இந்தியாவின் வீடுகள் எங்கே?

ஆக்கம்: தீபச்செல்வன்

யுத்தத்தில் அழிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஈழத் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவோம் என்று இந்திய அரசு அறிவித்தது. இன்று முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து மூன்று வருடங்களாகப் போகின்றன இதுவரை வெறும் 50 மாதிரி வீடுகளைத்தான் இந்தியாவால் கட்ட முடிந்திருக்கிறது. இந்த 50 வீடுகளைக் கொடுக்கத்தான், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சென்ற வாரம் இலங்கை சென்றார். புது வீடுகளையும், எல்லாவற்றையும் இழந்து சோகத்தில் இருக்கிற ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைமையையும் அறிய ஒரு வன்னி விசிட் செய்தோம்.

“எங்கட வீடுகளை எல்லாம் குண்டு போட்டும் ஷெல் அடிச்சும் அழிச்சுப்போட்டு, ஆரோ தார வீடுகளைக் கட்டித் தர, அவையள் படுற பாடு பெரிய பாடு’’ என்று, எடுத் ததுமே இலங்கை அரசு மீதான பெரும் ஆதங்கத்துடன் ஆவேசமாக பேசுகிறார், முல்லைத்தீவு வள்ளிபுனத்தைச் சேர்ந்த 53 வயதான லட்சுமி இராசரத்தினம் என்ற தாய்.

ராஜபக்ச அரசு நடத்திய கடைசி யுத்தத்தில் மாத்திரம் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வீடுகள் அரச படைகளின் விமானத் தாக்குதல் களுக்கு இலக்காகியும் ஷெல் தாக்குதல்களுக்கு உள்ளாகியும் அழிந்துள்ளன. அதைவிட சிங்கள இராணுவத்தினர் தமிழ் நிலங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் புல்டோசர் முதலிய தமது இராணுவ வாகனங்களால் இடித்து அழித்த வீடுகள் ஏராளம். வீடுகள் இல்லாத நிலையில் இப்பகுதியில் மீண்டும் மக்கள் குடியேறுவது எப்படி? இந்நிலையில்தான் இந்தியா ஈழ மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், அந்த வீடுகள் ஈழத் தமிழர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் தாமே வீடுகளைக் கட்டிக் கொடுக்க போவதாகவும் இந்தியா சொன்னதை இராபக்சே அரசு நிராகரித்துவிட்டது. இதனால், இந் தியாவால் வீடுகள் கட்ட இயலாது வீட்டுத் திட்டம் இழுபட்டுக் கொண்டிருந்தது.

ஐ.நா. வெளியிட்ட போர்க்குற்ற அறிக்கையில் இந்தியா வாக்களித்தபடி இன்னும் தமிழ் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் இந்திய உயர்மட்டக் குழு ஒன்று இலங்கை சென்று நூற்றுக்கணக்கான வீடுகளை அமைப்பதற்குரிய நடவடிக்கையை துரிதப்படுத்தியது. ஆனால், இலங்கை தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரவில்லை. இறுதியில் இலங்கை அரசே வீடுகளைக் கட்டி ஈழத் தமிழர்களுக்குக் கொடுக்கட்டும் என்று இந்தியா இறங்கி வரவேண்டியதாகி விட்டது.

யாழ்ப்பாணம் அரியாலையிலும் கிளிநொச்சியில் பளையிலும் முல்லைத்தீவிலும் அவசரமாக சில மாதிரி வீடுகள் கட்டப்பட்டன. அவற்றைத்தான் இப்பொழுது எஸ்.எம்.கி ருஷ்ணா திறந்து வைத்துள்ளார். “எங்கட வீடு எவ்வளவு வடிவான வீடு. எத்தின தரம் சண்டையளுக்குள்ள இடிஞ்சு அழிஞ்ச பிறகும் கட்டினம். சொந்தமாய் உழைச்சுக் கட்டினனாங்கள் திரும்பி வரேக்குள்ள எல்லாம் மண்ணோட மண்ணாய் அழிச்சுப்போட்டுக் கிடந்தது. வாழ்ந்த வீடு இப்பிடி இடிச்சு அழிச்சு எங்கட வாழ்க்கையை அழிச்சத பற்றி, நான் எப்பிடி பேசுறது? அத எப்பிடி தாங்கிறது? இப்ப அழிச்சயவிளே பிச்சைப் போடுற மாதிரி கட்டித் தாரங்கள்’’ என்று கண்ணீருடன் அழுகிறார் கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 48 வயதான கண்மணி பாக்கியநாதன்; கண்மணி பாக்கியநாதனின் இரண்டு பிள்ளைகளும் கணவரும் முள்ளிவாய்க்காலில் ஷெல் தாக்குதலிலில் கொல்லப்பட் டார்கள்.

”எங்கட மக்களின் வீடுகள் மட்டுமா அழிந்தது? உறவுகள் அழிக்கப்பட்டார்கள்; சொத்துக்கள் அழிக்கப்பட்டன; அங்கங்கள் பறிக்கப்பட்டன. நகரங்கள், கிராமங்கள், மரம் செடி கொடிகள், பிராணிகள் என்று முழுத் தேசமும் வாழ்வுப் போராட்டமும் இராஜபக்ச அரசால், அரச படைகளால் அழிக்கப்பட்டன. எல்லாத்துக்குப் பிறகும் வாழ வேணும் என்டுதானே திரும்பி வந்தனாங்கள். மிஞ்சியிருக்கிற எங்கட பிள்ள குட்டியளுக்காக வாழ ஆசைப்படுறம். அதுகள் பாம்பு பூச்சியள் கடிக்காத நல்ல வீடுகளில வாழ வேணும். இனியும் எங்களால கஷ்டப்பட ஏலாது என்டு வந்தால் ஒரு மாதத்துக்கு இருக்கச் சொல்லி தறப்பாள குடுத்திட்டு போனவையள், அதே போக்குத்தான். இப்ப 50 வீடுகள மட்டும் கட்டிக் கொடுத்துட்டு, அதைவிட அதிக செலவில விழா எடுத்து புகழ் தேடியிருக்கிணம்’’ என்று மிகுந்த விரக்தியுடன் கிளிநொச்சி பொன் னகரைச் சேர்ந்த சிவநாதன் செல்லுத்துரை பேசினார்.

வன்னியிலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அந்த மக்களின் வீடுகளையும் வீட்டுத் தளவாடங்களையும் கொண்டுதான் இராணுவத்தினர் தமது முகாம்ங்களை அமைத் துள்ளார்கள். தடுப்பு முகாமிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்கள் தறப்பாள் கூடாரங்களிலும் தகரக் கூடாரங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு, இப்பொழுது ஆண் டுக்கணக்காக அந்தக் கூடாரங்களிலேயே வாழ்கிறார்கள். வெயிலிலும் மழையிலும் அந்தக் கூடாரங்களில் தவிக்கும் மக்களின் சோகம் பெரும் கொடிய துயரமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“இந்தா வீடு கட்டித் தாறம். அந்தா வீடு கட்டித் தாறம் என்று சொல்லிச்சினம். இந்த தகரக் கூட்டுக்குள்ள குழந்தை குட்டியள வைச்சுக்கொண்டு எத்தின நாளைக்கு இ ருக்கிறது? புள்ளயளுக்கு எல்லாம் ஒரே நோய் நொடியாய் வருது. யுத்தத்தில எங்கள சாவடிச்ச மாதிரி சொந்த காணியிலயும் இப்படி வாழ வைச்சு சாவடிக்கிறாங்கள்’’ எ ன்று மிகவும் கோபத்துடன் பேசினார் முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள 34 வயதான இளந்தாய் கவிதா காளிமுத்து.

சரி, இந்தியாவின் வீடுகளாவது ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்தனவா என்றால், “பாதிக்குப் பாதிதான்’’ என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தமிழர்கள்.

“எங்கள அழிக்கிறதுக்கின்னே யுத்தத்தை நடத்தி அழிச்சுப்பறம், எங்களுக்குக் கிடைக்கிற வீடுகளையும் பறிச்சுக் கொண்டு போறாங்க. மன்னார் மதவாச்சி வீதியில போரால பாதிக்கப்பட்ட மக்கள் எங்கிற பேரில சிங்கள சனத்த குடியேத்தி எங்களுக்கு வந்த வீடுகள அதுகளுக்கு கட்டிக் குடுக்கிறது எவ்வளவு அநியாயம்?’’ என்று கொதித்தபடி பேசினார் முல்லைத்தீவில் முறிகண்டியைச் சேர்ந்த 51 வயதான மாணிக்கம் கணபதி.

வீடு வேணும் என்றால் காணிநிலத்தைத் தாருங்கள் என்றும் காணியில் புத்தர் சிலை வைக்க அனுமதியுங்கள் என்றும் வற்புறுத்துகிறது இலங்கை அரசு. ஈழத் தமிழர்கள் மத்தியில் சிங்களக் குடியேற்றத்தைச் செய்யவும் பௌத்த மதத்தைப் பரப்பவும் முயலும் சிங்கள இராணுவம், ஈழத் தமிழர்களுக்காக இந்தியா வழங்கிய வீடுகளை வைத்தும் தமது அரசியலையும் ஆக்கிரமிப்பையும் செய்யப் பார்க்கின்றன.

கிடைத்த வீடுகளிலும் சில வாழ முடியாதவை. “மழையால ஈர வீட்டுக்குள்ள கிடந்ததால எங்கட கிராமத்தில இது ரெண்டாவது செத்த வீடு. எத்தின தரம் கேக்கிறது? படிச்சு படிச்சு சொன்னம் இதுக்குள்ள இருக்க ஏலாதின்னு. கேட்ட வேற இடத்தில காணியும் வீடும் தாறம் காணிய விட்டு எழும்புறீங்களான்னு கேக்கிறாங்க’’ என்று வீடி ன்றி தாயை இழந்த செல்வா குறிப்பிட்டார்.செல்வாவின் இரண்டு சகோதரிகள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இறக்க, இரு சகோதரிகளின் குழந்தைகளை வளர்த்து வந்த அவரது தாய் இந்தக் கூடாரத்தில் வாழ்ந்ததால் குளிர் பிடித்து இறந்தார். இதனால் விஷம் அருந்திய செல்வா அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இப்படித்தான் தூக்கம் இன்றி இந்தக் கூடாரங்களில் மக்கள் தவிக்கிறார்கள். எப்பொழுதும் உயிரைப் பறிக்கக் கூடிய வாழ்வைத்தான் தொடர்ந்தும் ஈழத்து மக்கள் வாழ்கிறார்கள் இன்னும் எத்தனை நாள்கள் தொடருமோ ஈழத் தமிழர்களின் இந்த சோகம்?.

Please Click here to login / register to post your comments.