எதிர்மறையற்ற பங்களிப்புகளுக்கு வாய்ப்பளிப்பதாக அமையும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலான பன்மைவாதம்

யுத்த காலக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கத்தினை மென்மேலும் குற்றஞ்சாட்டி துன்பங்களுக்கு ஆளாக்கும் விதத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே அன்றாடம் வெளிவரும் செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாகக் காணப்படுகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதேனும் அழுத்தத்தினை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் வெளிநாடுகளின் முன்னணி அரசியல்வாதிகளுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியினையாவது ஏற்பாடு செய்யாது நாட்கள் நகர்வதாக இல்லை.

இவ்வாறான நிகழ்ச்சிகளில் அண்மையில் இந்திய தொலைக்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருடன் சேர்ந்து இராணுவப் பேச்சாளர் ஜெனரல் உபய மெதவல ஈடுபட்ட விவாதம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களை விட ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி, முன்னாள் இந்திய பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்கள் என்போரும் இவ்விவாதத்தில் பங்குபற்றினர். இவர்களில் இலங்கை யுத்தத்தின் இறுதிக் காலகட்டம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக எழுதிய திரு.டேவிட் மில்லிபாண்டும் உள்ளடங்குவார்.

இந்திய தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்பு "அலைவரிசை4' இல் வெளியிடப்பட்ட வீடியோச் செய்திப் படமாகும். இதற்காக இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைக் குற்றஞ்சாட்டி வருவது அனைவரும் அறிந்ததொரு செய்தியாகும்.

இது ஒருபுறத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எந்தளவுக்கு ஆர்வத்துடனும் பலமான சக்தியாகவும் செயற்படுகின்றனர் என்பதனையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. உள்ளூர் ஊடகங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றி பெருமளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டி அவர்கள் விளைவிக்கும் அச்சுறுத்தல்கள் பற்றி விபரிப்பதன் காரணமாக இலங்கையை அச்சுறுத்தும் எதிரிகளாக அவர்களைப் பற்றிய அபிப்பிராயம் வளர்க்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் பார்க்கும்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சர்வதேச ரீதியாக எந்தளவுக்கு இலங்கை அரசாங்கம் பற்றிய அகௌரவரத்தினை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளனரோ, அந்தளவுக்கு இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் பொதுமக்களிடம் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. அதாவது அரசாங்கம் (இலங்கையை) சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் தன்னை அநீதியாகக் குற்றஞ்சாட்டுவதாக இலங்கை மக்களிடம் கூறித் தன்னை ஒரு அப்பாவியாகவும் குற்றமற்றவராகவும் சித்திரித்து வருவதால் மக்களில் பெரும்பான்மையினர் அவ்வாறான நிலைப்பாட்டில் நின்று அரசாங்கத்தை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இலங்கை அரசாங்கமும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக அடையாளம் செய்து கொண்டு தத்தமது கருத்துகளைப் பலப்படுத்திக் கொண்டு ஒவ்வாத அல்லது பொருந்தாத உணர்வினை வளர்த்துக் கொண்டும் செயற்படுகின்றனர். வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதில் ஈடுபட்டுள்ள வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமது சமூகத்தில் ஒரு பாத்திரத்தினைத் தொடர்ந்தும் உருவாக்கி வகித்து வருவதுடன், அவர்கள் வாழும் நாடுகளின் பெருமளவினதான சமூகத்திடமும் தமது கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். தமிழீழம் எனப்படும் சுதந்திர அரசினை அடைவதற்கான நம்பிக்கையைத் தரும் வகையில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இராணுவ பலம் இப்போது இல்லை.

ஆனாலும் இலங்கை அரசாங்கத்தின் மீது யுத்த காலக் குற்றங்களைக் கொண்டு வருவதில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தீவிரமாகச் செயற்படுவதன் மூலம் அவர்களுக்கு தமது நடவடிக்கைகளுக்கு ஒரு தொடர்ச்சியான காரணத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இலங்கை அரசாங்கமும் தனக்கு எதிராக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் ஏற்படும் சர்வதேச அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி உள்நாட்டில் ஜனநாயக சுதந்திரங்களை தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுப்படுத்த வேண்டியுள்ளது என நியாயம் கற்பித்துக்கொள்ள முடிகிறது.

துரதிர்ஷ்டவசமான யதார்த்தம்

இலங்கை அரசாங்கமும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் யுத்தக் குற்றங்கள் பற்றி சச்சரவிட்டுக் கொண்டிருக்கும்போது முன்னாள் யுத்தக் களங்களில் தப்பிப் பிழைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீது எந்த ஒருசாராராலும் போதிய கரிசனம் காட்டாது இருப்பது பெரிதும் துரதிர்ஷ்டவசமானதாகும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நியாயம் வழங்கும் விசாரணைக்குக் கொண்டுவரச் செய்வதற்காகப் பயன்படுத்தும் சக்தியினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் நிலையிலுள்ள மக்களுக்கு எதுவித விமோசனங்களையும் கொண்டுவரப் போவதாகத் தெரியவில்லை. இவ்வாறு துயருற்றுக் காணப்படும் மக்களில் பெரும்பாலானோருக்கு அரசியல் உரிமைகளை விட உணவு,உடை, இருப்பிடம், குழந்தைகளின் கல்வி என்பனவே முக்கியமானதும் முன்னுரிமை வகிக்கும் தேவைகளாகவும் உள்ளன.

ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் விபரிக்கும் அடிப்படைத் தேவைகள் என்னும் தத்துவத்திலும் மக்களுக்கு முதலில் அடிப்படைத் தேவைகளே முக்கியமானவை என்பதே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மக்கள் உயர்மட்டத்திலான தேவைகளான அரசியல் உரிமைகள் உட்பட்டனவற்றை விட தமது அடிப்படைத் தேவைகளையே முதலில் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாயிருப்பர். அரசாங்கம் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களில் பெரும்பாலானோரது மீள்குடியேற்றத்திற்கு உறுதி கூறியுள்ள போதிலும் அம்மக்களது அழிவுக்குள்ளான வாழ்வை மீளக் கட்டியெழுப்பத் தேவையான வளங்களை இன்னும் வழங்கவில்லை என்பதே உண்மை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள புனருத்தாரணம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்திற்கு பல காரணங்கள் பொறுப்பாகவுள்ளன. இவற்றில் ஒன்று வளங்களின் பற்றாக்குறையும் வரையறைகளுக்குட்பட்ட வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றமையுமாகும். அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் இயல்புகள் காரணமாக அது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் முடியாத வகையில் பல்கலைக்கழகம் உட்பட்ட அரசாங்கதுறை ஊழியர்களுக்கு வேதன உயர்வினை வழங்க முடியாது திண்டாடுகிறது. அதனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல வாரங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் மக்களில் மிக முக்கியமான தேவைகளைக் கொண்டிருக்கும் பிரிவினரது அத்தியாவசியக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியாமையினை இவற்றைக் காரணம் காட்டி நியாயப்படுத்த முடியாது என்பது உண்மையானாலும் நடைமுறையில் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக மிகச் சிறியளவில் அல்லது முற்றாகவே வளங்களைப் பங்கிட்டுக் கொடுக்காமலே இருந்து வருகிறது.

அதேநேரத்தில் அரசாங்கம் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களையும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு உதவிகளை வழங்குவதனை கடுமையான வரையறைகளுக்கு உட்படுத்தியுள்ளது. அதற்கு அரசு சாராநிறுவனங்கள் துயருற்றுள்ள மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வளர்த்து விடலாம் என்ற அவநம்பிக்கையே காரணமாகும்.

இதனால் அரசுசாரா குழுக்கள், அவை அரசுசாரா நிறுவனங்களாக இருக்கலாம் அல்லது தனிப்பட்ட சாதாரண பிரஜைகளாக இருக்கலாம். எவரானாலும் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேராக வளங்களை விநியோகிப்பதாயின் பெருமளவு தடைகளைத் தாண்டியே செய்யக்கூடியதாயிருக்கும். காலத்தை விரயம் செய்வதான பல்வேறு சிக்கலான நடைமுறைகளைப் பின்பற்றி நம்பிக்கையிழந்த நிலையில் துயருற்று வாழும் மக்களுக்கு நல்ல காரியங்களையும் செய்வதற்கும் கூட அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய முடியும் என்ற நிலைமையே நிலவுகிறது.அந்த அனுமதியைப் பெறுவதும் சாதாரண காரியமல்ல. பெரும் சிக்கலான நடைமுறைகளைக் கொண்டதாகும்.

வெளிநாட்டில் வாழ்பவர்களுடனான சந்திப்பு

ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் தமது நிதி வளங்களையும் தொழில் நிபுணத்துவத்தினையும் வழங்குவதன் மூலம் ஆதரவு வழங்க விரும்பும் உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவர்கள் வெளியிட்ட கருத்தில் மிக முக்கியமானது, வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் யாவரும் ஒரே அபிப்பிராயத்துடனானவர்கள் அல்ல என்பதாகும். அவர்களும் ஒரு பன்மைவாத சமூகமாக பல்வேறு வகையினதான அபிப்பிராயங்களைக் கொண்டே காணப்படுவதாக தெரியவந்தது.

இலங்கையில் எவ்வாறு பல்வேறு இதைச் சமூகங்களிலும் வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றனவோ அதனைப் போன்றே அவர்கள் மத்தியிலும் பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.

ஒரு சிலர் இலங்கையின் யுத்தத்தின்போது ஏற்பட்ட குற்றங்களுக்காக இலங்கை அரசாங்கத் தலைவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக உள்ளனர்.

ஆனால், ஏனையோர் யுத்தத்தின்போது பாதிப்புக்குள்ளாகியவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் பெரும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.

இலங்கைக்கு எதிரானவர்களாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஒரு பிரிவினரைக் கொண்ட ஒரு குழுவினை நான் சந்தித்தேன். அவர்கள் தாம் பிறந்து வளர்ந்த நாட்டின் எதிர்கால விமோசனத்திற்கு பங்களிப்பதால் தமது கவனத்தை மையப்படுத்தியவர்களாகத் தென்பட்டனர்.

தமிழ்த் தேசியத்தினை தீவிரமாக நம்புபவர்களின் எண்ணிக்கையை ஒத்தளவில் பெருமளவினராகத் தம்மைப் போன்றவர்களும் இருப்பதாக தெரிவித்தனர். ஆயினும் தம்மைப் போன்றவர்களும் ஒரு இயக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டவர்களாக இல்லை எனவும் கூறினார்கள். அவர்களும் கூட தாம் இலங்கைக்கு சில உதவிகளை அனுப்ப முயற்சித்தபோது இலங்கை அரசாங்கம் அவர்களது முயற்சிக்குப் பல தடைகளையே விதித்ததாக முறைப்பாடு செய்தனர். வடக்கிற்கு தாம் ஏதும் அபிவிருத்திக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதானால் "ஜனாதிபதியின் பணி அமைப்பிடம்' அதற்கான விசேட அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த அமைப்பில் தமிழ் அங்கத்தவர்கள் எவரும் இல்லை என்ற குறைபாடு பற்றிய விமோசனம் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டனர். அந்த ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு இப்போது இரண்டு தமிழ் அரசாங்க ஊழியர்களை மட்டுமே நியமித்திருப்பதாகவும் கூறினார்கள்.

தற்போது வன்னியிலும் கிழக்கு மாவட்டங்களிலும் பலவீனமானவர்களையும் ஓரங்கட்டப்பட்டவர்களையும் கொண்டதான மக்கள் பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஒழுங்காகவும் கிரமமாகவும் வெளிநாடுகளிலிருந்து உதவிகளை அனுப்பக் கூடியதான உறவினர்களையோ குடும்ப அங்கத்தவர்களையோ யாழ்ப்பாணத்திலும் அல்லது கொழும்பிலும் உள்ளவர்களைப் போன்று பெற்றவர்களாக இல்லை. அவர்களில் பெரும்பான்மையானவர்களிடம் சொந்தமான எதுவித வளங்களும் இல்லை. எனவே, அரசாங்கத்தினது அல்லது ஏனைய நிறுவனங்களினது உதவியே அவர்களுக்கு விமோசனமாக அமைய முடியும். அரசாங்கத்திடம் இருந்து அவர்களுக்கு இப்போது மிகவும் குறைவான உதவியே கிடைக்கின்றது. தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப பெருமளவு உதவிகள் தேவைப்படுகின்றன. ஆனால், யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் கூட அவர்களது வாழ்க்கை தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையிலேயே காணப்படுவது பெரும் துரதிர்ஷ்டமாகும்.

யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய இந்த அப்பாவி மக்களை வலிமைப்படுத்தத் தேவையான பொருளாதார மனித வளங்களை வழங்கக்கூடிய முக்கிய பிரிவினர் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களாவர்.

அவர்களிடம் இதற்கான வளங்களும் ஆர்வமும் உண்டு. அவர்களை பெரியளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் (சிறியளவான வளங்கள் போதாது) இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையேயான விரோதம் முடிவுற வேண்டும். மறுபுறத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களது சிறியளவு வளங்களும் கூட ஒன்றுமேயில்லாத சூன்ய நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ஏதோவகையில் உபயோகமாகவே இருக்கும்.

இவற்றினைப் பற்றி இருசாரார் மத்தியிலும் இருக்கக்கூடிய தாராள எண்ணம் கொண்டவர்களிடமிருந்து எந்தெந்த வகையில் உதவிகளை மேலும் அதிகரித்த வகையில் பெற்றுக்கொள்ளலாம் என்பதனைப் பற்றி ஆராய்ந்தறிந்து செயற்பட வேண்டியது இன்றைய தேவையாகும்.

Please Click here to login / register to post your comments.