சிங்கள மக்களின் பூர்வீகம் புராதன சேரநாடு வரலாற்றியலாளர் முத்தையா

இலங்கையர்களின் பூர்வீகம் இந்தியாவே என்பது தொடர்பாக அதிகளவில் அடையாளப்படுத்தும் விடயத்தை வரலாற்றியலாளரான எஸ்.முத்தையா நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையில் வரலாற்றிலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவுகளை அவர் முன்வைத்துள்ளார்.

தொல்பொருள் ஆராய்ச்சிக்கான இந்தோ ஆசிய மன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்ததாக இந்துப் பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்வை இந்தியன் சயன்ஸ் மொனிட்டர் மற்றும் இந்தியரஷ்ய சர்வதேச கலை, விஞ்ஞான சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

ஆசிய நாடுகளுக்கு மத்தியிலான தொன்மைவாய்ந்த கலாசார பிணைப்புகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்பொருளியலாளர்களுடன் கருத்துப் பரிமாற்றங்களையும் கருத்தரங்குகளையும் பயணங்களையும் இந்த மன்றம் மேற்கொள்ளும் என அதன் தலைவர் ரி.கே.வி.ராஜன் கூறியுள்ளார்.

வேறுபட்ட மக்களால் மூன்று வெவ்வேறான வழிகளில் ஒவ்வொரு பதிவுகளுமே உரைபெயர்க்கப்பட்டுள்ளன என்று முத்தையா கூறியுள்ளார். தொல்பொருளியல் ஆய்வு மற்றும் ஆதாரத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். வாய்மூலமாகக் கூறப்படும் வரலாற்றில் ஐதீகங்கள் அல்லது இதிகாசங்கள் காணப்படுகின்றன. அவை காலத்தை பரீட்சிப்பவையாக அமையமாட்டாது. கடந்த காலத்தில் நாம் பகிர்ந்துகொண்ட பொதுவான தன்மைகளை தேடுவதற்காக இலங்கையிலுள்ள மக்கள் மற்றும் தொழில்பொருளியலாளர்களுடன் பிணைப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்று முத்தையா கூறியுள்ளார்.

இலங்கையின் வரலாறு பற்றி குறிப்பிட்ட அவர் இலங்கைக்கு இளவரசன் விஜயனும் அவனுடன் வந்தவர்களும் சென்றடைந்த 2500 வருடங்களைக் கொண்டதாக இலங்கையின் வரலாறு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயமானது சிங்கள இனத்தின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. இலங்கையில் பூர்வீக குடியிருப்புகள் இந்தியாவிலிருந்து சென்ற இந்துக்களாக இருந்தனர் என்று அவர் கூறியுள்ளார். அசோக மன்னனின் புதல்வரால் பௌத்தம் அங்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் இருந்து இந்துக்கள் அங்கு சென்றிருந்ததாக அவர் கூறுகிறார்.

கடந்த 7 இலட்சம் வருடங்களில் கடல் மட்டம் குறைந்தது 17 தடவைகளில் வற்றியிருந்ததாகவும் அதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நில தொடர்புகள் ஏற்பட்டதாகவும் அதனாலேயே சுமார் 20 மைல் தூரம் இருநாடுகளையும் தற்போது வேறாக்கி வைத்திருப்பதாகவும் முத்தையா குறிப்பிட்டுள்ளார். ஆரம்பகாலத்தில் இருந்தே வர்த்தகத் தொடர்புகள் இருந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வித்தியாசமான மக்களாக அவர்கள் (இலங்கையர்) தொடர்ந்தும் இருப்பதற்குக் காரணமாக அடர்ந்த காடுகள் இருப்பதனால் என்றும் அதனால் நடமாட்டங்களுக்குத் தடையாக அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தென்னிந்தியாவிலிருந்து மன்னர்கள் இராணுவத்தை அமர்த்திய மூன்று சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி இராச்சியத்தை பிரிட்டிஷார் வெற்றிகொண்டிருந்தனர். கண்டி இராச்சியமானது மதுரை, தஞ்சாவூர் நாயக்கர்களுடன் நெருங்கிய பிணைப்புகளைக் கொண்டிருந்தது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கலாசார செல்வாக்கு

இதேவேளை தாய்லாந்தின் இராஜதந்திர பிரதிப் பிரதிநிதி பைசான் மாரபிரிக்சவன் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், வெவ்வேறான நாடுகளிலுள்ள மக்களின் சமூக கலாசார பழக்கவழக்கங்களில் பொதுவான தன்மை இருப்பதை வரலாறு வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.

சென்னையிலுள்ள மக்கள் ஜஸ்மினை மல்லிப்பூ என்று அழைக்கின்றனர். கோல்டை தங்கம் என்று அழைக்கின்றனர் தாய்லாந்தவரான நாங்களும் அவ்வாறு அழைக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள 26 இடங்கள் முக்கியமானவையாக அடையாளங்காணப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு இடங்கள் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளன என்று ராஜன் கூறியுள்ளார். வேறுபட்ட இடங்களில் முக்கியமான கண்டுபிடிப்புகளைப் பற்றி நாங்கள் ஆங்காங்கு தகவல்களைப் பெற்றிருக்கின்றோம். அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் போன்று அல்லாமல் இலங்கையிலுள்ள தொல்பொருளியல் துறை மாணவர்கள் அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கு தமது ஆய்வை முன்னெடுக்க அனுமதிவழங்கப்படுகிறது. அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தேவையுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய தொழில்பொருளியலாளர்களை ஈடுபடுத்தாமல் இலங்கை வரலாற்றை நியாயபூர்வமான முறையில் உரைபெயர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையிலுள்ள தற்போதைய சிங்கள மக்கள் தற்போது கேரளம் தூத்துக்குடி, நாகர் கோவில் ஆகியவற்றை உள்ளடக்கிய புராதன சேரநாட்டிலிருந்து சென்றவர்களாக இருக்கக்கூடுமென்பதற்கான போதியளவு ஆவணம் இருப்பதாக முத்தையா கூறியதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மன்னர்களான முதலாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு ஆகியோர் சேர நாட்டிலிருந்து கூலிப்படைகளை கொண்டு சென்றதாக அவர் கூறியுள்ளார். இந்தப் படைவீரர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து இலங்கையிலேயே குடியமர்ந்துவிட்டனர். அவர்களின் வம்சாவளியினராக சிங்களவர்கள் இருக்க முடியுமென முத்தையா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பு இருந்தததென நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இலக்கியத்தில் ஆவணப்படுத்தப்பட்ட 17 குறிப்புகள் உள்ளன. கடந்த 17 ஆயிரம் வருடங்களாக இந்த நிலத் தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவை யாவும் புத்தகங்களில் மட்டுமே உள்ளன. அதனை எம்மால் நிரூபிக்க முடியாமல் உள்ளது. இந்த விடயம் குறித்து ஒன்றிணைந்து தொல்பொருளியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தொல்பொருளியல் ஆய்வு மனித இடம்பெயர்வுகள் தொடர்பான ஆய்வு மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் என்பன தொடர்பாக பரந்துபட்ட ஆராய்ச்சியை இலங்கை பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்தியப் பல்கலைக்கழகங்கள்மேற்கொள்ள வேண்டுமென தொல்பொருளியல் துறை நிபுணர்கள் வலியுறுத்தினர்.

இந்தியாவின் தொல்பொருளியல் மதிப்பீட்டுப் பிரிவைச் சேர்ந்த நாச்சியப்பன் கூறுகையில், யாழ்ப்பாணம் மற்றும் இலங்கை பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்பதற்கான விடயத்தை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிராமி வடிவமானது இலங்கையிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று அண்மையில் சர்வதேச சஞ்சிகையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் இலங்கையிலிருந்தே இந்தியாவுக்கு அது சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் சயன்ஸ் மொனிட்டரின் ஸ்தாபக ஆசிரியரான ரி.கே.வி.ராஜன் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா, பப்புவாநியூகினியா, தென்னிந்தியா ஆகியவற்றிலுள்ள பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மொழி, என்பனவற்றில் அதிகளவிற்கு ஒத்ததன்மை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால் ஒருகாலத்தில் இக்கண்டங்கள் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கக்கூடும். ஆனால், சர்வதேச ஒத்துழைப்புடன் மட்டுமே இவற்றை விபரமாக ஆய்வு செய்ய முடியுமென்று முத்தையா கூறியுள்ளார்.

Please Click here to login / register to post your comments.