விக்கிலீக்ஸ்: சர்வதேச நெருக்கடியில் இருந்து இலங்கையை காத்த இந்தியா!

கடந்த 2008-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போர் நின்றுவிடாத வகையில், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசை இந்தியா தான் காப்பாற்றியது என வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கு பல தடவை குரல் கொடுத்த இந்திய அரசு. அதுகுறித்து தனது கவலையையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தது. அதேவேளையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்கவே இல்லை என அமெரிக்க தூதரக கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடியும் தருவாயில், இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச நாடுகளுடனும், அமைப்புகளுடனும் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டாலும், இலங்கையின் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை மழுங்கடிக்கும் முயற்சியில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 29 தேதியிட்ட அமெரிக்க தூதரக கேபிளில், இலங்கைக்கு இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்கொண்ட அவசர பயணம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர், ராணுவத் தலைவர் உள்பட உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, "மனித உரிமைகளும் குடிமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் பட்சத்தில் வேறு எந்த பிரச்னையும் இல்லை (போர் நீடிக்கலாம் என்ற அர்த்தத்தில்)," கூறியதாக, அமெரிக்கத் தூதரிடம் கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக துணைத் தலைவர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தனது பயணத்துக்கு பிறகு பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூட போர் நிறுத்தம் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மட்டும் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த அழுத்தம் தான் காரணம். அதற்குப் பிறகு, போர் தொடர்வதை இந்தியா ஒருபோதும் தடுக்கவில்லை என்று அந்தக் கேபிளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் : இந்திய ரேடார்கள் போதாமல் அமெரிக்காவை நாடிய இலங்கை அரசு!

கடந்த 2007-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது, தமக்கு இந்தியா வழங்கிய ரேடார்கள் போதவில்லை என்பதற்காக, அமெரிக்காவை இலங்கை அரசு நாடியது, கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் வாஷிங்டனுக்கு பகிரப்பட்டுள்ளது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு ஏப்.1-ல் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு 'ரகசியம்' பிரிவில் பகிரப்பட்ட அந்தக் கேபிளில், 'இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட ரேடார்களால் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே, எங்களுக்கு மேலும் அதிநவீன ரேடார்களைக் கொடுத்து உதவுங்கள் என அமெரிக்காவிடம் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே கோரினார்.

அதேநேரத்தில், இந்தியாவுக்குத் தெரியாமல் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கக்கூடாது என இலங்கை ஒப்புக் கொண்டது என அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், '2007 மார்ச் மாதத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட எம்.ஐ ரக ஹெலிகாப்டர்களும் சேதமடைந்தன. தங்களுக்கு இந்தியா அளித்திருந்த இரு பரிமாண ரேடார்களால் விடுதலைப்புலிகளின் விமானம் வந்ததைக் கண்டறிய முடியவில்லை.

எனவே, சீனாவிடமிருந்து முப்பரிமாண ரேடார் பெறுவது என முடிவு செய்யப்பட்டதாகவும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார் என்பது 'தி ஹிந்து'வில் வெளியான விக்கிலீக்ஸ் அம்பல ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை கடற்பரப்பை கண்காணிப்பதற்காக அமெரிக்கா அளித்த ரேடார்களை இலங்கையின் வடபகுதியில் நிறுவக் கூடாது. அவற்றை தெற்குப் பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்று இலங்கையை இந்தியா வற்புறுத்தியிருக்கிறது.

அதற்கு இலங்கை உடன்படாததால், இந்தியா தனது எதிர்ப்பை விலக்கிக் கொண்டது என்றும் கொழும்புவில் இருந்து அமெரிக்காவுக்கு பகிரப்பட்ட தூதரக ஆவணம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Please Click here to login / register to post your comments.