ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவை இரண்டையும் புறக்கணியுங்கள்

ஸ்ரீலங்கா அரசு விதித்துள்ள பாரிய பொருளாதாரத் தடையால் தாயகத்தில் வாழும் நம் உறவுகள் நாளும் பட்டினி கிடந்து பசியால் மெலிந்து வாடுகின்றனர். ஏ-9 பாதை மூடப்பட்டதே இந்த உணவுத் தட்டுப்பாட்டுக்கும் பட்டினிக்கும் பசிக்கும் முக்கிய காரணியாகும். இந்தப் பாதையைத் திறக்க ஸ்ரீலங்கா அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.

ஜெனிவா-1 பேச்சு வார்த்தைக்குப் பின்னர் 1,339 தமிழ்மக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். 408 பேர் காணாமல் போயுள்ளார்கள். இவர்களில் 98 பேர் சிறார்கள். வட-கிழக்கில் 1,81,643 மக்கள் இடம்பெயர்ந்து கொட்டில்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணம் வழங்குவதை ஸ்ரீலங்கா அரசு தடுத்து வருகிறது. வட-கிழக்கில் 149 பள்ளிக்கூடங்கள் ஒன்றில் அழிக்கப்பட்டு அல்லது இயங்கமுடியாது முடக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் பணம் ஸ்ரீலங்கா அரசு குண்டுகளை வாங்கி எமது மக்கள் மீது போடவே பயன்படுகிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஸ்ரீலங்கா விமானப் படை மேற்கோண்ட குண்டுத் தாக்குதலில் பூனகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளார்கள். கிளிநொச்சி மருத்துவமனைக்கு அருகில் 3 குண்டுகள் விழுந்து வெடித்ததில் மருத்துவமனைக் கண்ணாடி யன்னல்கள் உடைந்துள்ளன. மின்விசிறிகள் அறுந்து விழுந்துள்ளன.

இந்தப் பின் புலத்தில் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் புலப்பெயர் நாடுகளில் வலுப்பெற்று வருகிறது. இதில் மலேசிய தமிழ் அமைப்புக்கள் முந்திக் கொண்டு தமிழீழத்தில் அப்பாவித் தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் ஸ்ரீலங்காவின் உற்பத்திப் பொருட்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று உலகளாவிய தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஒரு காலத்தில் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் தேயிலை, இறப்பர், தென்னை ஆகியவற்றின் ஏற்றுமதியிலேயே தங்கி இருந்தது. அண்மைக் காலத்தில் இந்த நிலைமை மாறிவிட்டது.

துணி, உடுப்பு ஏற்றுமதி இன்று அதிகரித்து விட்டது. 2002 இல் இதன் ஏற்றுமதி பெறுமதி 2,424 மில்லியன் அமெரிக்க டொலராகும். இது மொத்த ஏற்றுமதியில் 53 விழுக்காடாகும். மாறாக தேயிலை ஏற்றுமதி 660 மில்லியன். இரப்பர் 27 மில்லியன். தென்னை 84 மில்லியன் ஆகக் குறைந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் முக்கிய ஏற்றுமதி பின்வரும் நாடுகளுக்குச் செல்கிறது.

ஐக்கிய அமெரிக்கா - 34.0 விழுக்காடு ஐக்கிய இராச்சியம் - 14.2 விழுக்காடு இந்தியா - 7.00 விழுக்காடு கனடா - 1.00 விழுக்காடு அவுஸ்திரேலியா - 1.00 விழுக்காடு

புள்ளி விபரங்கள் கனடாவிற்கான ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி 1992 இல் 40.7 மில்லியனாக இருந்து 2000 இல் 137.05 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இன்று இது மேலும் அதிகரித்திருக்கும் என உறுதியாக நம்பலாம். உணவுப் பொருட்கள், தைத்த துணிமணிகள் மற்றும் புடவைகள் (51.40 விழுக்காடு) இரப்பரால் செய்யப்பட்ட பொருட்கள் (17.1 விழுக்காடு) தேயிலை, கோப்பி, வாசனைப் பொருட்கள் ( 17.1) மரக்கறி மற்றும் மீன் (3.5 விழுக்காடு) ஆகியவை கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கனடா தனது மொத்த தேயிலை இறக்குமதியில் 10 விழுக்காட்டை ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இவற்றைவிட ஸ்ரீலங்கா விமான சேவையைப் பயன்படுத்துவதால் பெருந்தொகையான டொலர்கள் ஸ்ரீலங்காவின் மத்திய காப்பகத்துக்குப் போய் சேருகிறது.

எனவே பின்வரும் சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களையும் சேவைகளையும் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்குமாறு கனடிய தமிழ்மக்கள் உட்பட புலம்பெயர் தமிழர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீலங்கா விமான சேவை, ஸ்ரீலங்கா தயாரிப்பு உடுபுடவைகள், தேயிலை, மரக்கறி, கடலுணவு, பானம், ஜாம், பிஸ்கட்

இந்தப் பட்டியல் நிறைவானதல்ல. ஸ்ரீலங்கா தயாரிப்பு என வருகிற சகல பொருட்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்கள் இந்தப் பொருட்களைப் புறக்கணிக்கும் போது அங்காடிகள் அவற்றுக்கு உரிய மாற்றுப் பொருட்களை வேறு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வார்கள் என்பது திண்ணம். மேலும் ஸ்ரீலங்கா சிங்களப் பகுதியில் முதலீடு செய்வதையும், சுற்றுலா போவதையும் ஸ்ரீலங்கா காப்பகங்களில் கணக்கு வைப்பதையும் தவிருங்கள்.

Please Click here to login / register to post your comments.