எனக்கு உதவ யாரும் இல்லை!

ஆக்கம்: ஆனந்த் செல்லையா
சுவாசப்பை ஒன்று கிடையாது. தலையில் மட்டும் 45 தையல்கள். நடக்கவே முடியாத நிலைமை. எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு தன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.

சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் சண்முகம் பிரபல எழுத்தாளர் இல்லை. ஆனால் தடைகளை மீறி முன்னேறப் போராடும் பலரைப் பற்றி பத்திரிகைகளில் எழுதி, அவர்களுக்கு உதவிகள் பெற்றுத் தந்திருக்கிறார். அவர்களைப் பற்றி புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சத்தமில்லாத இந்த சாதனையாளரின் வாழ்க்கை இப்போது சோதனையில்.

“எனக்கு சொந்த ஊர் யாழ்ப்பாணம். ஒரு நாளிதழில் நிருபரா இருந்தேன். 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிச்சு. கண்ணில் பட்ட தமிழர்க¬ ளயெல்லாம் சிங்கள ராணுவம் இழுத்துட்டுப் போய் கண்மூடித்தனமா அடிச்சது. அப்படி தாக்கப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தன். என் இடது பக்க சுவாசப்பையையே அகற்ற வேண்டிய அளவுக்கு பயங்கர அடி. மனைவி, கைக்குழந்தையா இருந்த என் மகனோடு படகில் தமிழகத்துக்கு வந்தேன். மதுரையில் செட்டில் ஆனேன்" என்று சொல்லும் சண்முகத்தின் வாழ்க்கையை 1999-ல் நடந்த ஒரு சாலை விபத்து புரட்டிப் போட்டுவிட்டது.

"உடல் முழுக்க 150 தையல்களோடு உயிர் பிழைச்சேன். பிழைக்க மட்டும்தான் செஞ்சேன். சராசரி மனுஷனா வாழ முடியலை. என் கழுத்து எலும்பு வெடிச்சிடுச்சு. மு ழுமையான ஆபரேஷன் செய்யத் தேவையான தொகை என்னிடம் இல்லை.

சென்னைக்கு வந்தோம். சிறுசிறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினேன். போட்டோகிராஃபராகவும் பணியாற்றினேன். அதுதான் என் வருமானம். கழுத்துப் பிரச்னை முற்றிப் போக 2009-ல் என் இடுப்பிலிருந்து மூணு எலும்புகளை எடுத்து, கழுத்து எலும்போடு ஒட்ட வச்சாங்க. இதற்குப் பிறகும் விதிக்கு எங்கிட்ட கருணை இல்லை. கடந்த ஆறு மாதங்களா முதுகில் கடுமையான வலி.கழுத்து எலும்புக்கும் ஒட்ட வச்ச எலும்புக்கும் இடையே இடைவெளி விழுந்துடுச்சாம். இப்போ என்னால் நடக்கக் கூட முடியலை.அஞ்சு நிமிஷத்துக்கு மேல் என்னால் உட்கார்ந்திருக்க முடியாது. படுக்கையில் கிடக்குறதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு" என்று பரிதாபமாக சொல்கிறார். அவருக்கு இன்னொரு ஆபரேஷன் தேவை. ஆனால் அதற்குப் பணமில்லை. உதவி செய்ய உறவினர்களுமில்லை.

இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். படிக்க வேண்டிய காலம் தந்தைக்காக மருத்துவமனையிலேயே கழிந்துவிட, மகனால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இப்போது இலங்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். சோதனைகளுக்கு நடுவே ஒரு ஆறுதலாக, மகள் கலைப்பிரியா பி.டெக் முடித்து, ஒரு நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். "ஈழத்தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவள்ங்கிறதால என் மகளுக்குப் பெரிய நிறுவனங்களில் வேலை கொடுக்க மாட்டேங்குறாங்க" என்கிற சண்முகத்தின் முகத்தில் வேதனை. மகள் கொண்டு வரும் சொற்ப சம்பளத்தில் இப்போது குடும்பம் நடக்கிறது.

"வறுமை, ஊனம் போன்ற தடைகளைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் முன்னேறியவங்களைப் பற்றித்தான் நான் அதிகம் எழுதியிருக்கேன். தமிழகம் முழுக்க நான் தேடிப்பிடிச்சு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவங்க ஐநூறு பேருக்கு மேல் இருக்கும். நான் எழுதியதால், அவங்களுக்குத் தேவையான பல உதவிகள் கிடைச்சிருக்கு. ஆனால் இன்றைக்கு என்னைப் பற்றி ஒரு வார்த்தை விசாரிக்கக் கூட யாரும் இல்லை" என்று அவர் சொல்லும்போது நமக்கும் கண்கள் கலங்குகின்றன.

இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கையில்தான் கண்ணீர் என்றால் இங்கேயுமா?.

Please Click here to login / register to post your comments.