ள வளங்களை ஒப்பந்த அடிப்படையில் பல நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இதற்குப் பின்னால் பல செயற்பாடுகள் இருப்பது யாருக்கும் தெரியவில்லை. அதாவது மீண்டு மொருமுறை தமிழர்கள் வீறுகொண்டு எழுந்தால் முன்னையதிலும் பார்க்க பிரச்சினை பெரிதாகிவிடும் என்பது அரசுக்குத் தெரியும். அதனால் தான் அரசு சகல நாடுகளையும் தனது காலடியில் கட்டி வைத்திருக்கிறது.

இந்தியா போன்ற வல்லரசுகளும் இலங்கையின் வலையில் வீழ்ந்து ஈழத்தமிழர்களுக்கு இரண்டாவது தடவையாக பெரும் துரோகத்தினை இழைக்கிறது. பலநாட்டுப் படைகளின் வலிமையுடன் முள்ளிவாய்க்கால் மூடியது மட்டு மல்லாது தொடர்ந்து தமிழர்களினுடைய அரசியலில் இதே பலத்தினைக் கொண்டு மண்போடப் பார்க்கிறது. அதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு முழுமையாக இறங்கியுள்ளது. இதற்கிடையில் தமிழர் தரப்புக்கும் அரசுக்குமிடையேயான பேச்சு வார்த்தை இல்லாமலே போய்விட்டது.

இன்னலுக்கு மத்தியில் தமிழ் மக்கள்
தமிழர்கள் மீது இந்த அரசு அக்கறை கொண்டிருந்தால், தமிழர் தரப்புடன் அதாவது தமிழர் தரப்பு சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு ஒன்றினை மேற்கொண்டிருக்கும். இலங்கையில் வாழ்கின்ற மக்களில் தமிழ் மக்கள்தான் போர் முடிவடைந்த சூழலிலும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். யாழ். குடாநாட்டில் இடம்பெறுகின்ற எந்த நிகழ்வாக இருந்தாலும் இராணுவத் தளபதியை அழைக்க வேண்டியது முக்கியமான விடயமாக மாறிவிட்டது. இலங்கை அரசின் அடக்கு முறைக்குள் தமிழ் சமூகம் பல தசாப்தகாலம் இருந்தது. மீண்டும் அடக்கு முறைக்குள் தமிழ் மக்களை அரசு தள்ளி விட்டிருக்கிறது.

செயலளவில் எதுவுமில்லை
இலங்கையில் பெரும்பான்மை, சிறுபான்மை என்றொரு இனம் இல்லை என்றும் எல்லோருக்கும் சமமான உரிமை இந்த நாட்டில் உள்ளது என்றும் ஜனாதிபதி சொல்லி இருக்கிறார். பேச்சளவில் நடைமுறையுள்ளதாகவும் செயலளவில் எதுவித செயற்பாடும் இல்லை என்பதும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிக்கிரியைகளுக்காகச் சென்றவர்களுக்கு சந்தித்த இடர்கள் பலப்பல. பல்கலைக்கழக மாணவர்களை தடுத்தமை தொடக்கம், அந்த வழியூடே பயணம் செய்த பயணிகள் போக்குவரத்து பேருந்தினை இடைமறித்து சோதனை செய்தது வரையுள்ள பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது இந்த நாட்டில் தமிழர்கள் ஒரு நிகழ்வில் கூட ஒன்றாகச் சேரக்கூடாது என்பது தான் முக்கிய காரணமாக அமைகின்றது.

அதாவது தமிழ் மக்கள் விழிப்படையக் கூடிய நிகழ்வொன்றில் கலந்துகொள்ள அனுமதி வழங்காமல் தமிழ் மக்கள் சீரழிந்து போகும் கேளிக்கை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கி தமிழ் சமூகத்தை மூளைச்சலவை செய்யப் பார்க்கிறது இந்த அரசு. பயங்கரவாதப்பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்த இந்த அரசு விடுதலைப்புலி கள் இல்லாத பட்சத்தில் தமிழ் மக்களை எந்தப் பட்டியலில் சேர்த்து தனது வேட்டையினை எப்பொழுது ஆரம்பிக்கவுள்ளது என்பது தான் தெரியாமல் உள்ளது. மாற்றுக் குழுக்களின் கைகளில் துப்பாக்கியை விட்டிருக்கிறது அரசு.

மாற்றுக் குழுக்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகளைக்களைவதற்கு பின்னடிப்பது ஏன் என்று தெரியாமல் மக்கள் பய பீதியுடன்தான் வாழ்கின்றார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் அடிக்கடி இவ்விடயம் சம்பந்தமாக பேசியும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் கே.பத்மநாதன் ஆவணி மாதம் 2009 இல் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டார்.

நாடு கடந்த தமிழீழம்
இதனைத் தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் பல தரப்பட்ட செயற்பாட்டாளர்களும் அமைப்பின் தலைமைப் பொறுப்பினைத் தமதாக்குவதற்கு முண்டியடித்தனர். இந்தச் செயற்பாட்டாளர்களின் மத்தியிலிருந்த கடும்போட்டி. எல்லாவற்றையும் தாண்டி அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு செயற்படும் சட்டத்தரணி வி.உருத்திரகுமார் வெற்றியடைந்துவிட்டார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒன்றை உருவாக்கியதன் ஊடாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் தலைவன் என்ற நிலையினை உருத்திரா பெற்றுவிட்டார்.

வன்னியின் இறுதிக்கட்டப்போரினை நிறுத்தும் வகையில் உருத்திரகுமாருடன் இணைந்து கே.பி. கடுமையான முயற்சிகனை முன்னர் மேற்கொண்டிருந்தார் என்பது இரகசியமான தொன்றல்ல. கே.பி. இலங்கை அரசினால் கைது செய்யப்பட்ட பின்னர் புலம்பெயர் நாடுகளில் உருத்திராவின் கை ஓங்கியது. 2009 மே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக உருத்திரா வலம் வருகிறார்.

சூடானில் ஐ.நா மேற்கொண்டதைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் இடம்பெறுவதற்கான புறச்சூழலினை நாடு கடந்த அரசாங்கத்தினது செயற்பாடுகள் ஏற்படுத்தும் என உருத்திரகுமார் சர்வதேச பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கின்றார். தன்னுடைய முன்னாள் கூட்டாளிகள் சிலரின் உதவியுடனேயே தென் சூடானின் சூடானிய மக்கள் விடுதலை அமைப்பு உயர் மட்டத்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய உருத்திரகுமார் தனக்குச் சாதகமான நிலைமையினை மாற்றியதாகக் கூறப்படுகிறது.

எது எவ்வாறிருப்பினும் விடுதலைப்புலிகளுக்கு உருத்திரா வழங்கிய பங்களிப்பு கே.பி. வழங்கிய உதவிகளை விட குறைவானதே. ஆனாலும் விடுதலைப் புலிகளது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபினை முழுமையாக்குவதில் உருத்திரா வகித்த முழுமையான பங்கு அனைவரதும் பாராட்டைப் பெற்றது. புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பல குழுக்கள் மற்றும் பிரிவுகளுக்கு மத்தியில் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றுவருவதன் பின்னணியிலேயே உண்மையில் எரிக்சொல்ஹொய்ம் வெளியிட்ட கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தரப்புகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுப்பங்காளராக இருப்பதற்குத் தான் தயார் என எரிக் குறிப்பிட்டார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது அனைத்துலக சட்ட ஆலோசகராகவும் அந்த அமைப்பினது வெளிநாட்டு இராஜதந்திர முனைப்புக்களுக்குப் பொறுப்பானவராகவும் செயற்பட்டுவந்த உருத்திரகுமார் சிறந்ததொரு தந்திரத்தினைக் கைக்கொண்டார்.

கிழக்குத் திமோருடன் ஒப்பீடு
கொசோவா மற்றும் கிழக்குத் திமோரின் நிலையும் இலங்கையினது நிலைமையும் ஒன்றென உருத்திரகுமார் வாதிட்டார். தமிழீழம் என்ற இலக்கினை அடைய வேண்டுமெனில் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதைக் குறிப்புணர்த்தும் வகையிலேயே குறித்த இரு நாடுகளுடன் அவர் இலங்கையினை ஒப்பிட்டிருக்கிறார். ராஜீவ் காந்தியினது படுகொலை வழக்கில் வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்துச் செயற்பட்டமை மற்றும் கனடாவில் இடம்பெற்ற சுரேஸ் மாணிக்கவாசகத்தினது வழக்கிற்கு உதவியமை. அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் அமைப்பு வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டமையினை எதிர்த்து சட்ட நடவடிக்கை யினை முன்னெடுத்தமை உள்ளிட்ட பெறுமதிமிக்க பங்களிப்புகளை உருத்திரகுமார் விடுதலைப்புலிகளுக்காகச் செய்திருந்தார்.

இதுதான் விடுதலைப்புலிகள் சார்பில் தலைவர் பிரபாகரனை அதிகம் கவர்ந்தது.ஐ.நா. மற்றும் அமெரிக்காவினது அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணுவதுதான் உருத்திராவின் சொத்து எனலாம். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகளுடன் உரையாடும் போது, தான் சந்தித்த அல்லது தொடர்பு வைத்திருக்கும் ஐ.நாவினதும் அமெரிக்காவினதும் பெயர்களை உருத்திரா குறிப்பிடத் தவறவில்லையாம். விடுதலைப்புலிகள் போராட்டத்தில் தோல்வி கண்ட நிலையில், புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் எந்தளவில் தமிழர்களுக்கான ஒரு வெற்றியை தரப்போவது என்பது போகப் போகத் தான் தெரியும். விடுதலைப்புலிகளின் அடுத்த கட்ட ஈழப்போர் இலங்கையின் வடக்கு கடற் பிராந்தியத்தை மையமாக வைத்தே ஆரம்பிக் கப்படும் என்று லக்பிம ஆங்கில செய்திப் பத்திரி கையின் வாராந்த அலசல் தெரிவித்ததுடன் இறு திக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்றுள்ள பல கனிஷ்ட நிலைத்தளபதிகளும், விடுதலைப்புலி உறுப்பினர்களும் தற்போது கனடா மற்றும் இந் தியாவின் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு மீளிணைகின்றனர் என்றும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆயுதப்பயிற்சி கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக் கும் தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். அதன் மூலமாக கடற்புலி கள் மற்றும் வான்புலி அணிகளும் தற்போது தமிழ் நாட்டில் நிலை கொண்டுள்ளவர்களும் மேலதிக பயிற்சியைப் பெற்று வருகின்றதாகவும் அவ்வாறான நிலையில் அடுத்த கட்ட ஈழப்போர் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்தப் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கிறது.

Please Click here to login / register to post your comments.