தேச விடுதலைக்குப் போராடிய சமூகம் இருப்பதற்கு இடமின்றி அலைவதா?

ஆக்கம்: கிருஷ்ணமூர்த்தி
வடக்கிலே காணி தொடர்பான விவகாரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இதனால் மக்களுக்கான உதவிகளை வழங்குவதிலும் வீடமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெவிக்கின்றனர். வடக்கில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணியற்ற குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. இவர்களில் அரச காணிகளில் அத்துமீறிக் குடியேறியவர்களாக இருக்கின்றனர்.

இன்னொரு சாரார் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக குடியிருப்போராக உள்ளனர். ஆனால், இவர்களுக்கு உறுதிப்பத்திரமோ அனுமதிச் சான்றுகளோ கிடையாது. ஆகவே, இரவற் காணிகளில் அத்துமீறிக் குடியிருப்போராகவும் அரச காணிகளில் சட்ட விரோதமாக குடியிருப்போராகவுமே காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறு இருப்போருக்கு சட்ட ரீதியான உதவிகளை தம்மால் வழங்க முடியாதுள்ளதாக அதிகாகள் கூறுகின்றனர்.

காணியற்றோருக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்னம் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் காணிப்பிரச்சினை தொடர்பாக உயர்மட்ட மாநாடுகளை அரசாங்கம் நடத்தியுள்ளது.

தற்போது காணி விபரங்களை பதியும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் காணியற்றோருக்கான பதில்கள் எந்தத் தரப்பினடமிருந்தும் வழங்கப்படவில்லை.

இதனால், காணியற்றோர் உதவிகளைப் பெறமுடியாமலும் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.

போரின்போது இள வயதினரின் திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. இவர்களுக்கு காணிகளோ நிரந்தர வருமானங்களோ கிடையாது. போர்க்காலச் சூழலை எதிர்கொள்வதற்காக அன்றைய நிலையில் திருமணத்தை மேற்கொண்டவர்கள் இப்போது உதவிகளோ இருப்பிடமோ இல்லாத நிலையில் அல்லற்படுகின்றனர்.

இவர்களுக்கு காணியிருந்தால் தம்மால் உதவமுடியுமென மாவட்டச் செயலர்கள் தெவிக்கின்றனர். ஆனால் காணியை எங்கே இருந்து எப்படிப் பெற்றுக்கொள்வதென தெரியாத நிலையில் எல்லோரும் இருக்கின்றனர்.

இதேவேளை அரச காணிகளை இனங்கண்டு அந்தக் காணிகளில் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென சக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அத்துடன் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பகுதியை சில தனியார் உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்கின்றனர்.

இவர்களில் அநேகர் வன்னியை விட்டு நீண்ட காலமாக வெளியேறி விட்டனர். சிலர் சில தலைமுறைகளாகவே இந்தக் காணிகளுக்கு வராத நிலையிலுள்ளனர். வேறு சிலர் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுமையைப் பெற்றுள்ளனர்.

ஆனால், இவர்களின் காணிகளில் காணியற்ற வன்னி மக்கள் நீண்ட காலமாகக் குடியிருந்து வருகின்றனர். மேலும் போர்க்காலத் திருமணங்களில் புதிய குடும்பமாகியவர்களும் இந்த பராமரிப்பற்ற காணிகளில் குடியேறியுள்ளனர்.

என்றபோதும் இவர்களிடம் காணி உறுதி கிடையாது. உறுதியை வைத்திருப்போர் வெளியே உள்ளனர்.

இத்தகைய நிலையில் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வதென ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் அரசாங்க அதிகாகள். தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு காணியற்றோருக்கு குடியிருக்கக் கூடிய அளவில் காணிகளை வழங்குவதற்கு பெருந்தொகையான காணியுள்ளோர் முன்வரவேண்டுமென வன்னியிலுள்ள சக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

ஆனால் இந்தக் கோரிக்கைக்கு ஒரு சிலரைத் தவிர ஏனையோர் கனத்த இறுக்கமான மௌனத்தையே கடைப்பிடிக்கின்றனர். காணியுள்ளவர்கள் மனம் திறந்து காணியற்றவருக்கு காணிகளை வழங்க முன்வந்தால் அரச, அரச சார்பற்ற உதவிகளை அந்த மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை கணிசமானளவு தீர்த்துக்கொண்டு முன்னேறுவதற்கு அந்த மக்களால் இயலுமென தொண்டு நிறுவனமொன்றின் மூத்த அதிகாரி கூறுகிறார்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தாமதமின்றிக் காணியற்றோருக்குத் தீர்வொன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் ரீதியான அழுத்தத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி போன்ற தரப்பினர்கள் முயற்சிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உரிய காலத்தில் காணியைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஒதுக்கப்பட்டுள்ள உதவித் திட்டங்கள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஏனெனில் அரச , அரச சார்பற்ற உதவிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் நடைமுறைப்படுத்தப்படுபவை. அத்துடன் திட்டமிடல் காலத்திற்குள் உரிய தகுதி நிலைகள் இல்லையெனில் அவை திட்டத்திற்குள் உள்வாங்கப்படாது எனவும் இந்த அதிகாரிகள் தெவிக்கின்றனர்.

ஆகவே, எல்லாவற்றுக்கும் காணி இன்று முக்கிய ஆதார தேவையாக மாறியுள்ளது.

இதைக்குறித்து அண்மையில் பச்சிலைப் பள்ளிப் பிரதேச செயலர் த. குந்தன் தெரிவித்த கூற்று இங்கே கவனிக்கத் தக்கது.

காணியற்ற வறிய மக்களின் நிலமையைக் கருத்திற் கொண்டு அதிகளவிலான காணிகளை வைத்திருப்போர் அவற்றைப் பகிர்ந்து மக்களுக்கு வழங்குவது சிறந்த மனிதாபிமானப் பணியாகும் என்று அவர் தெவித்திருந்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் காணி உச்ச வரம்புச் சட்டங்களையும் மீறி சில குடும்பங்களுக்கு நூற்றுக்கணக்கான நிலம் உள்ளன. இந்தக் குடும்பங்கள் இன்று நாட்டிலேயே இல்லை என்று தெவிக்கப்படுகின்றது. இவர்கள் மனம் இரங்கி காணியற்றவர்களுக்கான காணிகளை வழங்குவதன் மூலம் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்பவராக கருதப்படுவர்.

பெரும் நிலப்பரப்புகளை பராமரிப்பின்றிய நிலையில் விட்டுவிட்டு வெளிநாடுகளில் உரித்தாவணங்களை மட்டும் வைத்திருப்போர் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு வகை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

தற்போது மேற்கொள்ளப்படும் காணி தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பராமரிப்பின்றி காணிகள், ஆட்களற்ற காணிகள், வெளிநாடுகளில் உள்ளவர்களது காணிகள் போன்ற விபரங்கள் திரட்டப்படும். இதன் மூலம் உண்மை நிலைவரத்தை அரசு அறிய வாய்ப்புள்ளது.

எனவே அடுத்த கட்டத்தில் இந்த நிலைமைகளுக்கு ஏற்ப சில புதிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடும். அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமிடத்து அது சட்டரீதியானதாக கருதப்பட்டு இந்தக் காணிகள் பறிமுதல் செய்யப்படக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

எனவே, அத்தகைய ஒரு நிலைக்கு வழியேற்படுத்தாமல் பெருமளவு காணியை தங்கள் வசம் வைத்திருப்போர் குடியிருக்க நிலமற்றோருக்கு ஒரு சிறுதுண்டு காணியையாவது வழங்க முன்வரவேண்டும்.

போராட்டத்திலும், போரிலும் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்கள் அநாதரவான நிலையில் கைவிடப்பட்டிருப்பது ஏற்புடையதேயல்ல. அவர்களுக்கான ஆதரவையும் உதவிகளையும் செய்வது கூட ஒரு வகையில் தேசிய பணிதான்.

தரிசு நிலங்களாகவும் புதர் மேடுகளாகவும் தங்கள் காணிகளையும், தங்கள் ஊர்களையும் விட்டு வைப்பதிலும் பார்க்க மனிதர்கள் வாழும் இடங்களாகவும் விளைச்சல் நிலங்களாகவும் அவற்றையும் தங்கள் சக மனிதர்களே மாற்றி வைத்திருப்பது எவ்வளவோ மகத்தானது என்பதை காணிச் சொந்தக்காரர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இங்கே கூறப்படுவது, யாருடைய காணியையும் பலவந்தமாகப் பறிப்பதாகவோ, அல்லது அவர்களுடைய உரிமைகளில் அத்துமீறுவதாகவோ கருதப்படத் தேவையில்லை. ஆனால், பழம் பெருமைகளுக்காகவும் வேறு அர்த்தமற்ற காரணிகளுக்காகவும் பற்றை பத்திய நிலையில் நிலத்தை வைத்திருப்பது ஏற்கக்கூடியதல்ல.

இதேவேளை, தரிசாக காணப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்று ஏழை விவசாயிகளுக்கு வழங்கியிருப்பதாகவும் இதன்மூலம் 45 ஆயிரம் விவசாயிகள் நன்மைகளைப் பெற்றிருப்பதாகவும் இலங்கையில் உதவிப்பணிகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. முகவர் அமைப்பொன்றின் பிரதிநிதி அண்மையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்திருந்தார்.

இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். அபிவிருத்தி என்பதும் உதவி என்பதும் இங்கே இணைநிலையிற் செயற்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும் நிலச்சுவான்தர்களாக இருந்தவர்களின் வாரிசுகள், இன்று புலம் பெயர் நாடுகளில் மிக உச்சமான வசதிகளுடன் வாழ்கின்றனர்.

இவர்களுடைய மூதாதையரின் காணி மற்றும் சொத்துகளைப் பற்றிய மெய்யான விபரமே தெரியாத நிலையில் இவர்கள் அந்த நாடுகளில் இருக்கின்றனர்.

இவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு, அந்தக் காணிகளைப் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களும் சக ஆர்வலர்களும் மேற்கொள்ளலாம்.

இது இன்று அவசியமான பணியாகும்.

“தனியொருவருக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதியார் சொன்னார். தனியொரு குடும்பத்துக்கு ஒரு குடியிருக்கும் நிலமில்லை என்றால், அவர்களால் எந்த நிலையிலும் வாழவே முடியாது.

நாம் ஒரு தேச விடுதலைக்காகப் போராடிய சமூகம். ஆனால், இருப்பதற்கு எங்களுக்கு வீடும் இல்லை. அதை அமைப்பதற்கு எங்களுக்குக் காணியும் இல்லை என்று ஒரு முதியவர் கண் கலங்கிய நிலையில் சொன்னதைக் கேட்டேன்.

அவருடைய இரண்டு பிள்ளைகள் போராட்டத்தில் மரணமடைந்திருக்கின்றனர்.

ஆனால், அவர்களின் குடும்பம் இருப்பதற்கு இடமின்றி அலைந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்தக் காணியற்றிருப்போன் நிலைமையைத் தீர்த்துக் கொள்வதற்கு இன்று அரசாங்கம், நிலங்களை அதிகமாக வைத்திருப்போர், புலம் பெயர் நாடுகளில் இருப்போர் ஆகிய தரப்பினரே மனந்திறந்து செயற்பட வேண்டும்.

இதுவே மக்களின் எதிர்பார்ப்புமாகும்.

Please Click here to login / register to post your comments.