ஜெனிவா களத்தில் யாருக்கு வெற்றி?

ஆக்கம்: கே. சஞ்சயன்

நன்கு திட்டமிடப்பட்ட ஒரு அதிரடித் தாக்குதலை ஜெனிவாவில் சந்தித்துள்ளது இலங்கை அரசாங்கம். இப்படியொரு தாக்குதலை அரசாங்கம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப் போகிறார் என்ற தகவல் கூட இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

எல்லாமே தயாராகி விட்ட பின்னர் தான் தகவல் சொல்லப்பட்டது. அது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்திருக்க முடியாது.

ஏனென்றால் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட வாய்ப்பில்லை என்றே அரசாங்கம் நம்பியிருந்தது.

அந்த நம்பிக்கையில் அரசதரப்புக் குழுவினரிடம் ஒருவித அலட்சியம் கூட இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனாலும் அவதானமாக விழிப்புடன் இருக்குமாறு அரசதரப்பு பிரதிநிதிகள் கேட்கப்பட்டிருந்தனர்.

ஜெனிவாவில் போய் இறங்கிய அரசுப் பிரதிநிதிகள் அங்கு இரண்டு கட்டங்களாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விருந்து கொடுத்தனர். இதன்போது தான் அந்த விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது.

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் பிரதிநிதிகள் மூலம் பான் கீ மூனின் முடிவைத் தெரிந்து கொண்ட அரசாங்கத் தரப்புக்கு அதிர்ச்சி எந்தளவுக்கு இருந்திருக்கும் என்பதைக் கூற வேண்டியதில்லை.

அதிலும் இலங்கை அரசுக்குத் தெரியாமல் ஒரு நகர்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கும் போது இந்த அதிர்ச்சி இரட்டிப்பாகியிருக்கும்.

மேற்குலகம், ஐ.நா. என்பன நன்கு திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொ ண்டிருக்கிறது என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிகிறது.

கடந்தமாத இறுதியில் கொழும்பு வரவிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தனது பயணத்தை மீளமைத்ததே அரசாங்கத்துக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும்.

அவர் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகஇ இரண்டு வராங்களுக்கு முன்னதாக கொழும்பு வந்திருக்க வேண்டியவர். ஐரின் சூறாவளி அவரைத் தடுத்து விட பயணத் திகதியை மாற்றியமைத்தார்.

செப்ரெம்பர் 12ம் திகதி பிளேக் கொழும்பு வருவார் என்ற தகவல் அரசுக்கு அனுப்பப்பட்ட போதே, அவர் நல்லிணக்க ஆணைக்குழு பற்றியும் விவாதிப்பார் என்ற தகவலும் பரிமாறப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் விக்ரோறியா லுலன்ட் இதனை முன்கூட்டியே வெளிப்படுத்தியும் இருந்தார்.
பிளேக்கின் பயணத் திட்டத்தினால் அரசாங்கத் தரப்பின் ஜெனிவா திட்டங்கள் பல குழப்பமடைந்தன.

குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்காமல் திரும்பி வரவேண்டியிருந்தது. அதுவும் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளி விடும் ஒரு நகர்வாகவே கருதப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கொழும்பு திரும்பி பிளேக்கை சந்தித்துக் கொண்டிருந்த போது தான் ஜெனிவாவில் பூகம்பம் கருக்கொள்ளத் தொடங்கியது.
மூன்று நாட்கள் முன்னதாகவே, பான் கீ மூனின் முடிவை அறிந்து கொண்டிருந்தது அரசதரப்பு. இதனால் அரசாங்கதரப்பு பிரதிநிதிகள் அதிகபட்சமான அழுத்தத்துக்குள் சிக்கியிருந்தனர்.

இந்தநிலையில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய போது, இலங்கை மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த அந்த அழுத்தமும், கோபமும் இன்னும் அதிகரித்தது.

இவையெல்லாம் சேர்ந்து அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் உரை கடுமையானதாக மாறியது.

அவர் நவநீதம்பிள்ளை பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியதுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் முடிவு பற்றிய செய்தியை தாம் மூன்றாவது தரப்பின் ஊடாக அறிய நேரிட்டதாக எகிறிப் பாய்ந்தார்.

இன்று இலங்கைக்கு ஏற்பட்டது நாளைக்கு ஏனைய நாடுகளுக்கும் நடக்காதா என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்தநிலையில் தான் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தலைவருக்கும். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும் அனுப்பி வைத்தார்.

இப்போது இந்த அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கையில் உள்ளது. அடுத்து இந்த அறிக்கையின் மீது விவாதம் நடக்குமா இல்லையா என்ற கேள்வி வலுவாக உள்ளது.

இந்தக் கேள்விக்கான பதில் இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தை அவசரப்பட்டு கையில் எடுத்து விவாதிக்கின்ற நிலைப்பாட்டில் மேற்குலகம் இல்லை.

பொறுமையாக இந்த விவகாரத்தை கையாளும் நிலையிலேயே மேற்குலகம் இருப்பதாக தெரிகிறது.

அதேவேளை இலங்கை அரசோ ஜெனிவாவிலும் சரி. ஏனைய இராஜதந்திர முறைகளிலும் சரி தன்னால் இயன்றளவுக்கு பிரசாரம் செய்து இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுப்பதை தடுக்க முனைகிறது.

ஜெனிவாவில் இருந்து திரும்பியுள்ள அமைச்சர்கள். நிபுணர்குழு அறிக்கை விவாதத்துக்கு வராது என்கின்றனர்.

40 இற்கும் அதிகமான நாடுகளின் பிரநிதிகளைச் சந்தித்து நிலைமையை விளக்கியுள்ளதாகவும்இ ஐ.நா நிபுணர்குழு அறிக்கைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய சட்டவலு கிடையாது என்றும் வாதிடுகிறது அரசாங்கம்.

இலங்கை அரசாங்கம் இதையே தான் நிபுணர் குழு அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து சொல்லிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்த நிபுணர்குழு ஆய்வுகள் நடத்தி, அறிக்கை வெளியிட்டு, அது உலகெங்கும் பரிமாறப்பட்டுஇ இப்போது ஐ.நா அமைப்பு ஒன்றினது பரிசீலனை வரை வந்து நிற்கிறது.

அத்தகைய நிபுணர்குழுவை தனிநபர் குழு என்று விமர்சித்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். இந்தவாதம் எந்தளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குரியது.

வலுவான மேற்குலகின் முடிவுகளுக்கு முன்னால் இதுபோன்ற வாதங்கள் எடுபட வாய்ப்பில்லை என்றே கருதலாம். ஆனாலும் இலங்கை அரசு பிரசாரங்களின் மூலம் நாட்டு மக்களுக்கு ஒருவித நம்பிக்கையூட்டி வருகிறது.
இருந்தாலும் தமக்கு நெருக்கடி கொடுக்கும் மேற்குலகை சமாளிப்பதற்கு வேறு வழிகளிலும் அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக கொழும்பு வந்த பிளேக்கிடம் அரசாங்கம் அடக்கியே வாசித்துள்ளது.

முன்னரென்றால், பிளேக் அல்லது அமெரிக்கா ஏதாவது கூறி விட்டால் போதும்- எகிறிப் பாய்ந்து எதிர்க்கும் அமைச்சர்கள் எவரும் இம்முறை வாய் திறக்கவில்லை.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்தைக் கூட அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறி விட்டது அரசாங்கம்.

பிளேக்கின் பயணம் அமெரிக்காவுடனான உறவுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சரவைப் பேச்சாளர்.
கடந்தமுறை பிளேக் கொழும்பு வந்த போது அவரைச் சந்திக்காமல் தவிர்த்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை பிளேக் வந்தவுடனேயே காலை உணவு கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்துள்ளார். இவையெல்லாம் ஒன்றும் சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை.

பான் கீ மூன் எடுத்த முடிவு, அதுபற்றி இலங்கைக்குத் தெரியப்படுத்தாமல் மறைக்கப்பட்டது, அதை கடைசி நேரத்தில் மூன்றாவது தரப்பின் ஊடாக கசிய விட்டது, பிளேக்கின் பயணத் திட்டம், என்று எல்லா நிகழ்ச்சி நிரல்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்திருக்கலாம்.

முன் கூட்டிய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் வகுக்கப்பட்ட திட்டங்களுக்கேற்ப அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அழுத்தங்களின் விளைவாக, சில விடயங்களில் அரசாங்கம் இறங்கி வந்துள்ளது.

இப்போது பிளேக்கிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான் ஜெனிவா பற்றிய நம்பிக்கையை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஆனால்இ ஜெனிவாவில் தொடர்ந்தும் இதேநிலை இருக்கும் என்ற நம்பிக்கையில் அரசாங்கத்தினால் இருக்க முடியாது.

அமெரிக்காவின் அழுத்தங்கள் விடயத்தில், இலங்கை அரசு எந்தளவுக்கு இணங்கிப் போகிறதோ அந்தளவுக்கு தான் ஜெனிவாவில் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கலாம்.

பிளேக் தனது செய்தியாளர் சந்திப்பில் சர்வதேசத்துடன்- குறிப்பாக ஐ.நாவுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் தான் மேற்குலகிற்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பிரதான போரே நடக்கப் போகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மேற்குலகை திருப்திப்படுத்தும் ஒன்றாக அமையாது போனால், மனிதஉரிமைகள் பேரவையில் நிபுணர்குழு அறிக்கை மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும். அதனை எதிர்கொள்வது தான் சிக்கலானது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை மேற்குலகம் ஏற்றுக் கொள்ளத் தக்க நம்பகமான அறிக்கை ஒன்றை ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை.

இப்போதைக்கு இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட்டால் போதும்- கொஞ்சம் காலஅவகாசம் தேடிக் கொள்ளலாம் என்றே பார்க்கிறது.

இருதரப்புமே விட்டுப் பிடிக்கின்ற திட்டத்தோடு தான் காய்களை நகர்த்துகின்ற நிலையில்- இந்த விவகாரம் இறுதியானதொரு நிலைக்கு வருவது இப்போதைக்குச் சாத்தியமில்லை.

Please Click here to login / register to post your comments.