ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான போராட்டமே இப்போது தேவை

ஆக்கம்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

இன்று அரசாங்கத்திற்குள்ளும் பிரச்சினை, ஐக்கிய தேசியக்கட்சியினுள்ளும் பிரச்சினை, மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளும் பிரச்சினை.

அரசாங்கத்தினுள் இருக்கும் பிரச்சினையை ஒரு பக்கம் வைத்துவிட்டு பிரதான எதிர்க்கட்சிகளுக்குள்ளே என்ன நடைபெறுகின்றது என்பதையே ஆராயவேண்டியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவுபட்டிருக்கின்ற இரு அணியினரும் ஒருவரை ஒருவர் வசை மாரி பொழிந்து வருகின்றனர். இதே நிலைதான் மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளும் நடக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணியிடம் இருந்து பிரிந்து சென்றவர்களும் மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குள் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் வெளியே தெரியாமல் உள்ளே மறைந்து காணப்படுகின்றது. அரசாங்கம் மேற்படி பிரிவுகளில் ஒரு பிரிவை ஆதரிக்கின்ற நிலை காணப்படுகின்றது. குறிப்பாக பிரிந்து போனவர்களுக்கு எதிராகவே அரசாங்கம் செயற்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி பிரச்சினைகளில் சிறி லால் லக்திலக போன்ற பிரிந்து சென்ற குழுவினரையே கைதுசெய்து அரசாங்கம் நீதிமன்றத்தில் நிறுத்தியது. எதற்காக? ரணிலை பாதுகாக்க அரசாங்கம் முயல்கின்றது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியிலும் சோமவன்ச பிரிவினர் மீது எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் பிரிந்து சென்ற பிரிவினரின் பிரதான தலைவன் மனைவி விமான நிலையத்தில் வைத்து தடுத்து வைத்து அரசாங்கத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனைவிட மக்கள் விடுதலை முன்னணியின் சிறப்பு மாநாடு மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் அரச பாதுகாப்புடன் எதுவித குழப்பமும் இன்றி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் அரசாங்கத்திற்கு சவால் விடக்கூடிய தலைமை இல்லாத நிலையே பிரதான எதிர்க்கட்சிகளில் காணப்படுகின்றன. அரசாங்கத்திற்கு சவாலான தலைமை காணப்படாத நிலையே உள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியிடம் இருந்து பிரிந்து போனவர்களும் மக்கள் விடுதலை முன்னணியிடம் இருந்து பிரிந்து போனவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றே காணப்படுகின்றனர். இரு பகுதியினரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாயும், அதிகாரப் பகிர்வை எதிர்ப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

தமிழ்த் தேசியப் பிரச்சினையை எடுத்த எடுப்பிலேயே பிரிவினைவாதம் என்ற முத்திரையை இரு பகுதியினரும் குத்த முயல்கின்றனர். 60 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை உலுக்கிவரும் தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பில் இவர்கள் ஏன் எதிர் மறையான நிலையில் உள்ளனர். எனவே எத்தகைய முற்போக்கு தன்மையினையும் இந்த பிரிந்துபோன குழுவினரிடம் காணமுடியாத நிலையே உள்ளது.

இன்று மஹிந்த ராஜபக்ஷவின் செப்படி வித்தைகள் அம்பலம் ஆகி வருகின்றன.

மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்பு கொள்ளும் நிலைமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. திரும்பிய இடங்கள் எல்லாம் போராட்டம் என்ற நிலையே காணப்படுகின்றது.

உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குளறுபடிகளைச் செய்து விட்டு, கல்வி அமைச்சர் குளறுபடி இல்லை என்கின்றார். இன்னொரு அமைச்சர் பிழைகளை அரசாங்கம் ஒப்புக் கொள்கிறது எனக் கூறுகின்றார். 1971 காலப் பகுதியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட தரப்படுத்தல் நடவடிக்கைகளே தமிழ் பகுதி முழுவதும் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பலைகளை தோற்றுவித்திருந்தன.

இன்று உயர்கல்வி பயிலும் மாணவர் சமூகத்தின் அனைவரினதும் தலையில் மண்ணை வாரிக்கொட்டும் நிலைக்கு ஆட்சியாளர் சென்றுள்ளார். இலவசக் கல்வியை அழித்து தனியார் கல்வி முறையைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவும் இந்த குளறுபடிகள் இடம்பெற்றிருக்கலாம்.

இந்த நிலைமையின் மத்தியில் வடபகுதியில் 54 ஏக்கரில் உள்ள பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையை அரசாங்கம் கபளீகரம் செய்துள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மேற்படி பகுதிகளை தனது கட்டுபாட்டில் வைத்திருந்து அனைத்து வளங்களையும் சூறையாடிவிட்டு மீண்டும் பொதுச் சொத்துகளை கையளிக்க முடியாது என மூர்க்கத்தனமாக பிரகடனம் செய்துள்ளது.

எனவே, இன்று நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான உணர்வலைகளே கரைபுரண்டு ஓடுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, போராடவேண்டிய எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் புறம் சொல்லிக் கொண்டு அரசாங்கத்திற்கு மறைமுகமாகத் துணைபோகின்றனர். எனவே, இன்று நாட்டில் ஜனநாயக உரிமைகளை வென்று எடுப்பதற்கான மத்திய நிலையம் ஒன்றின் தேவைப்பாடு எல்லா மட்டங்களிலும் உணரப்பட்டு வரப்படுகின்றது.

எமது 34ஆவது ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அநேகர் அதை எம்மிடம் வலியுறுத்தி உள்ளனர். என்னாலும், மனோ கணேசனாலும், பேராசியர் சுமணசிறி லியனகேயாலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த கருத்துக்கள் ஊடாக போராட்டங்களின் மூலம் மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். பிறந்துள்ள புதிய ஆண்டு நிச்சயம் போராட்ட ஆண்டாகவே காணப்படும்.

நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு போராட்ட முன்னணி உருவாகி வருகின்றது. மக்களின் மனக் கிடக்கைகளை சரியாக புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தலைமையை வழங்க முடியும். நாம் மக்களுக்காகவே வாழ்ந்து வருகின்றோம், போராடி வருகின்றோம். பிறந்துள்ள புதிய ஆண்டில் எமது தலைமையின் கீழ் நிச்சயம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

Please Click here to login / register to post your comments.