கருணாநிதி தேர்தலில் தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்து கோவணத்தோடு நிற்கிறார்!

ஆக்கம்: நக்கீரன்
தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாது. 1967 தொடக்கம் முக்கிய கட்சிகளாக விளங்கும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வருகின்றன. எனவே தேர்தலின் முடிவை பெரும்பாலும் கூட்டணி பலமே தீர்மானிக்கிறது.

மேலும் தேர்தல் முடிவை ஒன்றோ இரண்டோ காரணிகள் தீர்மானிப்பதில்லை. மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் பல காரணிகள் தேர்தல் முடிவைப் பாதிக்கலாம் என அடையாளம் காணப்பட்டன. திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தியதாகச் சொல்லப்படும் காரணிகள்!

  * 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். அது குறித்த மக்களின் விழிப்புணர்வு.

  * படித்தவர்கள் மத்தியில் குடும்ப அரசியல் நடத்தும் கருணாநிதி மீதான வெறுப்பு.

  * திரைப்படத்தில் கருணாநிதி குடும்பம் செலுத்தும் ஆதிக்கம்.

  * ஈழச் சிக்கலில் கருணாநிதியின் ஏனோ தானோ என்ற செயல்பாடு.

  * ஓயாத மின் வெட்டு.

  * ஊழல். பணம் கொடுக்காமல் எதையும் பெறமுடியாது என்ற கையறு நிலை.

  * கடுமையான விலைவாசி உயர்வு.

  * சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. காடையர்களின் அட்டகாசம். ஒரு கொலைக்கு பத்தாயிரம் கொடுத்தாலே போதும்.

  * தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இதனால் திருமங்கல சூத்திரம் வேலை செய்யவில்லை.

  * தமிழ்த் தேசியவாதிகள் காங்கிரசின் கருவறுப்போம் என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியது.

இப்போது இவை ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

2ஜி ஸ்பெக்ரம்

2ஜி ஸ்பெக்ரம் ஊழல் பற்றிய தார்ப்பரியங்கள் மக்களுக்கு ஆழமாகத் தெரியாவிட்டாலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கிறது என்பதை நகர வாசிகள் மட்டுமல்ல ஊர்வாசிகளும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். முன்னர் போல் அல்லாது தொலைக்காட்சி இப்போது சிற்றூர், பேரூர் என்று எங்கும் பரவிவிட்டது. மேலும் படித்தவர்களது விழுக்காடு அதிகரித்து வருகிறது. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாக்காளர்களைவிட இன்று வாக்காளர்கள் விபரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆ.ராசாவின் ஊழல் நடவடிக்கைகளால் 50 ஆயிரம் கோடி நாட்டுக்கு நட்டம் என்று சிபிஅய் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிடம் வாக்குமூலம் வழங்கியது. மத்திய அமலாக்கப் பிரிவும் புலனாய்வுத் துறையும், ஆ.ராசா 3000 கோடி கையூட்டு பெற்றிருப்பதாகக் கண்டுபிடித்தன. முழுத்தேசமும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆழம் கண்டு அதிர்ந்துபோனது. எனவே கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பயன்பெற்ற வடநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்த பணம் கையூட்டுப் பணம் என்றே மக்கள் நினைத்தார்கள். முன்னாள் அமைச்சர் ஆ. இராசா பிடிபட்ட போதுதான் அந்தப் பணம் கடனாகப் பெறப்பட்டது என்றும் வட்டி விழுக்காட்டில் முரண்பாடு எழுந்ததால் முதலை வட்டியோடு (31 கோடி) திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கருணாநிதியும் கனிமொழியும் சொன்ன கதையை மக்கள் நம்பவில்லை. எனவே ஊழலில் சிக்கிய கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள்.

குடும்ப அரசியல்

திமுகவின் வீழ்ச்சிக்கு கருணாநிதி நடத்திய குடும்ப அரசியலும் தன் பங்களிப்பைச் செய்தது. கருணாநிதியின் குடும்பம் முழுவதும் தகுதி இல்லாமல் இரவோடு இரவாகப் பிரபலங்கள் ஆனார்கள். கட்சிக்கு ஆண்டுக் கணக்காக உழைத்த பல மூத்த அரசியல்வாதிகள் இருந்தும் திமுக வின் அடிப்படை உறுப்புரிமை வைத்திராத கனிமொழி மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பவர்கள். ஒரு மகனோ அல்லது ஒரு மகளோ வாரிசு அரசியலில் ஈடுபட்டிருந்தால் அதை மக்கள் பெரிதாக எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள், மருமகன்கள் என்று எல்லோரும் ஊடக வெளிச்சத்தில் தெரிந்தபோது கருணாநிதி குடும்பத்துக்குப் பெருமையாக இருந்தது. ஆனால் மு. க. அழகிரி ஒருபுறம், முதல்வர் கருணாநிதியின் துணைவியார் இராஜாத்தியம்மாள் ஒருபுறம், கனிமொழி இன்னொருபுறம் என்று குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்ததைப் பார்த்த மக்கள் முகம் சுளித்துக்கொண்டார்கள். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என இரு கன்னைகளாக பிளவு பட்டிருந்தது கட்சியைப் பலவீனப்படுத்தியது.

மொத்தம் 301 கோடியே 76 இலட்சம் செலவழித்து நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிலும் கருணாநிதி குடும்பமே மையப்படுத்தப்பட்டது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 84 பேர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. அதில் கலந்து கொண்டவர்கள் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள். கனிமொழி எழுதி வெளியிட்ட கவிதை நூல் பற்றி இரண்டு ஆய்வுக் கட்டுரை படிக்கப்பட்டது.

கட்டுரை படித்தவர்கள் சரி, கவிதை படித்தவர்கள் சரி எல்லோருமே தமிழைப் பாடாமல் கருணாநிதி புகழ் பாடினார்கள்! செவியிரண்டும் கிழிந்து போகும் அளவுக்கு பலரும் கருணாநிதி போற்றி பாடினார்கள். வைரமுத்து, வாலி, விஜய், தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன், நா.முத்துக்குமார், மு.மேத்தா, பழனிபாரதி, தணிகைச் செல்வன், கயல்விழி, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன், அப்துல் ரகுமான், வா.மு.சேதுராமன் எனக் கூழுக்குப் பாடும் ஒரு கவிஞர் பட்டாளம் கருணாநிதிக்குப் பாமாலை பாடிப் புகழ்மாலை சாத்தியது. குறிப்பாக கவிஞர் வைரமுத்து, வாலி, மேத்தா, விஜய் போன்றோர் கருணாநிதியைப் பாராட்டு மழையில் தோய்த்து எடுத்தார்கள்! கலைஞருக்கு தமிழ் உலகம் நன்றி சொல்ல வேண்டும் கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும் என்றார் வைரமுத்து

திரைப்படத்துறையில் குடும்ப ஆதிக்கம்

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் படத்தயாரிப்பு நிறுவனம் ஒரு பக்கம், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்று திரைப்படத் தயாரிப்புத் துறையில் எங்கு பார்த்தாலும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரின் ஆட்சி தான். இவர்களைத் தாண்டி யாரும் நடிக்க முடியாது, படம் எடுக்க முடியாது போன்ற நிலைமை தமிழகத்தில் நிலவியது எனலாம். ஆனால் கருணாநிதியோ "என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ?" என நொந்து கொண்டதோடு அதனை நியாயப்படுத்தினார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், ரஜினி, அவரது மகள் அய்ஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ஏன் அந்த நெஞ்செரிச்சில்காரர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை என்றார்.

ஈழச் சிக்கலில் கருணாநிதி

கருணாநிதி எதைச் செய்தாலும் தனக்கோ தனது கட்சிக்கோ அதனால் என்ன இலாபம்? என்ன இழப்பு? என்பதைக் கணக்குப் பார்த்துத்தான் செய்வார். ஈழச் சிக்கலிலும் இதுதான் நடந்தது. எண்பதுகளில் தமிழீழ ஆதரவு அமைப்பை உருவாக்கி பெரியளவில் மாநாடொன்றை மதுரையில் நடத்திக் காட்டினார். அதில் வாஜ்பாய் உட்பட பல வடநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஈழச் சிக்கலைக் கையில் தூக்குவதும் ஆளும் கட்சியாக மாறியவுடன் அதனை அமுக்கி விடுவதும் அவரது உத்தியாக இருந்து வந்தது. ஈழம்பற்றி நேரத்துக்கொரு கதை கருணாநிதி சொல்வார். ஒரு நாளைக்கு ஸ்லோவக்கியா - செக் நாடுகள் போல் பிரிவதுதான் ஈழச் சிக்கலுக்குச் சரியான தீர்வு என்பார். அடுத்த நாள் ஈழப் போராட்டம் தோல்வி அடைந்ததற்குச் சகோதர யுத்தம்தான் காரணம் என்பார். "நான் ஈழத்தமிழர்களுக்காக இரண்டுமுறை ஆட்சியை இழந்திருக்கிறேன்" என்பார். 2008 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர் ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாகத் தனது கட்சி மத்திய அமைச்சர்கள் விலகுவர்கள் என கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுச் சிக்கல் அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்தார் என தயாநிதிமாறன் துணைத் தூதரிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

ஓயாத மின் வெட்டு

ஓயாத மின்வெட்டினால் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்பட்ட போது திமுக அரசு அவற்றுக்கு உரிய தீர்வு காண எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மின்சக்தி அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை மாற்றி இன்னொருவருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கலாம். அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற முயற்சி செய்திருக்கலாம். இதில் எதையும் கருணாநிதி அரசு செய்யவில்லை. மாறாக மின் தட்டுப்பாட்டுக்கு முன்னைய அதிமுக தான் காரணம் என்று சொன்னது. இதனை மக்கள் ஒப்பவில்லை.

கையூட்டுக் கொடுக்காமல் எதையும் பெறமுடியாது என்ற கையறு நிலை

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கையூட்டுக் கொடுக்காமல் எதையும் செய்ய முடியாது என்ற கையறு நிலை உள்ளது. அரச அலுவலங்களில் சிறிய அலுவலை முடிக்க வேண்டும் என்றாலும் அரச ஊழியர்கள் பகிரங்கமாகக் கையூட்டுக் கேட்பது எழுதாத விதியாக இருந்தது. காவல்துறையைக் கேட்கவே வேண்டாம். சட்டத்தை மீறி நடப்பவர்களிடம் இருந்து மாதாந்தம் மாமூல் வாங்கும் காவல்துறையினர் அதனை உயர் அதிகாரிகளோடு பங்கு போட்டுக் கொள்கிறார்கள். எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் பணிசெய்தால் அதிகளவு பணத்தைத் தேடலாம் என்று கணக்குப் பண்ணி அந்த மாவட்டம் அந்த ஊருக்கு பணிமாற்றம் எடுத்துக் கொள்வதை எல்லா மட்டத்திலும் உள்ள அரச ஊழியர்கள் வழக்கப்படி வைத்திருக்கிறார்கள். "இலஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு. இது என்னோடு பணிபுரிவர்களுக்குப் புரியும்" என்று வாயளவில் கருணாநிதி வீரம் பேசினாலும் நடைமுறையில் அவர் கையூட்டு, ஊழல்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

கடுமையான விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு என்பது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது ஓரளவு உண்மைதான். கச்சா எண்ணெய் உலகச் சந்தையில் உயரும் போது உள்ளுரிலும் அதன் விலை உயரும் என்பது விதி. ஆனால் அதுபற்றிக் கருணாநிதி கொடுத்த விளக்கம் மக்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. "ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறைவு" என்ற விளக்கம் மக்களிடம் எடுபடவில்லை. "வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. அதனால் பொருட்களின் விலை அதகரித்துள்ளது" என அமைச்சர் ப.சிதம்பரம் கொடுத்த விளக்கம் மக்களது கோபத்தைக் கிளறியது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்பட்டது. கொலை, கொள்ளை சாதாரணமாக நடைபெற்றது. சீமான், தா. பாண்டியன் இருவரது மகிழுந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ.கருப்பையாவின் வீட்டில் புகுந்த காடையர்கள் அவரை சரமாரியாக அடித்தார்கள். வீட்டில் காணப்பட்ட பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டன. இதனை ஆளும் கட்சி குண்டர்கள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறை விசாரணை நடத்தியதாகவும் தெரியவில்லை. காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தும் அவர் பேசாமடந்தையாகவே இருந்தார். சென்னை நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையும் வழக்கறிஞர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. கருணாநிதி என்ன சொன்னார்? "காவல்துறையும் வழக்கறிஞர்களும் திமுக ஆட்சியைப் பொறுத்தளவில் இரு கண்கள் " என்று திரைப்பட வசனம் பேசினார். கருணாநிதியை சாணக்கியன் அப்படி இப்படி என்று புகழ்பாடுகிறார்கள். ஆனால் அவரது நிருவாகம் உப்புச் சப்பின்றி இருந்ததாகவே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இதனால் திருமங்கல சூத்திரம் வேலை செய்யவில்லை

தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் சிறப்பாகச் செயற்பட்டு எல்லோரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டது. விதி விலக்கு கருணாநிதி. "தேர்தல் ஆணையம் அவசர காலம் போல் நடந்து கொள்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் நானா அல்லது தேர்தல் ஆணையரா என்ற அய்யம் எழுந்துள்ளது" இவ்வாறு கருணாநிதி செய்தியாளர்களுக்குச் சொன்னார். வாக்காளர்களுக்குக் கொடுக்கக் கொண்டு போன 48 கோடி பணத்தைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. தேர்தல் விதிகளை மீறியதாக 55 ஆயிரம் வழக்குகளை ளுமே இதற்குச் சான்று.

தமிழ்த் தேசியவாதிகள் காங்கிரசை கருவறுப்போம் என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கிறது

இந்தத் தேர்தலில் திமுகவை விட காங்கிரஸ்தான் பலத்த அடி வாங்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 63 நாயன்மார்கள் போட்டியிட்டார்கள். அதில் 5 பேர்தான் கரை சேர்ந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத ஒரே தேர்தல் இதுதான். இந்த அய்ந்து தொகுதிகளிலும் இரண்டாவதாக வந்த பாராதிய ஜனதாக கட்சி வாக்குகளைப் பிரித்த காரணத்தாலேயே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்து பரப்புரை செய்தது. அதன் காரணமாக கே.வி.தங்கபாலு, இ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்க அய்யர் தோற்கடிக்கப்பட்டார்கள். அமைச்சர் ப. சிதம்பரம் தோற்றுவிட்டார் என மதியம் அறிவித்துவிட்டு மாலை அவர் 3,000 + வாக்குகளால் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது. இம் முறை காங்கிரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியும் களம் இறங்கியது. செந்தமிழன் சீமான் பேசிய கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டார்கள். 1

திமுக இந்தத் தேர்தலில் தோற்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இலவசங்களும், பண பலமும் கட்சியைக் கரைசேர்க்கும் என்றுதான் கட்சித் தலைவர்கள் நினைத்தார்கள்.

கருணாநிதி புகழை விரும்பினார். பாராட்டை விரும்பினார். அதனை அவருக்குக் கூழைக் கும்பிடு போடும் கூட்டம் வஞ்சகம் இல்லாமல் வாரி வழங்கியது. மகன் அழகிரி 58 தென்மாநில தேர்தல் தொகுதிகளில் ஒன்றுவிடாது வென்று காட்டுவதாக அப்பாவிடம் அடித்துச் சொன்னார். சொன்னது நடக்கவில்லை. 12 தொகுதிகளை மட்டும் பலத்த போராட்டத்தின் பின்னர் பிடிக்க முடிந்தது. தேர்தலில் கருணாநிதி அடைந்த படுதோல்விக்கு இவை ஒரு காரணம். இடித்துச் சொல்ல வேண்டிய தொல். திருமாவளவன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து விட்டார்கள்.

"கருணாநிதி ஒரு சாதனையாளர் ஜெயலலிதா, வேதனைகளை செய்தவர்' என, உள்துறை அமைச்சர் சிதம்பரம், பிரசார மேடைகளில் பேசியுள்ளார். கருணாநிதி செய்த சாதனைகள் என்று, அவர் எதை சொல்கிறார்? "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தட்டுப்பாடு, ஈழத்தமிழர் சிக்கல், காவிரி நீர், முல்லை பெரியாறு அணை, சாயப்பட்டறை கழிவுநீர் சிக்கல், ஆசிரியர்கள் பணி நியமனம், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் தீர்வு கண்டிருந்தால் அதை சாதனையாகக் கூறலாம். அதைவிடுத்து இலவசங்களையும் பணக் கட்டுகளையும் கொடுத்து மீண்டும் முதல்வராகியே தீர வேண்டும் என மக்கள் காலைப் பிடிப்பதா சாதனை?

"கருணாநிதி ஒரு சாதனையாளர் ஜெயலலிதா வேதனைகளைச் செய்தவர்' என, உள்துறை அமைச்சர் சிதம்பரம், பரப்புரை மேடைகளில் பேசினார். கருணாநிதி செய்த சாதனைகள் என்று அவர் எதை சொல்கிறார்? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தட்டுப்பாடு, ஈழத்தமிழர் சிக்கல், காவிரி குடிநீர், முல்லைப் பெரியாறு அணை, சிவகாசி சாயப்பட்டறை கழிவுநீர் சிக்கல், ஆசிரியர்கள் பணி நியமனம், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் தீர்வு கண்டிருந்தால் அதைச் சாதனையாகக் கூறலாம். அதைவிடுத்து இலவசங்களையும் பணத்தையும் கொடுத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்பது சாதனை அல்ல.

தமிழகத்தில் அய்ந்துமுறை முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியில் தமிழக அரசு அலுவலகங்களில் தமிழில் ஆட்சி இல்லை. பள்ளிகளில், கல்லூரிகளில் கற்கை மொழி தமிழாக இல்லை. தமிழகத்தில் இறை வழிபாடு தமிழில் இல்லை. நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயர்கள் தமிழில் இல்லை. ஏன் கருணாநிதியின் பேரன், பேத்தி ஒருவருக்கேனும் தமிழில் பெயர் இல்லை!

காங்கிரஸை விட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள பாமக கட்சி தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டிருக்கிறது. போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அது பெரும் அடியை வாங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது வன்னியர் கோட்டை எனப்படும் தொகுதிகளில் எல்லாம் படு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக வேளச்சேரித் தொகுதியை கடுமையாகப் போராடி வாங்கிய பாமக அங்கு தோல்வியைச் சந்தித்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியே தோற்று விட்டார்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட கட்சி பாமக வுக்குத்தான் 30 இடங்களைக் ஒதுக்கினார். ஆனால் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக வைப்போலவே பாமகவும் இராமதாசின் குடும்பக் கட்சி என்று பெயர் எடுத்திருந்தது. தனது மகன் மருத்துவர் அன்புமணிக்கு மேலவை நியமனம் கேட்டு இராமதாஸ் திமுகவிடம் தூதுக்கு மேல் தூதுவிட்டது அவருக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கவே உதவியது.

வன்னியர்களின் பா.ம.க. தலித்துக்களின் விடுதலைச் சிறுத்தைகள், கவுண்டர்களின் கொங்கு நாட்டு முன்னேற்றக் கழகம், தேவர்களின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், நாடார்களின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை படுதோல்வி அடைந்துள்ளன. பொதுவாக சாதிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது நல்ல அறிகுறியாகும்.

இன்று கருணாநிதி தேர்தலில் தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்து கோவணத்தோடு நிற்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த, மறுத்த மகள் கனிமொழியைக் காப்பாற்ற திமுக உயர் நிலைக் குழுவைக் கூட்டுகிறார். அமைசர் இராசா கைது செய்யப்பட்ட போது கூடாத, கூட்டாத, கூட்ட முடியாத உயர் நிலைக் குழு, குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்று விட்ட ஒரே காரணத்துக்காக கூட்டப்படுகிறது என்றால் "கழகம் ஒரு குடும்பம்" என்பது நாடறிய மீண்டும் ஒருமுறை எண்பிக்கப்பட்டுள்ளது.

"புருஷோத்தமர் போரில் புலி வாளெடுத்தால் வையகமே நடுங்கும். அவரா இப்படி நடுங்குகிறார். ம்... போர்க்களத்தில், எதிரியின் வாட்களோடு விளையாடிய கைகள் இன்று இந்த வஞ்சகியின் விரல்களை அல்லவா வருடிக் கொண்டிருக்கின்றன....'- இது மனோகரா திரைப்படத்திற்காக கருணாநிதி எழுதிய வசனம். அரை நூற்றாண்டுக்கு முன்னால் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவருக்கே பொருந்தி வருகிறது. கருணாநிதி நாட்டில் விலைவாசி உயர்ந்தபோதும் மின்வெட்டால் தமிழகமே இருண்டபோதும் நீரின்றிப் பயிர்கள் வாடியபோதும் நாட்டில் வேலை வாய்ப்பு அருகிய போதும் ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் போல பெண் சிங்கம், உளியின் ஓசை, பொன்னர் சங்கர் என்று திரைப்படங்களுக்கு, கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார். "மானாட மயிலாட" என நாட்டிய மணிகளின் நடனங்களை அல்லவா இரசித்துக் கொண்டிருந்தார்? அதனால் தான், மக்கள் கதை, வசனம் எழுதவும் நாட்டியத்தை இரசிக்கவும் முதல்வர் பதவி ஒரு தடையாக இருக்கக் கூடாது என நினைத்து அவருக்கு நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டார்கள்!

Please Click here to login / register to post your comments.