'இருப்பாய் தமிழா நெருப்பாய்'

ஆக்கம்: காசி ஆனந்தன்
தமிழினத்தின் பழைய பெருமைகளை முழக்குவதை நிறுத்தி & இன்றைய இழிநிலை பற்றிப் பேச தமிழுணர்வாளர்கள் முன்வர வேண்டும்.

கங்கை கொண்டான் - கடாரம் வென்றான் - சிங்களம் அடக்கினான் என்றெல்லாம் பேசுவதை விட்டு; இமயம் விட்டோடினான் - வேங்கடத்தைப் பறிகொடுத்தான் - சேரநாடு இழந்தான் - சிங்களத்தால் அழிந்தான் என்று பேசுங்கள் - தமிழினம் கண் திறக்கும்.

வீழச்சியை ஒப்புக்கொள்ளுங்கள் - எழுச்சி வரும். அடிமைத்தனத்தை ஒப்புக்கொள்ளுங்கள் - விடுதலை வரும்.

இலங்கைத் தீவு முழுவதும் தமிழர் தாயகமாக இருந்த காலம் ஒன்று; கி.பி. 800-ல் சிங்கள மொழியும் இனமும் தோன்றிய பின்பு இலங்கைத் தீவு சிங்களர் தாயகம் - தமிழர் தாயகம் என இரு தாயகங்களைக் கொண்ட நாடாக மாறிய காலம் ஒன்று.

இலங்கைத் தீவுக்கு முதன்முதல் வந்த வேற்று நாட்டாரான போர்த்துக்கீசர், கி.பி. 1505-ல் இலங்கையில் கால் வைத்தபோது இலங்கைத் தீவு இரு தாயகங்களைக் கொண்ட நாடாகவே இருந்தது. சிங்களவர்களின் தாயகத்தைக் கைப்பற்றி முடித்து - நீண்ட காலப் போரின் முடிவில் - பெரும்பாடுபட்டுத்தான் 1619-ல் போர்த்துக்கீசரால் தமிழர் தாயகத்தைக் கைப்பற்ற முடிந்தது. இந்த வரலாற்றுச் செய்தி தமிழர் வீரத்தின், போர் ஆற்றலின் சிறப்பை எடுத்துக்காட்டும்.

1658-ல் டச்சுக்காரர்கள் வந்தார்கள் - 1795-ல் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். இரு நாடுகளாகவே - இரு நிர்வாகங்களாகவே அவர்களும் இலங்கைத் தீவை ஆண்டார்கள்.

1833-ல் நிர்வாக வசதியின் பொருட்டு - சிங்களர், தமிழர் தாயகங்கள் இரண்டையும் இணைத்து, ஒரே நாடாக ஆக்கும் நோக்கோடு - கோல்புறூக் என்னும் ஆணையாளரை பிரிட்டிஷ் அரசு இலங்கைத் தீவுக்கு அனுப்பி வைத்தது. அப்போது, தமிழர் தாயகம் 26,500 சதுர கிலோ மீட்டர் என்று கோல்புறூக் குறிப்பிடுகிறார்.

காலம் ஓடுகிறது...

1901-ல் இலங்கைத் தீவை பிரிட்டிஷ் அரசு நிர்வாக செயல்பாட்டு எளிமை கருதி, 9 மாகாணங்களாகப் பிரிக்கிறது. சிங்களவர்களுக்கு 7 மாகாணங்கள்- தமிழர்களுக்கு 2 மாகாணங்கள். வடக்கு மாகாணமும் - கிழக்கு மாகாணமும். இந்த இரு மாகாணங்களின் நிலப்பரப்பு 26,500 சதுர கிலோ மீட்டர் ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளரை சிங்களவர்கள் வளைத்து - தமிழர் தாயகத்தில் 7500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைப் பிடுங்கி -சிங்களவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 மாகாணங்களோடு இணைத்தார்கள். அன்றே தமிழீழத் தாயகத்தில் 7500 சதுர கிலோ மீட்டர் மண்ணை நாம் இழந்துவிடுகிறோம்.

காலம் ஓடுகிறது...

1948-ல் பிரிட்டிஷ் ஆட்சி இலங்கைத் தீவில் முற்றுப்பெறுகிறது. 1976-ல் ‘இனி எங்கள் கொள்கை தனித் தமிழீழ அரசுதான்’ என்று தந்தை செல்வா அறிவிக்கிறார். ஏனெனில், இடைப்பட்ட 27 ஆண்டுகள் காலத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டு சிங்களவர்களை தமிழீழத்தில் குடியேற்றி - தமிழீழ மண்ணில் மேலும் 7500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தங்கள் மண்ணாக்கிக் கொண்டனர்.

ஆக 1976-ல், தமிழீழம் 11500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலமாகச் சுருங்கிற்று.

11500 சதுர கிலோ மீட்டராகச் சுருங்கித் தேய்ந்து நின்ற தமிழீழத்தில்தான் பிரபாகரன் ஆயுதப் போரைத் தொடங்கினார்.

பிரபாகரன் ஆயுதப்போர் புரிந்த 33 ஆண்டுகள் (1976-2009) போராட்ட காலகட்டத்தில் தமிழீழத்தில் ஒரு அங்குல மண்ணைக் கூட சிங்கள ஆட்சியாளரால் பறிக்கமுடியவில்லை.

இன்று நிலை என்ன?

முள்ளிவாய்க்காலுக்குப் பின் கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழீழ மண்ணில் பழையபடி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர் தாயகத்தை முற்று முழுதாக அழித்தொழிக்கும் இனஅழிப்பு நடவடிக்கையை சிங்கள இனவெறி அரசு முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.

சிங்களப் படையினர் குடும்பங்களுக்கு கிளிநொச்சியில் 40,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகச் சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

முறிகண்டியில் 5000 ஏக்கர் நிலத்தில் சிங்களவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சொல்கிறார்.

46 சிங்கள மீன்பிடி முதலாளிகள் முல்லைத்தீவு கடற்கரையில் - ஒவ்வொருவரும் 200 சிங்கள மீனவர்களோடு குடியேறி இருப்பதாகவும் - தமிழ் மீனவர்களின் ‘கரைவலை’ மீன்பிடி நீரிமை பறிக்கப்பட்டு சிங்கள மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.

மட்டக்களப்பில் 1500 ஏக்கர் நிலம் சிங்களவர் குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அழுகிறார்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கதைகள்...

சிங்களவர் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழீழத் தேசிய இனம் சிதைந்தழிந்துபோகும் என்பது மட்டும் உண்மை. தமிழீழம் இழந்த 15,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை மீட்டுத் தருவதும் - பறிகொடுத்தது போக இன்றிருக்கும் 11500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைப் பாதுகாப்பதும் உலகத் தமிழினத்தின் தலையாய கடமையாகும்.

‘இருப்பாய் தமிழா நெருப்பாய்’ என்று ஏன் எழுதினேன்? - இப்போது புரிகிறதா?

Please Click here to login / register to post your comments.