பிளவுகளால் வீழ்பவர்கள்

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே; அவர்க்கொரு குணமுண்டு என்று தமிழ்ப்பாடல் ஒன்று உள்ளது. தமிழர்களின் தனித்துவமான குணம் என்ன வென்றால் தங்களுக்குள் தாங்களே மோதி அழிந்து போவது தான். சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குள் போரிட்டு அழிந்த வரலாறு காலாதி காலத்துக்கும் இருக்கிறது.தமிழர்களின் ஒற்றுமையின்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களை அடக்கியாள்வதில் எதிரிகள் வெற்றி கண்டனர். தமிழர்களின் வரலாறு முழுவதும் இதை நாம் கண்கூடாகக் காணலாம்.

இலங்கையிலும் தமிழர்களுக்கு இன்று வரை உரிமைகளெதுவும் கிடைக்காமலிருப்பதற்கு தமிழ் அரசியவாதிகள் தான் காரணமேயன்றி நிச்சயமாக சிங்களவர்கள் அல்லர். இராமநாதனும், அருணாசலமும் தூரநோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டார்கள். ஆனால் இவர்களின் வாரிசுகளான நடேசபிள்ளையும், மகாதேவாவும் சிங்களத் தலைவர்களை நம்பி ஏமாந்தனர். அல்லது தமது சுய நலத்துக்காகத் தமிழ்ச் சமுதாயத்தைப் பயன்படுத்தினார்கள்.

பிளவு அரசியல்

ஜி.ஜி.பொன்னம்பலம் சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை முன்வைத்த போது நடேசபிள்ளை, மகாதேவா போன்றவர்களின் உதவியுடன் டி.எஸ்.சேனநாயக்கா சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை முறியடித்தார்.இலங்கை சுதந்திரமடைந்த போது அதனை வழங்கிய சோல்பரி பிரபுவைச் சமாளிப்பதற்காக அடங்காத்தமிழன் என அழைக்கப்பட்ட பேராசிரியர் சுந்தரலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்கித் தன்னுடன் இணைத்துக் கொண்டார் டி.எஸ்.சேனநாயக்க. பொன்னம்பலமும், செல்வநாயகமும் தன்னை அரசியலில் தலையெடுக்க விடாமல் தனக்கெதிராகச் செயற்பட்டு வந்ததாலேயேதான் டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் (சுதந்திர இலங்கையின் முதலாவது அமைச்சரவை) தான் அமைச்சராக இணைந்துகொண்டார் என்று சுந்தரலிங்கம் எழுதியுள்ளார். (பார்க்க Eeylom Beginnings by C.Suntharelingam ) தனது சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை தமிழ் மக்கள் ஆதரிக்காமையால் ஜி.ஜி.பொன்னம் பலமும் டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் இணைந்துகொண்டார்.

இந்திய, பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். சுந்தரலிங்கம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு அடங்காத் தமிழர் ஒற்றுமை முன்னணியை ஆரம்பித்தார். இந்த மூவரும் மூன்று விதமான கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் நடத்தினர். செல்வநாயகம் சம்ஷ்டி ஆட்சி முறையே இலங்கைக்குப் பொருத்தமான தீர்வு என்றார்.

முக்கோண அரசியல்

சுந்தரலிங்கம் தனிநாடு தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைத்தார். பொன்னம்பலம் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார். இவ்வாறு மூன்று அரசியல் வாதிகளும் மூன்று கோணங்களில் நின்று அரசியல் நடத்தினர்.தமிழ் அரசியல்வாதிகள் மூவரும் மூன்று கோணங் களில் நின்று அரசியல் நடத்திக் கொண்டிருக்க சிங்கள அரசியல்வாதிகள் தம்முடன் இணைந்திருந்த தமிழ் அரசியல்வாதிகளையும் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடுகளைக் கனகச்சிதமாக நிறை வேற்றினர்.

தங்களுக்கிடையில் என்னதான் போட்டி, பூசல் கள் இருந்தாலும் தமிழர்களை ஒடுக்குவது என்ற விட யத்தில் மட்டும் சிங்கள அரசியல்வாதிகள் அனை வரும் போட்டி போட்டிக்கொண்டு (நீயா நானா கூடுதலாக தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பது என்று) செயற்பட்டனர்.தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது நானா நீயா முதலில் அதை அமுல்படுத்துவது என்ற போட்டியே இரு பிரதான கட்சிகளிடையேயும் காணப்பட்டது கடைசியில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தனிச் சிங்களச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

தமிழின அடக்குமுறை

1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசு நாடாக்கியதன் மூலம் சோல்பரி அரசமைப்பின் கீழ் சிறுபான்மையினங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை இல்லாமல் செய்தது அப்போது பதவியிலிருந்த சிறிமா அரசு. தமிழரசுக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட சி.எக்ஸ்.மார்ட்டின், நியமன நாடாளுமன்ற உறுப்பி னரான எம்.சி.சுப்பிரமணியம் உட்பட அப்போது ஆளும் கட்சியை ஆதரித்து வந்த தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு ஆதர வாக வாக்களித்தனர்.

1978 ஆம் ஆண்டு அரசமைப்பின் மூலம் விகி தாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை அறி முகம் செய்து சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைப்பதற்கு வழி வகுத்தார் ஜே.ஆர்.ஜெய வர்த்தன. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடமேறிய ஜே.ஆர். அவசரகாலச்சட்டம், பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தமிழர்களை ஆயுத பலத்தால் ஒடுக்க முயற்சித்தார்.

ஜே.ஆருக்குப்பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி கள் அனைவரும் தாம் ஜே.ஆருக்குச் சற்றும் சளைத் தவர்களல்லர் என்பது போல் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

இந்தியாவின் அழுத்தத்துக்குப் பணிந்து ஜே.ஆர். மாகாண சபைகளை உருவாக்கிய போதும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப்பறித்ததுடன் வடக்கையும் கிழக்கையும் சட்டபூர்வமாகப் பிரித்தும் விட்டனர்.

தொடரும் தமிழர் ஒழிப்பு

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே டி.எஸ்.சேனநாயக்கா பதவியாவில் சிங்களக்குடியேற் றத்தை ஆரம்பித்தார். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததும் கந்தளாயில் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தார்.

டி.எஸ். சேனநாயக்கா ஆரம்பித்த குடியேற்றத் திட்டம் சேருவில, வெலி ஓயா (மணலாறு) என தொடர்ந்து நாவற்குழி வரை வந்துவிட்டது. தமிழ் நாட்டை முன்பு ஆட்சிசெய்த ""நாயக்கர்'' பரம்பரை யில் வந்த சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா (பண் டார நாயக்காவின் மூதாதையர்கள் தமிழர்களே) இலங்கையில் முதல் தடவையாகத் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்டார். 1958 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடா ளுமன்றத்துக்கு முன்னால் அமர்ந்து சத்தியாக்கிரகம் செய்த போது சிங்களக்காடையர்களால் தாக்கப்பட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு (முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் உட்பட) மண்டை உடைந்தது. இதனை அவதா னித்த ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் பண்டாரநாயக் காவிடம் ஓடிச்சென்று (பண்டாரநாயக்கா அப்போது காரில் நாடாளுமன்றத்துக்கு வந்துகொண்டிருந்தார்) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது என்றார். உடனே பண்டாரநாயக்கா "கொஞ்சம் ருசி பார்க்கட்டும்'' என்றாராம்.

பண்டாரநாயக்காவுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்லர் என்பது போல் ஜே. ஆரும் 1977, 83 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார். பண்டாரநாயக்கா ஆரம்பித்த தமிழின அழிப்பு நடவடிக்கை இன்று வரை தொடர்கிறது.

தமிழ் ஆயுதப் போராட்டம்

இலங்கை அரசால் தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளைக் கண்டு மனம் வெதும்பிய தமிழ் இளைஞர்கள் முப்பத்திரண்டு ஆயுதக்குழுக்களாக உருவெடுத்து தமிழர்களுக்குத் தனிநாடு பெற்றுத் தரப்போவதாகக் கூறிக்கொண்டு வன்செயல்களில் ஈடுபட்டனர். இவர்கள் சிங்கள இராணுவத்துக்கெதிராக அல்லது அரசுக்கெதிராகப் போராடினார்களோ இல்லையோ தமிழ் மக்களைக்கொலை செய்வதில் மட்டும் (மரண தண்டனை தீர்ப்பு வழங்குவது) பின்னிற்கவில்லை.

எழுபதுகளின் நடுப்பகுதியில் ஆரம்பித்த, தமிழர்களே தமிழர்களைக் கொல்லும் நடவடிக்கை 2009 மே மாதம் பதினெட்டாம் திகதியுடன் முடி வடைந்துவிட்டது.இப்போது இலங்கைத் தமிழர்கள் "அடிமைகள்'' என்பதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் கூறிவிட்டார். ஆனால், தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மைக் கூறிக்கொண்டு தமது சுயநலத்துக்கு காக அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் அதனை ஏற்கக்காணோம்.

சிதைந்து கிடக்கும் அரசியல் தலைமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முரண்பாடு சீ.வி.கே., சிற்றம்பலம், குலநாயகம் போன்றோரின் அறிக்கைகள் ஒரு புறம். மறுபுறம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு அலுவலகங் கள் திறக்கப்படும் அதே இடங்களில் தமிழரசுக்கட்சி அலுவலகங்களும் திறக்கப்படுகின்றன.

மறுபுறத்தில் பொன்னம்பலத்தின் பேரன், கஜேந்திரன், பத்மினி கூட்டு. இந்த இரு அணிகளிலும் இடம்பெறாமல் சிவாஜிலிங்கம் தனித்தவில். இந்த மூன்று அணிகளையும் விட்டு விட்டு டக்ளஸ், கருணா, பிள்ளையான், கே.பி. ஆகிய அரச அடிவருடி கள் அணி இன்னொருபுறம். இவர்களுக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. ஒருவரை ஒருவர் கருவறுக்க மஹிந்தருக்குத் துதிபாடுவதே ஒவ்வொரு குழுவுக்கும் இடையிலான போட்டி.

மேலே கூறப்பட்ட அனைவரும் தமிழ்மக்களுக் காகத் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துப் போராடுகின்றனர். இவர்களில் பலர் ஏற்கனவே ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். இவர் களால் தமிழர்களுக்கு ஏதாவது விமோசனம் கிட் டுமா? ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக சிங்கள பேரினவாதம் ஓரணியில் திரண்டுள்ளது. பஞ்ச சீலத்தைப் பின்பற்றும் புத்த பிரானின் சீடர் ஒருவர் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தத்தால் கையொப்பமிட்டுள்ளார்.தக்க தருணத்தில் அல்லது தமிழர்களை அழிப் பதில் ஒன்று பட்டுச்செயற்படும் சிங்கள அரசியல் வாதிகள் எங்கே? சுயநலவாதிகளான தமிழ் அரசியல் வாதிகள் எங்கே? சுயநலவாதிகள் என்று அன்று முதல் இன்றுவரை அரசியலில் ஈடுபட்ட, ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளையும் தான் கூறுகிறேன்.

Please Click here to login / register to post your comments.