எதிரிப் பாசறைகளை ஏக்கத்தோடும், தமிழினத்தை ஆர்வத்தோடும் காத்திருக்க வைத்திருக்கும் 'மாவீரர் நாள் உரை"

ஆக்கம்: குயின்ரஸ் துரைசிங்கம் - ஸ்காபரோ - கனடா
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, ஏனைய வருடங்களில் பெற்று வந்த கவனத்தையும் ஈர்ப்பையும் விட, இவ்வருடம் மிகுந்த பரபரப்புடனும் உன்னிப்புடனும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில், கடுமையான யுத்தத்தின் மத்தியில் அல்லது யுத்தம் தவிர்க்கப்பட்டு சமாதான நிலைப்பாடுள்ள நிலையில், அந்தந்த நிலைப்பாட்டிற்குப் பதில் கூறும் உரையாக, மாவீரர் நாள் உரை அமைவது கண்கூடு.

கடந்த இரு வருடங்களாக, கொழும்பு அரசியலின் இஸ்திரமற்ற குழப்ப சூழலில், தமிழர் தரப்பின் அடுத்த கட்ட நகர்வு குறித்து காத்திரமான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாத நிலையில், மாவீரர் உரைகள் கடந்து சென்றன. இவற்றிற்கு மாறாக, இம்முறை, போர் தொடங்குமா, ஏ-9 திறக்கப்படுமா, சமாதானம் குழம்புமா, யுத்த நிறுத்தம் கைவிடப்படுமா, சர்வதேச மத்தியஸ்தம் திருந்துமா, கொழும்பு அரசியல் தலைமை புத்திபெறுமா, தமிழின விடுதலை அரும்புமா, தமிழீழ அறிவிப்பு வரலாமா என்றெல்லாம் பல கேள்விகள் உலகெங்கும் கேட்கப்படும் ஒரு இக்கட்டான காய் நகர்த்தலின் மத்தியில், அப்பட்டமாக மனித அவலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், மக்கள் படையும் - உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து கலைக்கப்பட்டவர்களின் குரலும் உச்சமாய் ~நாடுதளுவிய அழிவுப்பாதை| குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த மாவீரர் உரை வெளியே வரவிருக்கிறது.

குறிப்பாக, எழுச்சி நிகழ்வுகளும், பிரகடனங்களும், தனியாட்சிக்கான காய் நகர்த்தல்களும் ஒருபக்கமும், பௌத்த சிங்கள இனவெறியை மீண்டும் கையிலெடுக்கும் இனவாதிகள் மறுபுறமும், பனிப்போருக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில், ஜனாதிபதி ஆட்சியென்ற பெயரில் இராணுவ ஆட்சியா அல்லது கூட்டு நாடாளுமன்ற ஆட்சி என்ற பெயரில் ஒன்றுபட்ட தமிழின அழிப்பா அல்லது நாட்டுநலனைக் கொஞ்சமாவது கருத்தில் எடுக்க சிங்கள அதிகாரம் முயல்கிறதா என்றெல்லாம் மக்கள் மனக்கிலேசமடைந்திருக்கையில், தலைவர் உரையின் வரிகளுக்கிடையில் மறைந்திருக்கும் உத்திகளை அவதானிக்க சித்தர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

சர்வதேச நாடுகள் பலவற்றினதும் பெருமளவிலான ஆதரவைப் பெற்றிருந்த சமாதான முயற்சிகளை குழப்பும் விதமாக, இனவாதிகளின் தற்காலிக கூட்டும், அதனால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டு ஒப்பந்தங்களும், இந்த ஒப்பந்தங்களின் கீழ் பரிமாறப்படும் வாக்குறுதிகளும் அமைந்து விட்டமையாலேயே, இந்தக் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வதேசத்தை தாஜா பண்ணும் வகையில் சமாதானம் பற்றி சிங்களத் தலைமை பேசிக்கொண்டிருந்தாலும், அதே கரங்களால் கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதத்தில், அப்பாவிப் பொதுமக்களும், குழந்தை குட்டிகளும் மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊடகவியலாளர்களும், மனிதநேயப் பணியாளர்களும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள். இதன் அடுத்த கட்டமாக, சர்வதேச கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் கூட, அரசின் கோரத் தாக்குதலில் இலக்கு வைக்கப்படுமளவுக்கு, அரச பயங்கரவாதத்தின் கோரமுகம் கர்ண கொடூரமாய்த் தலைவிரித்தாடுகிறது.

சென்ற வருடம் நவம்பரில், உறுதியான எந்தப் பதவியையும் வகித்திராத, பொறுப்பான எந்த அரசியல் திறமைகளையும் வெளிக்காட்டியிராத, ~டவுண் சவுத்| பௌத்த சிங்கள தீவிரவாதியாகவும் சிங்கள மக்களின் காவல்காரனாகவும் தன்னைக் காட்டிவந்த மகிந்த ராஜபக்ஷ, 56 ஆம் ஆண்டு தொட்டுப்பார்த்து கைசுட்டுக்கொண்ட ~சிங்கள இனவெறி| பிரச்சார யுத்தியை தனது கையிலும் எடுத்துக்கொண்டு, எதிரியை அழிப்பதாகப் பிரச்சாரம் செய்து, ஒருசில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சிப்பீடம் ஏறினார்.

தலைவருடன் நேரடியாகப் பேச வேண்டுமானால்கூட அதையும் செய்து, நாட்டின் அமைதிக்காக, இனப்பிரச்சனைத் தீர்வுக்காக ஆனமட்டும் உழைப்பேன் என்று ஒரு பக்கத்திலும், அதே தருணத்தில் புலிகளை அழித்து, தமிழினத்திற்கு பாடம் புகட்டுவேன் என்று இன்னுமொரு பக்கத்திலும், மேடைகளையும் கூடியுள்ள கூட்டத்தையும் நாடிபிடித்துப்பார்த்து நயவஞ்சகமாகப் பிரச்சாரம் செய்து, தோல்வியடைவது உறுதி என்ற நிலையில் தேர்தலைச் சந்தித்தவர் மகிந்த. இருந்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மகிந்தவும் உதாரணம். வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை இறுதி நேரத்தில் நிறுத்திக்கொண்டதால், அந்த பகிஷ்கரிப்பில் வெற்றிபெற்றவரே மகிந்த ராஜபக்ஷ. தற்செயலாக வடக்கு - கிழக்கில் தமிழர்கள் வாக்களித்திருந்தால், மகிந்த தோல்வி கண்டிருப்பது உறுதி.

ஆனால், அந்த தமிழின வாக்கில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தாலும், தமிழினத்திற்கு அது தோல்வியாகவே இருந்திருக்கும். தமிழினத்திற்கு நிரந்தர அமைதி பெற்றுத்தருவதாக ஏமாற்றி, சூட்சுமமாக சர்வதேச அரங்கில் வாக்குறுதிகள் வழங்கி, யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் வெறுமேனியனாகக் கையொப்பமிட்ட ரணில் விக்கிரமசிங்க, அந்த ஒப்பந்த வாக்குறுதி எதனையும் வழங்காது துரோகம் செய்தது உட்பட, சமதரப்பு என்று சிரித்துக்கொண்டு கையொப்பமிட்டுவிட்டு, ஒருதரப்பை நயவஞ்சகமாக உடைத்து, உட்பூசல் மூலம் புதிய துரோகச்செயலுக்குத் துணைபோனவரும் அவர்தான். ஆக, இரண்டு எருமைகளில், எதிலே சவாரி செய்யப்போகிறீர் என்று தமிழினத்தை ஏமாற்ற முயற்சித்த சிங்கள இனத்திற்கு, ஒற்றை வாக்கும் போடாது பாடம் படிப்பித்தது தமிழினம்.

~ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து தன்னை மூச்சுவிடக்கூட விடவில்லை புலிகள்| என்று தனது வாயால் குழறும் அளவுக்கு அழுத்தம் பலமாகத்தான் இருந்தது மகிந்தவுக்கு. பல்வேறு கோணத்திலும், இராஜதந்திர நகர்வுகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ள, அரசியல் ஞானமும் அனுபவமுமற்ற மகிந்தவுக்கு சிதம்பர சக்கரத்தைப் பார்த்த கதையாக அரசியல்களம் காட்சிதந்தது.

சர்வதேசம், மனித உரிமை, ஜனநாயகம், விழுமியம், மனிதாபிமானம், மனிதம் என்ற பல புதிய பதங்களெல்லாம், மனிதருக்கு புதிய குழப்பங்களை உருவாக்கியது. குருவி சுடப்போன வேட்டைக்காரன், தாராக் கூட்டத்துக்குக் குறிவைத்துவிட்டு, குருவி தாராவுக்குள் மறைந்திருந்ததால்தான் சுட்டேன் என்று சொன்ன கதையாக, வைத்தியசாலை, பாடசாலை, கோயில், குளம் என்று அகப்பட்ட இடத்திலெல்லாம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றழித்துவிட்டு, தெரிந்தெடுத்த நிலைகள் மீதுதான் தாக்கினோம் என்றும், புலிகள் அங்கே மறைந்திருந்ததால் வேறு வழியில்லாமல் சுடவேண்டி வந்தது என்றும் கவலை தெரிவிக்கும் வகையில்தான் அரசின் நடவடிக்கைகள் காட்சி தந்தன.

ஆனால், இதற்குப் பதிலளித்த விடுதலைப் புலிகள் மட்டும், தெரிந்தெடுத்த நிலைகள் மீது, கனகச்சிதமாக, மிகத் துல்லியமாக, இலக்குவைத்துத் தாக்கினார்கள். இராணுவத் தலைமையகத்திற்குள் நுழைந்து, தலைமைத் தளபதி மீது தாக்குதல், பரணி என்ற மூன்றாம் நிலைத் தளபதி மீது நேரடித் தாக்குதல், உளவுப்படையிலும் புலனாய்வு இரகசிய அமைப்பிலும் தொழில் புரிந்து இலேசாகக் காசு பண்ண முயற்சித்த பலர்மீதும் நெத்தியடி, ஒட்டுப்படை என்று சொல்லிக்கொண்டு, இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அவர்கள் பின்னே அலையும் பச்சோந்திகள் மீது தாக்குதல், வடக்கிலும் கிழக்கிலும் கொலை வெறியாட்டம் புரிந்துவிட்டு, உள்ளதைப் பெட்டிகட்டிக்கொண்டு, அங்குள்ள பெண்களையும் சுவைத்துப் பார்க்கும் மாபாதச் செயலை மனமறிந்து செய்துவிட்டு, வீட்டுக்கு நல்லபிள்ளைபோல விடுமுறை செல்லப்போன தொடரணிமீது தாக்குதல், வலிந்த தாக்குதல் தொடுக்கமாட்டோம் என்று மகிந்த சொல்லிவிட்டு தண்ணி குடிப்பதற்குள் முகமாலையில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து முன்நகர்ந்து சென்ற படையினரை சுற்றிவளைத்துத் தாக்குதல், தெற்கில் பாதுகாப்பை உச்சநிலைக்குக் கூட்டிவிட்டோம், எந்தப் பித்தக்காரனும் தன் குண்டூசியைக்கூட நுழைக்க வாய்ப்பில்லை என்று மார்தட்டிய சிங்களத் தலைமையின் இரண்டாவது பாரிய துறைமுகமான காலி மீது தாக்குதல், பாகிஸ்தான் உளவுப்படை உதவியுடன் முஸ்லிம் படையணியொன்றை உருவாக்கும் இரகசியத் திட்டமிடலில் அளவளாவிக்கொண்டிருந்த மூதூர் இரகசிய திட்டமிடல் குழுவினர் மீது தாக்குதல், கடலில் கோலோச்சலாம் என்று நப்பாசை கொண்டு, கடற்புலிகளைச் சீண்டிப் பார்த்தபோது, வடமராட்சிக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட டோராக்கள் என்று, ஒரு பக்கத்தில் மட்டும் மிகத் தெளிவாக, தெரிந்தெடுக்கப்பட்ட நிலைகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தன.

வடக்கு - கிழக்கு இணைப்பு

ஒரு காலத்தில் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் நீதிமன்றத்தைப் பயன்படுத்தி பிரிக்கமுடியுமென்றால், இன்னுமொரு காலத்தில் இணைக்கப்பட்ட அரசதானிகளையும் அதே நீதிமன்றத்தைப் பயன்படுத்தி பிரித்துவிடலாம். கண்டி இராச்சியம் என்றும் யாழ்ப்பாண இராச்சியம் என்றும் பிரிந்துகிடந்த இலங்கையை, பிரித்தானியர்கள் இணைத்தார்கள். 1621ல், போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாண தமிழ் அரசு வீழ்ச்சியடைவதற்கு முன்னால், இலங்கையில் தமிழர்களுக்கென தனியான யாழ்ப்பாண அரசும், சிங்களவருக்கென தனியான கண்டி அரசும் இருந்ததையே வரலாறுகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையை ஆண்ட தமிழ் வேந்தன் இராவணன் என்பதும், இதனுடன் இணைந்த வரலாறுதான்.

1948 இல் சோல்பரி அரசமைப்புச் சட்டத்தின் கீழ், பிரித்தானியர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்தபோது, இலங்கைப் பாராளுமன்றத்தில் சிங்களப் பெரும்பான்மை உறுப்பினர்கள், இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து சட்டமியற்றினார்கள். தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வாக்களித்து வந்த மக்கள், தங்கள் வாக்குரிமையை இழந்தார்கள். தொழில் உரிமை, வாழ்வுரிமை, கல்வி உரிமை, வரி உரிமை என்று இன்னோரன்ன பல இருக்க, எதற்காக வாக்குரிமை மட்டும் திட்டமிட்டு பறிக்கப்பட்டது. இது, நீண்டகால மிகப்பெரிய சதியொன்றின் முதற்கட்டம் என்பதை யாரும் அப்போது உணர்ந்துகொள்ளவில்லை. இந்த வாக்குரிமை பறிப்பின் விளைவாக, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதியாகக் குறைக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு தமிழர்களுடன், மலையகத் தமிழர்களும் சேர்ந்து வாக்களித்தால், தமிழினத்தின் கை, சிங்கள அரசியலில் ஓங்கிவிட வாய்ப்பிருந்ததால், வாக்குரிமை பறிக்கப்பட்டது.

இதுதவிர, தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. மலையகத் தமிழர்களை, மலையகச் சிங்களவர்களாக மாற்றுவது ஒரு திட்டம், கிழக்கின் குடியிருப்பை மாற்றியமைத்து, சிங்கள வாழ்வுப் பிரதேசங்களை முதலிடத்திற்கு நகர்த்திச் செல்வது என்பது இன்னுமொரு திட்டம். கிழக்கில் தமிழர்களின் குடியிருப்பைக் குறைப்பதற்கு, சிங்கள அரசு நேரடியாக இறங்காமல், மூன்றாம் தரப்பொன்றின் மூலம் இதை கச்சிதமாக முடிக்கவேண்டும் என்பது இதற்கான திட்டமிடலின் இரகசியமான சூட்சுமம். இதில் பலிக்கடாக்களாக்கப் பட்டவர்களே, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள். கிழக்கிலங்கை முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டு, முஸ்லிம்களும் தமிழர்களும் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்டு அழிந்துபோகும் அதேவேளை, குடியேற்றங்கள் என்ற பெயரில், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது, அதன்மூலம் சிங்களக் கிராமங்களை நிறுவி, கிழக்கில் சிங்களக் குடியிருப்பை பல மடங்கு அதிகரிப்பது என்பது இறுதி இலக்கு.

1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டதால், முடிந்தவரை சிங்களம் கற்றுக்கொள்ள விரும்பும் தமிழர்களை முற்றுமுழுதாக சிங்களவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது. அதற்கு ஏதுவாக, தனிச்சிங்கள மொழி மட்டும் பாவனையிலுள்ள பகுதிகளுக்கு தமிழ் அரச ஊழியர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பது, சிங்களம் தெரிந்தால் மட்டும் மேலதிக சலுகைகளை வழங்குவது, சிங்களப் பாடசாலையில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டால், இலவச கல்வியும் மேலும் பல சலுகைகளும் வழங்குவது, சிங்களவருக்கு வாக்களிக்க முன்வந்தால், மேலும் பல இத்தியாதி சலுகைகளும் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டு, தமிழினத்தின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைப்பதில் சிங்கள அரசு முனைப்புடன் செயற்பட்டது.

தமிழர்களின் மொழி நிராகரிக்கப்பட்டதால் வேதனையடைந்த தமிழினம், தங்களது பண்பாட்டு உரிமைகளைக் காப்பாற்றும் நோக்குடன், இந்த புதிய ஆட்சிமொழிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி, லண்டனிலுள்ள பி.ரி.வி. கவுன்சிலுக்கு முறையிட்டார்கள். அந்த பி.ரி.வி. கவுன்சில், ஆட்சி மொழிச்சட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு, இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு ஆணையிட்டது. இருந்தும், இலங்கை அரசு, அதைக் கவனத்தில் எடுப்பதற்குப் பதிலாக, பி.ரி.வி. கவுன்சிலுக்கு, மேன்முறையீடு செய்கின்ற அதிகாரத்தையே நீக்கியது. இவைகளை எதிர்த்து, மிதவாதத் தலைவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த மொழியுரிமை மற்றும் வாழ்வுரிமைப் போராட்டங்களை, சிங்கள அரசு இராணுவ வல்லாதிக்கம் மூலம் துவம்சம் செய்து வந்தது. தலைவர்கள் கேட்பது நியாயம் என்று தெரிந்திருந்தும், நயவஞ்சகமாக, ஒப்பந்தம் செய்வது போல் செய்து, பின் அதே ஒப்பந்தத்தை, மக்கள் எதிர்ப்பைக் காரணம்காட்டி கிழித்தெறிவதிலேயே சிங்கள அரசு குறியாக செயற்பட்டு வந்தது.

இதன் இறுதிக்கட்ட வெளிப்பாடாகவே, 1976 இல் தந்தை செல்வா என்னும், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் முதலாவது தேசிய மாநாடு கூட்டப்பட்டு, ஒப்பந்தமும் வெளியிடப்பட்டது. வட்டுக்கோட்டை ஒப்பந்தம் என்று பிரபலமடைந்த அந்த ஒப்பந்தத்தில், ஜனநாயக வழியில், அகிம்சை - மனிதாபிமானம் -அமைதிவழி - போராட்டங்களனைத்தும் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வந்ததால், இந்த மிதவாதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டதே, தமிழீழக் கோரிக்கை. அனைத்து தமிழர் கட்சிகளும் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

"The convention resolves that the restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist state of Tamil Eelam based on the right of self-determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the Tamil nation in this country".

இதுதான் அந்தப் பிரகடனத்தின் முக்கிய பகுதி. அதாவது, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திர தமிழீழத்தில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற தனிநாடுதான் தீர்வாக அமைவதாக 1976 இல் பிரகடனம் செய்யப்பட்டது. ஆக, தமிழீழ கோரிக்கையை முன்மொழிந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல, ஏன், எந்தவொரு போராட்டக் குழுவுமல்ல. ஜனநாயக விழுமியங்களுக்குள் நின்றுகொண்டு, தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த மிதவாதத் தலைவர்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாநில சுயாட்சி அல்லது அதற்கு அண்மித்த அதிகாரப் பகிர்வு ஒன்றை, சிங்கள அரசிடமிருந்து பெற்றுவிட முடியுமென்ற நம்பிக்கையுடன் போராடி தோற்றுப்போனதால், அந்த ஏமாற்றத்தின் பின்னர் உருவானதே தமிழீழக் கோரிக்கை. இன்னுமொரு வகையில் பார்த்தால், தமிழினம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதால், சிங்களத் தலைமைகள் கட்டாயப்படுத்தித் தள்ளிவிட்ட ஒரு குழியே ஆயுதப் போராட்டம். ஜனநாயக வழியிலான அகிம்சைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி நிராகரித்து பௌத்த சிங்கள அரசை நிறுவுவதில் சிங்களத் தலைமைகள் குறியாக இருந்ததால், தானாகப் பிறப்பெடுத்ததுதான் இந்த தனிநாட்டுக் கோரிக்கை.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருப்பது எப்படி நடைமுறைச் சாத்தியமில்லையோ, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒரே நாடாக இருப்பது எப்படி முடியாத காரியமோ, சூடானும் டர்பாரும் இணைந்து வாழ்வது எப்படி சாத்தியப்படாதோ, அதுபோன்றுதான் தமிழீழமும் சிங்கள தேசமும் ஓரமைப்புக்குள் ஒருநாடாக சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பும் என்பதே தற்போதுள்ள தெளிவான வரலாறு. இந்தியாவில் இரு இனங்கள் இணைந்துவாழ்வதற்கான சாத்தியங்கள் இல்லாத அளவுக்கு இனவெறி வளர்ந்துவிட்டது என்பதை அவதானித்த இந்திய ஆட்சிப்பீடம், உடனடியாக உபயோகித்த மாற்றீடு, பிரிந்து வாழ்கின்ற தனியாட்சி முறைதான். அலி ஜின்னாவின் கோரிக்கைகள் ஏற்கமுடியாதனவாக இருந்தபோது, அதைக் காரணமாக வைத்து இனப்போரை முன்னெடுக்கவும், இன அழிப்பைத் தொடரவும் அப்போதைய இந்தியத் தலைமை தயாராக இருக்கவில்லை. சமாதான முயற்சிகளை முன்னெடுத்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து, தனியாகப் பிரிந்துவிடுகின்ற திட்டத்தை முன்மொழிந்தார். ஆக, இரு இனங்கள் சேர்;ந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தால், அதற்கான மாற்றுத் தீர்வாக, தனிநாட்டுத் தீர்வை முன்வைத்தவர் மகாத்மா காந்திதான். அதன்மூலம் பிறந்ததுதான் பாக்கிஸ்தான் என்ற தனிநாடு.

பாகிஸ்தான் தனிநாடாக இயங்கும்போது, அங்கு கிழக்குப் பாகிஸ்தான் மக்களுடன் ஆட்சிப்பீடம் முரண்டுபிடிக்கிறது, கிழக்குப் பாகிஸ்தான் மக்களை கொன்றழிக்கிறது என்று தெரிந்தபோது, இணைந்து வாழ முடியாத இரு இனங்களுக்கு, மீண்டும் இந்தியா வழங்கிய தீர்ப்பு, பிரிந்து வாழ்வது தான். இதன்மூலம் பிறந்தது தான் பங்களாதேஷ் என்ற தனிநாடு.

எப்படிப் பார்த்தாலும், சரியான புரிதலுடன் இணைந்து வாழும் இனங்கள், மாநில சுயாட்சியின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு வாழலாம் என்பதையும், புரிதல் அற்ற, இணைந்து வாழும் இணக்கப்பாடற்ற இரு இனங்கள், பிரிந்து தனித்தனியான ஆட்சியை அமைக்கலாம் என்பதையும், ஆசியாவில் கற்றுத்தந்தவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் தான்.

திட்டமிட்ட இனக்கலவரங்கள்

1983 இல் இலங்கையின் சிங்களப் பிரதேசங்களில் அதிகம் முன்னெடுக்கப்பட்ட இன வன்முறை மூலம், தமிழினத்தை அழிக்கும் திட்டம் பெருமெடுப்பில் நகர ஆரம்பித்தது. 1964 இலும், 70, 72, 76, 77, 81 என இன அழிப்பு தொடர்ந்தாலும், 83 இல் அது நேரடி நாடுதளுவிய அழிப்பாக மாறியது. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் இந்த இனஅழிப்பு முடுக்கிவிடப்பட்டதுடன், 83 இல் சிங்கள அரசின் வெற்றியாகவும் இது கருதப்பட்டது.

ஆனால், அதன் பின்னர், இதே இன அழிப்பு, சிங்களப் பகுதிகளிலிருந்து நகர்ந்து, வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் தொடர ஆரம்பித்தது. செய்தித்தடையையும் அவசரகாலச் சட்டத்தின் கீழான இராணுவ அடக்குமுறையையும் வடக்கு கிழக்கில் கட்டவிழ்த்து விட்ட சிங்கள அரசு, அங்கு தமிழினத்தை தொடர்ச்சியாக அழிக்கும் தங்கள் திட்டத்தைத் தொடர்ந்தது. தமிழர் பிரதேசங்களை சூறையாடுவது, சிங்களக் குடியிருப்பை விஸ்தரிப்பது, தரப்படுத்தல் மூலம் கல்வியை நசுக்குவது, களவு, கற்பழிப்பு, கடத்தல், கொலை, தீய பழக்கங்கள் தமிழர் பிரதேசத்தில் பரவுவதற்கான முன்னெடுப்புக்கள், போதைவஸ்துப் பொருட்களை விநியோகித்தல், வயது வந்தவர்க்கான தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை மாணவர்கள் மத்தியில் விநியோகித்தல், கருத்தடை மாத்திரைகளையும் உறைகளையும் விநியோகித்தல், பாடசாலை நேரத்தில் தேடுதல் நடாத்தி கல்வியைக் குழப்புதல் போன்ற இன்னோரன்ன பல்வேறு முயற்சிகள் மூலம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன அழிப்பு தொடர்கதையானது.

இந்தக் குரூர அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, மிதவாதத் தலைவர்களால் முடியாமல் போனபோது, தமிழினத்தின் ஒட்டுமொத்த அழிவைத் தடுத்துநிறுத்த முன்வந்தவர்கள் தான் இளைஞர் குழுக்கள். இந்த அரச பயங்கரவாதத்தை, அரச வன்முறைகளை, அரச இனஅழிப்பைத் தடுத்துநிறுத்த, ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரேவழி என்ற நிலையில் பிறப்பெடுத்ததுதான் ஆயுதப் போராட்டம். 40 களிலிருந்து 70களின் இறுதிவரை, சிங்கள வல்லாதிக்க அரசின் அரச பயங்கரவாதத்தின் மூலம், தமிழினம் இழந்தவை கொஞ்சநஞ்சமல்ல. மனிதாபிமானம் தெரிந்த வெள்ளைக்காரரிடம், மகாத்மா காந்தியால் விற்க முடிந்த அஹிம்சை என்ற சுதந்திரப் பாதையை, அழித்தொழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு மிருக இனத்திடம், தமிழ் மிதவாத அரசியல்வாதிகள் எதிர்பார்த்து ஏமாந்துபோனதால், அந்த அழிவிலிருந்து பிறப்பெடுத்ததுதான் இளைஞர் போராட்டம்.

இலங்கை அரசின் பயங்கரவாதம், 1956 இல் சத்தியாக்கிரகம் நடாத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிங்களக் காடையர்கள் வெறித்தனமாகத் தாக்கியதிலிருந்து ஆரம்பித்து, 1958 மே மாதம், பொலன்னறுவை-மயிலந்தனை, ஹிங்குறுகொட கரும்புத்தோட்டத்திற்குள் வைத்து அப்பாவித் தமிழர்களை வெட்டியும் எரித்தும் கொன்றுகுவித்த வரலாறு முதல், இன்றுவரை தொடர்கதையாக விரிந்து கிடக்கிறது. 81 யூலையில், இரத்தினபுரம், நீர்கொழும்பு மற்றும் பகுதிகளில் இந்தியத் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனஅழிப்பில், 10 இந்தியத் தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பலநூறு பேர் படுகாயமடைந்தனர். யாழ் நூலக எரிப்பு உட்பட, அரச பயங்கரவாதத்திற்கு அளவே இல்லை என்ற நிலையில், காலகாலமாக இன அழிப்பு தொடர்ந்தது. குமுதினி படகும், பிந்துனுவேவ நன்னடத்தைப் பள்ளியும், ஆலயங்களும் கோயில்களும் பாடசாலைகளும் வைத்தியசாலைகளும், பூசா போன்ற சிறைச்சாலைகளும் தமிழின அழிப்பின் தொடர்ச்சியான சாட்சிகளாக வலம்வருகின்றன.

சிறைச்சாலைகளில், கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டு, கர்ணகொரூரமாய் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆயிரமாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தியாவுக்குத் தப்பிச்செல்லும் வழியில், இந்துமா கடல் அன்னையின் கோர அலையில் சிக்கி மடிந்தவர்களும் சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்ட அகதிகளும் ஆயிரமாயிரம். வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயன்றபோது, பனியிலும் குளிரிலும் நீரிலும் நெருப்பிலும் வெந்து செத்துப் போன அப்பாவிகள் ஆயிரமாயிரம். கிழக்கு ஐரோப்பிய நாட்டு நிலக்கீழ் சிறைகளிலும், தென்அமெரிக்க சிறைகளிலும் நிரந்தரமாக மறைக்கப்பட்டுள்ள தமிழர்கள் ஏராளம். தேடுதல், விசாரணை மற்றும் கைது என்ற பெயரில் தினமும் கொண்டுசெல்லப்பட்டு, நிரந்தரமாக அழிக்கப்படுபவர்கள் ஏராளம் ஏராளம். இனக்கலவரம் என்ற பெயரில் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்படும் இனஅழிப்பில் திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர்கள் பல ஆயிரம். யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவான பின்னரும் கூட, தினமும் கொன்றழிக்கப்படும் தமிழர்களும் கடத்தல் நாடகத்தில் பலிக்கடாவாகும் தமிழர்களும் பல ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆக, கடந்த 10, 15 ஆண்டுகளாக, மொத்தம் 65,000 பேர் பலியாகிவிட்ட இனப்பிரச்சனை என்று, சிங்கள அரசு சூட்சுமமாகப் பிரச்சாரம் செய்துவரும் இலங்கைப் பிரச்சனையின் உண்மை வடிவம் என்னவென்றால், மொத்தம் 2 இலட்சம் தமிழர்களாவது கொன்றழிக்கப்பட்டுவிட்ட இன அழிப்பின் வடிவமே சிறிலங்கா அரச பயங்கரவாதம். இதிலே, தங்களது இன்னுயிரை ஆகுதியாக்கிய 17,000 ற்கும் அதிகமான போராளிகளும் அடங்குகிறார்கள். நாட்டின் விடுதலையை மனதிலே உறுதியாக நினைத்துக்கொண்டு, பல்வேறு இயக்கங்களிலும் இணைந்துகொண்டு போராடிய இன்னும் பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளும் இந்தத் தொகைக்குள் வருகிறார்கள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களை பட்டப்பகலில் சந்திரிகா மற்றும் ரத்வத்தை ஆகியோரின் கீழ் பணியாற்றும் காடையர் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொன்றார்கள். தமிழ் ஊடகவியலாளர்களான மாமனிதர் டி.சிவராம், நிர்மலராஜன், நாட்டுப்பற்றாளர் நடேசன், சுகிர்தராஜன் போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம், மாமனிதர் விக்னேஸ்வரன் என்று ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். தற்போது, இன்னுமொரு தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினரான மாமனிதர் ந.ரவிராஜ் அரச பயங்கரவாதத்திற்குப் பலியாகியிருக்கிறார்.

மந்துவிலில் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்த 8 பேர் அரச படையினரால் கடத்திக் கொல்லப்பட்டனர். புத்தூரில் வீதியில் சென்ற 5 பேரை அரச படையினர் அழைத்துச் சென்று கொன்று போட்டனர். அல்லைப்பிட்டியில் பச்சிளங்குழந்தை அடங்கலாக 13 பேர் அரச கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச் சபை இதை உறுதிசெய்தது. வங்காலையில் தாயும் பிள்ளைகளும் தூக்கிலிடப்பட்டனர். பிள்ளையின் வயிறு கிழிக்கப்பட்டிருந்தது. பேசாலையில் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அகதிகள் மீது கைக்குண்டு வீசி துப்பாக்கிச்சூடு நடத்தியது இராணுவம். பலர் கொல்லப்பட்டனர். அவிசாவளை தோட்டங்களில் தலையில்லாத முண்டங்கள் கிடந்தன. ஆராய்ந்து பார்த்ததில், கொழும்பு விடுதிகளில் படையினர் கைதுசெய்த அப்பாவித் தமிழர்கள் என்று தெரியவந்தது.

பிரான்ஸ் நாட்டின் அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய மனிதநேயத் தொண்டர்களும் ஊழியர்களுமாக 17 பேர் மூதூரில் அரச படைகளால் சதிராடப்பட்டனர். செஞ்சோலை வளாகத்தில், முதலுதவிப் பயிற்சிபெறச் சென்ற முல்லைத்தீவு சிறுவர்கள் 60-க்கும் மேற்பட்டோரை, திட்டமிட்டு குண்டுவீசி அழித்தது சிறிலங்கா அரசு. வாகரையில் இடம்பெயர்ந்து தற்காலிகமாகத் தங்கியிருந்த அகதிகள் மீது குண்டுவீசி, பலநூறு பேரைக் காயப்படுத்தியதுடன், 50-க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தது சிங்கள அரசு. சர்வதேச கண்காணிப்புக் குழுவினரை இலக்குவைத்தும் தாக்குதல் நடாத்தியது அதே அரசு. ஆனால், இவை எதுவும் சர்வதேசத்தின் கண்முன்னே பயங்கரவாதமாகத் தெரியவில்லை.

பயங்கரவாதம் என்பது, அப்பாவி மக்களைக் கொன்றழிக்கும் எவருக்கும் பொருந்தும் என்பதை சர்வதேசம் சரியாகப் புரிந்துகொள்ள மறுக்கிறது, அல்லது மறுப்பது போல் காட்சிதருகிறது. அரச பயங்கரவாதத்தின் கீழ் துன்புற்று அழிந்துபோகும் ஒரு இனத்தைப் பற்றி, சர்வதேசம் புரிந்துகொள்ள மறுத்து, இந்தப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தங்களிடமிருக்கும் இறுதி ஆயதமான உயிரைப் பணயம் வைக்கும் தமிழ் இளையவர்களை வைது தொலைக்கும் சர்வதேசம் எப்போதுதான் விழித்துக் கொள்ளப் போகிறது?

50 வருடகாலமாக இனப்படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு இனம், தனது உரிமைகளைப் பெற நடவடிக்கை எடுப்பது, அதற்கான ஆகக்குறைந்த வழிவகைகளை ஆராய்வது பயங்கரவாதம் என்றால், இங்கிலாந்துக்கெதிராக மகாத்மா காந்தி போராடியபோது, வன்முறையற்ற போராட்டம் என்ற பெயரில் கொன்றழிக்கப்பட்ட பல ஆயிரம் இந்தியர்களின் அழிப்பும் பயங்கரவாதமாகத்தான் சித்தரிக்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்தாத போராட்டம் என்று மகாத்மா காந்தி முன்னெடுத்த காந்தீயப் போராட்டத்தில், பிரிட்டிஷ் படைகள், அடித்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்வதற்கு பல ஆயிரம் இந்தியர்களை தற்கொடையாக அனுப்பினார் மகாத்மா காந்தி. மனிதர்கள், தற்கொடையாக அனுப்பப்பட்டு, எதிரிகளால் அழிக்கப்படுவதை ஆயுதமாகப் பாவித்தவர் மகாத்மா காந்தி. மனிதநேயம் தெரிந்த வெள்ளைக்காரர்களுக்கு, அநியாயமாக இந்தியர்கள் தங்களைத் தற்கொடையாகக் கொடுத்து அழிகிறார்கள் என்பது வருத்தம் கொடுத்தது. அதனால் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முன்வந்தார்கள். ஆனால், திட்டமிட்டு இன அழிப்பில் இறங்கியிருக்கும் மிலேச்சத்தனமான சிங்கள பயங்கரவாத அரசுக்கு, தமிழினத்தின் தற்கொடையும் தற்கொலையும் வருத்தத்தை கவலையை உருவாக்கப் போவதில்லை. அதனால், தற்கொடையில், எதிரிக்கு சேதம் உருவாக்குவதும் ஒரு மேலதிக தேவையாக இருக்கிறது. தங்கள் இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதைத் தடுக்க விரும்பும் ஒரு தமிழனிடம் உள்ள இறுதி ஆயுதம், அவனது உயிர்தான். அந்த உயிரைப் பணயம் வைத்து, உறவைப் பாதுகாக்க விரும்பும் தனிமனித உரிமை, மதிக்கப்பட வேண்டியது. மகத்தானதும் கூட.

நிர்க்கதியில் இருக்கும் தமிழினத்திற்கு இந்தியா கைகொடுத்து உதவ மறுத்து, தெரிந்தும் தெரியாதது போன்று வாளாவென்றிருப்பது, இந்தியா செய்கின்ற ஒரு வரலாற்றுத் துரோகமாக விரிந்து கிடக்கிறது.

ஈழப் பிரச்சனையை மிக அதிகமாகத் தெரிந்த ஒருவராக, உலகிலேயே மிக நீண்டகால ஈழ வரலாற்றைப் புரிந்துகொண்ட ஒருவராக, தேடித்தெரிந்து ஒருவரை மீதமாக நிறுத்தினால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தலைவரும் கலைஞரும் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களாகத்தான் இருக்க முடியும். ஈழத் தமிழினத்தின் இழப்புக்களையும் கொடுமைகளையும் மிக அதிகமாகத் தெரிந்த நபர், கலைஞர் தான். திராவிடத் தமிழினத்தின் காவலன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி, அதே தமிழின உடன்பிறப்புக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதை கண்டும் காணாததுபோன்று இருப்பது அநாகரிகமானது.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைச் சுட்டுக் கொன்றவர்கள், சீக்கியப் பாதுகாவலர்கள். எந்த சீக்கிய இனம், இந்தியப் பிரதமரைக் கொன்றழித்ததோ, அதே இனத்தை இந்தியா மன்னித்தது. அதற்கு உதாரணம், அந்த இனத்திலிருந்து ஒருவரை, அந்நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கு, பிரதமர் பதவிக்கு அழைத்து, நாட்டை அவரிடம் வழங்கியிருப்பது. ஆக, தனது பிரதமரைக் கொன்றழித்த இனத்தை இந்தியா மன்னித்திருக்கிறது என்பதை, அந்த இனத்திலிருந்து வந்த தன்னை, அதே பிரதமர் கதிரையில் அமர்த்திய பெருந்தன்மை இந்திய மக்களுக்கு இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், தமிழினத்தை மட்டும், விரல்நீட்டி குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கொண்டிருப்பது, வெறும் துரோகத்தனம்தான்.

எப்படி சீக்கிய இனத்தை இந்தியா மன்னித்ததோ, அதே போன்று தமிழினத்தையும் இந்தியா மன்னித்துவிட்டது என்பதை மன்மோகன் சிங் புரிந்துகொண்டு, நேரடியாக தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தை வழங்கி, அவர்களை மீட்டெடுக்க முன்வரவேண்டும்.

சிங்கள அரசின் நாடகங்கள்

2003 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 4 ஆம் திகதி முக்கிய மூன்று அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தையும் ஒத்திவைத்த ஜனாதிபதி சந்திரிகாவின் செயற்பாடுகள் தொடர்பாக உடனடியாகவே சர்வதேச நாடுகள் பலவும் தமது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தன.

அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, கனடா, இந்தியா உட்பட பல நாடுகளும் இந்த விவகாரம் தொடர்பாக தமது அக்கறையை வெளியிட்டிருந்ததுடன், சந்திரிகாவின் நடவடிக்கை சமாதான முயற்சிகளைப் பாதித்துவிடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் ஜனாதிபதியின் நடவடிக்கைகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை, ஜனாதிபதிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துடனும், பிரதமருடனும் ஜனாதிபதி அனுசரித்தே செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அப்போது வெளியிட்ட அறிக்கை, ஜனாதிபதியின் நடவடிக்கை முறைகேடானது என்கின்ற செய்தியையே சொல்லாமல் சொல்லி நிற்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டினர்.

ரணில் அரசு, அதிக அதிகாரங்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதுடன், நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது என்ற ஒரே கோசத்தை தங்கள் கவசமாக எடுத்துக்கொண்டு, 1956 இல் பண்டாரநாயக்க வீசிய அதே சிங்கள இனவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, சிங்கள மக்களை ஏமாற்றி, வாக்கு வேட்டையாடிய சந்திரிகா பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி, ஜே.வி.பி. உட்பட ஏனைய சிறு கட்சிகளைப் புளகாங்கிதமடைய வைத்தார்.

சந்திரிகாவின் கட்சியில் அமைச்சராக இருந்துகொண்டு, அவருக்கு விசுவாசமாக நடப்பதாகக் கூறிக்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஷ, சந்திரிகாவுக்குத் தெரியாமல், அவரது கதிரைக்குக் குறிவைத்தார்.

முதலில் திட்டமிட்டு, பிரதமர் கதிரையைப் பறித்தெடுத்தார். கதிர்காமரை அல்லது தனக்கு ஆதரவான ஒருவரை அந்தக் கதிரையில் இருத்தலாம் என சந்திரிகா முயன்றபோதும், நேரடியாக அழுத்தம் கொடுத்து, பலாத்காரமாக பிரதமர் கதிரையைப் பெற்றுக்கொண்டார் மகிந்த. அந்தக் கதிரையில் அமர்ந்ததும், தனது அடுத்தகட்ட நகர்வை முடுக்கிவிட்டார் அவர். அதுதான் ஜனாதிபதி கதிரைக்கான முத்தாய்ப்பு. அதற்காக அவர் தனது கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம், உச்ச நீதிமன்றம். ஒரு வருடம் மேலதிகமாக ஜனாதிபதி கதிரையில் தொடர்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் இருக்கிறது என்று நியாயப்படுத்த முயன்ற சந்திரிகாவிற்கு, சட்டத்தின் மூலம் ஆப்பு வைத்தார் மகிந்த. எதிர்பார்த்தது போன்று, உச்சநீதிமன்றம், அடுத்து வரவுள்ள தலைமைக்கு தாஜா போடும் கூஜாவாக எக்காளமிட்டது. சந்திரிகா பலாத்தகாரமாக நீக்கப்பட்டார்.

எவரும் எவரையும் எதிர்க்கலாம், ஆனால் ஒட்டுமொத்தத்தில், பௌத்த சிங்கள நலன்களில் அதீத அக்கறை கொண்டவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள, பண்டாரநாயக்கா வீசிய அதே இனவெறிக் கொள்கையை மாறிமாறி தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் சிங்கள இனவெறித் திட்டத்தில் மாற்றம் இருக்கவில்லை. இது சிங்கள நாடு, ஒற்றை சிங்கள நாடு, பௌத்த சிங்கள நாடு, சிங்கள நாட்டை சிலர் சீரழிக்க முயல்கிறார்கள், அதிலிருந்து சிங்கள நாட்டை மீட்டெடுக்கப் புறப்பட்டுள்ள துட்டகைமுனு நான் என்று தன்னைத்தானே சீவிச் சிங்காரித்துக்கொண்டு, சிங்கள இனவெறியராக எழுந்துநின்ற மகிந்தவைப் பார்த்த சிங்கள இனம், திடீர் இனவெறி உசுப்பலில் மயங்கிப்போய், தங்கள் வாக்குகளை வழங்கினார்கள். இது வெறும் மதிமயக்கம் என்பதை சிங்கள இனம் அப்போது புரிந்துகொள்ளவில்லை. விளைவு: மீண்டும் இனஅழிப்பு என்ற போர்வையில் இரு இனமும் அழிந்துபோகும் ஒரு பரிதாப நிலை தோன்றியது.

சர்வதேசத்தில் தடைகளைக் கொண்டுவந்து, ஈழப்பிரச்சனையை வெறும் உள்நாட்டுப் பிரச்சனையாகவும் பயங்கரவாதமாகவும் சித்தரித்து, மீண்டும் இனஅழிப்பில் தமிழினத்தை ஒழித்துவிட திடசங்கற்பம் பூண்டுள்ள மகிந்த ராஜபக்ஷவுக்கு, சிங்கள இனவாதக் கட்சிகளும் இனவாத சக்திகளும் தீனி போட்டன. பூகோளவியல் மற்றும் இராஜாங்கக் காரணங்களுக்காக, இலங்கை அரசை வளைத்துப்போடும் தேவையிருந்த வல்லரசுகள் அல்லது வெளிநாட்டு சக்திகள் சிலவும், இந்த இன அழிப்பிற்கு தூபம் போட்டன. மகிந்த ராஜபக்ஷ என்ற சர்வாதிகாரியின் தலைமையில், மீண்டும் இலங்கையில் இரத்தக்களரி வேகவேகமாய்த் தொடர்கிறது தற்போது. இத்தனை கோரமான தமிழின அழிப்பு தொடரும்போதும் கூட, மகிந்த என்ற கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு துணைபோகும் ஒருசில தமிழர்கள், அரச கைக்கூலிகளாக, அரச சம்பளப் பட்டியலில் தொடர்ந்தும் குளிர்காய்பவர்களாக வலம்வருவது, வெட்கத்திற்கும் ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் உரியது. இந்த பச்சோந்தித் தமிழர்கள், தங்கள் இனத்தின் இறுதி விடுதலையை அனுமானித்து, அரச சம்பளப் பட்டியலிலிருந்து, அரச Pயலசழடட டுளைவ இலிருந்து வெளியே வருவது அவசரமான தேவையாக விரிந்து கிடக்கிறது.

இன்னுமொரு பக்கத்தில், தமிழினத்திற்கு இத்தனை மனித அவலங்கள் நடக்கும்போது, தினம்தினம் அப்பாவித் தமிழர்கள் கொன்றழிக்கப்படும்போதும், எதுவுமே தெரியாதது போன்று, தங்கள் இனம்தான் என்ற உணர்வே இன்றி வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைமைகளையும் தமிழர்கள் இனம்காண வேண்டும். முஸ்லிம் தலைமைகள் தான் அப்படி என்றால், இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களிடமிருந்து, வருத்தமும் கவலையும்கூட வெளிப்படுத்தப்படவில்லை என்பதும், மனித அவலத்தைத் தவிர்க்க, முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள், தங்கள் கருசனையையும் கரத்தையும் நீட்டவில்லை என்பதும், தமிழினத்திற்கு ஏமாற்றம் தருகின்ற சமிக்ஞைகள். இதுபோன்று, ஈழத் தமிழினத்தின் மனித அவலத்தில் எதுவித பாதிப்பையும் மலையகத் தமிழினம் பெறவில்லை என்பதும், மலையகத் தமிழர் தலைமைகளிடமிருந்தும், மலையகத் தமிழ் மக்களிடமிருந்தும் பச்சாத்தாபம் கூட வெளிப்படவில்லை என்பதும், ஈழத் தமிழர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகப் பார்க்கப்படலாம்.

மலையகத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, ஈழத் தமிழினம் உச்சமாய்க் குரல் கொடுத்திருக்கிறது, இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு அநீதி வழங்கப்படும்போதெல்லாம், ஈழத் தமிழினம் தொடர்ச்சியாகத் தனது உச்சக்கட்ட ஆதரவை வழங்கியிருக்கிறது. தற்போது, அதே தமிழினம் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகின்ற, மனித அவலத்தைச் சந்தித்து மடிகின்றபோது, தங்கள் இனம் என்று கருதப்பட்ட பல்வேறு தரப்பினரும், எதிரிகள் கூடாரத்தில் குளிர்காய்கிறார்கள் என்று அறிந்துகொள்ளும் தமிழர்கள், புதியதாய் நிறையவே கற்றுக்கொள்கிறார்கள். தங்கள் எதிர்காலம் தங்களுக்கு மட்டுமானது என்ற புதிய ஞானத்தையும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். பல தரப்பினராலும் ஏமாற்றப்பட்ட, கைவிடப்பட்ட, திட்டமிட்டு சூறையாடப்பட்ட, புறந்தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, அழிக்கப்பட்ட இனமாக, தமிழினம் தற்போது காட்சிதருகிறது. சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமில்லை என்ற உண்மை கசக்கிறது. ஆனால், நிஜம் இறுதியில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. உண்மைகள் உறைக்கத்தான் செய்யும். ஆனாலும் அது ஒருகட்டத்தில் புரிந்துகொள்ளப்படுவது அவசியம். கசப்பான உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்போது வேதனையே மிஞ்சுகிறது.

திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கூறிய காரியார்த்தமான விடயத்தை, தமிழினம் அலட்சியம் செய்ய முடியாதுள்ளது. சர்வதேசமும் அதன் அறிக்கைகளும் சிறிலங்கா அரசின் நீலிக்கண்ணீரும் தமிழின விடுதலையைப் பெற்றுத்தருமென கனவு காண்பதைத் தவிர்ப்பது அவசியம் என்பதுதான் உண்மை. சமாதான காலத்தில் தமிழினம் இழந்தவை அதிகம், கொடுத்திருக்கின்ற விலை மிக உச்சம். ஊடகத்துறையில் டி.சிவராம் போன்ற மும்மொழிப் புலமையுள்ள திறமைசாலிகளையும், அரசியலில் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்ற தமிழினத்தின் குரல்களையும், கௌசல்யன், அறிவு, தாரணி, வரதா, குயிலின்பன் என்று ஏராளமான விடுதலைத் தியாகிகளையும் விலையாகக் கொடுத்திருந்தும், சர்வதேசம் இன்னமும் அறிக்கைவிடும் நிலையிலேயே உள்ளது.

யாராவது என்னைக் கேட்டால் மட்டும் யோசிக்கலாம் என்ற வகையில், நழுவல் போக்கில் தன் காலத்தைக் கடத்திவிட எண்ணும் கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழின வரலாற்றில் ஒரு கறைபடிந்த பக்கமாக மாறிவருகிறார். அவரது இறுதிக்காலத்தை முதல்வராகக் கழித்துக்கொண்டிருக்கும் கலைஞர், தானாக முன்வந்து ஈழத்தமிழ் பிரதிநிதிகளை சந்திக்கவோ, காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசைத் தூண்டுவதற்கோ எண்ணாமல், வெறும் நழுவல் போக்கு அரசியல் நடாத்தி வருவது ஈழத்தமிழருக்கு உச்சக்கட்ட ஏமாற்றத்தையே தருகிறது. தமிழ்க் கூட்டமைப்பினர் கேட்டிருந்தால் சந்தித்திருக்கலாம், மத்திய அரசு கேட்டால் ஆலோசனை சொல்லலாம், அகதிகள் கரைசேர்ந்தால் காப்பாற்றலாம், தமிழர்கள் செத்துப்போனால் பெட்டி கொடுக்கலாம் என்ற பாணியில், பக்கா அரசியல் கேளிக்கை நடாத்துவதைத் தவிர்த்துக்கொண்டு, ஈழத்தமிழருக்கு சுயநிர்ணய ஆட்சி கிடைத்தால் அதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன் என்றும், இணைந்து வாழ முடியாவிட்டால் செக்கோசெலவாக்கியா பாணியில் பிரிந்துவிடுவது தான் நல்ல தீர்வு என்றும் முன்னர் தனது வாயால் கூறியவைகளை, திராவிட மக்களின் தானைத்தலைவன் என்று தன்னை முரசொலிக்கும் கலைஞர், அந்த கருத்துருவாக்கம் நிஜவுலகில் கருக்கட்டுவதற்கும் ஆவன செய்யவேண்டுமென்று தமிழினம் இன்னும் நம்புகிறது. துன்புற்று மடியும் அவரது உடன்பிறப்புக்களைக் காப்பாற்ற கலைஞர் உடனே முன்வரவேண்டுமென்பதே, உலகத் தமிழினத்தின் வேணவா. வெறுமனே உணவு அனுப்பி அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதோடு நிறுத்தாது, ஏ-9 திறக்கப்பட்டு, யுத்தநிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு கடைப்பிடித்து, இடைக்கால தன்னாட்சி அதிகார அலகை உடனடியாக நடைமுறைப்படுத்த, சிறிலங்கா அரசுக்கு கலைஞர் அழுத்தம் கொடுப்பதே காலத்தின் அவசர தேவையாக விரிந்து கிடக்கிறது. செய்வாரா கலைஞர்?!

இந்த சூன்ய நிலையில், கார்த்திகை மாதம் மலர்ந்திருக்கிறது. இது கார்த்திகை தீபங்களை வணங்கி வழிபடும் பொன்னான காலம். தங்கத் தமிழ் மண்ணின் நிரந்தர விடிவுக்காய், தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிய பொன்மேனியர்களை வணங்கி ஆராதனை செய்யும் காலமும் கூட.

இவை அனைத்தையும் கடந்து, தமிழினத்தின் தலைமை, தனது அடுத்தகட்ட நகர்வை, திட்டத்தை, தீர்வை, கனவை, தனது மக்களிடம் முன்வைக்கும் கனமான காலமும் கூட.

புலிகள் தரப்பின் திட்டம் - நகர்வு குறித்து, தேங்கிக் கிடக்கும் நிஜங்கள் என்ன?

சிறிலங்கா அரசின் அரசியல் நகர்வுகள் அத்தனையுமே, அப்பட்டமான ஏமாற்று நாடகங்கள் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்ட நிலையில், அந்த நாடகதாரிகளின் வேடங்கள், சர்வதேச அரங்கிலும் பகிரங்கமாக துகிலுரியப்பட்ட நிலையில், புதியதொரு தமிழர் சகாப்தத்திற்குள் தமிழினம் உள்வாங்கப்படும் புதிய யுகம் இது.

இஸ்ரேல் படைகள், லெபனானுக்குள் நுழைந்து, ஹிஸ்புல்லா படைகளுடன் சண்டை போட்டு வெற்றிபெறப்போகிறோம் என்று முரசறைந்து, தரை-வான் கோரத் தாக்குதலைத் தொடுத்தபோது, அப்பாவி மக்களும் அவர்களது சொத்துக்களும் வேகவேகமாக அழிக்கப்பட்டபோது, இஸ்ரேல் அரசும், அதன்பின்னே இருந்த சர்வதேச சக்திகளும் எதிர்பார்த்தது ஒன்று, ஆனால் நடந்தது வேறொன்று. அப்படி என்ன அந்த வித்தியாசமான எதிர்பார்ப்பு?..... இஸ்ரேல் படைகள், லெபனானுக்குள் நுழைந்து தாக்கும்போது, ஹிஸ்புல்லா படைகள், இஸ்ரேல் படைகளுடன் நேரடியாக அல்லது ஹெரில்லா பாணியில் மோதுவார்கள் என்பதே அந்த எதிர்பார்ப்பு. ஆனால் அங்கு நடந்தது வேறு. ஹிஸ்புல்லா படையினர், நாட்டுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினரை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக, லெபனானுக்குள் இருந்துகொண்டு, இஸ்ரேல் நாட்டின் மக்கள் குடியிருப்புக்கள் மீது, தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் எறிகணைத் தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டே இருந்தார்கள். நீண்டதூரம் சென்று தாக்கும் டழபெ-சயபெந அளைளடைநள ஐத் தவிர்த்துக்கொண்டு, சிறிது தூரம் சென்று தாக்கும் ளாழசவ-சயபெந ரொக்கட்டுக்களை, இஸ்ரேல் மக்கள் குடியிருப்பை நோக்கி தொடர்ச்சியாக ஏவியதால், இஸ்ரேல் அரசுக்கு உடனடி எதிர்ப்புக் கிளம்பியது. இஸ்ரேலில் மக்கள் புரட்சி வெடிக்கும் அபாயம் உருவானது. இஸ்ரேல் மக்கள் இடம்பெயரும், அகதிகளாகும் நிலை உருவானது. உடனடியாக, இஸ்ரேல் தனது படைகளை வாபஸ் வாங்கும் சூழ்நிலை உருவானது.

இந்த யுக்தியை இதுவரை விடுதலைப் புலிகள் கையாளவில்லை. இதற்கு, விடுதலைப் புலிகளிடம் உள்ள மனிதநேயம் ஒரு காரணமாக இருக்கலாம். என்னதான் சிங்கள அரசு மனித அவலத்தைப் பெரிதாக அலட்டிக்கொள்ளா விட்டாலும், சிங்கள மக்களின் மனித அவலம் அவசியமற்றது என்பதை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதைப் பார்க்க முடிகிறது. தெரிந்தெடுத்த இலக்கைத் தாக்குவதற்குப் பதிலாக, எழுந்தமானத்திற்கு தெற்கில் தாக்குதல்கள் தொடர்ந்தால், அங்கும் மனித அவலம் உருவாகலாம் என்பதால், இதை விடுதலைப் புலிகள் முற்றாகத் தவிர்த்து வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழர் விடுதலையே தங்கள் இலக்கு, சிங்கள மக்களை அழிப்பது அந்த இலக்கில் அடங்கவில்லை என்பது விடுதலைப் புலிகளின் வாதம். ஆனால், வடக்கு - கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பும் மனித அவலமும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், வடக்கு - கிழக்கில் இராணுவத்தைத் தாக்கும் அதேவேளை, தமிழர் பகுதிகளிலிருந்து, சிங்கள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி ரொக்கட் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தொடுக்கப்பட்டால்!? இந்த சூழலுக்கு விடுதலைப் புலிகள் வர வாய்ப்பில்லை என்றாலும், இந்த யதார்த்தத்தை சிங்கள மக்களும் சிங்கள அரசும் புரிந்து கொள்வது அவசியம். சிங்களப் பகுதிகளிலும் மக்கள் இடப்பெயர்வு, அகதிவாழ்வு என்பது உணரப்படும் சூழலும், அடுத்த எறிகணை எங்கு விழுந்து வெடிக்கும் என்பது தெரியாத சூழலும் உருவாகும்போது, சிங்கள மக்களின் எதிர்ப்பு தங்களது சிங்களத் தலைமையின் பக்கம் திருப்பப்படும். இப்படியான சூழல் உருவாகிவிடுவதைத் தவிர்க்க, சிங்கள மக்கள் முன்வரவேண்டும். தங்கள் தலைமையை சரியான திசையில் செல்லும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மற்றப்பக்கத்தில், நீண்ட பல வருடங்களாக, இந்தியா தனது ஆதரவை ஈழத்தமிழருக்கு வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தையாவது உறுதிசெய்ய வேண்டுமென தமிழர் தரப்பு கோரி வருகிறது. இருந்தும் இந்தியா அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்நிலையில், விடுதலைப் புலிகள் தங்களது பார்வையை, மாற்று சக்திகள் பக்கம் திருப்ப வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. இதற்கான ஒரு வாய்ப்பான சக்தியாக, தற்போது சீனா உள்ளது. இந்தியாவிடம் இல்லாத வீட்டோ அதிகாரம் சீனாவிடம் இருக்கிறது. சர்வதேச களநிலையைப் பார்த்தால், வடகொரியா, ஈரான், கியூபா போன்ற சில நாடுகளின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கான சக்தி, குறிப்பாக யாராவது சொல்கின்ற கருத்தைக் கேட்கக்கூடிய நிலையில் இந்த நாடுகள் இருப்பதாக இருந்தால், அது சீனா என்ற நாட்டின் குரலை மட்டுமே. அதனால், சீனாவின் அழுத்தம் மூலமாக மட்டுமே இந்த சர்வதேச அச்சுறுத்தல்தரும் நாடுகளின் மிரட்டல்கள் தவிர்க்கப்படலாம் என்ற நிலையில், சீனா கோருகின்ற வேறுசில சில்லறைக் கோரிக்கைகளை, சர்வதேச வல்லரசுகள் ஏற்றுக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக, இடைக்கால நிர்வாக அலகை அல்லது தனியான தமிழீழ ஆட்சியை, ஐக்கிய நாடுகள் சபையில் சீனா முன்மொழியுமானால், அதை அமெரிக்கா, இங்கிலாந்து போன்றன உட்பட, வீட்டோ அதிகாரமுள்ள ஏனைய நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சீனாவின் உதவி வேறு விடயங்களில் தேவைப்படுகிறது என்ற சூழலில், சீனாவைப் பகைத்துக்கொள்ள எந்த நாடும் தற்போது தயாராக இல்லை. சர்வதேச களத்தில், தன்னையும் ஒரு சமாதான அனுசரணையாளனாகக் காட்டிக்கொள்ள சீனாவுக்கும் விருப்பம் இருக்கிறது. இதன்மூலம், அடுத்த பத்து வருடங்களுக்குள் ஐ.நா. தலைமைப் பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கும் சீனாவிடம் இருக்கிறது. ஆசியாவில் தனக்கு ஆதரவான புதிய தளங்களை நிரந்தரமாக உருவாக்க வேண்டுமென்ற திட்டமும் சீனாவின் மறைமுக உத்திகளில் பொதிந்து கிடக்கிறது. இந்த களநிலையை, விடுதலைப் புலிகள் தரப்பினர், உகந்த காலத்தில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்தியா தனது அழுத்தத்தைப் பிரயோகித்து, ஈழத்தமிழர் பிரச்சனையைத் தீர்த்துவைக்குமென விடுதலைப் புலிகள் இனியும் நம்பிக்கொண்டிருப்பது சரிதானா என்பது மிகப்பெரிய வினாவாக எழுந்து நிற்கிறது. சீனா ஒரு பௌத்த மதம்சார்ந்த நாடு, மேற்குலக சக்திகளை தேவையில்லாமல் சீண்டிப்பார்க்க விரும்பாத நாடு என்ற சில யதார்த்தங்கள், இந்த நகர்விற்கு முரணான காரணங்களாகக் காணப்பட்டாலும், உலக அரசியல் காய்நகர்த்தலில், வாய்ப்புக்கள் வலிந்து உருவாக்கப்படுவது இன்றியமையாத ஒன்று.

மட்டக்களப்பு, கதிரவெளியில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலை, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்பீனா குவானியேரி (யுடடிiயெ புரயnநைசi) கண்டித்திருக்கிறார். கனடியப் பிரதமர் ஸ்ரீவன் ஹாப்பர் அரசின் தொடரும் மௌனமும், தொடரும் கனேடிய அரசின் சிறிலங்காவிற்கான உதவிகளும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை மென்மேலும் ஊக்குவிக்கும் என்பது அவரது வாதம். பல்வேறு மனிதநேய அமைப்புக்களும், அமெரிக்கா உட்பட பல நாடுகளும், சிறிலங்கா அரசின் பயங்கரவாத செயற்பாடுகளைப் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது. கலைஞர் கருணாநிதி கவலைப்படுவதுபோல் நானும் கவலைப்படுகிறேன் என்று, பிரதமர் மன்மோகன் சிங் மூக்குச்சிந்தி கண்ணைத் துடைத்திருக்கிறார். ஆக, இந்தியா தவிர, மீதி நாடுகளுக்கெல்லாம் சிறிலங்கா அரச பயங்கரவாதம் தெளிவாகத் தெரிகிறது.

இரு இனங்கள் இனிமேல் சேர்ந்து வாழ்வதற்கு அல்லது தங்களுக்குள் அதிகாரம் உட்பட எதையுமே பகிர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது. சிங்கள அரசின் திட்டமிட்ட மனித அழிப்பும் மனித அவல உருவாக்கலும் சர்வதேசத்தில் துகிலுரியப் பட்டுள்ளது. ஈழத்தமிழர்களும் மதித்துப் போற்றுகின்ற மகாத்மா காந்தி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இணைந்து வாழமுடியாத இரு இனங்கள், பிரிந்து வாழ்கின்ற இரு தனிநாடுகள் என்ற தீர்ப்பை சர்வதேசம் வழங்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

இனி எதற்கு காலக்கெடு? இனி எதற்கு எச்சரிக்கை? இனி எதற்கு இரட்டை அர்த்தமுள்ள பேச்சுக்கள்? எல்லாமே தெளிந்த நீரோடையாக, வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. குழப்பமும் சூனியமும் நிறைந்த இடக்கரடக்கல் அரசியல் செய்ய முயற்சித்த ரணில் விக்கிரமசிங்க, எந்தத் தீர்வுமின்றி நீண்டகாலம் இழுத்தடித்து விடுதலைப் போராட்டத்தையும் அதற்கான மக்கள் ஆதரவையும் நசுக்கலாம் என்று திட்டமிட்டார். அந்த கபடத்தனமான திட்டத்துடன் செயற்பட்ட ரணிலை விட, இரு இனங்கள் பிரிந்து வாழ்வது தான் ஒரே முடிவு என்பதை, இத்தனை வேகமாக ஒரு வருடத்திற்குள் புரிய வைத்த மகிந்த ராஜபக்ஷ, நாட்டின் தலைமைப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டதில் அர்த்தம் இருந்திருக்கிறது. அந்த அர்த்தம் இன்று நிதர்சனமாகியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைமையின் அர்த்தபுஷ்டியான காய்நகர்த்தலுக்கு வேகமாகவே வெற்றி கிடைத்திருக்கிறது.

பல்வேறு களநிலைக் காரணங்களாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

பணம், பதவி, புகழ், அதிகாரம், ஆட்சிப்பீடம், அங்கீகாரம் என்று பலவற்றுக்காக ஏங்கித் தவிக்கும் சிறுபான்மைக் கட்சிகளும், துணைக் குழுக்களும், சகபாடிகளும், - மனிதம், மானுடம், மனிதாபிமானம், மக்களாட்சி என்பதையெல்லாம் சற்றுச் சிந்தித்து, ஒரு தொலைநோக்குப் பார்வையில், இலங்கை என்ற சின்னஞ்சிறு நாட்டின் நிரந்தர நிம்மதிக்காக ஒட்டுமொத்த விடுதலையை இரு இனங்களுக்கும் பெற்றுத் தர உழைப்பார்களானால், விடுதலை என்ற அரும்பு, சொற்ப நாளில் தளிர்த்து முளை விட வாய்ப்பிருக்கிறது.

இலங்கையின் எதிர்கால இருப்பு சூன்யமாகிப் போயுள்ள நிலையில், மாவீரர் நாள் உரையில், சமாதானத்திற்கும் போருக்கும் சமகால அழைப்பு விடுக்கப்படுமா, அல்லது ஈழத் தமிழர்கள் சமாதானக் காற்றை நிரந்தரமாகச் சுவாசிக்க நாள்குறிக்கப்படுமா என்பதே தமிழர் எதிர்பார்ப்பாய் விரிந்து கிடக்கிறது.

மாவீரர் நாள் உரை, இந்த வெளிச்சத்தின் அடுத்தகட்டம் நோக்கி தமிழினத்திற்கு வழிகாட்டும் ஒன்றாக அமையுமா என்பதையும், அந்த விடுதலை நாளை வெளிக்கொணர்வதற்கான காலக்கெடுவின் இறுதித் திகதியை, தெட்டத்தெளிவாக அறிவிக்கும் உரையாக விரியுமா என்பதையும் வருகின்ற நாட்கள் தெளிவாக்கலாம்.

'எனக்கு ஒரு கனவு இருக்கிறது. ஒருநாள் இந்த இனம், தமது வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, தமது சுதந்திரவாழ்வை சுயமாக வாழும் என்பதே அந்தக் கனவு. மனிதர்கள் அத்தனை பேரும் சமமான படைப்புக்கள் என்பது ஒருநாள் நனவாக வெளியேவரும்" - கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங், யூனியர்.

    I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed: "We hold these truths to be self-evident, that all men are created equal." - Martin Luther King, Jr.

Please Click here to login / register to post your comments.