இருப்பாய் தமிழா நெருப்பாய்: அறம் கொல்லும்

ஆக்கம்: கவிஞர் காசி ஆனந்தன்
ஒருகாலத்தில் தமிழீழத்தில் சிவ தலங்களில் தேவாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருவிழாக் காலங்களில் இசை நிகழ்ச்சி & பரத நாட்டியம் & காவடி ஆட்டம் & கும்மி & கரகம் நடக்கும். மங்கல இசைக் கருவி நாகசுரம் இசைக்கும் & தவில் முழங்கும். அம்மன் கோயில்களில் உடுக்கை இசை எழும். பண்டைத் தமிழிசைக் கரு வியான பறை ஒலிக்கும். நாட்டுக் கூத்து விடிய விடிய நடக்கும். தேர்த் திருவிழாவில் அழகிய சிற்பத்தேர் தெரு உலா வரும்.

இன்று... சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு தமிழர்களின் இந்த சிவத் தலங்களும் தப்பவில்லை.

இலங்கைத் தீவில் கி.மு.1000இல் ஐம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன என்பது வரலாறு.

திருக்கோணமலை கோணேசுவரமும் - மன்னார் திருக்கேதீசுவரமும் - கீரிமலை நகுலேசுவரமும் - சிலாபம் முனீசுவரமும் - தேவன்துறை சந்திர மவுலீசுவரமும் தமிழர்களின் சைவத் திருத்தலங்களாகத் திகழ்ந்தன.

தெற்கிலங்கையில் தேவன் துறையில் அமைந்த சந்திர மவுலீசுவரமும் - மாகாணப் பிரிவினையின் போது சிங்களவர் கையில் வீழ்ந்த சிலாபம் முனீசுவரமும் தமிழீழத்துக்கு வெளியே பறிபோயிற்று.

தமிழீழத்தின் தலைநகரான திருக்கோண மலையில் சம்பந்தரால் பாடப்பட்ட கோணேசுவரம் இன்று சிங்கள இனவெறியர்களால் சூழப்பட்ட தலமாக இருக்கிறது. இக்கோயில் அமைந்த மான்கள் விளையாடும் கோணமலைக் குன்றில், வானை முட்டும் புத்தர்சிலை ஒன்றை நிறுவித் தமிழர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் சிங்களவர்கள்.

மன்னாரில் - சுந்தரரால் பாடப்பட்ட திருக்கேசுவரம் கோயில் காணியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - ‘மகாதித்த விகாரை’ என்னும் மிகப் பெரிய புத்தர் கோயில் எழுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிறப்பு மிக்க நகுலேசுவரம் அமைந்த கீரிமலை ஊரின் பெயர்கூடச் சிங்களப் பெயராய் மாற்றப்பட்டிருப்பதாகச் செய்தி.

பண்டைக் காலத்தில் அனுராதபுரத்தில் அமைந்திருந்த சிவன்கோயில் ஒன்றை அழித்து - அதன்மேல் எழுப்பப்பட்டதே ‘அபயகிரி விகாரை’ என்னும் புத்தர் கோயில் என்று, மலல சேகர - அரிச்சந்திர ஆகிய சிங்கள வரலாற்றாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

கதிர்காமம் அது தமிழர் ஊர் என்பதை ‘கதிர்காமம்’ என்னும் தூய தமிழ்ப்பெயரே உறுதி செய்யும். காலம் காலமாகத் தமிழர் வழிபட்டு வந்த முருகன் கோயில் தலமான கதிர்காமம் இன்று தமிழர் கையில் இல்லை. சிவ மதத்துக்கு எதிரான நெடுங்கால சிங்கள -புத்த அழிவு நடவடிக்கைகளில் சில இவை.

தமிழீழத்தில் - தெய்வ வழிபாட்டு இடங்களாக மட்டும் அல்ல - தமிழ்மொழி - தமிழ்க் கலைகள் - தமிழ்ப் பண்பாடு காப்பகங்களாகவும் சிவ தலங்கள் திகழ்கின்றன. இதன் காரணமாகவே இக் கோயில்கள் சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு இலக்காவதைப் பார்க்கிறோம்.

தமிழீழத்தில் 24.12.2003 வரை சிங்கள வான்படை நடத்திய குண்டு வீச்சில் 2076சைவக் கோயில்கள் உடைத்துத் தகர்த்து நொறுக்கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் ஒரு இராமர் கோயிலை அழித்தார்கள் என ஓங்கி முழக்கமிடும் இந்தியாவின் சிவ மதத்தினர், தமிழீழத்தில் 2076 சைவக் கோயில்களை சிங்கள - புத்த வெறியர்கள் இடித்து - உடைத்து அழித்துக் கொட்டியிருக்கிறார்களே - அமைதி காப்பது ஏன்?

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - தமிழீழத்தின் மூலை முடுக்குகள் எங்கும் - புதிது புதிதாய் புத்தர் கோயில்கள் தழைக்கத் தொடங்கி உள்ளன.

புலிகளின் தலைமையகமாகத் திகழ்ந்த கிளிநொச்சியில் புத்த விகாரை ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது.

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான் என்பது வரலாற்றுச் செய்தி.சேரநாட்டு எல்லையில் அவன் எழுப்பிய மங்களாதேவி கோயிலைத் தவிர - தமிழ்நாட்டில் கண்ணகிக்கு எந்த ஊரிலுமே கோயில்கள் இல்லை.

ஆனால் - தமிழீழத்தில் ஊர்தோறும் கண்ணகிக்குத் தமிழர்கள் கோயில் எழுப்பி இருக்கிறார்கள்.

1999இல் தமிழீழத்தில் - புங்குடுதீவு கண்ணகி கோயில் குருக்களின் மனைவி சாரதாம்பாளை சிங்களப்படை வெறியர்கள் - ‘கற்பரசி’ கண்ணகி கோயிலிலேயே கற்பழித்துப் பிணமாகப் போட்டார்கள்.

தமிழர்களின் கோயிலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிப் படுகொலை ஒன்றுதான் பிரபாகரனை தமிழீழ விடுதலைக் களத்தில் ஆயுதப் போராளி ஆக்கியது.

பிரபாகரனே சொல்கிறார்.

‘‘கொழும்புக்குப் பக்கத்தில் பாணன்துறை சைவக் கோயில் ஒன்றில் - 1958-இல் சிங்கள இனவெறியர்கள் ஒரு தமிழ்க் குருக்களை நெருப்பு மூட்டி உயிரோடு துடிக்கத் து டிக்க எரித்துக் கொன்றார்கள். ‘நான் சின்னஞ் சிறுவனாக இருந்தபோது - எங்கள் வீட்டில் - அடிக்கடி என் பெற்றோர் அந்தக் கொடுமை பற்றி மனம் நொந்து பேசக் கேட்டிருக்கிறேன். நான் ஆயுதம் ஏந்த அந்த நிகழ்வும் ஒரு காரணம் ஆயிற்று’ என்கிறார் பிரபாகரன்.

அறம் கொல்லும் சிங்கள - புத்த இனவெறி என்னதான் வலிமைமிக்கதாக இருந்தாலும் - தமிழீழத் தேசிய இனம் பணியாது - தமிழீழ விடுதலைப்போர் தணியாது என் பதில் ஐயமில்லை.

விடுதலைக்கான தேவை இருக்கும் வரை -விடுதலைக்கான போராட்டமும் இருக்கும்.

Please Click here to login / register to post your comments.