யாழ் - தக்கவைக்கப் போராடும் சிங்களப்படை

மாவிலாறு நீர் பிரச்சினையைக் கொண்டு தனது இராணுவ, அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முயற்சித்த அரசு இன்று பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்சி தலைமையில் 3,000 வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை 26 நாட்களாகியும் இன்றுவரை இலக்கை அடையவில்லை. போர்நிறுத்தத்தை தனக்கு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தனது நீண்ட கால இராணுவ நலன்களை எட்ட முற்பட்டுள்ளது அரசு.

அதாவது தெரிவு செய்த நிலைகள் மீது படை நடவடிக்கைகளையும், விமானத்தாக்குதல்களையும் மேற்கொள்வது இவை ஒரு முழு அளவிலான போராக மாறி தனக்குப் பாதகமாக களம் மாறின் போர்நிறுத்தத்தைப் பற்றிப் பிடிப்பதும் தான் அரசின் திட்டம். எனவே தான் தனது ஒவ்வொரு படைநடவடிக்கைகளின் போதெல்லாம் அரசு போர்நிறுத்தம் தொடர்பாகப் பேசத் தவறுவதில்லை.

மூதூரை புலிகள் கைப்பற்றியது:ம், 122 மிமீ பீரங்கி தாக்குதல் மூலம் திருமலை துறைமுகத்தை செயலிழக்கச் செய்ததும் கிழக்குப் பாதுகாப்புத் தொடர்பான அரசின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது. கேந்திர பொருளாதார முக்கியத்துவமானதும் யாழ் இராணுவத்தின் பிரதான வழங்கல் பின்தளமுமான திருமலைத் துறைமுகம் புலிகளின் தாக்குதல் எல்லைக்குள் சிக்கியது அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இது தொடர்பாக ஆரம்பத்தில் இந்தியாவிடம் முறையிட்ட மகிந்தா அண்மையில் இணைத்தலைமை நாடுகளிடமும் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடானது திருமலையில் புலிகளின் பகுதிமீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான அனுமதி கோரல் போன்றே உள்ளது.

புலிகளின் கவனம் ஒரு திசையில் செறிவாகுவதைத் தடுக்க மேலும் ஒரு களத்தைத் திறப்பதற்கு முயன்றது அரசு. அதுதான் வடபோர்முனை, முகமாலையில் மூண்டது பெரும்சமர், திருமலையைத் தக்கவைக்க வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட சமர் இராணுவத்தின் வடபகுதி கட்டளை மையமும் வழங்கல் தளமுமான பலாலி கூட்டுப்படைத் தளத்தை முடக்கிவிட்டது. முகமாலைப் பகுதி ஊடான இராணுவநகர்வு முறியடிக்கப்பட்டதுடன் புலிகள் முகமாலை முன்னரங்கப் படைநிலைகளைக் கைப்பற்றி இராணுவத்தைப் பின்நகர்த்தி விட்டார்கள்.

முகமாலைச் சமர் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க புலிகளின் வான்படைத் தாக்குதல் விமானம் பலாலி தளத்திற்குள் ஊடுருவி உந்துகணைத் தாக்குதல் மூலம் கட்டுப்பாட்டுக் கோபுரத்தையும், பெல் 212 ரக உலங்கு வானூர்தியையும் தகர்த்துவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பிவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து சிங்களப்படைகள் மீள்வதற்குள் பூநகரியின் கல்முனை தளத்தில் இருந்த கிட்டுப் பீரங்கி படையணி தனது 130 மி.மீ. பீரங்கிகள் மூலம் பலாலித்தளத்தின் வழங்கல் தொடர்பைத் துண்டித்துவிட்டது. அதாவது எறிகணை வீச்சால் விமான ஓடுதளம், காவல்நிலைகள், களஞ்சியங்கள் என்பன சேதமாகியதுடன் விமானங்களும் தரையிறங்க முடியாது போய்விட்டது.

இதனிடையே சனிக்கிழமை (12-08-06) அதிகாலை புலிகளின் ஈரூடக படையணி (ஙஹழ்ண்ய்ங்ள்) கடற்புலிகளின் துணையுடன் மண்டைத்தீவில் தரையிறங்கி மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி படைத்தளங்களையும் ஆட்டிலறிதளத்தையும் அழித்துவிட்டு தளம் திரும்பிவிட்டது. இந்த நடவடிக்கை புலிகளின் பின்தளத்தின் இயங்கு தன்மைக்கு முக்கியமானது. ஏனெனில் இத்தளமானது விடுதலைப் புலிகளின் பூநகரி பீரங்கித் தளத்தை செயலிழக்கச் செய்யவும், பலாலி நோக்கி முன்னேறும் விடுதலைப் புலிகளைப் பின்புறமாக இருந்து தாக்குவதற்கும் ஏதுவாக போர்நிறுத்தக் காலத்தில் அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் தளங்களைப் பற்றிய தகவல்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தளத்தைச் சுற்றியுள்ள மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி மக்களை வெளியேற்றும் நோக்குடன் அல்லைப்பிட்டி படுகொலையையும் சிங்களப் படைகள் கொடூரமாக நிறைவேற்றி இருந்தன.

தனது பாதுகாப்பு வியூகங்கள் மிகுந்த சிக்கல் நிலையை அடைவதை அறிந்த அரசு அதன் முன்னணிப் படைப்பிரிவுகளான 53, 55 படையணிகளைக் களமிறக்கி புலிகளை பின்னே தள்ள பெரும் முயற்சி எடுத்துள்ளது. அதாவது நாகர்கோவில், எழுதுமட்டுவாள், கிளாலி அச்சில் உள்ள முகாம்கள் தான் யாழ் குடாவின் பாதுகாப்பு வேலிகள். இவை தகர்ந்து போனால் குடாநாட்டின் மீதான இராணுவத்தின் பிடி தளர்ந்துவிடும். எனவே தான் இந்த இராணுவ நிலைகளை சர்வதேச இராணுவ ஆலோசகர்களின் உதவியுடன் ஆணையிறவுக்கு ஈடாக பலப்படுத்தி இருந்தது அரசு.

புலிகளுக்கும் இது நன்கு தெரியும் - அதாவது இந்த நிலைகளைப் பாதுகாக்க அரசு என்ன விலையை வேண்டுமானாலும் கொடுக்கும் என்பது. எனவே முதலில் எதிரிக்கு சார்பான களத்தில் புலிவீரர்களைக் களமிறக்கி இழப்புகளைச் சந்திப்பதைவிட தமக்கு சாதகமான களத்தில் வைத்து எதிரியின் படைவலுவை அழித்துவிடும் உத்தியையே புலிகள் கையாண்டு உள்ளார்கள்.

சிங்களத்தின் இந்த இரு முன்னணிப் படையணிகளினதும் இழப்பு அதன் போரிடும் வலுவை வெகுவாகக் குறைத்துவிடும். அதாவது மீண்டும் ஒரு தீச்சுவாலைக்கு ஒப்பானது இச்சமர். சிங்கள அரசுக்கு இது தெரிந்தாலும் இந்த முன்னணி நிலைகளையும் அதற்கான சமரையும் இராணுவம் தவிர்க்க முடியாது.

சிங்கள இராணுவத்தில் மொத்தமாக 9 (21, 22, 23, 51, 52, 53, 54, 55, 56 டிவிசன்ஸ்) படையணிகளைக் கொண்ட 111,000 (இதில் 42,000 பின்னிருப்புப் படையினரும் அடக்கம்) வீரர்கள் உள்ளனர். ஆனால் இவற்றில் மூன்றாம் ஈழப்போரில் விசேடப் படைகள், கமாண்டோக்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 53வது படையணியே வலிமை மிக்கது, இந்தப் படையணி அமெரிக்க சிறப்புப் படையினரின் பயிற்சி பெற்ற படையினரையும் கொண்டது. இதற்கு அடுத்ததாக 55ஆவது படையணியும் சிறப்புப் பயிற்சி பெற்ற படையணி, ஏனைய அணிகள் பெரும்பாலும் கைப்பற்றப்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதில்தான் ஈடுபடுத்தப்படுவதுண்டு. எனவே வடபோர்முனையின் வாசலில் வைத்து இந்த இரு படையணிகளையும் சிதைத்துவிட்டால் சிங்களப் படைகளின் போர்வலுவும், மனோவலுவும் குன்றிவிடும்.

வடபோர்முனையானது யாழ்குடா, மன்னார், வவுனியா மற்றும் மணலாறு பிரதேசங்களை உள்ளடக்கியது. இராணுவத்தின் பெரும் படைவலு இவற்றைச் சுற்றித்தான் குவிக்கப்பட்டு உள்ளது. அதாவது யாழில் 51, 52, 54 படையணிகளும், 53, 55களின் ஒரு பகுதியும் உள்ளன. மன்னார், மணலாறு, வவுனியா பகுதிகளில் 21, 56 படையணிகளும் 22 இன் ஒரு பகுதியும் உள்ளன. மொத்தமாக 7 படையணிகளும் ஏறத்தாழ 55,000 படைவீரர்களும் வடபகுதியை மையமாகக்கொண்டே நிறுத்தப்பட்டு உள்ளனர். எனவே வட போர் முனையில் நிகழ்த்தப்படும் சமர் இராணுவத்தின் உச்சபலத்துடன் மோதும் களமாகவே இருக்கும் என்பதுடன் இந்த போர்முனைகளில் ஒன்றையாவது இராணுவம் இழந்தால் போரை இழந்ததிற்குச் சமனாகிவிடும்.

இதுதான் முகமாலைச் சமரின் உக்கிரத்திற்கான காரணம், ஒரு வாரம் நிகழ்ந்த சமரில் 485 படையினரை அரசு இழந்ததுடன் 1500 பேர் காயமடைந்து உள்ளனர். ஒரு பிரிக்கேட்டை விட அதிகளவு படையினர் களத்தைவிட்டு அகற்றப்பட்டு உள்ளனர். அரசு 14 அதிகாரிகள் உட்பட 155 படையினர் பலியாகியதாகவும், 2 அதிகாரிகளும் 21 படையினரும் காணாமல் போனதாகவும் 43 அதிகாரிகளும் 685 படையினரும் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது. ஆனால் இடைவிடாது கொழும்பில் ஓடிய அம்புலன்ஸ் வண்டிகளும், இரவோடு இரவாக அனுராதபுரத்தில் இரகசியமாக எரிக்கப்பட்ட படையினரின் சடலங்களும் அரசின் கூற்றுக்களைப் பொய்யாக்கி உள்ளன. புலிகள் தரப்பில் 88 வீரர்கள் வீரச்சாவடைந்தனர், முன்னைய சமர்களுடன் ஒப்பிடும்போது புலிகளின் இழப்பு குறைவானது. இது அவர்களின் போரிடும் திறனின் வளர்ச்சியையும், கனரக ஆயுதங்களின் நேர்த்தியான கையாளுகையையும் காட்டுகிறது. ஆயுத இழப்புகளைப் பொறுத்தவரை 06 செக்கோஸ்லாவாக்கிய நாட்டுத் தயாரிப்பான பிரதான டீ-55 ரக யுத்த தாங்கிகளுடன் பல ஆட்டிலறிகளையும 01 பெல் 212 உலங்குவானூர்தியையும் வடபோர்முனையில் இதுவரை இராணுவம் இழந்துள்ளது.

தற்போது அரசிற்கு உள்ள மிகுந்த நெருக்கடியான விடயம் யாழ்குடாவைத் தக்கவைப்பதுதான். இதன் இழப்பு அரசிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் இராணுவ ரீதியாகவும் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவேதான் யாழ்குடாவைக் கைப்பற்ற 1995இல் இராணுவம் இழந்ததைவிட அதைத் தக்கவைப்பதற்குப் பலமடங்கு படையினரையும், ஆயுத தளபாடங்களையும் இன்றுவரை அரசு இழந்துகொண்டிருக்கிறது. 1997இல் அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசுக்குறு படை நடவடிக்கைகூட தரைப்பாதையைத் திறந்து யாழ்குடாவில் உள்ள படையினரின் விநியோகப் பாதையைச் சீராக்கி ஆக்கிரமிப்புப் படைகளைத் தக்கவைப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.

இதைப்போலவே யாழ்குடாவைத் தக்கவைப்பதற்கு அரசு மேற்கொண்ட சமர்களும், எதிர்கொண்ட சமர்களும் ஏராளம். ஜெயசுக்குறு, சத்ஜெய, ஓயாத அலைகள்-2, ஆனையிறவு-பரந்தன் தளம்மீதான புலிகளின் ஊடுருவித்தாக்குதல், ஓயாத அலைகள்-3, ஆணையிறவுச்சமர், தீச்சுவாலை என தரையில், கடலில், வானில் நடந்த சமர்களின் பட்டியல் நீளம். அரசு இழந்த படையினரும், ஆயுதத் தளபாடங்களும் மிக மிக அதிகம், ஆனால் யாழ்குடாவை நீண்டகாலம் தக்க வைப்பதற்கு சிங்கள அரசுகள் ஆரம்பித்த எந்தச் சமரும் அரசிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. மாறாக ஒவ்வொரு சமரையும் அரசு இழந்ததுதான் யதார்த்தம்.

இப்போது மீண்டு:ம யாழ்குடாவின் வாசலில் மூண்டுள்ள சமர் ஒரு முனைச்சமராக மட்டுமல்லாது இராணுவத்தின் பிரதான வழங்கல் தளங்களான பலாலி, திருமலை தளங்களின் இயங்கு தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இராணுவமும் தமது இருப்பைத் தக்கவைக்க தனது முழுவளங்களையும் பயன்படுத்திப் போராடுகின்றது. இது இராணுவத்தின் யாழ் மீதான ஆக்கிரமிப்பை தக்க வைப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல, சிங்களப் படைகளின் ஒட்டுமொத்த பலத்தையும் தக்கவைப்பதற்கான சமரும்கூட, ஆனால் உலகின் கடந்த கால வரலாறுகளில் ஆக்கிரமிப்பாளர்கள் வென்றதுமில்லை, பேரழிவைச் சந்திக்காமல் அவர்களின் போர்வெறி அடங்கியதும் இல்லை. சிங்கள அரசிற்கும் இதுவே பொருத்தமும் ஆகும்.

நன்றி : எரிமலை, செப் 2006

Please Click here to login / register to post your comments.