வடக்கு கிழக்கின் இணைப்பு நீக்கம்; செயலும் அதன் விளைவுகளும் பற்றிய ஓர் நோக்கு

ஆக்கம்: பீஷ்மர்
தென்கிழக்கு முஸ்லிம் கோரிக்கையின் எதிர்காலம் யாது?

* பிரிக்கப்படும் வடக்கு கிழக்கில் நிர்வாக இயந்திரங்கள் யாவை?

வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பானது இலங்கையின் சட்ட நிலைப்படி செல்லாது என்பதனை ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் குழு தீர்மானித்துள்ளது. இலங்கையின் நீதியமைப்பில் ஆட்சியாப்பு விடயங்கள் பற்றி தீர்மானிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட நீதிமன்று இல்லையெனினும், நமது உச்ச நீதிமன்றம் இந்நாட்டின் மிக உயர் நீதிமன்றம் என்ற வகையில் இதுபற்றிய வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பது அதன் இயல்பான கடமையே என்று கூறப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புக் குறிப்பில் அது இவ்விடயத்தினை இலங்கையின் சட்ட அமைப்பு முறைமைக்குள் நின்று பார்த்துள்ளது என்பது தெளிவாகின்றது.

18 வருட காலமாக அரசியல் யதார்த்தமாக விளங்கிவந்த ஒரு அரசியல் நிர்வாக நடைமுறையானது இப்பொழுது சட்டமுறைமை ஒழுங்குகள் வராதது என்பதற்காக நீக்கப்படுகின்ற பொழுது ஒரு முக்கிய உண்மையொன்று புலனாகின்றது. அதாவது இலங்கையினது ஒட்டுமொத்தமான அமைவு முறைமையானது இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் அல்லாத ஒரு பகுதியினருக்கு எவ்வித விசேட இடத்தையும் கொடுக்க இணங்காது என்பதேயாகும். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி எதுவும் நோக்காமல் இது ஒரு சட்டப் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டிருப்பது மிக முக்கியமானதொன்றாகும். இந்த விடயம் பற்றி நோக்கும் பொழுது ஒரு முக்கியமான அவதானிப்பு அவசியமாகின்றது.

இலங்கையின் அரசியல் நிலைப்பட்ட குறிப்பாக தமிழர் நிலைப்பட்ட அரசியல் போக்குகளை அரசியல் ரீதியாக விரும்பாதவர்கள்- எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தினை நாடுகின்றனர் என்பது கடற்கோள் நிவாரண உதவி நிறுத்துகையின் பொழுது தெரியவந்ததாகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அரசாங்கம் கடல்கோளுக்கான நிவாரண உதவிகளை வழங்கக்கூடாது என்ற ஜே.வி.பி.யின் எதிர்ப்புக் காரணமாக அது நீதிமன்றம் மூலமாக இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இது வரையில் அந்த வழக்கு வரன்முறையான விசாரணைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை எனலாம்.

எனவே தான், மேலே சொன்ன கூற்று இலங்கையின் ஒட்டுமொத்த அமைப்பு சிங்களவர் அல்லாத தேசிய இனங்களுக்கு `இடங்கள் வழங்குவதற்கு இடங்கொடாது' இந்த நீதிமன்ற தீர்ப்பினையடுத்து எடுக்கப்பட வேண்டிய நிர்வாக நடவடிக்கைகள் பற்றி இன்னும் எதுவும் தெளிவாகவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இது பற்றி பாராளுமன்றத்தில் கவனத்தை ஈர்க்க முயன்ற நடவடிக்கைகளும் நவம்பர் 7 ஆம் திகதிவரை பின் போடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு யார், எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்வாக நடைமுறை உண்மையில் நமக்குத் தெரியவில்லை. ஆனால், அது நிச்சயமாக நடைபெற்றேயாக வேண்டும்.

ஜனாதிபதி இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்பதும் தெரியவில்லை. ஏனெனில் அரசின் பிரதான உத்தியோகத்தர் என்கின்ற வகையில் இவரிடத்தேயே நீதி, நிர்வாக கடமைகள் உள்ளன. ஆயினும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு மீண்டும் ஒரு மேல்முறையீடு உண்டா? அதாவது இத்தீர்ப்பினை மீளாய்வு செய்ய முடியுமா என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் இந்த இணைப்பு நீக்கத்தின் விளைவுகள் பற்றி சிந்திப்பது தவறாகாது.

அதன் விளைவுகள் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பின்புலம் பற்றி நினைவு கூருவது பொருத்தமானதே.

1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற தமிழரசுக் கட்சி இலங்கை அரசியலில் முதன்முறையாக இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் இருப்புக்கான ஒரு புவியியல் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைக்கின்ற வகையில் `தமிழ் பேசும் மக்கள்' என்ற ஓர் அரசியல் எண்ணக்கருவினை எடுத்துக்கூறி அத்தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமென வடக்கு, கிழக்கை இனங்காட்டியது. அதாவது தமிழ் மொழிக்கான ஒரு உத்தியோக அந்தஸ்து இலங்கையின் வேறெந்த பாகங்களிலும் கொடுக்கப்பட முடியாவிட்டாலும் அவர்கள் தமது பாரம்பரியமான வாழ்விடத்தில் அதனைப் பெற வேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

1959 இல் ஏற்பட்ட பண்டாராநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் வட, கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது. பிக்குகளின் அழுத்தம் காரணமாக அது கிழித்தெறியப்பட்டது. எனினும், அன்றைய நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த இளைஞர் தீவிரவாதமோ தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரிவினைக் கோரிக்கையோ வந்திருக்க இடமில்லையென்று சிங்கள அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுவார்கள்.

1987 இல் இந்தியா-இலங்கை இணக்க ஏற்பாடுகளில் இது மிக முக்கியமானதொன்றாக அமைந்தது. அதன் வழியாகவே இந்த இணைப்பும் 13 ஆவது ஆட்சியாப்பு திருத்தமும் ஏற்பட்டது.

இன்னொரு வகையில் நோக்கினால் கடந்த இரண்டு தசாப்தங்களில் தமிழர் அரசியல் கோரிக்கைகளில் இந்த இணைப்பு ஒரு முக்கிய எடுகோளாக அமைந்துள்ளது. இப்பொழுது இந்த இணைப்பு சட்டரீதியாக இல்லாததாக்கப்படுகின்றது.

இந்த இணைப்பினை ஜே.ஆர். ஜயவர்தன செய்த முறைமையில் அவருக்கே உரியதான குள்ளத்தனமான போக்குகள் இதிலும் இருந்ததா என்பது பற்றி இப்பொழுது சந்தேகிக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் முகத்தை முறிக்கக்கூடாது என்பதற்காக ஏற்றுக்கொண்டு அதற்குள்ளே அரசியல் சட்ட, நிர்வாக, `தக்க'களை வைத்தே அதனை நடைமுறைப்படுத்தினாரே என்ற சந்தேகம் இப்பொழுது எழும்புவதில் ஒரு நியாயம் இருக்கவே செய்கின்றது. அது எவ்வாறாயினும் இப்பொழுது நாம் வடக்கு, கிழக்கில் இணைப்பு நீக்கத்தை சட்டரீதியாக ஏற்க வேண்டிய நிலையே உள்ளது. ஆனால், தமிழர்களது உரிமையை போராட்டத்தினைப் பொறுத்த வரையில் குறிப்பாக செல்வநாயகம் முதல் வடக்கு கிழக்கு இணைவே காணப்பட்டது. இவ்விடயத்தில் எஸ்.ஜே.வி.அவர்கள் மட்டக்களப்பு திருமலை பிரதிநிதிகளையே முன்நிறுத்தினார். இராஜதுரை, ஏகாம்பரம், இராஜவரோதயம் எனப் பல பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. கிழக்கு மாகாணத்தின் தமிழ் மையங்களான திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையிலுள்ள தமிழ்க் கிராமங்கள் ஆகியனவற்றில் தமிழர் உரிமைப் போராட்டம் வலுவுள்ளதாகவே காணப்படுகின்றது. மட்டக்களப்பில் மத்திய தர வர்க்கத்து உத்தியோகத்தர்கள் மட்டத்தில் ஏகமனதாக முடிவுடனே இருந்ததென்று சொல்ல முடியாவிட்டாலும் சாதாரண பொதுமக்களைப் பொறுத்தவரையில் அது இருந்தது. இப்பொழுதும் உள்ளது. அந்தப் பலம் காரணமாகவே இன்றுவரை படுவான்கரை விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்துக்குள்ளேயே வருகின்றது.

கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள், வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றிக் காட்டிவந்துள்ள பதிற்குறிகள் சுவாரஸ்யமானவை, முக்கியமானவை. இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தந்தையான அஷ்ரப் கூட வடக்கு, கிழக்கு இணைப்பை உடைக்காமலே தென்,கிழக்கு முஸ்லிம்களுக்கான சுயாதிக்க பிரதேசம் வரையறுக்கப்பட வேண்டும் என்றே கூறினார். அவர் நிச்சயமாக வடக்கு, கிழக்கு எதிராக போராடவில்லை. ஆனால் அண்மையில் அமைச்சர் அதாவுல்லாவோ கிழக்கு மாகாணத்தைப் பிரிக்க வேண்டுமென்றும் வடக்கு கிழக்கு இணைப்பு கிழக்கு முஸ்லிம்களை தமிழர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தது என்றும் குறைபட்டுக்கொண்டார். கடந்த வெள்ளியன்றும் பாராளுமன்றத்தில் அதனை ஒளிவுமறைவின்றி கூறினார்.

அவர் நேரடியாக கூறவில்லையெனினும் கிழக்கில் முஸ்லிம்களுக்கான ஒரு இருப்பிட கனதியுள்ளது. அதை அழிக்கக் கூடாது என்கின்ற தொனி நிச்சயமாகவுள்ளது.

வடக்கு, கிழக்கு பிரிக்கப்படுகின்ற பொழுது சில முக்கியமான நிர்வாக பிரச்சினைகள் கிளம்பும். அவற்றை இயன்றவரை பட்டியலிட்டு நோக்குவது பொருத்தமாகும். கிழக்கு மாகாண நிலையில் பின்வருவன முக்கியமாகின்றன.

அ. திருமலை கிழக்கின் தலைநகராக கொள்ளப்படுமா? இதற்கான சாத்தியப்பாடு இல்லையெனலாம். இனிமேல் திருமலையை குறிப்பாக துறைமுக பிரதேசங்களை சிங்கள மயப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டப்படும். இந்தப் போக்குக்கு வசதிசெய்வது போல் அண்மையில் அன்பு வழிபுரம், சல்லி போன்ற பகுதிகளிலிருந்து பெருந்தொகையினர் இடம்பெயர்ந்துள்ளனர்.

புடவைக்கட்டு சாகரபுரவாக மாறியுள்ளமை நல்லதொரு முன்னுதாரணமாகும்.

ஆ. அப்படியானால் மட்டக்களப்பு நகரம் தலைநகர் ஆக்கப்படுமா? இதற்கே அதிக சாத்தியப்பாடுகள் உள்ளன. மட்டக்களப்பு நகருக்குள் ஒரு முஸ்லிம் சமநிலையும் உண்டு. முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் முஸ்லிம் நல்லுறவை பேண வாய்ப்புண்டு.

இ. ஆலையடிவேம்பு ஆகிய தமிழ்க் கிராமங்களின் முக்கியத்துவம் குறையும். ஏற்கனவே அந்த நிலைகுலைவினை அங்கு காணலாம்.

ஈ. கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை பிரதேசத்தில் முஸ்லிம் கிராமங்கள் மிக முக்கியமானவை. இலங்கையின் தென்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தமிழை பல இடங்களில் சிங்களத்தை அரச கரும மொழியாக ஏற்றுக்கெண்டுள்ளனர். ஆனால், அம்பாறை கச்சேரியினர் உயர் பதவிகளில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லையெனினும்

இந்த உண்மை சுனாமியின் பொழுது தெரிய வந்தது. இந்த பிரதேசத்து நிர்வாக மொழி தமிழாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலைமைத் தொடர்ந்து பேணமுடியுமாக என்பது சந்தேகம்.

உ. இணைப்பு நீக்கத்தின் பின்னர் கிழக்குப் பகுதி முஸ்லிம்களின் அரசியலில் நிச்சயமாக ஒரு முக்கியமான பெருமாற்றம் ஏற்படும். இணைந்த வடக்கு, கிழக்கினுள் தமக்குள்ள இடத்தை நிர்ணயிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் வடக்கு எதிர்ப்புக்கும் தமிழ் நிலைப்பாட்டு மறுப்புகளுக்கும் இடங்கொடுத்து வந்துள்ளது. தனி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் தனித்துவம் எவ்வாறு பேணப்படு போகின்றது என்பது ஒரு முக்கிய சவாலாகவும் பிரச்சினையாகமுவுள்ளது.

இப்பொழுது நிலவுகின்ற தமிழ்-முஸ்லிம் சந்தேக உறவு தொடர இடமில்லை.

ஊ. கிழக்கின் இணைப்பு நீக்கத்தின் பின்னர் கிழக்கின் தமிழர் உரிமைப் போராட்டம் எந்த வடிவத்தை எடுக்கும் என்பது ஒரு முக்கியமான வினாவாகும். கிழக்கின் இணைப்பு நீக்கம் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றிய பிரக்ஞையையும் தேவையையும் இல்லாமல் ஆக்கும் என்று கூறவே முடியாது.

எ. படுவான்கரையின் அதிகார வலுவுக்கு என்னாகும்? இது இப்பொழுது விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலேயே உள்ளது. படுவான் கரையுடன் முஸ்லிம்களுக்குக் கூட சுமுகமான உறவு உண்டு என்பதை மறுக்க முடியாது.

மேலே கூறியுள்ள அம்சங்கள் காரணமாக அம்பாறை வழியாகத் தொடங்கிய சிங்களமயவாக்கத்தை எவ்வாறு விஸ்தரிப்பது என்பது பிரச்சினையாகலாம்.

இதற்கு மேல் வடமாகாணத்தின் நிலைமைகள் என்னவாகும் என்பதும் சுவாரஸ்யமான வினாவாகும். குறிப்பாக வடமாகாணத்தின் தலைநகராக யாழ்ப்பாணம் அமையுமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக அது நடைபெறப்போவதில்லை. பெரும்பாலும் அந்த இடம் வவுனியாவுக்கே செல்லும்.

வவுனியாவில் இருந்து கொண்டுதான் மன்னார்,முல்லைத்தீவு பகுதிகள் மீதும் கிளிநொச்சி மீதும் கண்காணிப்பை வைத்துக்கொள்ளலாம்.

நிச்சயமாக வடக்கில் ஆளுநர் தமிழராக இருக்கப்போவதில்ல- உள்ளூர் நிர்வாகமும் தமிழில் மாத்திரம் இருக்க போவதுமுல்லை. வடக்கில் ஆளுநராக ஒரு சிங்களவரையே நியமிக்க வேண்டிய அத்தியாவசிய தேவை ஏற்படும்.

இவையாவற்றையும் ஒன்று திரட்டி நோக்கும் பொழுது வடக்கு, கிழக்கின் இணைப்பு நீக்கமானது இலங்கையின் தேசிய பிரச்சினையை உக்கிரப்படுத்தி அதன் ஓட்டவேகத்தை துரிதப்படுத்தியுள்ள முயற்சியாகவே அமைகின்றது. வரப் போகின்ற இக்கட்டுகள் போதாதென்று அரசாங்கத்துடன் உள்ள தமிழ் சக்திகள் கூட வடக்கு, கிழக்கில் இணைப்பு நீக்கத்தை விரும்பவில்லை என்பது பல்வேறு அறிக்கைகள் மூலம் தெரியவருகின்றது.

இவ்வாறு நோக்கும் போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது ஒரு மறைமுகமான ஆசீர்வாதமாகவே உள்ளது. புலிமீது சவாரி செய்ய விரும்புவர்கள் கீழே இறங்க முடியாதென ஒரு சமஸ்கிருத பழமொழி உண்டாம்.

நன்றி: தினக்குரல், Oct 22, 2006

Please Click here to login / register to post your comments.