இதைச் செய்தால், முதல்வர் பெயர் காலமெல்லாம் இருக்கும்!

ஆக்கம்: தி.கோபிவிஜய்

தூக்கு தண்டனைக்கு எதிரான தமிழகம்!

'இப்போது நாம் வருத்தப்பட வேண்டியது கொடியவர்களின் தீமையைக் காட்டிலும், நல்லவர்கள் என்போரின் மௌனத்​​துக்காக!’ என்று உரக்க முழங்கியபடி, தூக்குத் தண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்​டங்களும் போராட்டங்களும் நடக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மௌனத்தை உடைக்க வேண்​டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது மத்திய அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், ஆகியோரின் கருணை மனுக்களை சமீபத்தில் குடியரசுத் தலைவர் நிராகரிக்க... கட்சிப் பாகுபாடு இன்றி, அனைத்துத் தலைவர்களும் கண்டனக் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் எந்தப் போராட்டம் என்றாலும், அது பொதுவாக சென்னை அல்லது கோவையை மையம்கொண்டே ஆரம்பமாகும். ஆனால், இந்த முறை வீதிக்கு வந்து முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தது ஓசூர்வாசிகள்தான்.

காவல் துறையினர் அனுமதி மறுத்ததையும் மீறி, கடந்த 13-ம் தேதி, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் திரண்ட தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியினர், ''20 ஆண்டுகளுக்கும் மேல் அநியாயமாக சிறையில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை, இரக்கம் இல்லாமல் தூக்கில் இடுவதா? மத்திய அரசின் இந்த அராஜக முடிவை தமிழக அரசு, ஆளுநர் மூலம் முறியடிக்க வேண்டும்!'' என்று கொந்தளித்தனர்.

அன்று மாலையே மதுரை தலைமைத் தபால் நிலையம் அருகில் பெரும் கூட்டமாகத் திரண்ட தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள், ''சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டும் இன்றி, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு மற்றும் புல்லர், மகேந்திரநாத் தாஸ் ஆகியோர் மீதான தண்டனைகளையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!'' என்று மதுரையைக் குலுங்க வைத்தனர்.

நாம் தமிழர் கட்சியும், பெரியார் திராவிடர் கழகமும்இணைந்து கடந்த 16-ம் தேதி, தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடத்திய பொதுக் கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இளைஞர் கூட்டம், மத்திய அரசை வார்த்தைகளால் வறுத்​தெடுத்தது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் சார்பற்ற இயக்கங்கள், தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் அடுக்கடுக்காகப் போராட்டத்தில் குதிக்க... தமிழகத்தில் எழும் இந்த ஆவேச அலையை, உலக நாடுகளும் உற்று நோக்க ஆரம்பித்து இருக்கின்றன.

கடந்த 18-ம் தேதி, மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னையில் இருந்து வேலூர் சிறைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும் போராட்டம் நடந்தது. நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் பேரணியைத் தொடங்கிவைக்க... சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வழி நெடுகிலும் உள்ள கிராம மக்களிடம் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு ஆதரவு தேடியபடி சிறையை நோக்கி சீறிப் பாய்ந்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சிறைக் காவலர்கள் கொஞ்சம் ஆடிப்போனார்கள்.

கடந்த 19-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு திரண்டு கண்டனக் குரல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு கருத்தரங்கம் நடந்தது. உலக மனிதாபிமானக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு திரண்ட கூட்டத்தில் அந்த மண்டபமே பிதுங்கியது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பெரியார் திராவிடர் கழகம் கு.இராம கிருஷ்ணன், தோழர் பாமரன், தோழர் பிரிட்டோ போன்றோர் கோவையைக் கிடுகிடுக்க வைத்தனர்.

கடந்த 20-ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து​கொண்டார் வைகோ. மக்கள் சக்தி கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல அமைப்​புகள் ஒன்று திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பனியன் அணிந்திருந்தனர். கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், பேராசிரியர் சரஸ்வதி, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோருடன் மேடை ஏறிய வைகோ, மத்திய அரசுக்கு எதிராக முழங்கிவிட்டு, ''முதல்வர் அவர்களே... நீங்கள் மனது வைத்து இந்த மூன்று உயிர்களைக் காப்பாற்றினால், காலம் எல்லாம் இந்த தமிழ்ச் சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும். வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்...'' என்று ஜெயலலிதாவுக்கு மனம் உருக கோரிக்கை வைத்தார்.

26 தமிழர் உயிர் பாதுகாப்புக் குழு அமைத்து அதில் 23 பேரின் உயிரைக் காப்பாற்றக் காரணமாக இருந்த பழ.நெடுமாறனை ஒருங்கிணைப்​பாளராகக்​கொண்டு 'மூன்று தமிழர்கள் உயிர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதில், ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் பலரும் பாகுபாடு பார்க்காமல் ஒன்றிணைந்து உள்ளனர். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கினை ரத்து செய்யக் கோரி, 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் இந்த இயக்கத்தின் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. மேலும், 26-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்தி, மத்திய அரசுடன் மல்லுக்கட்டப் போகிறது இந்த இயக்கம்.

மூன்று தமிழர்கள் உயிர் காப்பதை மட்டுமல்லாமல்... 'இனி யாருக்குமே மரண தண்டனை வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் கொந்தளித்து வருகிறது!

Please Click here to login / register to post your comments.