யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போராட்டம்

ஆக்கம்: மாருதி
யாழ்ப்பாண மக்களுக்கும் துன்பத்திற்கும் மிக நெருக்கம். 83 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த துன்பியல் நிகழ்வு இன்றுவரை விடாப்பிடியாக தொடர்கின்றது. தற்போது இம் மக்கள் படுகின்ற கஷ்ட துன்பங்களை எழுத்திலோ அல்லது சொல்லிலோ இலகுவில் விளக்க முடியாது.

அதாவது 11.08.2006 அன்று முகமாலை முன்னரங்கப் பகுதியில் மூண்ட பெரும் சமரைத்தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தை ஏனைய 24 மாவட்டங்களுடன் இணைக்கும் ஒரே ஒரு தரைமார்க்கமான A-9 பாதை மூடப்பட்டது. இந்தப் பாதை மூடப்பட்டவுடனேயே யாழ். மக்களின் குரல்வளையும் மெல்ல மெல்ல இறுகிக் கொண்டு வருகின்றது. யாழ்ப்பாண பிரதேசத்தின் புவியியல் அமைப்பும் இதில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. ஏனைய மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் ஒரு பிரதான பாதை மூடப்பட்டால் ஏனைய பல வீதிகள் மூலம் வளங்களை நகர்த்த முடியும். அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் யாழ்ப்பாணத்திற்கான ஒரே யொரு தரைப்பாதை மூடப்பட்டதன் காரணமாக அது ஒரு குடா என்பதனால் தேவைகள் அனைத்தையும் கடல் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும்.

ஒருநாளைக்கு 250 லொறிகள் உணவுப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு தேவை. ஆனால் இவற்றை ஒவ்வொரு நாட்களும் கப்பலில் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு நாளும் யாழ். குடாவுக்கு கப்பல் மூலம் அடிப்படை உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியுமா? என்பது கேள்விக்குரிய விடயம் தான்.

யாழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கப்பல் எப்ப வரும் என அதிகாலையில் பத்திரிகை செய்திகளை ஆவலுடன் பார்க்கிறார்கள். ஏனென்றால் கப்பல் வந்தால் தான் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான வழிகளைத் தேட முடியும். அதுவும் முழுமையாக உணவுப் பொருட்களை எவரும் பெறமுடிவதில்லை. அடிப்படை உணவுப் பொருட்களைக் கூட நிறைவாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலே மக்கள் காணப்படுகின்றனர்.

தற்பொழுதும் கூட பல.நோ.கூ.சங்கங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காணலாம். தமது ஜீவனோபாயத்திற்கான தொழிலைச் செய்வதா அல்லது மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதா என்ற நிலையில் அப்பாவி மக்கள். சகல வர்த்தக நிலையங்களிலும் அலுமாரிகள் வெறுமையாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான கடைகளுக்கு முன்னால் வாழைக்குலைகள் தான் பெருமளவு காணப்படுகின்றன.

ஒருவர் வாங்கிக் கொண்டு சென்ற அரிசிப்பையை இன்னொரு நபர் பறித்துக் கொண்டோடிய செய்தி யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததைப் படித்திருப்பீர்கள். அவரைத் துரத்திப் பிடித்து விசாரித்த போதுதான் உண்மை தெரிந்தது. அந்த அரிசிபையை திருடிச் சென்றவர் பின்வருமாறு கூறினார்.

அரிசிவிலை அதிகம். எனக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாது. பசிக்கொடுமையின் உச்சக்கட்டத்தில் தான் நான் இவ்வாறு செய்தேன். அவலம் அளவு கடந்து விட்டது.

பெரியவர்கள் பால்மா பைக்கட்டுகள் இன்றி சமாளித்து விடுவார்கள். ஆனால் குழந்தைகளால் அவ்வாறு இருக்க முடியாது. பால், தேநீர் வேண்டுமென்று குழந்தைகள் அழும்பொழுது தான் என்ன செய்வதென்கிறார் 4 பிள்ளைகளின் தாயொருவர்.

ஆதிகால மக்கள் வேட்டைக்குச் சென்றமாதிரி குடும்பத்தில் ஒருவர் எங்காவது உணவுப் பொருட்கள் கிடைக்கின்றதா எனத் தேடி அலைகிறார். இவரின் துவிச்சக்கர வண்டியில் எப்பொழுதும் ஒரு உரப்பை, அதனுள் சில பொலித்தின் பைகள். இரண்டு பிளாஸ்ரிக் கொள்கலன்கள். அதில் ஒன்று மண்ணெண்ணெய்க்கும், மற்றது மரக்கறி எண்ணெய்க்கும் இவ்வாறு இவரின் துவிச்சக்கர வண்டிப் பயணம் காலை ஆரம்பித்து யாழ்நகர் முதல் திருநெல்வேலி வரை சுழல்கிறது.

மாவுக்கு வரிசை, சீனிக்கு வரிசை, மரக்கறி எண்ணெய்க்கு வரிசை, மண்ணெண்ணெய்க்கு வரிசை, பெற்றோலுக்கு வரிசை, என வரிசை வரிசை என்று யாழ்.குடாமக்களின் வாழ்நாள் கழிந்து விடுகின்றது. நவராத்திரி என்பது இந்துக்களின் விசேட ஒரு தினம். இத்தினத்தில் இவர்கள் வேண்டிய அளவு கடலை, அவல் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து தாமும் உண்டு அயலவர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். ஆனால் ப.நோ.கூசங்கங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 250 கிராம் கடலை மட்டும் தான் கொடுத்தார்கள். தமது முக்கிய விழாக்கள் விரதங்களை கூட மன நிறைவாகக் கொண்டாட முடியாத நிலையில் அம்மக்கள்.

ஊரடங்கு

தற்போது காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. இந்த 12 மணி நேரத்திற்குள் தமது அன்றாட கடமைகளை முடித்து விட வேண்டும். இதனால் தூர இடத்தில் இருந்து யாழ்நகரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன். அன்றாடங் காய்ச்சிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய பிரிவுகளில் வசிக்கும் அன்றாடம் தொழில் புரிவோர் தமது பகுதிகளுக்குள் தான் வேலைக்குச் செல்ல முடியும். தூரம் கூடும் போது பிரச்சினையும் கூடும் ஏனெனில், ஒருவர் குறிப்பிட்ட தூரத்திற்கு சென்று விட்டு திரும்பும் பொழுது துவிச்சகர வண்டியோ அவருடைய வாகனமோ பழுதடைந்தால் அவரின் கதி அதோ கதிதான். ஒரு இடத்துக்குச் செல்வதென்றால் நெஞ்சு பட படக்கத்தான் செல்ல வேண்டும்.

ஆலயத்திருவிழாக்கள், விழாக்கள், மத வைபவங்கள் போன்ற இன்னோரன்ன முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அதாவது 4 மணிக்கு முன்னரே முடித்தால் தான் வருகின்றவர்கள் பதற்றமின்றி வீடுகளுக்குச் செல்ல முடியும். உதாரணமாக இரவில் இடம்பெறவேண்டிய நவராத்திரி பிற்பகல் 3 அல்லது 4 மணியளவில் தான் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளைவான் பீதி

வெள்ளைவான் என்றால் யாழ். மக்களுக்கு வயிற்றில் புளி கரைப்பது மாதிரித்தான். சாதாரணமாக ஒரு வெள்ளை வான் ஒன்று வீதியால் இரண்டு தடவை சென்றால் மக்களை பயம் சூழத் தொடங்கி விடும். வெள்ளை வான்களை சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கிறார்கள். வெள்ளைவானில் வந்து கடத்துவதும், சுடுவதுமென அட்டகாசங்கள் தொடர்வதால் நடுக்கம்தான்.

இரவுக்கொள்ளை

ஊரடங்கு வேளையில் இடம்பெறும் கொள்ளைகள் பயங்கரமாகவுள்ளது. என்ன நடக்கின்றது என்பதற்கிடையில் எல்லாம் சட்டடென்று நடந்து முடிந்து விடும். அண்மையில் ஒரே இரவில் முகத்தை கறுப்புத்துணியால் மூடிக் கட்டிக் கொண்டு ஆயுததாரிகளால் கொள்ளைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொலைகள்

சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு நாளைக்கு 4 கொலைகளுக்கு மேல் இடம் பெறுகின்றன. எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும். ஒரே ஊரில் பல கொலைகள் கூட நடைபெற்றிருக்கின்றன. இதுபற்றிப் பறைமேளம் அடிப்பவர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்;

நான் செல்லும் சகல மரண வீடுகளும் நெஞ்சை உலுக்கி வைக்கின்றன. ஏனென்றால் எல்லாம் வாழ வேண்டிய இளசுகள், அதுவும் 6 மாத குழந்தைக்கு அப்பா, 2 வயதுக் குழந்தைக்கு அப்பா, திருமணமாகி ஒருவருடம் ஆறுமாதம் கூட ஆகாத குடும்பஸ்தர்கள் என்று சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். அந்தக் குடும்பங்களின் வேதனை எப்படி இருக்கும் என்றார்.

அண்மையில் யாழ். மனித உரிமை ஆணைக்குழு ஆலுவலகத்தில் இடம் பெற்ற வன்முறைகளால் இறந்தவர்களைப் பதிவு செய்யும் நாளன்று வந்திருந்த பிள்ளைகளை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், தந்தையை இழந்தவர்கள் சகோதரர்களை இழந்தவர்களென ஒவ்வொருவரும் தமது துன்பக் கதைகளை மற்றவர்களுக்கு சொல்லும் போது தம்மை அறியாமல் கதறி அழத் தொடங்கி விட்டனர். இவ்வாறு ஒவ்வொருவரும் அழ மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் பலநூறு மரணவீடுகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நடந்தது போன்று இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

வெளித்தொடர்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வருவதற்கு 8000 க்கும் மேற்பட்ட மக்கள் காத்து நிற்கின்றனர். முன்னர் ஒரு வாரத்திற்கு ஒரு முறை நடைபெற்றது கடந்த 11 ஆம் திகதிக்கு பின்னர் இன்று வரை கப்பல் சேவை நடைபெறவில்லை. சிலர் 10 தடவைகளுக்கு மேல் கப்பல் மூலம் பயணஞ் செய்வதற்காக காத்துக்கிடந்து வந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

யாழ். சிங்கள மகாவித்தியாலயத்திற்கருகில் உள்ள தேவாலயங்களிலும் வீடுகளிலும் இரவில் தங்கி அதிகாலை வரிசையில் நின்று இடம் கிடைக்காதவர்களும் உள்ளனர். இவ்வாறு அதிகாலை 6 மணிமுதல் வரிசையில் நின்று பின்னர் சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் பதிவுகளை மேற்கொண்டு 2 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குக் கொண்டு வந்து விடப்பட்டு அங்கு மாலை 6 மணிதொடக்கம் இரவு 10 மணிவரை கடற்படையினரிடம் பதிவு செய்து ஆங்கிலத்தில் சிறுபந்தி எழுதப்பட்டிருக்கும். அந்தப் பந்தியின் கீழ் கையெழுத்து இட வேண்டும்.

இதன் பின்னர், 12.30 மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இருந்து பஸ்களில் ஏற்றப்படும் மக்கள் காங்கேசன் துறைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு இறக்கப்பட்டு கடற்படையினரிடம் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படுவார்கள். பின்னர் 5 மணியளவில் அங்கிருந்து காங்கேசன் துறை முகத்தை நோக்கி மக்களை பஸ்களில் கொண்டு செல்லும் கடற்படையினர் அங்கு கப்பலுக்கு அருகில் இறக்கி விடுகின்றனர்.

பின்பு 7 மணிக்குப் புறப்படும் கப்பல் பிற்பகல் 3.30 மணியளில் திருகோணமலையை வந்தடையும். மக்கள் கப்பலின் 3 ஆம் 4 ஆம் தட்டுகளில் (கார் தரிப்பிடத்தில்) தான் தங்க வைக்கப்படுகின்றனர். மேல் இரண்டு தட்டுகளுக்கும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மக்கள் இருக்கின்ற இரண்டு தட்டுகளும் மூடப் பட்ட நிலையிலேயே இருக்கும்.

மேல் இரண்டு தட்டுக்களிலும் படையினர்தான் ஏற்றப்படுகின்றனர். மக்கள் 1500 பேர்வரையில் ஒரு தடவை கொண்டு செல்லப்படுகின்றனர். இதே அளவில் படையினரும் பயணிக்கின்றனர். இவ்வாறு யாழ். குடாநாட்டு மக்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றைப் பெறுவதற்குள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

நன்றி: தினக்குரல், October 29, 2006

Please Click here to login / register to post your comments.