வன்னியில் தொடரும் துன்பியல்

இறுதி யுத்தத்தில் பலதையும் இழந்து மீளக்குடியமர்ந்துள்ள நிலையில் நாளாந்த வாழ்வை நகர்த்துவதற்காக வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. பூர்வீகமாக வாழ்ந்து வந்த தங்கள் நிலத்தில் அவர்களது வாழ்வு இன்று இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் மனந் தளராது தமது வாழ்வைக் கொண்டு செலுத்தியவர்கள் இன்று மனமுடைந்து ஆறுதல் கொள்ளயாருமற்றுத் தவிக்கின்றனர். பெயரளவில் இந்த மக்களை மீளக்குடியமர்த்திய இலங்கை அரசு, அந்த மண்ணில் மேற்கொண்ட யுத்தத்துக்குச் செலவிட்டதில் சிறு பகுதியளவைக் கூட அந்த மக்கள் தமது வாழ்க்கையை மீட்டெடுக்க உதவவில்லை.

அச்சத்தில் மக்கள்
வன்னியில் இன்று யாரைப் பார்த்தாலும் பயத்துடன் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருக்கிறார்கள். மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களில் அச்சமூட்டும் சம்பவங்கள் நாளாந்தம் இடம் பெறுகின்றன என்று தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இரவு நேரங்களில், வீட்டில் உள்ளவர்களின் விவரங்களைப் பதிய வந்திருக்கிறோம் என்று கூறி உள்ளே நுழையும் சீருடையினர் பலமணி நேரமாக வீட்டிலேயே இருந்து விட்டுச் செல்கின்றனர் என்று மக்கள் விசனப் படுகின்றனர்.

அரைகுறைத் தமிழும், முழுமையான சிங்களமும் தெரிந்தவர்கள்தான் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர். ஏன் செல்கின்றனர்? எதற்குச் செல்கின்றனர் என்ற உண்மைக் காரணம் மர்மமாகவே இருந்து வருகின்றது. இதனை அந்தப் பகுதிகளில் உள்ள இராணுவத்தினரோ, பொலிஸாரோ கண்டு கொள்வதும் இல்லையாம்.

இரவு நேரம் என்பதால் இதுபற்றி வெளியேசென்று முறையிட மக்கள் பயப்படுகிறார்கள். போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட இந்தப் பிரச்சினை வன்னி மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது.

காணிகள் ஆக்கிரமிப்பு
கிளிநொச்சியில் உள்ள சில காணிகளுக்குள் அவற்றின் சொந்தக்காரர்கள் செல்ல முடியாத நிலை இன்னமும் தொடர்கின்றது. முன்பு இந்தக் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இப்போது காணிகளில் இராணுவத்தினர் வெளியேறிவிட்ட போதிலும் அந்தக் காணிக்குள் "உத்தரவின்றி உட்பிரவேசிக்க வேண்டாம்' என்ற புதிய அறிவித்தல் பலகைகள் நடப்பட்டுள்ளன.

இராணுவ முகாமாக இல்லாதிருந்த வெறுங்காணிகளுக்குள்ளும் "பிரவேசிக்கக்கூடாது' என்ற அறிவித்தல் பலகைகள் திடீரென நடப்பட்டுள்ளன. சில படையினரும் அந்தக் காணிகளின் அருகில் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீளக்குடியமர்வு இடம்பெற்று வருகின்ற இவ்வேளையிலும் கூடத் தமது காணிகளுக்குச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் உரிமையாளர்கள் காணப்படுகின்றனர்.

சொந்த இடம் திரும்பாத ஒரு லட்சம் பேர்
போர் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த போதும் இன்னும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் மீளக்குடியமராமல் முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாடகை இடங்களிலும் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தகவல் தெரிவிக்கின்றது.

2011 மே மாதம் 13 ஆம் திகதி நிலைவரப்படி உள்ளூரில் இடம்பெயர்ந்த குறைந்தது ஒரு லட்சத்துப் 17 ஆயிரத்து 888 பேர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை என்று அந்த அறிக்கை கூறுகின்றது. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பு அலுவலகம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது.

இலங்கை அரசின் கூற்றுப்படி இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் இடைத்தங்கல் அல்லது நலன்புரி முகாம்களில் இருந்து வெளி யேறிச் சென்று விட்டார்கள். எனவே, அவர்கள் அனைவரும் மீளக்குடியமர்ந்து விட்டார்கள் என்று அரசு கணக்குக் காட்டுகிறது. ஆனால், இடைத் தங்கல் மற்றும் நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேறியவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவர்களது வீடுகளுக்கோ, விவசாய நிலங்களுக்கோ திரும்பவில்லை என்று ஐ.நா கூறுகின்றது.

அவர்கள் தமது சொந்த இடங்களில் இருந்து நீண்ட தொலைவில் உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் தங்கி இருக்கின்றனர். இவ்வாறு வவுனியாவில் 18 ஆயிரத்து 589 பேரும் மன் னாரில் 4 ஆயிரத்து 928 பேரும், யாழ்ப்பாணத்தில் 94 ஆயிர்த்து 377 பேரும் தங்கி இருக்கின்றனர். கிளிநொச்சியில் அநேகமாக மீளக்குடியமர்வு பூர்த்தியாகிவிட்ட போதும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல கிராம சேவகர் பிரிவுகள் கண்ணிவெடி அகற்றப் படுவதற்காகக் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மீளக்குடியமராமலும் மெனிக்பாம் தடுப்பு முகாமில் இருந்து வெளியேறாமலும் 4 ஆயிரத்து 981 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 401 பேர் இன்னும் இருக்கின்றனர்.

தடுப்பிலுள்ள போராளிகள்
இவர்களை விட தடுப்பு முகாம்களில் உள்ள முன்னாள் போராளிகளும் மீளக்குடியமர்த்தப்பட வில்லை.

இறுதிப் போரின் பின்னர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்பட்டுவிடும் என்று இலங்கை இராணுவத்தினர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். தற்போது புனர்வாழ்வு முகாம்களில் 3 ஆயிரத்து 572 முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் யாவும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் அனைத்து புனர் ழ்வு முகாம்களும் மூடப்பட்டு விடும் என்று அரசு கூறுகின்றது.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சால் புனர்வாழ்வு அளிப்பதற்கென 11 ஆயிரத்து 664 முன்னாள் போராளிகள் ஒப்படைக்கப்பட்டனர். 2009 ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட 12 முகாம்களில் இந்தப் புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதுவரை 7 ஆயிரத்து 343 பேர் புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. விடுவிக்கப்படாத முன்னாள் போராளிகளில் பலரும் வன்னியைச் சேர்ந்தவர்களே.

இப்படியாக அல்லல்படும் வன்னி மக்கள் தமது அடுத்த கட்ட நகர்வு பற்றி சிந்திக்க முடியாமல் தவிக்கின்ற போதும் இலங்கை அரசு எதுவித உதவிகளையும் அவர்களுக்கு வழங்குவதில்லை.

சர்வதேச அழுத்தங்கள் கொடுத்த போதும் தமிழரைப் புறக்கணிக்கும் அரசின் போக்கில் மாற்றம் ஏதுமில்லை.

தமிழ் மக்கள் மீது இனியாவது அக்கறை கொண்டு சிங்கள அரசு செயற்பட வேண்டும். அதுவே இந்த நாட்டில் சமாதானம், சாந்தி நீடிக்க வழி வகுக்கும்.

Please Click here to login / register to post your comments.