புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறைசொன்ன ஞானதேசிகன்.. காங்கிரஸில் ஒலிக்கும் கலகக் குரல்கள்!

ஆக்கம்: எம். பரக்கத் அலி

'தமிழினத்தின் இதயம் இலங்கை’_ இப்படி ஒரு தலைப்பில் புத்தகம் எழுதி​யவர் காங்​கிரஸ் எம்.பி. என்ற ஆச்சர்யமே அந்தக் கூட்டத்துக்கு நம்மைப் போக வைத்தது. ஆனால், அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்களே வழக்கம் போல முரண்பட்ட கருத்துக்​களைச் சொல்லி முட்டிக் கொண்டது ஆச்சர்யமாக இல்லை.

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்தான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் எடுத்த எடுப்பிலேயே, ''இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு சொல்லும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல ஆய்வு நூல். ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கும்'' என்றார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சன் டி.வி. வீரபாண்டியன், ''வரும் தேர்தலில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி சேர வேண்டும்'' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜன், ''காங்கிரஸ் _ மார்க்சிஸ்ட் சண்டை எப்போதும் போல தொடர்ந்து நடக்கும். கொள்கை ரீதியான இந்த மோதல் தொடர்வது நல்லதுதான். இங்கே வந்திருப்பதால் மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி வரும் என்று அர்த்தம் அல்ல. அது வரப்போவதும் இல்லை'' என்று விளக்கம் கொடுத்து விட்டுப் பேச ஆரம்​பித்தார். ''ஈழத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் நடக்க வேண்டும். இரண்டு நாடுகள் உருவானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல'' என்றார்.

அடுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் திருநாவுக்க​ரசர் பேச்சுதான் அந்தக் கூட்டத்தின் ஹாட் டாபிக் ஆனது. ''காங்கிரஸ் வருத்தப்படக்கூடாது, மத்திய அரசு வருத்தப்படக்கூடாது, ஈழத் தமிழர்கள் வருத்தப்படக்கூடாது என்று கத்தி மேல் நிற்பது போல இந்தப் புத்தகத்தை சுதர்சன நாச்சியப்பன் எழுதி இருக்கிறார். புத்தகங்களை வேகமாகப் படித்து முடிப்பவன் நான். ஆனால், இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. படிக்கும் போதே தூக்கம் வந்துவிட்டது'' என்று எக்குத்தப்பாகத் தொடங்கியவர் திடீரென திசைமாறி, ''எந்த ஓர் இனமும் நசுக்கப்படும் போது, போராடத்தான் செய்வார்கள். விடுதலைப்புலிகள் மட்டும் இல்லை என்றால் 30 ஆண்டு காலத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்பது உண்மை. என்ன காரண காரியம் இருந்தாலும் ராஜீவ் காந்தியை அவர்கள் கொன்றது தவறு. அந்தத் தவறு இப்போது வேறு ஒரு தவறில் போய் முடிந்தது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக 10 லட்சம் தமிழர்களைச் சுட்டுக் கொல்ல ராஜபக்சேவுக்கு அதிகாரம் கொடுக்க முடியாது. சுதர்சன நாச்சியப்பன் அடுத்து எழுதப்போகும், 'ஈழத் தீவிற்கோர் பாலம் அமைப்போம்’ என்ற புத்தகத்தில் பிரபாகரன் செய்த நல்லது, கெட்டதுகளையும் எழுத வேண்டும்'' என்று திருநாவுக்கரசு சொன்ன போது காங்கிரஸ்காரர்கள் தரப்பில் மெல்ல சலசலப்பு தொடங்கியது.

''தமிழகம் 'தானே’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் புயல் நிவாரணக் குழு இந்நேரம் தமிழகம் வந்திருக்க வேண்டும். மாநில அரசு கேட்ட பிறகுதான் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்குமா? தேசியப் பேரிடர் நிவாரண நிதி இருக்கிறது. அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலிலேயே ஒதுக்கியிருக்க வேண்டும்'' என்று மத்திய அரசையும் அட்டாக் செய்து பேச்சை முடித்தார் திருநாவுக்கரசர்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேச்சு இருந்தது. ''ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்ததைப் போன்று வேறு யாரும் உதவிகள் செய்தது இல்லை. யாழ்ப்பாணத்தில் முன்பு ஈழத் தமிழர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை இருந்தது. இப்போது அவர்களும் மீன் பிடித் தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். யாழ்ப்​பாணப் பகுதிக்குப் போய் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால், அது ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்​துகிறது. அவர்கள்​தான் நமது மீனவர்களைத் தாக்குகிறார்கள். சிங்கள மீனவர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை. இது, விவாத மேடை அல்ல. ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல தமிழக நலனுக்காகவும் காங்கிரஸ் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கும். 'என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளை இங்கே சொல்ல விரும்புகிறேன். இந்த குறள் யாருக்கு வேண்டுமானாலும் போகட்டும்'' என்றபடி அமர்ந்தார் ஞானதேசிகன். இந்தக் குறள் திருநாவுக்கரசருக்காகத்தான் சொல்லப்பட்டது என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது.

நிறைவாகப் பேசிய சுதர்சன நாச்சியப்பன், ''வடகிழக்குப் பகுதி மட்டுமே ஈழம் என்று சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இலங்கையே, ஈழத் தீவுதான். வடகிழக்குப் பகுதியில் தன்னாட்சி அதிகாரத்தை ராஜீவ் காந்தி பெற்றுத் தந்தார். அந்த எல்லைக் கோட்டை வைத்துக் கொண்டு அடுத்து நகர்வுக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை'' என்று முடித்தார்

'அ.தி.மு.க-வுக்கு நகர திருநாவுக்கரசர் முடிவு செய்து விட்டார். அதற்காகத் தான் இப்படிப் பேசுகிறார்’ என்று காங்கிரஸ்காரர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!

Please Click here to login / register to post your comments.