கால் வைக்குமா அமெரிக்க இராணுவம் ?

ஆக்கம்: கே. சஞ்சயன்
அமைச்சரவை கடந்தவாரம் கூடியபோது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் உதவியுடன் வடக்கில் உள்ள நான்கு மருத்துவமனைகளைத் திருத்திமைக்கும் திட்டமே அது.

 

ஒட்டுசுட்டான், முழங்காவில் பூநகரி மற்றும் பளை ஆகிய இடங்களில் உள்ள- போரினால் சேதமடைந்த மருத்துவமனைகளை புனரமைப்பதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் 190 மில்லியன் ரூபாவை வழங்கியது.

இந்தநிதியுடன் உள்ளூர் நிதி 23 மில்லியன் ரூபாவையும் சேர்த்து இந்த நான்கு மருத்துவமனைகளையும் புனரமைப்புச் செய்ய அமைச்சரவையின் அனுமதி கோரினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன.

ஆனால் இந்தத் திட்டத்துக்கு உடனடியாகவே அமைச்சர் விமல் வீரவன்சவிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. காரணம் இது அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்கான முதல் அடி என்பதே அவரது உறுதியான கருத்தாக இருந்தது.

'மருத்துவமனைகளைப் புனரமைப்பு என்ற பெயரில் முதலில் கால் வைப்பதும் பின்னர் இராணுவ ரீதியாகத் தலையிடுவதும் தான் அமெரிக்காவின் வழக்கம். உலகில் இதுபோல பல நாடுகளில் நிகழ்ந்துள்ளது' என்று அவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு இந்தச் சந்தேகம் வந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அமெரிக்கா இந்த நிதியுதவியை வழக்கமான வழிமுறைகளில் வழங்காதது முதலாவது காரணம்.

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் மூலமே இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கா இவ்வாறான நிதி உதவிகளை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் (யுஎஸ் எய்ட்) மூலமே மேற்கொள்வதுண்டு.  கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இதற்கென சிறப்புப் பிரிவு ஒன்றும் உள்ளது.

ஆனால் சுபிக் கட்டளைப் பீடம் நிதியை வழங்கியது- சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகமே  இந்தத் திட்டத்தை நிறைவேற்றவுள்ளது.

இங்கேதான் விமல் வீரவன்ச சந்தேகம் கொண்டதற்கான இரண்டாவது காரணம் பிறந்தது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தில் பசுபிக் கட்டளை பீடத்தைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் சிலரும் பணியாற்றுகின்றனர். அவர்கள் தான் இந்தப் பணியைக் கவனிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ஆக, பசுபிக் கட்டளைப் பீடம் நிதியையும் வழங்கி நேரடியாக அந்த கட்டுமானப் பணிகளையும் கவனிப்பது தான் இந்த யோசனை.

இது விமல் வீரவன்சவுக்கு அமெரிக்கப் படையினர் இங்கு கால்வைக்கத் திட்டமிடுகின்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

அமெரிக்கப் படையினர் இனிமேல் வந்து தான் கால் வைக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள காலைத் தான் கொஞ்சம் அகட்டி வைக்கப் போகின்றனர்.

அமெரிக்கத் தூதரகத்தில் அமெரிக்க படையினர் சிலர் உள்ளனர். அதுபோலவே அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திலும் சில அதிகாரிகள் உள்ளனர்.

சிவில் பணிகளையே செய்யும் அவர்கள் அவ்வப்போது தமது வேலைகளையும்  கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள். விமல் வீரவன்சவுக்கு இது தெரியாமல் போயிருக்கா விட்டாலும், அவருக்கு இம்முறை கொஞ்சம் அதிகமாகவே அச்சம் வந்து விட்டது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா இராணுவ ரீதியாக கால்வைத்து விடுமோ என்று அவர் அஞ்சுகிறார்.

இது அவருக்கு மட்டுமல்ல, சிங்களத் தேசியவாத அமைப்புகளுக்கும் இதே அச்சம் இருக்கத் தான் செய்கிறது.

இதனால் தான் அவை மருத்துவமனைகளைப் புனரமைக்க அமெரிக்கப் படையினர் இங்கு கால் வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளன.

இந்த விவகாரம் அமைச்சரவைக்குள் முற்றிய போது அதைத் தீர்க்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட வேண்டியிருந்தது.

அவர் அமெரிக்காவின் இந்தத் தலையீட்டை விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் இந்தத் திட்டத்துக்கு அனுமதியளிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்.

ஏனென்றால் அதற்குச் சில காரணங்கள் உள்ளன. அதை அவர் அமைச்சரவையில் கூறியும் இருக்கிறார்.

ஏற்கனவே சீனாவும் இந்தியாவும் தமது ஆட்களை வைத்து இலங்கையில் அபிவிருத்திப் பணிகளை  மேற்கொண்டு வருகின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுக வேலைகளிலும், நுரைச்சோலை அனல் மின்நிலையப் பணிகளிலும்,  தெற்கில் நெடுஞ்சாலைப் பணிகளிலும் சீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் தெற்கில் ரயில் பாதை புனரமைப்பு, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளில் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், அமெரிக்கா தனது படையினரைக் கொண்டு வந்து இதுபோன்று பணியில் ஈடுபடுத்த விரும்பினால் இலங்கை அரசினால் அதற்குத் தடைவிதிக்க முடியாது.

ஏனென்றால் சீனர்களும் இந்தியர்களும் இருக்கும் போது அமெரிக்கர்களால் ஏன் அதைச் செய்ய முடியாது என்ற கேள்வி எழும். அது அரசுக்குச் சிக்கலானதொரு விவகாரமாகும்.

இன்னொரு பிரச்சினை என்னவென்றால் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்துடன் இலங்கைக்கு இருந்து வருகின்ற நல்லுறவு தான்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு வழங்கி உதவியது.
இராஜாங்கத் திணைக்களம் தான் பிரச்சினைகளை கிளப்பியது என்ற ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார் ஜனாதிபதி. இது ஒரு வகையில் உண்மை தான்.

போரின் போது அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடித்து உண்மை. ஒருபக்கத்தில் புலிகளை அழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது. மற்றொரு பக்கத்தில் புலிகளைக் காப்பாற்ற உதவுவது போன்றும் நடித்தது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூட மனித உரிமை மீறல் விவகாரங்களில் கண்டிப்பை காட்டினாலும் புலிகள் விடயத்தில் அது தயவு காட்டவில்லை.

அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் இடையில் இருவேறு முகங்கள் இருப்பதாகவோ ஒன்றினது கொள்கை ஒன்றுக்கு ஒத்து வராது என்றோ கருதும் வகையில் ஜனாதிபதி கூறியுள்ள நியாயம் பொருத்தமானதல்ல.

அதேவேளை இப்போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடன் இருக்கின்ற முறுகல் நிலையை வைத்துக் கொண்டு பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவியை தடுக்கவோ முறுக்கவோ முடியாது.

என்ன தான் முரண்பாடுகள் பிரச்சினைகள் இருந்தாலும் பசுபிக் கட்டளைப் பீடம் இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டேயிருக்கிறது.

அண்மையில் கூட பசுபிக் கட்டளைப் பீடத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவர் கொழும்பு வந்து பாதுகாப்புத்துறை சார்ந்த அனைவரையும் சந்தித்துப் பேசி விட்டுச் சென்றிருந்தார்.

இந்த நல்லுறவை சிறு உரசலுக்காக இழந்துவிட முடியாது என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து.
அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கைக்கு அச்சமூட்டுவதாக இருந்தாலும் கூட, அதற்கு மறுப்புத் தெரிவிக்க முடியாதநிலை உள்ளது.

பசுபிக் கட்டளைப் பீடம் ஒன்றும் சாதாரணமானதொன்று அல்ல. அது புவியின் அரைப்பகுதிக்கும் அதிகமான பிரதேசத்தைக் கண்காணிக்கும் மிகப்பெரியதொரு படையமைப்பு.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில் ஏழு கட்டளைப் பீடங்கள் உள்ளன.  இவற்றில் மிகப்பெரியது தான் பசுபிக் கட்டளை பீடம்.

இது 37 நாடுகள், 30 பிராந்தியங்களை உள்ளடக்கிய இந்தக் கட்டளைப் பீடத்துக்குபட்ட பகுதிகளில் மட்டும் உலக சனத்தொகையில் 60 வீதத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

இந்தியாவின் மேற்கு எல்லையில் தொடங்கி அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, மடகஸ்கார், ஹவாய் வரை இதன் எல்லை பரந்து விரிந்துள்ளது. இதன் தலைமையகம் ஹவாய் தீவில் உள்ளது. கொரிய மற்றும் வியட்னாம் போர் நடத்தியதும் இந்தக் கட்டளைப் பீடமே.

உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளைப் பீடத்தின் உதவியை மறுத்து ஒதுக்குவது, எதிர்க்காலத்தில் கிடைக்கக் கூடிய இராணுவ உதவிகள் மற்றும் உதவிகளை இழப்பதற்குச் சமம். இதனால் தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் அரசாங்கம் இந்த உதவியை ஏற்றுக் கொண்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இப்போது பசுபிக் கட்டளைப் பீடத்தை முக்கியத்துவப்படுத்தியே நகர்வுகளை மேற்கொள்கிறது. இதன் ஒரு கட்டமாகவே சீனாவுக்குப் போட்டியாக  அவுஸ்ரேலியாவை பலப்படுத்தி வருகிறது.
இந்தக் கட்டத்தில் இலங்கையும் அமெரிக்காகவுக்கு மிகவும் தேவையானதொரு புள்ளி தான்.

இலங்கையை சீனா எந்தவகையில் பயன்படுத்திக் கொள்ள முனைகிறதோ, அதேபோல அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அமெரிக்காவும் முனைகிறது.

இங்கே தான் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முட்டி மோத முனைகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றும் நோக்கம் ஏதும் இப்போது கிடையாது. இலங்கையில் தளம் அமைக்க அமெரிக்கா முனைவதாக ஒரு கருத்து நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. அது ஜே.ஆர்.காலத்து உறவுகளின் மூலம் தொடங்கிய வதந்தி.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது, பசுபிக் கட்டளைப்பீடத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் உதவிக்காக வந்திறங்கிய போதும்இ இனிமேல் அவர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.

ஆனால் வந்த வேலை முடிந்ததும் அமெரிக்கப் படைகள் புறப்பட்டுப் போய்விட்டன. இப்போதும் கூட இலங்கையில் தளம் அமைக்க வேண்டிய அவசியம் ஒன்றும் அமெரிக்காவுக்கு ஏற்பட்டு விடவில்லை.

ஆனால் இலங்கையை தனது கண்காணிப்புக்குள் வைத்துக் கொள்வதும் சீனா தளமாகப் பயன்படுத்துவதை தடுப்பதும் அமெரிக்காவின்  நோக்கங்களாகும்.

விமல் வீரவன்சவோ சிங்களத் தேசியவாத சக்திகளோ அமெரிக்கா குறித்து மிகையான எச்சரிக்கைகளை விடுத்து அச்சம் கொள்ள வைக்க முயன்றாலும் அந்தளவுக்கு நிலைமை ஒன்றும் மோசமாகி விடவில்லை.

இந்தக் கட்டத்தில் அமெரிக்காவுடன் முரண்பட முனைவது தான் ஆபத்தானது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்து கொண்டிருக்கும் அளவுக்கு விமல் வீரவன்ச புரிந்து கொள்ளவில்லை.

அமெரிக்கா சம்மதத்தோடு கால் வைப்பது ஒரு ரகம். சம்மதமின்றி கால் வைப்பது இன்னொரு ரகம்.

முரண்பாடு ஏற்பட்டால் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அமெரிக்க கால் வைக்க முனையலாம்.  எனவே தான் அரசாங்கம் விட்டுப் பிடிக்க நெகிழ்ந்து கொடுக்க இணங்கியுள்ளது.

உண்மையில் அரசாங்கம் அமெரிக்காவுடன் இணங்கிப் போக முனைவதற்கும், விமல் வீரவன்ச துள்ளிக் குதிப்பதற்கும் காரணம் உள்ளது.

அது தான் போர்க்குற்றச்சாட்டுகள்.  இதனை முன்வைத்து அமெரிக்கா காலை வைத்து விடுமோ என்ற பயம் விமல் வீரவன்சவுக்கு இருக்கலாம்.

எங்கே இந்த விவகாரத்தில் முரண்படப் போய் அவர்கள் போர்க்குற்றச்சாட்டை கையில் எடுத்து விடுவார்களோ என்ற பயம் அரசுக்கு. இது தான் இந்த விவகாரம் முற்றுவதற்கு முக்கியமான காரணம்.

Please Click here to login / register to post your comments.