நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன் சைக்க முடியாமல் இருக்கிறோம் - தினக்குரல் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்

வீரகத்தி தனபாலசிங்கம் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கொழும்பில் வசித்து வருகிறார். கொழும்பிலிருந்து வெளிவரும் முக்கிய நாளிதழாகிய ‘தினக்குரலில்’ பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 1977 ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒரு ஒப்புநோக்காளராகத் தமது பத்திரிகை வாழ்வைத் துவங்கிய இவர் இளம்வயதிலேயே இலங்கையின் இடதுசாரி இயக்கங்களோடு தன்னை இணைத்துக்கொண்டவர். இலங்கையின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களாகிய சண்முகதாசன், கார்த்திகேசன் மாஸ்டர், பீகிங் வானொலி சின்னத்தம்பி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.

இலங்கையின் சமாதான காலகட்டம், போர்ச்சூழல், போருக்குப் பிந்தைய நிலை ஆகிய பல்வேறு அரசியல் சூழல்களிலும் இயங்கிவருகிற தனபாலசிங்கம், ஒரு ஊடகவியலாளராக முன்வைத்துவரும் பார்வைகள் இலங்கையின் இனவாத அரசியலை மட்டுமல்ல தமிழக-இந்திய அரசியல் நிலைப்பாடுகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பு ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பின் சிறப்பு கருதி கு. சின்னப்பபாரதி இலக்கியவிருது இந்நூலுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைப் பெறுவதற்காகத் தமிழகம் வந்திருந்த தோழர் தனபாலசிங்கத்தை தீராநதிக்கெனச் சந்தித்தோம். போருக்குப் பிந்தைய சூழலில் தமிழ்மக்களின் நிலை, அவர்களது கோரிக்கைகள், ராஜபக்ஷே அரசின் நிலைப்பாடுகள், தமிழ் ஊடகங்களின் நிலை ஆகியவை குறித்து விவாதித்த இவ்வுரையாடலின் பரிணாமம் தோழர் அ. மார்க்ஸ் பங்கேற்ற வகையில் விசாலப்பட்டிருக்கிறது.

மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்களின் அன்பு உபசரிப்போடு அவரது இல்லத்தில் நிகழ்ந்த உரையாடலின் முக்கிய அம்சங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

தீராநதி : நீங்கள் ஒரு மார்க்சியப் பற்றாளர் என்கிற வகையில் இந்தக் கேள்வியிலிருந்து துவங்கலாம் என நினைக்கிறோம். பேரினவாதக் கொடும்போர், மனிதஉரிமை மீறல்கள், முள்வேலி முகாம்கள் இவற்றிற்கெல்லாம் பின்பு இப்போது அங்கே இடதுசாரி கட்சிகளின் நிலை என்ன? ஜே.வி.பி.யை ஒரு இடதுசாரி கட்சி என்று சொல்ல முடியாது. முழுக்க முழுக்க இனவாதக் கட்சியாக அது மாறிவிட்டது. லங்கா சம சமாஜக் கட்சி ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால் ரொம்பவும் மதிக்கத்தகுந்த வாசுதேவ நாணயக்கார இன்று கொஞ்சமும் தயக்கமில்லாமல் ராஜபக்ஷே தலைமையிலான அரசில் அமைச்சராக உள்ளார். இதை எல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது? இடதுசாரி கட்சிகள் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசும் வாய்ப்பு ஏதும் எதிர்காலத்தில் உள்ளதா?

 தனபால சிங்கம் : நீங்கள் கேட்கிற அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் ஒரு பத்திரிகையாளன் என்கிற எல்லைக்குள் நின்றே பதில் சொல்ல விரும்புகிறேன். அதுதான் பொருத்தமானதாகவும் இருக்கும். இடதுசாரி இயக்கங்களின் இன்றைய நிலை பற்றி நீங்கள் கேட்பது முக்கியமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை இன்று இடதுசாரி இயக்கம் இலங்கையின் முன்னென்றும் இல்லாத அளவிற்குப் பலவீனம் அடைந்திருக்கிறது. பலவீனம் என்று சொல்வதைவிட இன்னும் ஆழமான வார்த்தை இருந்தால் பயன்படுத்தலாம். இடதுசாரி கருத்துகள் பற்றி அங்கே சில குழுக்கள் கதைக்கிறார்கள். கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். இது வெறுமனே சிந்தனைமட்டத்தில் செயல்படுகிறது. அரசியல்ரீதியான இடதுசாரி இயக்கம் என்பது அங்கே இல்லை. சிவப்புக் கொடியோடு அரசியல் செய்தாலும் ஜனதா விமுக்தி பெரமுனவை யாரும் இடதுசாரி இயக்கம் என நம்புவதில்லை. 35 வருடத்திற்கு முன்பாகவே சண்முகதாசன் அதை ஒரு குட்டி முதலாளிய - தேசியவாதக் கட்சி என வரையறுத்தார். அன்று அதை யாருமே நம்பவில்லை. இன்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி ஆகியவை அரசாங்கத்துடன் சங்கமித்துவிட்டன.

அவர்கள் தங்கள் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்திற்குள்ளேயோ, வெளியேயோ பேச அருகதையற்றவர்களாக ஆகிவிட்டார்கள். அரசியல்ரீதியாகவோ தொழிற்சங்கரீதியாகவோ எதையும் செய்ய  இயலாதவர்களாக உள்ளனர். 1960களில் இடதுசாரிகள் சிரீமாவோ பண்டாரநாயகாவுடன் அணி சேர்ந்தபோது தேசிய முதலாளித்துவ சக்திகளுடன் இணைந்து தந்திரோபாயமான கூட்டமைப்பை ஏற்படுத்துதல் என்று சாக்குப் போக்காகவேனும் சொல்லக்கூடிய காரணங்கள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முற்று முழுதான சிங்களப் பெரும்பான்மை வாதத்தை முன்வைத்து இயங்கும் ஒரு சக்தி. அதற்குள் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒரு பிரகிருதியுமே இருக்க முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, விதேச சக்திகள் ஊடுருவல் எதிர்ப்பு என்பதெல்லாம் கூட அங்கே பேரினவாதத்திற்குள் முழுகிப் போய்விடுகின்றன. பேரினவாதத்தைக் காப்பாற்றுவதற்காகவே அங்கே ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசப்படுகிறது. இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் பேரினவாதத்தால் வீழ்த்தப்பட்டுவிட்டன.

சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த சில குழுக்கள் செயல்படுகிறார்கள். செந்தில்வேல் முதலானோரைக் கொண்டுள்ள கட்சிகள் கணிசமான அளவிற்கு ஆரோக்கியமான எழுத்துக்களைப் பேசினாலும் அவர்களுக்குச் சிங்கள உறுப்பினர்கள் கிடையாது. தமிழர்கள் நடத்துகிற இடதுசாரி இயக்கமாகத்தான் அது உள்ளது. மொத்தத்தில் இன்று இடதுசாரி இயக்கம் என தென்னிலங்கையிலோ,வட இலங்கையிலோ இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.ஒரு உருப்படியான மே தின இயக்கக் கூட்டத்தைக் கூட இவர்களால் கூட்ட முடியாது. ஒரு இடதுசாரி மனநிலை உடையவன் என்பதால் இதை ரொம்பவும் மனவருத்தத்துடன் சொல்கிறேன். மற்றபடி அவர்களை எள்ளிநகையாடுவதற்காகச் சொல்லவில்லை.

 தீராநதி : முப்பது ஆண்டுகால பேரினவாதச் சூழலில் இலங்கைத் தமிழ் ஊடகங்களின் பங்கு எப்படி அமைந்தது?

  த.சி : நானொரு தமிழ்ப்பத்திரிகையின் ஆசிரியனாக இருக்கிறேன். தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை இதுகால வரையிலே தமிழ்த்தேசியவாத கருத்துநிலையை முனைப்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செய்ததெல்லாம் தமிழ் மக்களின் மத்தியில் ஒரு ஆரோக்கியமற்ற அரசியல்

உணர்வுகளைக் கிளறிவிடத்தக்க ஒரு பரபரப்பான தேசியவாதச் சிந்தனையை (ஜிங்கோயிசம்’) வளர்த்ததுதான். அது ஒரு ஆரோக்கியமான தளத்தில் உள்ள தேசியவாதமாகப் பத்திரிகைகள் பார்க்கவில்லை. பத்திரிகைகளால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், கூடுதலாக பத்திரிகைகளில் இருப்பவர்கள் இடதுசாரி சிந்தனைகளையோ மார்க்சியத்தையோ அல்லது ஆரோக்கியமான கருத்துக்களையோ பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். சரித்திரத்தின் பின்புலத்திலே சிந்தனை வரவழைத்து அதில் கருத்துகளைச் சொல்லக்கூடியவர்களாகவோ எழுதக்கூடியவர்களாகவோ இல்லை.

வன்னியிலே பத்துத்தலை நாகம் ஒண்டு வந்ததாகவும் அதை மக்கள் பார்க்கப் போனபோது அது மறைந்துவிட்டதாகவும் ஒரு பிரதான பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அது பெரிய சர்ச்சையாகி முடிஞ்சுப் போச்சு. அடுத்த நாள் ‘தினக் குரல்’ல வருது, ‘யாழ்ப்பாணம் குடா நாட்டில் பத்துத் தலை நாகத்தை மக்கள் கையால புடிச்சிட்டார்கள்’ எண்டு. அது நெட்டில் இருந்ததாம். அதையும் போட்டுட்டாங்க. தினக் குரல்ல என்னையும் கேட்கல. வெளியிலிருந்து எனக்குத்தான் பேச்சு ஆட்கள், ‘‘என்னப்பா பத்துத் தலை நாகத்தை ஒருத்தன் கண்டுட்டுப் போயிட்டான், அந்தப் பத்திரிகையில. நீங்க கையாலேயே புடிச்சிட்டீங்க. எங்க அது?‘ண்டு கேக்குறாங்க. பகுத்தாராய்ந்து இது சரியா பிழையா என்று பார்ப்பதில்லை. நெட்ல இருந்து டவுண்லோட் பண்ணி அப்படியே போடுறாங்க. கட்டுரைகளாக இருந்தால் ஆசிரியர் பெயரைக்கூட போடுறதில்லை. நன்றி : இணையம் என்று போட்டுடறாங்க. நான் சொல்றது எந்த சைட்ன்னு போடுங்க எண்டுதான்.

கடந்த 30 ஆண்டு காலத்திலே இன்று தமிழர்களுடைய போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டதென்றுதான் சொல்லவேண்டும். அதை வேறு வார்த்தையில் சொல்ல முடியாது. தோல்வி தோல்வி தான். அந்தத் தோல்விக்கு ஊடகங்களும் பெருமளவு பங்குவகித்துள்ளன என்று சொல்லோணும். ஏதாவது ஒரு தமிழியக்கத்தைக் குறைகூறுவதாக இருந்தால் தமிழ் ஊடகங்களையும் குறைகூற வேண்டும். போரின் செய்திகளை அவர்கள் காசாக்கினார்கள். தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று சொல்லி தமிழர்களைப் பத்திரிகைகள் முற்போக்கான சிந்தனையுடன் கூடிய பாதையில் வழி நடத்தத் தவறிவிட்டன.

 தீராநதி  : உங்கள் தினக்குரலின் 15-ம் ஆண்டுச் சிறப்பிதழின் தலையங்கத்தில் ஏற்கெனவே தமிழ் ஊடகங்கள் விட்ட பிழைகளிலிருந்து நாங்கள் வேறுபட்டு நிற்கிறோம் எனச் சொல்லியுள்ளீர்கள். எந்த வகையில் வேறுபட்டுள்ளீர்கள்?

 த.சி : தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பகிரங்கப்படுத்துகிற, வெளியிடுகிற விஷயங்களில் மற்ற பத்திரிகைகளை முற்றுமுழுதாகக் குறைசொல்ல முடியாது. உங்களுக்குத் தெரியும். பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்டார்கள். இந்நிலையில், தமிழ் ஊடகங்கள் எதையுமே செய்யவில்லை என நான் சொல்லவரவில்லை. இருந்தாலும் இந்தப் பத்திரிகைகளின் குறைபாடுகளை உணர்ந்து வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் வெளியே வந்த ஒரு குழுவால் தொடங்கப்பட்ட பத்திரிகை என்பதால் நாங்கள் வித்தியாசமாகச் செய்த முயற்சிகளின் விளைவாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் வாசகர்களை ஊடுருவினோம்.
‘சரிநிகர்’ போன்ற மாற்றுப்பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகள், கட்டுரைகளுக்குச் சமமான கட்டுரைகளை வெளியிட்டோம். பேராசிரியர் சிவத்தம்பி, சிவசேகரம், சந்திரசேகரன் தமிழகத்திலிருந்து அ. மார்க்ஸ் போன்றோரின் அரசியல் கட்டுரைகளைப் பிரசுரித்தோம். தமிழர்கள்படுகிற அவலங்களைப் பற்றி எழுதும்போது எங்களை ஒரு தமிழ் அரசியல் கட்சியின் ஏடு எனச் சொல்கிற அளவுக்கு அவற்றை ஆழமாகவும் வலிமையாகவும் எழுதினோம். ஒரு பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருமுறை என்னிடம் சொன்னார், உங்களின் பத்திரிகையைப் படிச்சவன் வாசிக்கிறான் என்று. அந்த அளவிற்கு விவரமாகவும் ஆழமாகவும் தமிழர்களின் பிரச்சினைகளை எழுதினோம்.

 தீராநதி  : 2004-ம் ஆண்டில் இருந்து தினகுரலில் பிரதம ஆசிரியராக இருந்து வருகிறீர்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் ஊடகத்துறை கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. 2004-09 காலகட்டத்தில் லசந்த விக்ரமசிங்க உட்பட 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். இப்படியான சூழலில் ராஜபக்ஷேவின் தலைமையிலான அரசை நீங்கள் தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறீர்கள். கூட்டணியில் உள்ள டக்ளஸ் தேவானந்தா கட்சி சொந்தச் சின்னத்தில் போட்டியிடக்கூடாது எனச் சொன்னபோது தமிழர்களுக்கென தனி அடையாளமே கூடாதா என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துள்ளீர்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது?

  த.சி :  2004 ஏப்ரல் 1-இல் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். ஏற்கெனவே 13 வருடம் உதவி ஆசிரியராக இருந்து பாராளுமன்ற மற்றும் வெளிநாட்டுச் செய்திகளை வெளியிட்ட அனுபவம் இருந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளில் வருகிற சில தரமான கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்ட அனுபவம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்குச் சில விஷயங்களை எப்படி நிதானமாக கையாள்வது என்பதற்கு என்னிடம் இருந்த சொற்ப மார்க்சிய அறிவு உதவியது. எந்தச் சிக்கல்களிலும் பெரிதாக மாட்டுப்படாமல் தப்பி வந்திருக்கிறேன் என்றாலும் நீங்களே சொன்னது போல நான் விமர்சிக்க வேண்டிய விஷயங்களை விமர்சிக்காமல் விட்டதில்லை. ஆனால் நான் எழுதுகிற மொழியில் எதிரிகூட எனக்கு அடிக்கணும்னு நினைக்கமாட்டான். எதிரிகூட என்ன எழுதப்பட்டிருக்கிறது என சிந்திக்கிற மாதிரி balanceஆக நான் எழுதுகிறேன். அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் யாரையும் பாதிக்காமல் எழுதுவது என்பதும் முக்கியம்.

இப்படி எல்லாம் எழுதும்போது தனிப்பட்ட ரீதியில் ஆபத்து என்பதை நினைத்து பயந்தால் அதுவும் சொல்லவேண்டிய காலகட்டத்தில் சொல்லாமல் இருந்தால் இந்தத் தொழிலுக்கே வந்திருக்கக் கூடாது. அதுக்கு பழைய பேப்பர் விக்கப் போகலாம்.

தீராநதி  : ஆயுதப் போராட்டக் குழுக்களை நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களா? அவர்களிடமிருந்து ஏதேனும் நெருக்கடிகள் வந்திருக்கிறதா?

  த.சி : ஆயுதப் போராட்டக் குழுக்களை விமர்சிக்கிற காலகட்டம் ஒன்று இருக்கவில்லை. அது அந்தக் கலாச்சாரத்துக்குள்ளே வாழ்ந்தால்தான் தெரியும். சில பிரச்சினைகளின் போது குழுக்களைச் சேர்ந்த யாரேனும் சிலர் என்னைக் கூப்பிட்டு மிரட்டுவார்கள். எனக்கு அந்த இயக்கங்களின் தலைவர்களைத் தெரியும். ‘அவரோட பேசிட்டு கதைங்க தம்பிங்களா?’ என்று சொல்வேன். ‘ஓ! அவரைத் தெரியுமாண்ணே’ என்று அவர்களும் விட்டுவிடுவார்கள்.

நாங்கள் போரை ஒருபோதும் ஆதரித்ததில்லை. போருக்கான காரணங்களைத்தான் எடுத்துரைத்தோம். அரசாங்கம் நடத்திய போரையும் ஆதரிக்கவில்லை. இயக்கங்கள் நடத்திய போரையும் ஆதரிக்கவில்லை. போரில் தமிழ்மக்கள் பட்ட அவலங்களை எடுத்து இயம்பினோம். சமாதான முயற்சிக்கு நாங்கள் முற்று முழுதாக ஆதரவளித்தோம். அந்த சமாதான முயற்சி வெல்லுமோ, சாத்தியப்படுமோ என்பதல்ல பிரச்சினை. அதைத்தவிர அந்த நேரத்தில் ஒரு மார்க்கம் இருக்கவில்லை.

ஆயுதம் ஏந்தியவர்களை அழிப்பதன் பேரில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டது உலகறிந்த உண்மை. அதைச் சொன்னபோது இயக்கங்களுடன் நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டோம். புலிப்பத்திரிகை என்று கூடச் சொன்னார்கள். இப்படி ஒரு போக்கு பொதுவாகவே இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் எல்லோரையும் புலி ஆதரவாளர்கள் என்கிறார்கள். அவர்களில் ஆயுதப் போராட்டத்தை விமர்சித்து எழுதியவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில் சொல்வேன். எந்த ஒரு தமிழ்த் தீவிரவாத இயக்கத்தோடும் என்னை நான் அடையாளப்படுத்தியது கிடையாது.

 தீராநதி  : இன்றைய சூழலில் ஆயுதப்போராட்டத்திற்கு வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம். தமிழர்கள் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து இயங்குவதற்கான அரசியல்வெளி ஒன்று சாத்தியமா? தமிழ்ப்பகுதிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெரிய அளவில் வெற்றிபெற்றிருப்பது எதைக் காட்டுகிறது?

  த.சி : போருக்குப் பின்னான காலகட்டத்தில் தமிழ்மக்கள் தங்கள் மத்தியில் ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயத்தைக் கொண்டிருக்கவில்லை. இரண்டரை வருடங்களாகியும் இதுதான் நிலை. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்த நிலையைவிட இப்போது சற்று மேம்பட்டிருக்கிறது. அண்மையில் கொழும்பு வந்திருந்த ‘இந்து’ ராம் த.தே.கூ ஒரு நம்பகமான அரசியல் சக்தியாகவும் தலைமைத்துவ சக்தியாகவும் வெளிக்கிளம்பி உள்ளது என ஒரு சர்டிஃபிகேட் கொடுத்தார். ராஜபக்ஷே ஜனாதிபதியாக வந்தபிறகு தொடர்ச்சியாக இந்து பத்திரிகை ஆசிரியருக்கு பேட்டிகள் கொடுத்து வந்துள்ளார். அந்தப் பேட்டிகளைத் தொகுத்து யாராவது ஒரு புத்தகமாக்கினால் எமது ஜனாதிபதி இந்த இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாடுகளில் எவ்வாறு முரண்பட்ட பார்வைகளை, பிறழ்வுகளைக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். அந்த ராம்தான் இன்று த.தே.கூ குறித்து சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.

தமிழ்மக்கள் இங்கு எதிர்பார்க்கிற அளவுக்குப் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. அரசாங்கம் என்ன சொல்கிறது என்பது வேறுவிஷயம். இன்னும் நடுவீதியில் மக்கள் நிற்பதாக யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் படங்கள் போடுகிறார்கள். அந்த மக்கள் சில விஷயங்களை அரசாங்கத்திற்குச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள அதிருப்திகளை வெளிப்படுத்துவதற்கு சில மார்க்கங்களைத் தேடுகிறார்கள். வெளிஉலகத்திற்கு இந்தச் செய்தியைக் கொண்டு போக விரும்புகிறார்கள். தங்கள் மத்தியில் ஒரு சரியான அரசியல் சக்தி, அரசியல் சமுதாயம் இல்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அது உடனடியாக உருவாகும் என்றும் அவர்கள் நம்பவில்லை. எனினும் தங்களுடைய அவலங்களை வெளிக்காட்டுவதற்கு தற்போது இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் சக்திகளுக்குள்ளே த.தே.கூ.வைத் தவிர வேறெதுவும் இல்லை என அவர்கள் நம்புகிறார்கள். அரசாங்கமும் அதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறது.

 தீராநதி  : த.தே.கூ. விற்கும் அரசுக்கும் நடக்கிற ‘பேச்சுவார்த்தை சர்வதேச அழுத்தங்களின் விளைவா? இந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்கள் வெளியே தெரியக்கூடாது என ஒரு உடன்பாட்டிற்கு அவர்கள் வந்திருப்பதன் நோக்கம் என்ன?

  த.சி : சர்வதேச அழுத்தங்களே பிரதான காரணம் என்று த.தே.கூ. தலைவர்களே பகிரங்கமாகச் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தையைப் பொறுத்தமட்டில் அது இரண்டு பக்கமும் ரொம்பவும் ராஜதந்திரமாக நடப்பதாக நினைத்துக்கொண்டு செய்கிறார்கள். அன்று நாங்கள் கதைத்தபோது சம்பந்தன் சொன்னார். ‘சில விஷயங்களை நாங்கள் மறைக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்’ என்று. நான் பகடியாய்ச் சொன்னேன். நீங்க மறைக்கிறதை பத்திரிகை ஆசிரியருக்காவது சொல்லிப்போட்டு மறைங்கோ என்று. ஒரு தெளிவான தந்திரோபாயத்தை அவர்களால் உருவாக்கமுடியவில்லை என்பதுதான் எனது அபிப்பிராயம். உண்மையில் அது ஒன்றுதான் இன்று தமிழர்களின் நிலை. எந்தவொரு உருப்படியான அரசியலும் செய்ய முடியாத நிலை. பத்திரிகைகளில் கூட சில விஷயங்களை எழுதுகிறோம் தான். ஆனால் மக்கள் எந்தவொரு தீவிரமான அரசியலிலும் ஈடுபடுவதற்கு சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் இன்று ஒரு சத்தியாகிரகம் கூட இருக்கமுடியாது. த.தே.கூ.வை பிழை சொல்றதுக்கு இல்ல. அரசாங்கத்தில் ராஜபக்ஷேவோடு இருக்கிற டக்ளஸ் தேவானந்தா கூட இன்று சொந்தச் சின்னத்தில் நிற்க அனுமதியில்லை. எந்தக் காரணம் கொண்டும் மீண்டும் தமிழ்த்தேசிய உணர்வுகள் தட்டி எழுப்பப்படுவதை அரசு விரும்பவில்லை. அரசு மட்டுமல்ல. சிங்கள அரசியல் சமுதாயமும் விரும்பவில்லை.

 தீராநதி : இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையின் மூன்றாவது முக்கிய சமூகத்தவர்களான முஸ்லிம்கள் உள்ளடக்கப்படவில்லை என்கிற குறை அவர்களிடம் இருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? த.தே.கூ. முஸ்லிம்களையும் சேர்த்து பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று கூறமுடியுமா?

  த.சி : முஸ்லிம்களுடைய பிரச்சினையை த.தே.கூ. பிரதிநிதித்துவப்படுத்துவதென்பதில் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. தமிழ்பேசும் மக்களென்று நாங்கள் முஸ்லிம்களையும் சேர்த்துப் பொதுவில் பயன்படுத்துகிறோம். இங்கே தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வது போல அங்கே சொல்லிக் கொள்கிற கலாச்சாரமில்லை. அதற்கு ஆயுதப் போராட்டங்களும் அதற்கு முந்தைய தமிழ்த் தலைமைகள் நடந்து கொண்ட முறையும் ஒரு காரணம். இதில் எந்தப் பக்கம் பிழை என்பதைக் கதைக்க இது நேரமில்லை. ஆனால் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகள் என பொதுவாக அடையாளப்படுத்தக் கூடிய பிரச்சினைகளும் இருக்கின்றன. இரண்டு சமுதாயத்திலும் தனித்துவமான பிரச்சினைகளும் இருக்கின்றன. முதலில்  இரண்டு பேருக்கும் பொதுவான பிரச்சினைகளிலாவது ஒத்துழைக்கிற ஒரு தந்திரோபாயத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மற்ற பிரச்சினை இரண்டாம் பட்சமாகிவிடும். ரெண்டு பேருமே பேரினவாத ஒடுக்குமுறையால் வருகிற பொதுவான பிரச்சினைகளான நில அபகரிப்பு, மொழி பயன்பாட்டில் உள்ள ஆதிக்கம் எல்லாவற்றையும் எதிர்ப்பதிலே எங்களால் ஒன்றுபட்டு செயல்பட முடியும். தனித்துவமானவை பற்றி இப்போது நாங்கள் சண்டை பிடிக்கப் போக மாட்டோம் என்கிற கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் போன்றவர்கள் ரொம்பவும் சிநேகபூர்வமான சக்திகள். தீவிர முஸ்லிம் தேசியவாதம் பேசுகிறவர்கள் அல்ல. சம்பந்தன் ஒப்பீட்டளவில் வயது முதிர்ந்தவர். நிதானமான சிந்தனை உள்ளவர். பொதுவாக நாங்கள் பாதிக்கப்படுகிற பிரச்சினையில் சேர்ந்து செயல்படுவதற்கான ஒரு அணுகல் முறையை மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா யிருந்தால் நல்லது.

தீராநதி : இந்திய அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து வற்புறுத்திக்கொண்டே இருக்கிறதே? ஏதாவது பலன் இருக்குமா?

த.சி. : ஜே.வி.பி. தலைவர் விமல வீரவன்ச ஒரு முறை சொன்னதை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம். அரசியல் தீர்வு என்பதெல்லாம் எதுவும் செய்யப்போவதில்லையென ராஜபக்ஷே தன்னிடம் தனிப்பட்ட முறையில்  கூறியதாக அவர் சொல்லியிருந்தார். இலங்கை அரசியல் தலைவர்களைப் பொறுத்தமட்டில் நான் ஒரு அம்சத்தைச் சொல்ல விரும்புகிறேன். சேன நாயக்கா தொடக்கம் பண்டார நாயக்கா, சந்திரிகா, ஜெயவர்த்தனே இப்படி எல்லோரும் கடும் போக்காக பேசக் கூடிய ஒரு சிலரை ஒரு பக்கம் கையில் வைத்திருப்பார்கள். அதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு ஒரு பிணீக்ஷீபீறீவீஸீமீ ஜீஷீவீஸீt ஷீயீ ஸ்வீமீஷ் கருத்தும் சமூகத்தில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் இன்று ஜே.வி.பி. பயன்படுகிறது. தமிழர்களைப் பொறுத்தமட்டில் தீர்வு காண்பதற்கென நியாயப்பூர்வமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்பதை சிங்களச் சமூகம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு சிங்களத் தலைவர்கள் அந்த மக்களைத் தயார்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அதுவே அரைவாசி தீர்வுக்குச் சமம்.

தீராநதி : தமிழகத்து அரசியல் கட்சிகளுடைய நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் உங்களுக்கு உண்மையிலே பயன் தரத்தக்கதாக உள்ளதா?

த.சி.: 83-க்குப் பிறகு  பொதுவான நிலை என்னவென்றால் எம்.ஜி.ஆரோ, கருணாநிதியோ ஒருவர் இன்னொருவருக்கு எதிராக எங்களுடைய பிரச்சினைகளைப் பயன்படுத்துவது என்கிற அளவிலேயே இருந்து வந்திருக்கிறது. இப்போ ஜெயலலிதா அம்மா இருக்கிறாங்க. அவங்களும் கலைஞருக்கு எதிராகத்தான் எங்கள் பிரச்சினையைக் கையில் எடுக்குறாங்க. தூக்கு தண்டனை விஷயத்தில் கலைஞர் பெரிய அறிக்கையெல்லாம் விடறார். ஆனால் அவர் 5 வருடம் இருந்தபோது ஒன்றும் செய்யவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் டெல்லி எடுத்திருக்கக் கூடிய எந்த முடிவுகளையும் அது பா.ஜ.க.வாக இருக்கலாம் அல்லது காங்கிரஸாக இருக்கலாம். எதுவாக இருந்தபோதிலும் தமிழ் நாட்டு அரசியல் சக்திகள் குறிப்பாக திராவிடக் கட்சிகள் அவற்றில் தலையிட்டு எதையும் செய்ய முடியவில்லை. என்னுடைய அபிப்பிராயத்தில் தமிழகத்தில் இருக்கக் கூடிய சக்திகள் குறிப்பாக திராவிட இயக்கக் கட்சிகள், அவைதானே பெருசு, அவர்களுடைய செல்வாக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எதையும் செய்துவிட வில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களிடையே எம்.ஜி.ஆருக்கு பெரிய பேர் இருக்கு. இயக்கங்களை வளர்த்துவிட்டது அவர்தான். எம்.ஜி.ஆர். என்றால் கடவுள். காசு கொடுத்தார். ஆதரவு கொடுத்தார். அப்படி தமிழக அரசியல் சக்திகள் நடத்திய போராட்டங்களையும் உதவிகளையும் நான் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் டெல்லியின் மீது அவர்கள் எந்தச் செல்வாக்கையும் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை.

உண்மையில் என்னைப் பொறுத்தளவில் எங்கள் பிரச்சினைகளை இங்குள்ள கல்விமான்கள் புரிந்துகொண்ட அளவிற்கு அரசியல் சக்திகள் புரிந்து கொள்ளவில்லை. இப்ப எங்கட பிரச்சினை பழ.நெடுமாறன், வைகோ. சீமான் போன்றவர்கள் கேட்பதுபோல் ஈழமல்ல, தனிநாடல்ல. எங்களுக்கு ஒரு முறையான அதிகாரப் பரவலாக்கம் வேணும்.

அன்றைக்கு மொழிப் பிரச்சினையில் தொடங்கியது எங்கள் போராட்டம். இன்றைக்கு இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிற பிரச்சினையா போய்ட்டுதில்ல. இலங்கையில் பிரச்சினை மாறி இருக்கு. ஆனால்  தமிழகத்துல இன்னும் ஏதோ 56 ஆம்  ஆண்டு பிரச்சினையைக் கதைக்கிற மாதிரிதான் அம்மாவும் ஐயாவும் கதைக்கிறாங்க. எங்கட பிரச்சினை மாறியிருக்கு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளணும். நாங்க வீட்ல இருக்க இயலாமப் போகுது. எங்களுக்கு மொழியல்ல பிரச்சினை. உயிர்வாழ்வு, இருப்பு.... இங்கே இதெல்லாம் விளங்கல. இங்கே இருந்துகொண்டு ஈழம் கதைக்கிறார்கள்.

தீராநதி : பான் கி மூன் நியமித்த கமிஷனின் அறிக்கை அடிப்படையில் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் இயக்கம் நடந்தது. ராஜபக்ஷே ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் விசாரிக்கப்படுவார் என நாங்கள் எல்லாம் நம்பியிருந்தோம். ஆனால் இன்று ஐ.நா. அவையில் எதிர்பார்த்த அளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை. இதை ராஜபக்ஷேவுடைய ராஜதந்திரத்தின் வெற்றி என்று சொல்லலாமா?

த.சி.: இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் முற்றுமுழுதாக அவர்களுடைய பிரச்சினைகள் எல்லாமே இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேசச் சமூகம் கிளப்புகிற  எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்கிற அடிப்படையிலேயே இருக்கு. உச்சபட்சமாக அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் அவர்கள் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த நெருக்குதலை நீண்டகாலத்திற்கு வைத்திருக்க ராஜபக்ஷே விரும்பவில்லை. அவசரகாலச் சட்ட நீக்கம் அது, இது என்று ஏதோ நடவடிக்கைகளை மேற்கொள் கிறார்கள். நெருக்குதலைச் சரிக்கட்ட மேற்குல கிற்குச் சார்பான அணுகுமுறை இருக்குமென்று நான் சொல்லவரவில்லை.

ஒரு வேடிக்கை என்னவென்றால் இன்று பான் கீ மூனோ, ஐ.நா. மனித உரிமை ஆணையமோ, ஐரோப்பிய யூனியனோ இலங்கை அரசின் மனித உரிமைமீறல் தொடர்பாக எழுப்பக் கூடிய பிரச்சினைகளை எல்லாம்  இங்குள்ள  எதிர்க் கட்சிகள் கேட்க வேண்டிய கோரிக்கை. அவை வெளியே இருந்து கேட்கப்படுகிறதென்றால் இங்கே அரசியல் எப்படி இருக்கிறதென்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். உண்மையிலேயே போருக்குப் பின்னர் ஜனாதிபதியும் அரசாங்கமும் நினைத்திருந்தால் எவ்வளவோ காரியங்களை இலகுவாகச் செய்திருக்க முடியும். அவர்களுடைய அணுகுமுறை  போர்வெற்றியை அடிப்படை யாகக் கொண்டு இருப்பதால் எதுவும் நடக்க வில்லை.

ரணில் விக்ரமசிங்கே ராஜபக்ஷேவுக்குச் சமமாக நின்று தாக்குப் பிடிக்கக் கூடியவராக இல்லை. அவர் ஒரு நல்ல தலைவராக இருக்கலாம்.. ஒரு முதலாளித்துவ பண்பாடுடைய கலாச்சாரவாதி அவர். ஆனால் அவருக்கு இதல்ல நாடு. இன்று தாராளவாதத்திற்கு இலங்கையில் இடமில்லை. 2005 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்த நெருக்குதலால் அன்று அவர் தோல்வி கண்டார். இன்று போர்வெற்றியின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கக் கூடிய பெருந்தேசிய இனஉணர்வில் அவருக்கொரு இடமில்லாமல் போய்விட்டது.  

தீராநதி : இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்ததை முன்வைத்து எழுந்த விமர்சனங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவோ என்னவோ, போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான நலத்திட்ட உதவிகளை அறிவித்திருந்தது. எனினும் 50,000 வீடுகள் கட்டிக்கொடுப்பது, 500 டிராக்டர்கள் கொடுப்பது என்பதான அந்த உதவிகள்கூட முழுமையாகச் சென்றடையவில்லை என அறிகிறோம். உண்மையா?

த.சி : அந்த மாதிரியான காரியங்கள் இலங்கையில் சகஜம். இதற்கெல்லாம் தமிழரும் இங்கே கிளர்ந்தெழுவதில்லை. கவலைப்படுவதில்லை. இவன் இப்படித்தான் செய்வான் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. 50,000 வீடென்று இந்தியா சொன்னது. 1000 வீடுகள்தான் கட்டியமாதிரி செய்தி வருது. அதுவும் எங்க கட்டி இருக்காங்கன்னு தெரியலை. பயனாளிகளைத் தெரிவு செய்வதிலும்கூட இந்தியாவால் எந்தச் செல்வாக்கையும் செலுத்தமுடியவில்லை. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி துரிதப்படுத்தவேண்டும் என்ற அக்கறை இந்திய  அரசுக்கும் இல்லை. 

தீராநதி : இலங்கைக்கு நாம உதவி செய்யாட்டா சீனாக்காரன் வந்து புகுந்துவிடுவான் என்று எங்கள் பிரதமர் சமீபத்தில் சொல்லி இருக்கிறார். இந்தியா அச்சப்படுகிற அளவுக்கு இலங்கை-சீன உறவு இருக்கிறதா?

த.சி : ஒரு பிரதமர் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. சீனா செய்யும் உதவிகள் அல்லது தலையீடுகள் என்பன அந்தக் காலத்திலிருந்தே இருக்கு. இன்றைக்கு வந்ததல்ல. இன்று உலக அளவில் பெரிய பொருளாதார சக்தியாக சீனா வளர்ந்திருக்கு. ஆசியக் கண்டத்துல சீனாவும் இந்தியாவும் பெரிய பொருளாதார சக்திகள். அவையிண்ட நலன்களுக்கு இடையில் போட்டா போட்டி. அமெரிக்காவுக்கு ஆசியாவில் ஒரு பெரிய எதிரி சீனா. வல்லரசுகள் மற்றும் வல்லாதிக்க நாடுகளுக்குள்ள முரண்பாடுகளால் தான் உலக அரங்கில் இலங்கையோடு உள்ள சீன உறவு பெரிதுபடுத்தப்படுகிறது.

லீகுவான்யு ஒருமுறை சொன்னார். இந்தியாவும் சீனாவும் ஒருபோதும் யுத்தத்துக்குப் போகாது என்று. ஆனால் சிஷீறீபீ ஷ்ணீக்ஷீ மாதிரி நடந்து கொண்டிருக்கும். இலங்கைக்கு அம்பான் தோட்டத்துல சீனா துறைமுகம் அமைத்தால் இந்தியா காங்கேசன் துறையில் அமைக்கும். இவர் ரயில்வே டிராக் போட்டா அவர் ரோடு போடுவார். இப்ப அது எங்கட நாடு இல்ல. அரைவாசி காணியை இந்திய நிறுவனங்கள் வேண்டுது. இன்னொரு அரைவாசி காணியை சீன நிறுவனங்கள் வேண்டுது. எங்களுக்கு வீடுகள்தான் மிஞ்சும்.

தீராநதி : சிறையிலிருந்து விடுவிக்கப்படும் புலிகளின் நிலை என்ன? அவர்கள் தமிழ் மக்களோடு இணைந்து வாழ்வதிலும் ஏதேனும் தடைகள் இருக்கிறதா? மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை எல்லாம் எப்படி இருக்கிறது?

த.சி. : போன வாரம் கூட 1,500 பேரை வெளியே விட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு மட்டத்தில் இதெல்லாம் நடக்குது. ஆனால் உண்மையில் உள்ளுக்குள் இருப்பவர்கள் எத்தனை பேரென்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஓரளவுக்கு ஜே.வி.பி. கூட நியாயமான கோரிக்கைகள் வைக்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசாங்கம் முழு அளவில் வெளிப்படையாக இல்லை. முன்னாள் புலிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து வெளியே விடுவதாக சர்வதேச சமூகத்திற்குக் காட்டவேண்டிய அவசியமும் அரசாங்கத்திற்கு இருக்கு. போருக்குப் பின்னுள்ள சூழ்நிலை ஒரு பிரத்தியேகமான வாழ்க்கை முறையைக் கொடுத்திருக்கு. முன்னாள் புலிகளை உள்வாங்கக்கூடிய ஆரோக்கியமான செயல்திட்டங்களை வகுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அவர்களை இந்த சமூகத்தோடு ஒருங்கிணைக்கிற வேலையை எல்லோருமாகச் செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் புலிகள் மக்களோடு இணைந்து வாழ்வதில் பெரிய பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

மக்களின் மீள் குடியேற்றம் என்பதெல்லாம் வெறுமனே முகப்பூச்சு பூசுகின்ற வேலையாகத்தான் இருக்கு. வடமராட்சியில் மக்கள் ரோட்ல நிக்கற படங்கள் பத்திரிகைல வருது. சும்மா ஒரு வீட்டைக் கட்டலாம். ஆனால், அது வீடு மாதிரி இருக்காது. மக்களுடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைக் கூட நிவர்த்தி செய்யக்கூடியதாக இந்தத் திட்டங்கள் இல்லை. போருக்குப் பிந்தைய நிலைகள் சொல்லக் கொடுமையானவை. பெரிய அளவில் கலாச்சாரச் சீரழிவும் உள்ளது.

தீராநதி : தமிழ்மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகிற தமிழறிஞர் சிவத்தம்பியின் ஊர்க்காரர் நீங்கள். அவருடைய இழப்பு எவ்வாறு உணரப்படுகிறது?

த.சி : ஒருநாள் ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அடடே! நீ நம்ம பையனா எண்டு தனக்கே உரித்தான ஊர் வாஞ்சையோடு என்னிடம் பேசினார். 97இல் வீரகேசரியில் இருந்து விலகி தினக்குரலை ஆரம்பிக்க இருந்தபோது அவரிடம் ஆலோசனை கேட்கச் சென்றேன். அன்றைக்குத் தொடக்கம் வாழ்த்துச் செய்தி தந்ததில் இருந்து சென்ற ஜனவரி இறுதியில் எங்களது இதழின் 15ஆவது ஆண்டு மலர் வரைக்கும் அவர் பங்களிப்புச் செய்திருக்கிறார். படிப்படியாக அவர் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலை ஏற்பட்ட போதும் வீட்டில் இருந்துகொண்டே எல்லாம் செய்வார்.

இயல்பான எனது போக்கினால் நிர்வாகத்துடன் ஏதேனும் ஒரு பிரச்சினை எனக்கு ஏற்பட்டால் சமாதானமும் செய்வர். ‘என்னடப்பா! சண்டை பிடிக்காம போ. ஒரு மாதிரி சமாளிச்சுப் போ, நீ ரெண்டு பொம்பளை பிள்ளைக்காரன்Õ இப்படித்தான் அவர் கதைக்கிறது. ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் ஏதேனும் ஒரு ஐயம் ஏற்பட்டால் தொலைபேசியினூடாகவே எந்த நேரத்திலும் அதை நிவர்த்தி செய்யக்கூடிய அத்தனை பெரிய அறிஞர் இனி யாருக்கும் கிடைக்கப்போவதில்லை. பலரும் அவரால் பயன்பெற்றிருக்கிறார்கள். அதில் எனக்கும் இடமிருக்கிறது என்பதில் நான் என்றென்றைக்கும் பெருமைப்படுகிறேன். தீராநதியில் அ.மார்க்ஸ்  எழுதியிருந்த சிவத்தம்பி கட்டுரையின் முதல் பகுதியை நாங்கள் அப்படியே வெளியிட்டோம். இரண்டாம் பகுதியில் அவர் சில விமர்சனங்களை வைத்திருந்தார். சிவத்தம்பியின் மீதான மதிப்பு காரணமாக அவரிடம் குறைபாடு இருக்கிறது என்று சொல்ல எனக்கு வருவதில்லை.

இந்தியாவில் உள்ள பல பெரிய கல்விமான்களே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்களாக வந்தவர்கள் இரண்டு பேர். கைலாசபதி, சிவத்தம்பி. அந்த அடையாளம் இனிமே இலங்கையிலிருந்து வரும் என்று எனக்குச் சந்தேகம். ஆனால் இது ஈடுசெய்ய வேண்டிய இழப்பு.

அவருடைய இறுதிச்சடங்குக்கு கல்விமான்கள், சிங்கள அறிஞர்கள், பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர்கள் எனப் பல தரப்பிலிருந்து வந்தார்கள். அவருக்குக் கனமட்டங்களில் தொடர்பு உண்டு. ஆனால் அப்படியான ஒரு அறிஞரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துல வேந்தராக முடியலை. உலகம் அவரைப் பெரிய வேந்தர்னு நினைக்குது. ஒரு பல்கலைக்கழகத்துல அந்தப் பதவியைப் பெற அவரால் முடியலை. அது யாழ்ப்பாண சமூகத்துல இருக்கக்கூடிய குறைபாடுகளின் பிரகாசமான வெளிப்பாடு. சிவத்தம்பி மறைந்துவிட்டார் என்றில்லை. அவருடைய எழுத்துக்களும் போதனைகளும் எங்களிடம் இருக்கும் வரை அவர் எங்களோடு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

தீராநதி : தீராநதி இதழ்க்கட்டுரைகள் பலவற்றை தினக்குரலில் மீள்பிரசுரம் செய்திருக்கிறீர்கள். தீராநதி குறித்த உங்களின் கருத்து.

த.சி : குமுதம் குழுமத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாகத் தீராநதி வருவதென்பதே நான் எதிர்பார்க்காத ஒன்று. வாசக வட்டங்களில் தரமான இலக்கிய அரசியல் விஷயதானங்களை, முற்போக்கான சிந்தனை கொண்டவர்களின் படைப்புகளை வெளியிடக்கூடிய ஒரு தரமான இலக்கிய இதழ் ஒரு சனரஞ்சக நிறுவனத்தில் இருந்து வருவது வரவேற்கக்கூடிய விஷயம். இலங்கையிலும் இப்படியான ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று வீரகேசரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசனிடம் நான் சொல்லி இருக்கிறேன். இத்தகைய ஒரு தரமான வாசக வட்டம் உருவாவதை அடையாளம் கண்டு இதில் பங்காற்ற வேண்டும் என்று குறிப்பிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

தீராநதியில் இருந்து பல முக்கிய கட்டுரைகளை நாங்கள் தினக்குரலில் மறுபிரசுரம் செய்திருக்கிறோம். இலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிகை நிறுவனங்கள் தீராநதி போன்ற முயற்சிகளை குமுதத்தைப் பின்பற்றிச் செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.

Please Click here to login / register to post your comments.