'மத்திய அரசையும் மாற்றிக்காட்டுவோம்!'

ஆக்கம்: ப்ரியன்
தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடிகை ஒருவர் சொன்ன புகார் காரணமாகக் கொஞ்சம் அடக்கி வாசித்தார் நாம் தமிழகக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இப்போது மீண்டும் பரபரப்பாகிவிட்டார். இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஜெ.வுக்குப் பாராட்டு; முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற பரப்புரை என பிஸியாக இருந்த சீமானைச்சந்தித்தோம்.

கலைஞர் குடும்பப் பிடியிலிருந்து தமிழகத் திரைத்துறை விடுபட்டு விட்டதா?

கொஞ்சம், கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது. முன்னணி நடிகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை என்று மிரட்டி, தங்கள் படங்களில் நடிக்க வைத்தது; தியேட்டர்களை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து அராஜகம் செய்தது, பரம்பரையாகத் திரைத் தொழிலில் இருக்கும் கண்ணியமான தயாரிப்பாளர்களை அவமானப்படுத்தியது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய குடும்பத்தை ஒடுக்கி, எங்கள் வாட்டத்தைப் போக்க வந்தது ஆட்சி மாற்றம்."

இலங்கை குறித்த ஜெயலலிதாவின் தீர்மானத்தைப் பாராட்டும் நீங்கள் அன்று ஜெ., பிரபாகரனைத் தாக்கிப் பேசியதையும், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பேசியதையும் எப்படி ஏற்கிறீர்கள்?

இந்த இனமே அழிந்தாலும் சரி; எனக்குப் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைப் பிடித்துக் கொண்டிருந்த கருணாநிதியால் இதுபோன்ற தீர்மானத்தைப் போட முடியவில்லையே. ‘போர் முடிந்தது என்று சொல்கிறீர்கள்; ஆனால் தமிழர்கள் மீது குண்டுமழை ஓயவில்லையே!’ என்று கேட்டதற்கு, ‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்று பதில் சொன்ன கருணாநிதி தமிழர்கள் மீது கரிசனம் கொண்டவரா? இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்த தலைவராக இருக்கிற ஜெயலலிதா, ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கிறார் என்றால் அதைப் பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு விதண்டாவாதம் செய்யக்கூடாது."

ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்கு இலங்கைப் பிரச்னை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாதே?

இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால் மானமுள்ள, எழுச்சியுள்ள தமிழன் இன்னமும் இருக்கிறான். கருணாநிதி எங்களைப் போன்றவர்களைச் சிறையில் அடைத்து, மீடியாவை தம் கைகளில் போட்டுக் கொண்டு தமிழர்களின் உணர்ச்சியைக் கொஞ்ச காலம் அடக்கிப் பார்த்தார். எனவே ஜெயலலிதா வெற்றியடைய அவரது ஈழ ஆதரவும் ஒரு காரணம்."

என்னதான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழ ஆதரவு நிலையை எடுத்தாலும் மத்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டுமே?

ஈழப் பிரச்னை மட்டுமல்லாது, காவிரி, முல்லைப் பெரியாறு என்று எந்தப் பிரச்னையை எடுத்தாலும் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசையும் மாற்றிக் காட்டுவோம். மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை காரணமாகத்தான், இன்று ஈழத் தமிழர்களுக்கு இந்த அவல நிலை.

உண்மையில் ஈழத் தமிழர்கள் இந்தியாவை தந்தையர் நாடாக நேசித்தார்கள். அவர்கள் வீட்டில் பெரும்பாலும் நேதாஜி, காந்தி, இந்திரா காந்தி படங்களே அலங்கரிக்கும். இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி நடந்தால் இந்தியாதான் வெற்றி பெறவேண்டும் என்று துடிப்பது ஈழத் தமிழர்கள் மனசு. அவர்களுக்கு எதிராகப் போரை நடத்தியது இந்தியாதான். ‘இந்தியா விரும்பிய போரைத்தான் நடத்தியிருக்கிறோம்’ என்று ராஜபட்சேவே சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டு மீனவர்களைத்தான் சிங்கள ராணுவம் பிடிக்கும். ஒரு கேரள மீனவனைப் பிடித்திருக்கிறதா? மீனவன் என்பதை விட தமிழன் என்பதால் பிடித்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். ஆனால் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு காலம் வரும். அந்த நாள் தூரத்தில் இல்லை."

உங்கள் முதல் எதிரி... காங்கிரஸ்தானே?

என் முதல் எதிரி சிங்களன்தான். அவனுக்கு எப்படி தமிழர்களை எதிர்க்கும் துணிவு வந்தது? அது நமது மத்திய அரசு கொடுத்த தைரியம்தானே? ‘இந்தியாவை நம்பாததுதான் ஜெயவர்த்தனா செய்த தவறு’ என்று கோத்தபட்சய கூறியிருக்கிறார். நமது மத்திய அரசை நம்பித்தான் தமிழினத்தை அழிக்கும் பணியில் அவர்கள் இறங்கினார்கள். இன்று சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் கொஞ்சிக் குலவுகிறது இலங்கை. சீனாவுக்கு கடற்படைத் தளம் அமைக்க இடம்கொடுத்திருக்கிறது. சீனாவோ, பாகிஸ்தானோ நம்மோடு மோதும்போதுதான் சிங்களர்களின் உண்மை சொரூபத்தைக் காணப்போகிறது மத்திய அரசு. ‘தமிழினத்தை அழிக்கத் துணை போனோமே!’ என்று அப்போது வருந்துவதால் எந்தப் பயனுமில்லை. எனவே மத்திய அரசை தலைமை ஏற்று நடத்தும் காங்கிரஸை வரலாறும் மன்னிக்காது. வருங்காலமும் மன்னிக்காது."

காங்கிரஸோடு சேரக் கூடாது என்று ஜெயலலிதாவுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். அரசியலில் உறவு, பிரிவு என்பதெல்லாம் சகஜம்தானே?

தமிழர்களை வஞ்சித்து, தமிழினத்தை அழிக்கத் துணைபோன காங்கிரஸுடன் ஜெயலலிதா எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற எங்கள் உணர்வைச் சொன்னோம். மீறினால் தி.மு.க. சுமக்கும் துரோகப் பழியை அ.தி.மு.க.வும் சுமக்க நேரிடும்."

காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்காதா?

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையில்லாத கட்சி. அது யாரோடு சேர்ந்து தேர்தலைச் சந்தித்தாலும் வேரோடும், வேரடி மண்ணோடும் தோற்கும்."

உங்கள் மீது நடிகையின் புகார்...?

என் மீது ஊழல் குற்றச்சாட்டோ அல்லது வேறெந்தக் குற்றச்சாட்டோ சொல்ல முடியாது. எனவே என்னைக் களங்கப்படுத்த என் அரசியல் எதிரிகள் செய்த சதி. இதைப் பற்றி நானோ என் தோழர்களே கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை."

‘நாம் தமிழர்’ கட்சி - லட்சியம்?

மக்களை வைத்துப் பிழைப்பது எங்கள் நோக்கமல்ல; மக்களுக்காக உழைக்கணும். படித்த இளைஞர்கள் துணையோடு அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றமே எங்கள் லட்சியம். வெறும் ஐந்து பத்து, சீட்டுகளுக்காகக் கூட்டணி சேர்ந்து அசிங்கப்பட மாட்டோம்."

தேர்தலில் போட்டி?

இப்போதல்ல. 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் யாரோடும் கூட்டணி சேர மாட்டோம். நாங்கள் தலையாக இருப்போம். வாலாக இருக்க மாட்டோம்."

சமச்சீர் கல்வி - தமிழக அரசின் தடுமாற்றம்?

சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. அதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் தரமான பாடத்திட்டம் இல்லாமல் எப்படி நடை முறைப்படுத்துவது? எனவே இந்த வகையில் தமிழக அரசைக் குறைசொல்ல முடியாது."

Please Click here to login / register to post your comments.