நந்திக்கடலில் இருந்து ஒரு புதிய தமிழ் ஜனநாயக அரசியல் வெளி ஊற்றெடுக்கவேண்டும் - நிலாந்தன்

நந்திக்கடலில் இருந்து ஒரு புதிய தமிழ் ஜனநாயக அரசியல் வெளி ஊற்றெடுக்கவேண்டும் என்று கவிஞரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கவிஞர் பா. அகிலனின் கவிதை நூல் வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அறிமுகவுரை ஆற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கவிஞரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் அங்கு மேலும் குறிப்பிடுகையில் : கடக்க வேண்டும் இந்தக் காயங்களை நாங்கள் கடந்துபோகவேண்டும். இந்தக் காயங்களுடனேயே நாங்கள் வாழ்ந்துவிட முடியாது. எரிகாயங்களுக்குள் இருந்துதான் ஐரோப்பிய ஜனநாயகம் ஊற்றெடுக்கிறது. நந்திக்கடலில் இருந்து ஒரு புதிய தமிழ் ஜனநாயக அரசியல் வெளி ஊற்றெடுக்கவேண்டும். ஊற்றெடுத்தால்தான் தமிழர்கள் காயங்களைக் கடந்து செல்லமுடியும். இல்லையென்றால் காயங்களுடனேயே சீவிக்கவேண்டிவந்துவிடும்.

எனவே அவை காயங்கள் அல்ல. அவை கொழுத்த அனுபவங்கள். அவர்கள் தங்களுக்காகச் சாகவில்லை. எங்கள் எல்லோருக்குமாகச் செத்தார்கள். பாலஸ்தீனக் கவிதைகளில் வருவதுபோல சுகப்படுத்தமுடியாத ஒரு காயமாக அவர்கள் நிறைந்துள்ளார்கள். சுகப்படுத்தமுடியாத அவர்கள் நினைவுகளை எங்கள் எங்கள் நெஞ்சங்களில் இருத்தினால் இதயம் இருக்கும் இடத்தில் ஒரு மகா காயமே இருக்கும். எனவே புதிய தமிழ் ஜனநாயக வெளியைத்திறப்போம் என்றார் அவர்.

1990களில் பதுங்குகுழி நாட்கள் என்ற கவிதை நூலை எழுதிய கவிஞர் பா. அகிலனின் சமரகவிகள் என்ற கவிதைத் தொகுதி வெளியிட்டு நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துமாமன்ற நூல் நிலையத்தில் இடம்பெற்றது. கலாநிதி கிருஷ்ணவேனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான கா. அருந்தாகரன், கவிஞர் நிலாந்தன் முதலியோர் உரைகளை ஆற்றினர்.

பா. அகிலனின் 'சரமகவிகள்' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து 3 கவிதைகள்

பிண இலக்கம் 182 சிதைவாடை
நீக்கினால்
ஓலமுறைந்து சீழ்கொண்ட இன்னோராடை முலையொன்றில்லை
மறுமுலையில் கிடந்தது ஒரு சிறுவுடல்
பிரித்தால் பிரியாது
ஓருடலாய் ஒட்டிக்கிடந்தது சுத்தப்படுத்திய பின் எழுதினேன்
பிண இலக்கம் 182

பொதி இலக்கம் 106 உம் பிறவும் முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை
இரத்த வெடில்
சிதம்பியழுகிய உடலை தொடமுதல்
முறிந்தன என்புகள் "குழந்தைகள் போலும்" மூடையாய் கட்டிய பின்
ஓரமாய் குவிக்கத் தொடங்கினோம்.

விசரி காயமேதும் இல்லை.
ஒற்றையாடையில் மலமும்
மாதவிடாய் இரத்தமும் ஊறிக்கிடக்க
மாற்றுடை மறுத்தாள்
ஊன் மறுத்தாள்
பகலையும், இரவையும் ஊடறுத்தலறினாள் மகவே.
மகவே.
மாயமே. துரத்தி
விலங்கிட்டுக் கட்டிய பின்
உள மருத்துவருக்கு சிபாரிசு செய்தோம்.

Please Click here to login / register to post your comments.