தமிழக சட்டமன்றத் தேர்தல்: சுய மரியாதையையே ஏலம்விடும் கலைஞர்

ஆக்கம்: அனலை நிதிஸ் ச. குமாரன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் நாலரைக் கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், புதுவையில் 80 லட்சம் வாக்காளர்களும் வாக்களிக்க தகமையுடையவர்களாக உள்ளனர். தேர்தலில் யாருடன் கூட்டுச்சேர்ந்து யார் அடுத்து ஆட்சியமைப்பது என்கிற பேரம் பேச்சு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. சுயமரியாதையைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் கலைஞர், தனக்கு அப்படியான சம்பவம் ஒன்று வரும்போது சுயமரியாதையையே ஏலம் விடுகிறார் கலைஞர்.

மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் மார்ச் 5-ஆம் நாளன்று மாலை சென்னையில் கூடியபோது முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ்சின் கோரிக்கையை ஏற்று 60 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முன் வந்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளைக் கேட்பதுடன் சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது. இதுகுறித்து கருணாநிதி மார்ச் 4-இல் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகள் போதாது என்று 63 தொகுதிகள் கேட்பதும், அதுவும் எந்தெந்த தொகுதிகள் என தாங்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்பது முறைதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் வைப்பதால் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார். மார்ச் 7-ஆம் திகதியன்று அனைத்து அமைச்சர்களும் தமது பதவி விலகல் கடிதங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என்று அறிவித்தது தி.மு.க. பதவிகளை தக்கவைத்தே ஆகவேண்டும் என்கிற கொள்கையுடையவரே கலைஞர். தனது செல்வாக்கு ஒருபோதும் டெல்லியில் குறைந்துவிடக் கூடாது என்கிற நிலையிலுள்ளார் கலைஞர். அதற்கும் பல காரணங்கள் உண்டு. பதவி விலகல் கடிதங்களை கொடுக்கப்போகிறோம் என்ற நாடகத்தினை முன்னிறுத்தி, தி.மு.க. மத்திய அமைச்சர்கள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். ஆனால், பதவி விலகல் கடிதங்கள் அவர்களுடைய சட்டைப் பைகளிலிருந்து வெளிவரவில்லை என்று கூறுகிறார்கள் தமிழக அரசியல் தரப்பினர். என்னதான் நடந்தது?

தி.மு.க. அணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 50 முதல் 55 வரைக்குள்ளாகத்தான் தொகுதிகளை அளிக்க வேண்டும் என்று நினைத்து பேச்சுக்களை ஆரம்பித்தது தி.மு.க. கலைஞரை எப்படியேனும் மடக்கலாம் என்று நன்கே உணர்ந்த காங்கிரஸ் தமக்கு 60 முதல் 70 வரையிலான தொகுதிகளை அளிக்க வேண்டுமென்று நினைத்தது. அதன்படியே பேச்சுக்களும் ஆரம்பமாகியது. தி.மு.க. 50 தொகுதிகளைக் கொடுக்கலாம் என்கிற வகையில் பேசியது. காங்கிரஸ் தமக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென்றது. பதிலுக்கு 55 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறியது தி.மு.க. காங்கிரஸ்சோ தமக்கு 60 போதாது 63 தொகுதிகள் வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியது. தி.மு.க. கட்சி வட்டாரத்தில் பரவலாக காங்கிரஸ்சிற்கு எதிரான கருத்துக்கள் வெளிவரத்தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் ஈழத்தமிழருக்கு எதிராக செய்யப்பட்ட நாசகார வேலைகள் என்ன என்ற உண்மைகள் பல கசிந்துவிடுமோ என்று கதிகலங்கினார் கலைஞர். பிரிந்து சென்றுவிட்டால் தாம் செய்த ஊழல்களை மற்றவர்கள் சொல்லிவிடுவார்கள் என்று கலங்கியது தி.மு.க. மற்றும் சோனியா தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகள். ஈழத்தமிழினத்திற்கு எதிரான அதன் துரோகத்தைமட்டுமன்றி காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினைகளில் தமிழக மற்றும் டெல்லி அரசுகள் கண்டு கொள்ளாமல் காலத்தை கடத்தும் வேலைகளிலேயே நாட்களை கடத்துகிறது. அதுமட்டுமன்றி, தமிழக மீனவர்களை நடுக்கடலில் கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டிக்க துப்புக்கெட்ட மத்திய காங்கிரஸ் அரசுடன் தோழமை பேணவேண்டும் என்று போராடினார் கலைஞர் என்பதுதான் உண்மை.

தி.மு.க. அமைச்சர்கள் ஆறு பேரும் தங்கள் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு தமிழ்நாடு திரும்புவார்கள் என்றுதான் பலரும் எண்ணி இருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. பதவி விலகல் மிரட்டலைக்கண்டு காங்கிரஸ் படி இறங்கி 60 இடங்கள் போதும் என்று சொல்லும் என்று பார்த்தால் அப்படியொன்றும் நடக்கவில்லை. தி.மு.க. தான் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மிரட்டலுக்குப் பயந்து கேட்ட 63 தொகுதிகளையும் கொடுத்துள்ளது.

தி.மு.க. அமைச்சர்கள் ஆறு பேரும் மன்மோகன் சிங்கை டெல்லி சென்றடைந்தவுடனேயே சந்தித்தார்கள். அவர்களும் பதவி விலகல் கடிதங்களைக் கொடுப்பார்கள் என்றுதான் பலரும் எண்ணினார்கள். அது நடைபெறவில்லை. மாறாக அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எப்படி செய்ய வேண்டுமென்று சிங்குடன் கலந்தாலோசித்ததாக பரவலாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

எப்பதான் பதவி விலகல் கடிதங்களை கொடுப்பார்கள் தி.மு.க. அமைச்சர்கள் என்று தி.மு.க. தலைமையிடம் கேள்விக்கணைகள் செய்தியாளர்களிடமிருந்து தொடுக்கப்பட்டது. தி.மு.க. அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன், நடிகர் நெப்போலியன், ஜெகத்ரட்சன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் உள்பட 6 பேரும் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தமது பதவிவிலகல் கடிதங்களை கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்புகொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஈழப் போர் உச்சக்கட்ட நிலையிலிருந்த வேளையிலும் இது போன்றே தி.மு.க. அமைச்சர்கள் விலகுவதாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் பதவி விலகவில்லை. அதேபோல்தான் இதுவும் நடக்கும் என தமிழக அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்கள் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்தன.

அரசியல் மற்றும் ஊடகவியலாளர்கள் நினைத்தபடியே தி.மு.க.வின் தலைமையும் செய்தது. தி.மு.க-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் தி.மு.க. கொடுக்க முன்வந்தது. இத்தகவலை இந்திய மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத் டெல்லியில் தெரிவித்தார். சோனியாவின் வீட்டில் இடம்பெற்ற அப்பேச்சுவார்த்தையில் தி.மு.க. சார்பில் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல், குலாம் நபி ஆஸாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் தொகுதி உடன்பாடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகளும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகளும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தி.மு.க. அல்லது அ.தி.மு.கவுக்கு 118 இடங்கள் வெல்ல வேண்டும். 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க. 118 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் பலத்துடம் அடுத்த ஆட்சியை அமைக்குமா என்பது சந்தேகமே. மத்தியிலும் மாநிலத்திலும் தமது ஆட்சிகளே நடைபெறுவதனால், கள்ள ஓட்டுக்களை போட்டோ அல்லது அதிகாரங்களை பாவித்தது எப்படியேனும் அடுத்த தடவையும் ஆட்சிப்பீடம் இந்தக் கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னதான் இவர்கள் சொல்கிறார்கள்?

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஜெயலலிதா ஜெயராம் கூறுகையில் தி.மு.க. - காங்கிரசுக்கு இடையே கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள் ஊடகங்களும், மக்களும் ஒரு முழு வாரத்திற்கு ஸ்பெக்ட்ரம் புலன் விசாரணையை மறக்கும் நிலைக்கு இந்த நடவடிக்கை தள்ளுவதாகவே அமைந்தது. “இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கினை கர்நாடகா தர மறுத்த போதும், முல்லைப் பெரியாறில் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், அனைத்துப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கின்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு திரும்பத் திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட போதும், வறுமையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசிலிருந்து விலகப் போகிறோம் என்று மத்திய அரசை கருணாநிதி மிரட்டவில்லை.

வழக்கம் போல, பாரதப் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பினார்." திராவிட கழகத் தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் ஆகியோர் காங்கிரஸ் கட்சி திமுக அணியிலிருந்து விலகுவதான செய்தியைக் கேட்டு மட்டற்ற மிழச்சி அறிக்கைகளை விட்டார்கள். கருணாநிதியோ இவர்கள் அனைவருக்குமே கன்னத்தில் அறைந்தாற்போல் பல்டி அடித்துவிட்டார்.

கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “குட்டக்குட்ட தி.மு.க., குனியக்கூடாது. காங்., இல்லாமல் போட்டியிட தி.மு.க., தயாராக வேண்டும். தமிழ் மானம், தன்மானம் இவற்றைக் காப்பதுதான் தி.மு.க.,வின் அடிப்படை லட்சியம். பதவிகளை விட கொள்கைகளும் அவற்றைப்பரப்பும் இயக்கமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது. கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.,வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும்."

திருமாவளவன் தெரிவித்ததாவது: “தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் முடிவு, கூட்டணியை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. இந்த முடிவால் கூட்டணி பலவீனமாகாது. தி.மு.க., அரசு தனிப் பெரும்பான்மையோடும், வலுவோடும், தமிழகத்தில் அமையும். காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து விலக்கும் தி.மு.க.,வின் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது."

பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தனதறிக்கையில் தெரிவித்ததாவது: “மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்சினைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதும் என்றும், தி.மு.க.,வின் உயர் மட்ட செயற்குழு முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், தி.முக சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர்."

பாவப்பட்ட தமிழக மக்கள் கருணாநிதி போன்ற சுயமரியாதையை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் கைகளிலையே அடுத்த தலைமுறையும் விழுந்துவிடுமோ என்றுதான் கவலையடைந்துள்ளார்கள் தமிழின உணர்வாளர்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் கருணாநிதி போன்ற இரட்டைவேடத் தலைவர்களை தமிழக மக்கள் ஓட்டு என்கிற கருவியினால் இருந்த இடம் தெரியாத இடத்திற்கு அனுப்பி, தமிழரின் தன்மான உணர்வை ஏனைய இனத்தவர்களும் மதிக்க செய்வதுவே இன்றைய காலத்தின் கட்டாயம்.

--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் தொடரும்--

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Please Click here to login / register to post your comments.