கைகொடுக்குமா நல்லிணக்க ஆணைக்குழு?

ஆக்கம்: கே.சஞ்சயன்

முப்பது வருட போரின் காயங்களைக் குணப்படுத்துதல், போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் இந்த விடயங்களில் மேற்குலகம் மிகவும் கண்டிப்புடனேயே இருக்கிறது.

அண்மையில் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் வெளியிட்ட கருத்து இதை மீளவும் நினைவுபடுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறத்தக்க வகையிலான விசாரணைகளை உள்நாட்டில் மேற்கொள்ளத் தவறினால், சர்வதேச அளவிலான விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று அவர் கூறியிருந்தார்.
இது ஒன்றும் வெறும் கருத்தாக கணிக்கப்படத்தக்கதல்ல.  இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே கருத வேண்டும்.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை சிறிலங்கா எதிர்கொள்ளும் ஆபத்தை  எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

'சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க  விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால்- சர்வதேச விசாரணைகளை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்.

சர்வதேச தரத்திலான விசாரணைகளை நடத்தத் தவறினால்- அனைத்துலக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கும்.

இலங்கையுடனான நெருக்கத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய விடயங்களாக நல்லிணக்கமும், பொறுப்புக் கூறுதல், மனிதஉரிமைகள் ஆகியவற்றை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. போரின் இறுதி சில மாதங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளது' என்றெல்லாம் அவர் கூறியுள்ளார்.

இதிலிருந்தே அமெரிக்காவின் பார்வை என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறது.

போர் முடிந்து விட்டது- போருக்குப் பிந்திய சூழலைக் கையாள்வதென்பது இலகுவான காரியமல்ல. அது பல நாடுகளுக்கு பலவித படிப்பினைகளைக் கொடுத்துள்ளது.

இதைக் கவனத்தில் கொண்டு மட்டுமே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் இதுபோன்று அழுத்தங்களைக் கொடுக்கவில்லை.

போரின் போது மறைக்கப்பட்ட போர்க்குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல்- அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும்இ இன்னொரு போருக்குள் நாடு தள்ளிச் செல்லப்படாமல் இருக்கும் வகையில் தமிழர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுதிக் கொள்வதுமே இந்த அழுத்தங்களின் அடிப்படை நோக்கம்.

ரொபர்ட் ஓ பிளேக்கின் எச்சரிக்கும் தொனியிலான கருத்தையிட்டு இலங்கை அரசாங்கம் அதிகமாகவே வெறுப்படைந்தாலும்  அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 16 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருந்த போது தான் அவரது கருத்து வெளியானது. அந்தக் கட்டத்தில் இலங்கை நண்பர்களைத் தேடிக் கொண்டிருந்தது. எதிரிகளை உருவாக்க விரும்பவில்லை. ஜெனிவாவில் ஆபத்து வந்து விடாதபடி தவிர்ப்பதற்காக யாருடனும் பகைத்துக் கொள்ள இலங்கை அரசு விரும்பவில்லை. அதனால் அமெரிக்காவின் கருத்தை இலங்கை கண்டு கொள்ளாதது போன்று இருந்து கொண்டது.

ஆனால், பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரை அலரி மாளிகையில் சந்தித்த போது இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான கவலையைத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே அமெரிக்க செனட் உறுப்பினர்கள் இணைந்து சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். அதுபோன்ற கோரிக்கைகள் பிரித்தானியாவிலும் முன்வைக்கப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றையும் இலங்கை அரசாங்கம் கடும் சீற்றத்துடனேயே பார்க்கிறது.
இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்க அமெரிக்காவுக்கோ, பிரித்தானியாவுக்கோ என்ன தகைமை உள்ளது என்ற வகையில், அது மறைமுகமாகத் தாக்குதல் தொடுப்படுவதையும் கவனிக்கத் தான் வேண்டும்.

உலகில் பல்வேறு நாடுகளின் போர்களில் சம்பந்தப்பட்ட பிரித்தானியாவும், அமெரிக்காவும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உண்மை.

ஆனால் அதையே காரணம் காட்டிக் கொண்டு இலங்கை அரசாங்கம் தப்பிக்கும் வழியைப் பின்பற்ற முடியாது. ஆரம்பத்தில் அப்படித் தான் முயற்சிகளை மேற்கொண்டது. அதனால் தான் ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது இலங்கை அரசு கண்டனம் தெரிவித்தது.

அதைத் தூக்கிப் பிடித்து ஊதிப் பெருப்பித்துக் காட்டியது. ஆனால் பின்னர் அதன் போக்கை மாற்றிக் கொண்டது.

போர்க்குற்றங்கள் செய்த அமெரிக்காவோ, பிரித்தானியாவோ  சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கத் தகுதியில்லை என்ற காரணத்தை முன்வைத்துஇ இலங்கையைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில்,  நல்லிணக்க ஆணைக்குழுவை அரசாங்கம் அமைத்தது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில்- சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்புகள் விடப்பட்டிருந்த நேரத்தில் தான், இலங்கை அரசாங்கம் வேறு வழியில்லாமல் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது.

இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்ட போது பல்வேறு சந்தேகங்கள் இருந்தன.

இது உருப்படியான அறிக்கையைச் சமர்ப்பிக்குமா- அந்த அறிக்கை நீதியானதாக - நியாயமானதாக அமையுமா – அந்த அறிக்கையில் கூறப்படும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமா என்றெல்லாம் கேள்விகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.

ஆனால் இப்போது இந்தக் கேள்விகளின் எண்ணிக்கை தான் கொஞ்சம் குறைந்துள்ளது- அவ்வளவு தான்.

இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையைச் கையளிக்குமா- இல்லையா என்ற கேள்விக்கு இனிமேல் இடமே இருக்காது. ஏனென்றால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தான் முக்கியமானது. எனவே அதுபற்றி சந்தேகம் தேவையற்றது.

இப்போதுள்ள கேள்விகளில் பிரதானமானவை இரண்டு மட்டும் தான்.

நீதியான அறிக்கையை ஆணைக்குழு கையளிக்குமா- அதன் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா என்பனவே அவை.

இத்தகைய சந்தேகங்களுக்கு- கேள்விக்கு இனிமேல் இடம் கொடுக்கப்படக் கூடாது என்பதைத் தான் ரொபர்ட் ஓ பிளேக்கின் கருத்து வலியுறுத்தி நிற்கிறது.

சர்வதேச தரத்துக்கமைவான உள்நாட்டு விசாரணைகள் மேற்கொள்ளத் தவறினால், சர்வதேச விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படும் என்று அவர் கூறியிருப்பது- நல்லிணக்க ஆணைக்குழு இன்னும் இன்னும் அதிகம் செயற்திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

பக்கக்சார்பற்ற தன்மையும்இ நீதியும் இதில் அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகின்றன. சர்வதேச தரநியமங்களுக்கு அமைவான விசாரணைகள் என்று வலியுறுத்தப்பட்டிருப்பது இதைத் தான்.

அதேவேளை, இந்த விசாரணைகளை மட்டுமன்றி அதன் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தலும் அவசியமானதாகவே கருதப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளும் அதன் நம்பகத் தன்மையும் தான்இ இலங்கை அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களைக் குறைக்கக் கூடும்.

இந்தநிலையில் கடந்தவாரம் தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு அரச அதிகாரியையும் சர்வதேச விசாரணைகளுக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கமாட்டேன் என்று தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார்.

தன் மீதோ, அரசாங்கத்தின் மீதோ அல்லது அரச அதிகாரிகள் மீதோ குற்றம் சுமத்துவதானால், அதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

மனிதஉரிமைகள் அமைப்புக்களுக்கும் ஐ.நா நிபுணர்களுக்கும் இதற்கான அழைப்புகள் விடப்பட்ட போதும், அவர்கள் சாட்சியமளிக்க மறுத்து விட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒருபோதும் உடன்படப் போவதில்லை என்பது ஜனாதிபதியின் கருத்தில் இருந்து உணரப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில்- சர்வதேச அளவில் இலங்கை மீதான நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் தான் இந்தக் கருத்தை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அண்மைக்காலமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகும் வரை பொறுத்திருங்கள் என்று அரசாங்கம் அவகாசம் கேட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

இவற்றில் இருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவை ஒரு கவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதே அது.

ஆனால் இது பலமான அரணாக அமையுமா- இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பற்ற வகையில் அமைந்துள்ளது என்று சர்வதேச சமூகம் சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதைவிடத் தமிழர் தரப்பும் ஏற்க வேண்டும்.

அப்படியானதாக இருந்தால் தான் அது இலங்கை அரசைக் காப்பாற்றும் கவசமாக இருக்கும். இல்லையேல் அது வெறும் மணல்கோட்டையாக அமைந்து விடும். அத்துடன் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களும் அதிகரிக்கும்.

என்ன நடக்கப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இப்போது இருப்பது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தான். அதாவது எல்லாமே நல்லிணக்க ஆணைக்குழுவின் கையில் தான் இருக்கிறது

Please Click here to login / register to post your comments.